பதிவு செய்த நாள்
26
மே
2016
01:05
தீயவர்களை அழித்து, தர்மநெறியை நிலைநாட்ட திருமால் எடுத்த அவதாரங்களில் நரசிம்மாவதாரமும் ஒன்று இதைப்பற்றி கம்பர் குறிப்பிடும்போது.
நசை பிறந்து இலங்கப் பொங்கி
நன்று நன்று என்று நக்கு
விசை பிறந்து உருமு வீழ்ந்தது
என்ன ஓர் தூணின் வென்றி
இசைதிறந்த அமர்ந்த கையால்
என்றினன், எற்ற லோடும்
திசைதிறந்து அண்டம் கீறிச்
சிரித்தது செங்கட் சீயம்.
என்று கூறுகிறார். அதாவது சீறியெழுந்த சிங்கமாகத் தூணிலிருந்து வந்தார் நரசிம்மர் என்கிறார் கம்பர் மனித உருவில் சிங்க முகத்துடன் தனது பரம பக்தனான பிரகலாதனைக் காக்கவும் அசுரர்களின் தலைவனான இரண்யகசிபுவின் அதர்ம செயல்களைத் தடுக்கவும் நரசிம்ம அவதாரத்தைத் திருமால் எடுத்தார். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் இராமனும், நரசிம்மனும் ஒருவனே என கீழ்க் கண்ட பாசுரம் (328) விளக்குகிறது.
கதிராயிரமிரவி கலிந்தெறித் தால் ஒத்த நீள்முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதீரேல்
அதிரும் கழற்பொருந்தோன் இரணியன் ஆகும் பிளந்து அரியாய்
உதிரம் களைந்த கையோடி ருந்தானை உள்ளவா கண்டாருளர்.
சத்துரு சம்கார காலத்தில் உக்கிரமான வடிவிலும் நிஜத்தில் சாந்தமாகவும் இருந்து தம்மை வணங்கும் பக்தர்களை எல்லா துன்பங்களின்றும் விடுபடச் செய்யும் நரசிம்மருக்கு நாடெங்கும் எண்ணற்ற கோயில்கள் உள்ளன. அவற்றில் மங்களகிரியில் வீற்றிருக்கும் நரசிம்மர், தமக்கு நைவேத்தியமாகத் தரும் பானகத்தை அருந்துவது ஓர் அதிசயத்தக்க உண்மை. ஆந்திர மாநிலம், விஜயவாடா - குண்டூர் நகரங்களுக்கு இடையே உள்ளது. மங்களகிரி விஜயவாடாவிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மலைக்கோயிலில் பான கால நரசிம்மர் கோயில் உள்ளது. பூரி ஜெகந்நாத்தில் போஜனம் சிம்மாசலத்தில் சந்தனம் மங்களகிரியில் பானகம், ஸ்ரீரங்கத்தில் சயனம் என்று திருமாலின் வைபவத்தை வைணவர்கள் கூறுவார்கள்.
சிறப்பு பெற்ற இந்த பானக நரசிம்மரை ஸ்ரீபானகாலராயுடு என ஆந்திர மக்கள் அழைப்பர். இந்த கோயிலுக்கு கிருஷ்ணதேவராயர் பல தானசாசனங்கள் அளித்துள்ளார். பானக நரசிம்ம மூர்த்திக்கு பஞ்சலோகத்தில் கவசம் போட்டுள்ளனர். சுமார் 15 சென்டிமீட்டர் அளவுக்கு சிறந்த வாயின் வழியாக சங்கு மூலம் நைவேத்தியமாக பானகத்தை தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்த நீர் ஊற்றுகிறார்கள். நாம் எவ்வளவு பானகத்தை ஊற்றுகின்றோமோ, அதில் சரியாகப் பாதியை சிலை ஏற்றுக்கொண்டு மீதியை ஏற்காமல் உமிழ்ந்து வெளியே வந்துவிடுகிறது. அப்படி வெளியே வரும் பானகத்தைதான் பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள். வாயில் பானகத்தை ஊற்றும்போது, அது உள்ளே செல்லும் சத்தம் நமக்குக் கேட்கிறது.
தெங்கும் கதலியும் தென்றலால் துதிபாடும்
வெங்கண் கரியுரு மலைக்கு கைமேவி
சங்கினில் பானகம் சாலப் பருகுவோய்
மங்களகிரி யம்பலத்தென் செங்கண் மாலே!
என மங்களகிரி பானக நரசிம்ம பாமாலையில் கோவிந்ததாசாரால் பாடப்பட்டுள்ளது. மேலும் கோயில் சன்னிதியில் வெல்லம் தேங்காய் உடைத்த தண்ணீர், பானக நீர் என பல இனிப்புப் பொருட்கள் பரவலாக சிந்திக்கிடந்தாலும் ஒரு ஈ, எறும்பைக்கூட பார்க்கமுடியவில்லை.
இந்த கோயில் காலை முதல் மதியம் வரைத்தான் திறந்து வைக்கிறார்கள். அதற்குப் பின்பு நடையை மூடிவிடுகிறார்கள். காரணம், மதியத்திற்குப் பிறகு தேவர்கள் மூர்த்திக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.
தாங்கள் நினைத்த காரியத்தை பானக நரசிம்மர் நிறைவேற்றிய பின்னர் நேர்த்திக் கடனாக பானகத்தைக் கொடுத்து வழிபடுகிறார்கள். சிறப்பு அம்சம் பொருந்திய இந்த பானக நரசிம்மர் கோயிலின் அடிவாரத்தில் மிகப்பழமையான லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது.
எண்ணிய காரியம் கைகூடவும், சத்ரு பயம் நீங்கவும், ஸ்ரீமத் நரசிம்ம ஜெயந்தி யன்று நரசிம்மரை, ஸ்ரீநரசிம்ம காயத்ரி மந்திரத்தை ஜெபித்து சகல நன்மைகளையும் பெறுவோம்.
வஜ்ர நகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத்
ஓம் நரசிம்ஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி
தன்ன: ஸிம்ஹ ப்ரசோதயாத்.