Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நான்காம் திருமுறையில் பாடிய பாடல் ...
முதல் பக்கம் » நான்காம் திருமறை
நான்காம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 செப்
2011
03:09

53. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

508. குழல்வலம் கொண்ட சொல்லாள் கோலவேற் கண்ணிதன்னைக்
கழல்வலம் கொண்டு நீங்காக் கணங்களக் கணங்களார
அழல்வலம் கொண்ட கையான் அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல்வலம் கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றினாரே.

தெளிவுரை : சிவகணங்கள், புல்லாங்குழல் இசை போன்ற இனிய சொல்லுடைய, வேல் போன்ற கண்ணுடைய தேவியைத் தொழுது, நீங்காது இருந்து வணங்கும் தன்மையினர் ஆவர். அக்கணங்கள் மகிழுமாறு ஈசன், நெருப்பைக் கை ஏந்தியவராகி அருளொளியை வழங்குபவர். அவர், அச் சிவ கணத்தினர் வணங்கிப் போற்ற, ஆரூரின்கண் மேவி உமாதேவியை பாகமாக கொண்டு விளங்குபவர். அப்பெருமான், அருள் தன்மையுடையவராய்த் தானே தோன்றியவர்.

509. நாகத்தை நங்கையஞ்ச நங்கையை மஞ்சை யென்று
வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து
பாதத்தில் நிமிர்தல் செய்யாத் திங்களை மின்னென்று அஞ்சி
ஆகத்திற் கிடந்த நாகம் அடங்கும்ஆரூர னார்க்கே.

தெளிவுரை : சிவபெருமான் திருமுடியில் மேவும் நாகத்தைக் கண்டு, கங்கையானவன் அஞ்சுகின்றாள்; அந் நங்கையை மயில் என்று கருதி, நாகம் அஞ்சுகின்றது. ஈசன், போர்வையாகக் கொண்டுள்ள யானையின் தோலானது, மேகம் போன்று கருமையாகத் திகழவும், திங்களை மின்னல் என்று கருதிப் பெருமானுடைய திருமார்பில் தவழும் நாகம் அஞ்சுகின்றது. இத்தன்மையில் ஆரூரில் மேவும் ஈசன்பால் நாகமும் கங்கையும் கொள்ளும் பாங்கானது விளங்குதல் ஆயிற்று.

510. தொழுதகங் குழைய மேவித் தொட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றார் அவரவர் போலும்ஆரூர்
எழிலக நடுவெண்முத்தம் அன்றியும் ஏர்கொள்வேலிப்
பொழிலகம் விளங்கு திங்கள் புதுமுகிழ் சூடினாரே.

தெளிவுரை : திருத்தொண்டர்கள், ஈசனைத் தொழுது, அகம் குழைய மேவி, இமைகள் ஒன்றையொன்று தொட்டுப் பக்திப் பரவசம் கொள்ள அழுது இறைஞ்சுபவர்கள் ஆவர். அவரவர்களுடைய உள்ளம் புகுந்து நிறைபவர், ஆரூர் மேவும் பெருமான். அவர், பெருமையுடைய ஐந்து வேலி கொண்ட பொழில் விளங்கும் தலத்தில், வெண் முத்து போன்று விளங்கும் சந்திரனைச் சூடி விளங்குபவர்.

511. நஞ்சிருள் மணிகொள் கண்டர் நகையிருள் ஈமக்கங்குல்
வெஞ்சுடர் விளக்கத் தாடி விளங்கினார் போலு மூவா
வெஞ்சுடர் முகவு தீண்டி வெள்ளிநா ராசமன்ன
அஞ்சுடர் அணிவெண் திங்கள் அணியுமா ரூரனாரே.

தெளிவுரை : சிவபெருமான், நஞ்சினை அருந்திக் கரிய மணி போன்ற கண்டத்தைப் பெற்றவர்; மயானத்தில் நள்ளிருளில் நெருப்பினை ஏந்தி ஆடுபவர்; வெம்மை உடைய சுடராகிய சூரியனின் முகட்டினைத் தீண்டும் வெண்மையான கதிர் பரப்பும் சந்திரனைச் சூடியவர். அவர், ஆரூரில் மேவும் பெருமான்.

512. எந்தளிர் நீர்மைகோல மேனியென் றிமையோர் ஏத்தப்
பைந்தளிர்க் கொம்பர்அன்ன படர்கொடி பயிலப்பட்டுத்
தஞ்சடைத் தொத்தினாலும் தம்மதோர் நீர்மையாலும்
அந்தளி ராகம் போலும் வடிவர் ஆரூரனாரே.

தெளிவுரை : ஈசன், தளிர் போன்ற குளிர்ந்த தன்மை உடையவள் என்று தேவர்கள் ஏத்தக் கொடி போன்று படர்ந்து விளங்கும் கங்கையைத் தம் சடை முடியின் மீது பொருந்தியுள்ளவர். அத் தன்மையில் இனிமையுடன் மேவும் அப் பெருமான், அந்தாளி இசை போன்று இனிமை உடையவர். அவர் ஆரூர் மேவும் அழகிய வடிவினர்.

513. வானகம் விளங்கமல்கும் வளங்கெழு மதியம் சூடித்
தானகம் அழியவந்து தாம்பலி தேர்வர் போலும்
ஊனகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
ஆனகம் அஞ்சும் ஆடும் அடிகள்ஆ ரூரனாரே.

