பதிவு செய்த நாள்
26
மே
2016
01:05
நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். அப்படி, நாரதர் நிகழ்த்திய ஒரு கலகத்தால் நமக்குக் கிடைத்த நன்மையே தத்தாத்ரேய ஸ்வாமியும் அவர் குறித்த வழிபாடும். தவசீலரான அத்ரி மகரிஷி, மும்மூர்த்தியர் அம்சத்துடன் தனக்கொரு குழந்தை வேண்டும் என வரும்பினார். அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்ய அயன், அரி, அரன் மூவரும் திருவுளம் கொண்டனர். அவர்களின் அனுக்கிரகத்தைச் செயல்படுத்த நாரதர் கருவியானார். சத்காரியம் இனிதே துவங்கியது. ஒருநாள் அலைமகள், கலைமகள், மலைமகள் மூவரையும் தரிசித்த தேவ ரிஷி அவர்களிடம் இரும்புக் கடலைகளைக் கொடுத்து வறுத்துத் தரும்படி கேட்டார். அதெப்படி சாத்தியம் என வியப்புடன் வினவினார்கள் முப்பெருந்தேவியரும். கற்பில் சிறந்த மாதரசிகள் மனது வைத்தால் எதுவும் சாத்தியமே! என்றார் நாரதர். அவரது கருத்தை தேவியர் ஏற்கவில்லை. சர்வ வல்லமை படைத்த தங்களுக்கே அது இயலாத காரியம் எனும்போது வேறு எந்தப் பெண்ணாலும் அதைச் சாதிக்க முடியாது என்பது அவர்களுடைய வாதம்.
பூலோகத்தில் ஒரு மாதரசி இருக்கிறாள். அவள் பெயர் அநசூயை. அத்ரி மகரிஷியின் பத்தினி. பதிபக்தியில் சிறந்த அந்த பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள் என்றார் நாரதர். தேவியருக்குப் பொறுக்கவில்லை அதையும் சோதித்துவிடலாம் என்று முடிவெடுத்தவர்கள். மும்மூர்த்தியரை அணுகி, பூலோகம் சென்று, அநசூயை தேவியின் கற்புத் திறனைச் சோதித்து வரும்படி கோரினர். அதன்படி மூம்மூர்த்தியரும் துறவிகளாய் வடிவெடுத்து, அத்ரி ஆசிரமத்துக்கு வந்தனர். அந்நேரம் முனிவர் வெளியே சென்றிருந்தார். மூன்று துறவிகளும் வாசலில் நின்று யாசகம் கேட்டுக் குரல் கொடுத்தனர். அவர்களை உள்ளே வந்து அமுதுண்டு ஆசியளிக்கும்படி அநசூயை வேண்டினாள். அவர்களோ அம்மா! சற்றுப்பொறு, குழந்தைகள் இல்லாத வீட்டில் நாங்கள் பிக்ஷை ஏற்பது இல்லை என்றார்கள்.
முதலில் திகைத்த அநசூயை, பிறகு சுதாரித்துக் கொண்டாள். கண்மூடித் தியானித்தவளுக்கு வந்திருப்பவர்கள் யார் யாரெனத் தெரிந்து போனது. தன் கணவனை நினைத்து அவர் பாதம் அலம்பிய தீர்த்தத்தை அவர்கள் தலையில் தெளிக்க... உலக உயிர்கள் அனைத்தையும் தங்களின் குழந்தைகளாகக் கொண்ட மும்மூர்த்தியரும் அங்கே குழந்தைகளாகத் தவழ்ந்தனர். அநசூயை அந்த மூவருக்கும் தாயாகி, அமுதூட்டினாள் (இதை வேறு விதமாகவும் சொல்வது உண்டு.) விஷயம் அறிந்த முப்பெருந்தேவியரும் அநசூயை தேவியின் கற்புத் திறன் கண்டு வியந்தனர். அதே நேரம் தங்கள் பதிகளின் நிலையறிந்து பதைபதைத்தனர். ஓடோடி வந்து, தங்கள் நாயகர்களை மீண்டும் பழைய நிலைக்கே மீட்டுத் தரும்படி வேண்டினர். அநசூயையும் அவ்வாறே செய்தாள். அதே நேரம் அத்ரியும் வந்து சேர, அந்தப் புண்ணிய தம்பதிக்கு மூம்மூர்த்தியர் - முப்பெருந்தேவியர் தரிசனத்துடன் மூவரின் அம்சமாகக் குழந்தை வரமும் கிடைத்தது. தத்தாத்ரேயர் அவதரித்தார்.
மூன்று திருமுகங்கள், ஆறு திருக்கரங்கள் அவற்றில் சங்கு-சக்கரம் சூலம் தாமரை, கதாயுதம், கமண்டலம் ஆகியவற்றை ஏந்தியபடி, மும்மூர்த்தியரின் ஐக்கியமாகத் திகழ்கிறார். தத்தாத்ரேயர். அவர் அருகில் நிற்கும் நான்கு நாய்களும் நான்கு வேதங்களையும் பசு தர்மத்தையும் குறிக்கும் என்கின்றன ஞானநூல்கள். தென்னகத்தில், சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி திருக்கோயில் இவரது மகிமைக்குச் சான்றாகத் திகழ்கிறது. மராட்டிப் மொழியிலான தத்த சரித்திரம், இவரது அவதாரத்தையும் வழிபாட்டுச் சிறப்புகளையும் விவரிக்கிறது.
ஓம் திகம்பராய வித்மஹே யோகாரூடாய தீமஹி
தந்நோ தத்த: ப்ரசோதயாத்
-எனும் தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி அனுதினமும் இவரை வழிபட மும்மூர்த்தியரின் திருவருளையும் ஒருங்கே பெற்றுச் சிறக்கலாம்.