பதிவு செய்த நாள்
10
மே
2016
11:05
தஞ்சாவூர்: கும்பகோணத்தில், அட்சய திரிதியை முன்னிட்டு, ஒரே இடத்தில் பெருமாள்கள் சேவை சாதிக்கும், 12 கருடசேவை தரிசனம், நேற்று கோலாகலமாக நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படுவது, 12 கருடசேவையாகும். ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம் வளர்பிறையில், அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது திதியான அட்சய திரிதியை தினத்தில், கும்பகோணத்தில் உள்ள, 12 வைணவ கோவில்களிலிருந்து, 12 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் புறப்பட்டு, பெரிய தெருவில் காசிக்கடைகளுக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் எழுந்தருளி, ஒரே இடத்தில் மக்களுக்கு சேவை சாதிப்பர். நேற்று கும்பகோணம் பெரிய தெருவில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில், சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசுவாமி, ராஜ கோபால சுவாமி, ஆதிவராக பெருமாள், கிருஷ்ணசுவாமி, ராமசுவாமி, சந்தானகோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், வேணுகோபாலசுவாமி, வரதராஜபெருமாள், லஷ்மி நரசிம்ம சுவாமி ஆகிய, 12 கோவில்களிலிருந்து பெருமாள் சுவாமிகள், கருட வாகனத்திலும், இந்த சுவாமிகளுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் சுவாமியும் எழுந்தருளி, சேவை சாதித்தனர். நேற்று, காலை 9.45 மணி முதல் மதியம்,12.45 மணி வரை, 12 கருட சேவையையும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இந்தநிலையில், பந்தலுக்கு சக்கரபாணி கோயில் கருட வாகனத்தை மட்டும் அங்கு நின்று போலீசார் போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அங்கு இருந்த வாகனம் மீண்டும் கோவிலுக்கு திரும்பி சென்றது. இச் சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.