தெளிவுரை : சிவபெருமான், வானத்தில் விளங்கும் வளமை திகழும் சந்திரனைச் சூடியவர்; மகளிரின் மனம் குழையுமாறு மனைதோறும் சென்று பலி கொள்பவர்; அத்தகைய உணவைப் பிரம கபாலத்தில் ஏற்றவர்; நஞ்சினை உண்டவர்; பசுவின் பஞ்ச கௌவியத்தை அபிடேகப் பொருளாக ஏற்றுப் பூசனை பெறுபவர். அத்தகைய அடிகள், ஆரூரனாரே.

514. அஞ்சணை கணையினானை யழலுற அன்றுநோக்கி
அஞ்சணை குழலினாளை அமுதமா அணைந்துநக்கு
அஞ்சணை யஞ்சும்ஆடி ஆடரவு ஆட்டுவார்தம்
அஞ்சணை வேலியாரூர் ஆதரித்து இடங்கொண்டாரே.

தெளிவுரை : ஈசன், ஐந்து மலர்க் கணைகளையுடைய மன்மதனை எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அவர், சுருண்ட கூந்தலையுடைய உமாதேவியை அமுதமென ஏற்றுப் பாகமாகக் கொண்டவர். அப்பெருமான், பூசிக்கப் பெறும் பஞ்சகௌவியத்தை ஏற்றுப் பூசனையாகக் கொண்டு, ஆடுகின்ற அரவத்தையும் ஆடுமாறு நடம் புரியும் தன்மையர். அவர், ஐந்து வேலியுடைய கோயில், குளம், நீரோடை ஆகிய திருவாரூரில் விரும்பி இடம் கொண்டவரே.

515. வணங்கிமுன் அமரர்ஏத்த வல்வினை யானதீரப்
பிணங்குடைச் சடையில் வைத்த பிறையுடைப் பெருமையண்ணல்
மணங்கமழ் ஓதிபாகர் மதிநிலா வட்டத்தாடி
அணங்கொடி மாடவீதி  ஆரூரெம் அடிகளாரே.

தெளிவுரை : தேவர்கள் முன்னர் வணங்கி ஏத்த, அவர்களுடைய வினையைத் தீர்த்த சிவபெருமான் பிணித்து மேவும் சடையில், பிறைச் சந்திரனை வைத்தவர்; நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியைப் பாகமாக உடையவர். அப்பெருமான், அழகிய கொடிகளையும் மாட வீதிகளையும் உடைய ஆரூரில் மேவும் அடிகளே.

516. நகலிடம் பிறர்கட்காக நான்மறை யோர்கள்தங்கள்
புகலிடமாகி வாழும் புகலிலி இருவர் கூடி
இகலிட மாகநீண்டங்கு ஈண்டெயில் அழலதாகி
அகலிடம் பிரவியேத்த அடிகள்ஆ ரூரனாரே.

தெளிவுரை : பிறர் மகிழ்ந்து விளங்குகின்ற இடமாகவும், மறையவர்களுக்குப் புகலிடமாகவும், தனக்கு மேல் புகலக் கடியவர் ஒருவர் யாரும் இல்லை எனவும் பிரமன் திருமால் ஆகிய இருவரும் தேடியஞான்று அழல் என ஓங்கி விரித்தவராகவும் உடைய அடிகள், ஆரூரனாரே.

517. ஆயிர நதிகள் மொய்த்த அலைகடல் அமுதம்வாங்கி
ஆயிரம் அசுரர் வாழும் அணிமதில் மூன்றும் வேவ
ஆயிரம் தோளும் அட்டித்து ஆடி அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த அடிகள்ஆ ரூரனாரே.

தெளிவுரை : ஈசன், பலவாகிய நதிகள் சேரும் அலைகடலில் கடையப் பெற்று அமுதம் கிடைக்குமாறு செய்தவர்; அசுரர்கள் வாழும் முப்புரங்களில்
கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; தோள்கள் வீசியாடிய அசைவு தீர அடி வைத்து ஆடும் அடிகள் ஆரூரனாரே.

திருச்சிற்றம்பலம்

54. திருப்புகலூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

518. பகைத்திட்டார் புரங்கள் மூன்றும்
பாறிநீ றாகி வீழப்
புகைத்திட்ட தேவர் கோவே
பொறியிலேன் உடலம் தன்னுள்
அகைத்திட்டங்கு அதனை நாளும்
ஐவர்கொண் டாட்ட ஆடித்
திகைத்திட்டேன் செய்வ தென்னே
திருப்புக லூர னீரே.

தெளிவுரை : சிவபெருமானே ! மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவரே ! தேவரின் தலைவரே ! ஐம்புலன்கள் என்னைத் தாக்கி அடர்த்தல் செய்ய நான் அறிவு நீங்கப் பெற்றவனானேன். திகைத்துச் செய்வது அறியாது கலங்குகின்றேன். திருப்புகலூரில் மேவும் தேவரீரே ! காத்தருள் புரிவீராக.

519. மையரி மதர்த்த ஒண்கண்
மாதரார் வலையிற் பட்டுக்
கையெரி சூலம் ஏந்தும்
கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரிந் தகமி டற்றே
அடைக்கும் போது ஆவியார்தாம்
செய்வதொன் றறிய மாட்டேன்
திருப்புக லூரனீரே.

தெளிவுரை : மை அணிந்த மாதரார வலைப்பட்டுக் கையில் நெருப்பும் சூலமும் ஏந்திய கடவுளாகிய தேவரீரை நினையாதவனானேன். நெஞ்சில் கோழை கட்டி அடைப்புண்டு உயிரானது வருந்தும்போது, அத் துன்பத்திலிருந்து மீளும் வகை தெரியாது, செய்வதொன்றும் அறியாதவனானேன். திருப்புகலூரில் மேவும் பெருமானே ! தேவரீர் அருள் புரிவீராக.

520. முப்பது முப்பத்தாறு
முப்பதும் இடுகு ரம்பை
அப்பர்போல் ஐவரவந்து
அதுதரு கிதுவி டென்று
ஒப்பவே நலிய லுற்றால்
உய்யுமாறு அறிய மாட்டேன்
செப்பமே திகழு மேனித்
திருப்புக லூர னீரே.

தெளிவுரை : இவ்வுடம்பானது 96 தத்துவங்களைக் கொண்டு மேவ, அதற்குத் தலைவராக ஐம்புலன்கள் வந்து, அதனைத் தருவாயாக, இதனை விட்டு விடு என்று நலிவு செய்ய, நான் உய்யும் நெறியை அறியாதவனானேன். செம்மேனியராகத் திகழும் திருப்புகலூரில் வீற்றிருக்கும் ஈசனே ! தேவரீரே ! அருள் புரிவீராக.

521. பொறியிலா அழுக்கை யோம்பிப்
பொய்யினை மெய்யென் றெண்ணி
நெறியலா நெறிகள் சென்றே
நீதனேன் நீதி யேதும்
அறிவிலேன் அமரர் கோவே
அமுதினை மனனில் வைக்கும்
செறிவி லேன் செய்வதென்னே
திருப்புக லூர னீரே.

தெளிவுரை : பொலிவற்ற மலத்தையுடைய, மெய் என்று சொல்லப்படும் பொய்யுடம்பினை ஓம்பி  பொய்யை மெய்யென்று எண்ணி, நன்னெறி பயவாத தீய வழியில் சென்று கீழ்மையுற்றேன். நல்லறிவு பயக்கும் நீதிகளை அறிகிலேன். தேவர்களின் தலைவனே ! அமுதம் போன்ற தேவரீரை, என் மனத்தில் பதிய வைக்கும் அறிவு இல்லாதவனானேன். யான் என் செய்வேன் ! திருப்புகலூரில் மேவும் தேவரீரே ! அருள் புரிவீராக.

522. அளியினார் குழலி னார்கள்
அவர்களுக்கு அன்ப தாகிக்
களியினார் பாடல் ஓவாக்
கடவூர்வீ ரட்ட மென்னும்
தளியினார் பாத நாளும்
நினைவிலாத் தகவில் நெஞ்சம்
தெளிவி லேன் செய்வ தென்னே
திருப்புக லூர னீரே.

தெளிவுரை : ஈசனே ! வண்டுகள் ரீங்காரம் செய்யும் கூந்தலையுடைய மங்கையர்பால் அன்பு கொண்டு, காலத்தைக் கழித்தோன். பக்திப் பெருக்கின்வழி மேவும் புகழ்ப் பாடல்கள் ஓய்வின்றி பாடப் பெறும் திருக்கடவூர் வீரட்டம் என்னும் கோயிலில் திருக்கடவூர் வீரட்டம் என்னும் கோயிலில் வீற்றிருக்கும் ஈசனின் திருப்பாதத்தை, ஒரு நாளும் நினையாதவனாய்க் கழிந்தேன். நெஞ்சம் தெளிவற்றவனாய் வருந்துகின்றேன். நான் என் செய்வேன். திருப்புகலூர் மேவும் தேவரீரே ! அருள் புரிவீராக.

523. இலவினார் மாதர் பாலே
இசைந்துநான் இருந்து பின்னும்
நிலவுநாள் பலவென்று எண்ணி
நீதனேன் ஆதி யுன்னை
உலவிநான் உள்க மாட்டேன்
உன்னடி பரவு ஞானம்
செலவிலேன் செய்வ தென்னே
திருப்புக லூர னீரே.

தெளிவுரை : ஈசனே ! இலவம் போல் மென்மையுடைய மாதர்பால் இசைந்து, அதன் வழியே நாள் கழித்து இழிந்தேன். ஆதிப் பிரானாகிய ஈசனே ! தேவரீரை நெஞ்சில் பதித்து நினைக்காமலும், திருவடியைப் பரவும் ஞானத்தைப் பெறாமலும் இருந்தேன் ! நான் என் செய்வேன் ! திருப்புகலூரில் மேவும் தேவரீரே ! அருள் புரிவீராக.

524. காத்திலேன் இரண்ட மூன்றும்
கல்வியேல் இல்லை யென்பால்
வாய்த்திலேன் அடிமை தன்னுள்
வாய்மையால் தூயேன் அல்லேன்
பார்த்தனுக்கு அருள்கள் செய்த
பரமனே பரவு வார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத்
திருப்புக லூர னீரே.

தெளிவுரை : ஈசனே ! ஐம்புலன்கள் என்னை வெருட்டாதவாறு காத்திலேன். ஞானமும் பெற்றேனில்லை. தேவரீருக்கு அடிமை செய்யும் தன்மையில் தூயவனாகவும் இல்லை. அருச்சுனனுக்கு அருள் புரிந்த பெருமானே ! பரவி ஏத்தும் அடியவர்களுக்குத் தீர்த்த மகிமையுடைய பொய்கை திகழும் திருப்புகலூரில் மேவும் தேவரீரே, அருள் புரிவீராக.

525. நீருமாய்த் தீயு மாகி
நிலனுமாய் விசும்பு மாகி
ஏருடைக் கதிர்க ளாகி
இமையவர் இறைஞ்ச நின்றார்
ஆய்வதற்கு அரிய ராகி
அங்கங் கே ஆடுகின்ற
தேவர்க்கும் தேவர் ஆவார்
திருப்புக லூரனா ரே.

தெளிவுரை : ஈசன், நீராக விளங்குபவர்; தீயாக விளங்குபவர்; நிலமும் ஆகாயமும் ஆக விளங்குபவர்; சூரியனும் சந்திரனுமாக விளங்குபவர்; தேவர்கள் ஏத்தி இறைஞ்ச விளங்குபவர்; யாவராயினும் அறிதற்கு அரியவர்; அப்பெருமான், யாவரையும் ஆட்டுவிக்க, அவர் தேவர்க்கும் தேவராக விளங்குபவர்; அவரே திருப்புகலூரில் வீற்றிருப்பவர்.

526. மெய்யுளே விளக்கை யேற்றி
வேண்டளவு உயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி
 உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்
அவர்களே வலியர் சாலச்
செய்வதொன்று அறிய மாட்டேன்
திருப்புக லூர னீரே.

தெளிவுரை : திருப்புகலூரில் மேவும் ஈசனே ! என்னுடைய தேகத்தில் ஞான விளக்கை ஏற்றித் தேவையான அளவு ஒளி பெருக்கி, உய்யும் உபாயம் நோக்கி மகிழ்கின்ற நிலையினைக் காணும் போது, நான் மகிழாதபடி ஐம்புலன்களை உள்ளே வைத்தீரே ! அவர்கள், வலிமையானவர்களாக என்னை வஞ்சித்து நலியச் செய்கின்றனர். நான் செய்வதொன்றும் அறியாது ஏங்குகின்றேன். தேவரீரே ! அருள் புரிவீராக.

527. அருவரை தாங்கி னானும்
அருமறை யாதி யானும்
இருவரும் அறிய மாட்டா
ஈசனார் இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று
கண்வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார்
திருப்புக லூர னாரே.

தெளிவுரை : கோவர்த்தன கிரியைத் தாங்கிய திருமாலும் வேதம் ஓதுபவராகிய பிரமனும் ஆகிய இருவரும் கண்டு அறிய முடியாத ஈசன், இராவணன், கயிலையை எடுத்த போது, அவன் நெரிந்து அலறுமாறு திருப்பாத விரலால் சிறிது ஊன்றினார். அப் பெருமான், திருப்புகலூரில் மேவும் பெருமானே.

திருச்சிற்றம்பலம்

55. திருவலம்புரம் (அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

528. தெண்டிரை தேங்கி யோதம்
சென்றடி வீழுங் காலைத்
தொண்டிரைத் தண்டர் கோனைத்
தொழுதடி வணங்கி யெங்கும்
வண்டுகள் மதுக்கண் மாந்தும்
வலம்புரத்து அடிகள் தம்மைக்
கொண்டுநற் கீதம் பாடக்
குழகர்தாம் இருந்த வாறே.

தெளிவுரை : தெளிந்த கடலலைகளின் ஓதம் ஈசன் திருப்பாதத்தில் பதிந்து வணங்குகின்ற தன்மை உடையது. திருத்தொண்டர்கள் அண்டர் நாயகனாகிய அப் பெருமானைத் தொழுது போற்றுகின்றனர். வண்டுகள், மகரந்தங்களை மாந்தும் வலம் புரத்தில் பெருமானைக் கண்டு பக்திக் கீதங்களை இசைத்துப் பாடி ஏத்த, அப் பெருமான் அருள் வழங்கும் பெற்றியினராய் இருந்தவாறுதான் என்னே !

529. மடுக்களில் வாளை பாய
வண்டினம் இரிந்த பொய்கைப்
பிடிக்களிறு என்னத் தம்மிற்
பிணைபயின்று அணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை யேந்தித்
தொண்டர்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர்
வலம்புரத் திருந்த வாறே.

தெளிவுரை : மடுக்களில் வாளை மீன்கள் துள்ளிக் குதிக்கவும், வண்டினங்கள் அஞ்சிப் பொய்கையை நோக்கிச் செல்ல, ஆங்கு பிடியும் களிறும் போன்று வரால்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து விளங்க, திருத்தொண்டர்கள் மலர் மாலைகளைத் தொடுத்து ஏந்தி, ஈசனைப் பரவி ஏத்த, உமாதேவியைப் பாகமாக உடைய அப்பெருமான், வலம்புரத்தில் வீற்றிருக்கின்ற அருமைதான் என்னே !

530. தேனுடை மலர்கள் கொண்டு
திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை அஞ்சும் கொண்டு
அன்பினால் அமரஆட்டி
வானிடை மதியம் சூடும்
வலம்புரத்து அடிகள் தம்மை
நானடைந்து ஏத்தப் பெற்று
நல்வினைப் பயனுற் றேனே.

தெளிவுரை : தேன் விளங்கும் நறுமலர்களைக் கொண்டு திருவடியில் பொருந்துகின்ற மனத்தினால் பூரித்துச் சேர்த்து, பசுவின் பஞ்ச கௌவியத்தைக் கொண்டு குளிர அடிடேகம் செய்தும், சந்திரனைச் சூடிய வலம்புரத்து நாதரை நான் அடைந்து ஏத்தி, நல்வினைப் பயனை உற்றனன்.

531. முளைஎயிற் றிளநல் ஏனம்
பூண்டுமொழ் சடைகள் தாழ
வளைஎயிற் றிளைய நாகம்
வலித்தரை இசைய வீக்கிப்
புளைகயப் போர்வை போர்த்துப்
புனலொடு மதியம் சூடி
வளைபயில் இளையர் ஏத்தும்
வலம்புரத்து அடிகள் தாமே.

தெளிவுரை : பன்றியின் கொம்பினைப் பூண்டு, சடை முடிகள் தாழ, வளைந்த பல்லுடைய நாகத்தை அரையில் பொருந்தக் கட்டி, யானையின் தோலைப் போர்த்துக் கங்கையும் சந்திரனும் சூடி விளங்குபவர், ஈசன். அவர், வளையல் அணிந்த மகளிர் ஏத்தும் வலம்புரநாதரே.

532. சுருளுறு வரையின் மேலால்
துளங்கிளம் பளிங்குசிந்த
இருளுறு கதிர்நு ழைந்த
இளங்கதிர் பசலைத் திங்கள்
அருளுறும் அடியர் எல்லாம்
அங்கையின் மலர்கள் ஏந்த
மருளுறு கீதங் கேட்டார்
வலம்புரத்து அடிக ளாரே.

தெளிவுரை : மலையின் மீது பளிங்கு போன்ற வெண் கதிர்களை வீசும் சந்திரனைச் சூடிய ஈசனை, அடியவர்கள் எல்லாம் அழகிய கையில் மலர்களை ஏந்தித் தூவி வழிபடவும், அவர்கள் பாடும் கீதங்களைக் கேட்டு வீற்றிருப்பவர், வலம்புரநாதரே.

533. நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால்
நீண்டபுன் சடையி னானே
அனைத்துடன் கொண்டு வந்தங்கு
அன்பினால் அமைய ஆட்டிப்
புனைக்கின்றேன் பொய்மை தன்னை
மெய்ம்மையைப் புணர மாட்டேன்
எனக்குநான் செய்வ தென்னே
இனிவலம் புரவனீரே

தெளிவுரை : வலம்புரத்தில் மேவும் நாதரே ! நீண்ட சடை முடியுடைய பெருமானே ! அனைத்துப் பூசனைப் பொருள்களும் கொண்டு பூசித்து வழிபட வேண்டும் என்று நினைக்கின்றேன். ஆயினும் பொய்மையால் மயங்குகின்றேன். மெய்ம்மையை உணராதவன் ஆனேன். இனி நான் என் செய்வேன். அருள் புரிவீராக என்பது குறிப்பு.

534. செங்கயல் சேல்கள் பாய்ந்து
தேம்பழம் இனிய நாடித்
தங்கயம் துறந்து போந்து
தடம்பொய்கை யடைந்து நின்று
கொங்கையர் குடையுங் காலைக்
கொழுங்கனி அழுங்கி னாராம்
மங்கல மனையின் மிக்கார்
வலம்புரத்து அடிக ளாரே.

தெளிவுரை : கயல்களும் சேல்களும் சுவை மிக்க கனிகளை நாடித் தாம் இருக்கின்ற நீர் நிலைகளை விட்டுப் பெரிய குளங்களை அடைகின்றன. ஆங்கு, மகளிர் குடைந்து நீராடி மகிழ்கின்றனர். அத்தகைய மங்கல மனைகள் மிகுந்த தலத்தில் வலம்புரநாதர் வீற்றிருப்பார்.

535. அருகெலாம் குவளை செந்நெல்
அகவிலை ஆம்பல் நெய்தல்
தெருவெலாம் தெங்கு மாவும்
பழம்விழும் படப்பை எல்லாம்
குருகினம் கூடி யாங்கே
கும்மலித் திறகு லர்த்தி
மருவலாம் இடங்கள் காட்டும்
வலம்புருத் தடிக ளாரே.

தெளிவுரை : சூழ்ந்து விளங்கும் இடங்களில் குவளையும் செந்நெலும் விளைய, இடையில் ஆம்பலும் நெய்தலும் திகழ, தெருக்களில் தென்னையும் மாமரங்களும் திகழ, கனிகள் வழங்கும் தோட்டங்கள் பெருக, ஆங்கும் குருகினம் கூடி மகிழ்ந்து இறகுகளை விரித்து மகிழ வலமபுரம் என்னும் தலமானது உடையதாகும். ஆங்கு வீற்றிருப்பவர், வலம்புரநாதரே.

536. கருவரை யானைய மேனிக்
கடல்வண்ணன் அவனும் காணான்
திருவரை யனைய பூமேற்
றிசைமுகன் அவனும் காணான்
ஒருவரை யுச்சி யேறி
ஓங்கினார் ஓங்கிவந்து
அருமையில் எளிமை யானார்
அவர்வலம் புரவ னாரே.

தெளிவுரை : திருமாலும் நான்முகனும் தேடியும் காணற்கு அரியவராகிய சிவபெருமான், ஓங்கி நெடிது உயர்ந்து தோன்றியவர். பின்னர் அருமைமிகு எளிமையாய் விளங்கினார். அவர் வலம்புரநாதரே.

537. வாளெயிறு இலங்க நக்கு
வளர்கயி லாயம் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற
அரக்கனை அரைக்கீழ் அன்று
தோளொடு பத்து வாயும்
தொலைந்துடன்  அழுந்தவூன்றி
ஆண்மையும் வலியும் தீர்ப்பார்
அவர்வலம் புரவ னாரே.

தெளிவுரை : தனது ஒளி மிக்க கோரைப்பல் நெரியுமாறு நகை செய்து, கயிலாயத்தை எடுத்த அரக்கனாகிய இராவணனை, மலையின்கீழ்ப் பத்துத் தோளும் நெரியவாயும் அலறுமாறு, திருப்பாத விரலால் ஊன்றி அடர்த்தவர், ஈசன். அவர், வலம்புரநாதரே.

திருச்சிற்றம்பலம்

56. திருவாவடுதுறை (அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

538. மாயிரு ஞாலமெல்லா மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க்கு அம்பொன்
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே.

தெளிவுரை : இப் பெரிய உலகம் எல்லாம் ஈசனின் திருவடியை வணங்கி ஏத்தும். அப் பெருமான், கங்கையைப் படர்ந்து மேவும் சடை முடியின் மீது வைத்தவர்; பெரிய பொழில்கள் சூழ்ந்த திருக்கழுமல நகரினராகிய திருஞானசம்பந்தருக்கு, ஆயிரம் பொன் கொடுத்த அருளாளர். அவர், ஆவடுதுறையில் வீற்றிருக்கும் ஈசனே.

539. மடந்தைபா கத்தர்போலும் மான்மறிக் கையர்போலும்
குடந்தையிற் குழகர் போலும் கொல்புலித் தோலர்போலும்
கடைந்தநஞ் சுண்பர் போலும் காலனைக் காய்வர்போலும்
அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடு துறையனாரே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியைப் பாகமாகக் கொண்டுள்ளவர்; மான் கன்றைக் கையில் வைத்துள்ளவர்; குடந்தை என்னும் தலத்தில் அழகராய்த் திகழ்ந்து விளங்குபவர்; புலித் தோலை உடுத்தியவர்; நஞ்சினை உட்கொண்டு நீலகண்டராக விளங்குபவர்; காலனைக் காலால் உதைத்து மாய்த்தவர். தன்னை அடைந்து ஏத்துபவர்களுக்கு அன்பராகி அருள் நல்கும் அப்பெருமான், ஆவடுதுறையில் வீற்றிருப்பவரே.

540. உற்றநோய் தீர்ப்பர்போலும் உறுதுணை யாவர்போலும்
செற்றவர் புரங்கள்மூன்றும் தீயெழச் செறுவர்போலும்
கற்றவர் பரவியேத்தக் கலந்துலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பம்போலும் ஆவடு துறையனாரே.

தெளிவுரை : மும்மலம் மற்றும் பிறவி நோய் தீர்த்து, உயிர்க்கு உறுதுணையாய் விளங்கும் சிவபெருமான், கோட்டைகள், எரித்து சாம்பலாகுமாறு செய்தவர். அப்பெருமான், வேதம் வல்ல அந்தணர்கள் பரவி ஏத்தப் பக்திப் பெருக்கால் கசிந்து உருகியும், விரதம் இருந்தும், பாடிப் போற்றியும், தன்னை மறந்தவராயும், இவ்வுலகில் அகப்பற்றும் புறப்பற்றும் அற்றவராயும் மேவும் அடியவர்களுக்கு அன்பராகவும் விளங்குபவர். அவர், ஆவடுதுறையில் வீற்றிருக்கும் இறைவரே.

541. மழுவமர் கையர் போலும் மாதவள் பாதர்போலும்
எழுநுனை வேலம்போலும் என்புகொண் டணிவர்போலும்
தொழுதெழுந்து ஆடிப்பாடித் தோத்திரம் பலவும்சொல்லி
அழுமிவர்க்கு அன்பர்போலும் ஆவடு துறையனாரே.

தெளிவுரை : சிவபெருமான், மழுப்படையைக் கையில் கொண்டுள்ளவர்; உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்கும் திருமேனி உடையவர்; கூரிய முத்தலை வேல் எனப்படும் சூலத்தை உடையவர்; எலும்பு மாலை அணிபவர்; தொழுது போற்றியும், பக்தியால் ஆடிப் பாடியும், தோத்திரங்கள் சொல்லியும், அழுது நெக்குருகி ஏத்தியும் வணங்குபவர்களுக்கு அன்புடையவர். அவர், ஆவடுதுறையில் வீற்றிருக்கும் இறைவரே.

542. பொடியணி மெய்யர் போலும் பொங்குவெண் ணூலர்போலும்
கடியதோர் விடையர்போலும் காமனைக் காய்வர்போலும்
வெடிபடு தலையர்போலும் வேட்கையால் பரவும்தொண்டர்
அடிமையை ஆள்வர்போலும் ஆவடு துறைய னாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீறு பூசிய திருமேனியர்; ஒளி திகழும் முப்புரிகளையுடைய வெண்ணூல் தரித்தவர்; இடப வாகனத்தை உடையவர்; மன்மதனை எரித்தவர்; மண்டை ஓடுகளைக் கோத்து மாலையாக அணிந்தவர்; விரும்பும் மனத்தினராய் அடிமை பூண்ட தொண்டர்களைத் தாங்கி, அவர்களுக்கு எல்லா நன்மைகளையும் புரிபவர். அவர், ஆவடு துறையில் வீற்றிருப்பவரே.

543. வக்கரன் உயிரைவவ்வக் கண்மலர் கொண்டுபோற்றச்
சக்கரம் கொடுப்பர்போலும் தானவர் தலைவர் போலும்
துக்கமா மூடர்தம்மைத் துயரிலே வீழ்ப்பர்போலும்
அக்கரை ஆர்ப்பர் போலும் ஆவடு துறையனாரே.

தெளிவுரை : வக்கராசுரன் என்பவனை வதம் செய்யும் பொருட்டுத் திருமால் கண் மலர் சாற்றி வேண்ட, சக்கரப் படையை அருளிச் செய்தவர், சிவபெருமான். அவர், தேவர்களுக்கெல்லாம் தலைவர், உலகப் பற்றினைக் கொண்ட பேதையரைப் பிறவித் துயரில் வீழ்த்துபவர்; எலும்பினை அரையில் கட்டியவர்; அவர், ஆவடுதுறையில் வீற்றிருக்கும் பெருமானே.

544. விடைதரு கொடியர் போலும் வெண்புரிநூலர் போலும்
படைதரு மழுவர்போலும் பாய்புலித் தோலர் போலும்
உடைதரு கீளர்போலும் உலகமும் ஆவர்போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடு துறையனாரே.

தெளிவுரை : சிவபெருமான், இடபக் கொடியுடையவர்; வெண்மையான முப்புரி நூல் அணிந்தவர்; மழுப்படை உடையவர்; புலித்தோலை உடுத்தியவர்; கோவணத்தைக் கீழ் உடையாகக் கொண்டவர்; எல்லா உலகமும் ஆகுபவர்; அப்பெருமான், தன்னைச் சரண் அடைந்து ஏத்தும் அடியவர்களுடைய இடர்களைத் தீர்க்கும் பாங்குடையவராய், ஆவடு துறையில் வீற்றிருப்பவரே.

545. முந்திவா னோர்கள்வந்து முறைமையால் வணங்கியேத்த
நந்திமா காளர்என்பார் நடுவுடை யார்கள் நிற்பச்
சிந்தியா தேயொழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும்
அந்திவான் மதியம்சூடும் ஆவடு துறையனாரே.

தெளிவுரை : தேவர்கள், வணங்கும் நெறிமுறைப்படி வணங்கி ஏத்த சிவகணங்கள் தொழுது நிற்கச் சிந்தியாத முப்புர அசுரர்களை எரித்தவர், சிவபெருமான். அவர், பிறைச் சந்திரனைச் சூடி மேவும் ஆவடுதுறையின் நாதரே.

546. பானமர் ஏனமாகிப் பாரிடந் திட்ட மாலும்
தேனமர்ந் தேறும் அல்லித் திசைமுகம் உடையகோவும்
தீனரைத் தியக்கறுத்த திருவுரு வுடையார்போலும்
ஆனரை யேற்றர்போலும் ஆவடுதுறைய னாரே.

தெளிவுரை : பன்றி வடிவம் கொண்டு பூமியைக் குடைந்து சென்ற திருமாலும், தாமரை மலரில் விளங்கும் நான்கு முகம் உடைய பிரமனும் தேடியும் காண மாட்டாத திருவுடையவர் ஈசன். அவர், இடப வாகனத்தில் ஏறி விளங்கும் ஆவடுதுறையனாரே.

547. பார்த்தனுக்கு அருள்வர்போலும் படர்சடை முடியர் போலும்
ஏத்துவார் இடர்கள்தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்
கூத்தராய்ப் பாடியாடிக் கொடுவலி யரக்கன் றன்னை
ஆர்த்தவாய் அலறுவிப்பார் ஆவடு துறைய னாரே.

தெளிவுரை : சிவபெருமான் அருச்சுனருக்குப் பாசுபதாத்திரம் அருளியவர்; படர்ந்த சடை முடியுடையவர்; ஏத்தி வணங்குபவர்களுடைய இடரைத் தீர்ப்பவர்; அவர்களுக்கு இன்பத்தைக் கொடுப்பவர்; கூத்தப் பெருமானாய்ப் பாடுதலும் ஆடுதலும் செய்பவர்; இராவணனை, மøயின்கீழ் அடக்கி அலறச் செய்தவர்; அவர், ஆவடுதுறையனாரே.

திருச்சிற்றம்பலம்

57. திருவாவடுதுறை (அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்)

548. மஞ்சனே மணியு மானாய் மரகதத் திரளுமா னாய்
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வினானே
துஞ்சம்போ தாகவந்து துணையெக் காகிநின்று
அஞ்சலென் றருள வேண்டும் ஆவடு துறையுளமானே.

தெளிவுரை : திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் பெருமானே ! ஈசனே ! தேவரீர், மைந்தராயும், மணியாகவும், மகரகத் திரளாகவும் நெஞ்சுள் புகுந்து நினைவுகளை நிகழ்விப்பவராகவும் விளங்குபவரே ! துஞ்சும்போது துணையாக வந்து என்னைக் காத்து அஞ்சாதே என அருளிச் செய்வீராக.

549. நானுகந் துன்னை நாளும் நணுகுமா கருதியேயும்
ஊனுகந் தோம்பு நாயேன் உள்ளுற ஐவர் நின்றார்
தானுகந் தேயுகந்த தகவிலாத் தொண்டனே னான்
ஆனுகந் தேறுவானே ஆவடு துறையு ளானே.

தெளிவுரை : இடப வாகனத்தை உகந்து ஏறும் ஈசனே ! ஆவடுதுறையில் மேவும் பெருமானே ! தேவரீரை உகந்து, கருதி ஏத்த வேண்டும் என்றாலும், நான் ஊனுடம்பை ஓம்பும் நாயேன் ஆனேன். ஐம்புலன்கள் என்னை உள்ளிருந்து பற்றி நிற்க, அவர்கள் விரும்பியவற்றையே நான் செய்து உகந்து, தகவில்லாத தொண்டனாக உள்ளேன். இது, தன் ஆற்றாமையைப் புலப்படுத்திப் பரமனின் கருணைவயத்தை இறைஞ்சி, அருளுமாறு வேண்டுதலாம்.

550. கட்டமே வினைகளான காத்திரை நோக்கியாளாய்
ஒட்டவே யொட்டி நாளும் உன்னையுள் வைக்கமாட்டேன்
பட்டவான் தலைகையேந்திப் பலிதிரிந்து ஊர்கள் தோறும்
அட்டமாவு ருவினானே ஆவடு துறையுளானே.

தெளிவுரை : அட்ட மூர்த்தமாய் மேவும் நாதனே ! ஆவடு துறையுள் மேவும் ஈசனே ! வினைகள் யாவும் துன்பத்தையே தருவன. அவை அகலவொட்டாது நான் அவற்றைப் பேணிக் காக்கின்றவனாகி, அதற்கு ஆளாகி, அதனோடு இயையப் பொருந்தி, தேவரீரை ஒரு நாள் கூட நினைத்து ஏத்தாதவனானேன். பிரம கபாலம் ஏந்தி ஊர்கள்தோறும் திரிந்து பலியேற்ற தேவரீர், அருள் புரிவீராக.

551. பெருமைநன் றுடையதில்லை யென்றுநான் பேசமாட்டேன்
ஒருமையால் உன்னையுள்கி உகந்துவான் ஏறமாட்டேன்
கருமையிட டாயஊனைக் கட்டமே கழிக்கின் றேனான்
அருமையா நஞ்சம்உண்ட ஆவடு துறையுளானே.

தெளிவுரை : உண்பதற்கு அருமையதாகிய நஞ்சினை உண்ட ஆவடுதுறை அரனே ! தேவரீரைத் தரிசிக்க முத்தி தரும் பெருமை உடைய தில்லை என, நான் பேசிப் புனிதம் அடையாதவனானேன். மனத்தை ஒன்றி இருக்குமாறு செய்து, தேவரீரை உள்கி, மகிழ்ந்து, சிறப்பினை அடைகின்ற மேல்நிலைக்குச் செல்ல மாட்டேன். கருக்கொண்ட பிறவியைக் கொண்டு, ஊனை வளர்த்துப் பெருக்கித் துன்பத்தையே பெற்றுக் கழிக்கின்றேன். நான் என் செய்வேன் ! ஈசனே, காத்தருள வேண்டும் என்பது குறிப்பு.

552. துட்டனாய் வினைய தென்னும் சுழித்தலை அகப்பட்டேனைக்
கட்டனா ஐவர்வநவ்து கலக்காமைக் காத்துக் கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாகமாட்டும் ஆவடு துறையுளானே.

தெளிவுரை : கொடுமை உடையவனாகி வினையாகிய சுழியில் அகப்பட்டு வருந்துகின்றேன். எட்டுப் பாம்புகளை ஆட்டி ஆவடுதுறையுள் வீற்றிருக்கும் அரனே ! உமாதேவியாரை ஒரு பாகமாகக் கொண்டு மேவும் ஈசனே ! ஐம்புலன்கள் என்னைத் தாக்கிக் கலங்கச் செய்யாதவாறு காத்தருள் புரிவீராக.

553. காரழல் கண்டமேயாய் கடிமதிற் புரங்கள் மூன்றும்
ஓரழல் அம்பினாலே யுகைத்துத்தீ எரிய மூட்டி
நீரழற் சடையுளானே நிøன்பபவர் வினைகள் தீர்ப்பாய்
ஆரழல் ஏந்தியாடும் ஆவடு துறையு ளானே.

தெளிவுரை : திருக்கரத்தில் நெருப்பினை ஏந்தி ஆடும் ஆவடுதுறையின் ஈசனே ! கரிய கண்டத்தை உடைய நாதனே ! முப்புரங்களை ஓரம்பினால் எரியச் செய்த பெருமானே ! கங்கையை ஒளி திகழ் சடையில் வைத்த பரமனே ! தேவரீரை நினைத்துப் போற்றுகின்ற அடியவர்களின் துன்பத்தைத் தீர்ப்பவர் தேவரீரே, ஆவார்.

554. செறிவிலேன் சிந்தையுள்ளே சிவனடி தெரியமாட்டேன்
குறியிலேன் குணமொன்றில்லேன் கூறுமா கூறமாட்டேன்
நெறிபடு மதியொன்றில்லேன் நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன் ஆவடு துறையுளானே.

தெளிவுரை : ஆவடுதுறையில் மேவும் அரனே ! சிந்தையால் ஞானமில்லாத நான், சிவனடியை ஓர்கிலேன்; குறிக்கோளும் நற்குணங்களும் இல்லாதவன்; தேவரீரின் திருநாமங்களை எவ்வாறு கூற வேண்டுமோ அந்நெறியில் கூறாதவனானேன். நன்னெறியைப் பற்றுவதற்கு, மதியற்றவனானேன்; நினைத்துப் போற்றும் பாங்கும் இல்லாதவனாய், நினையாதவனாய், அறிவற்றவனாய் அயர்ந்து போனேன்.

555. கோலமா மங்கைதன்னைக் கொண்டொரு கோலமாய
சீலமே அறியமாட்டேன் செய்வினை மூடிநின்று
ஞாலமாம் இதுனுள் என்னை நைவியா வண்ணநல்காய்
ஆலமா நஞ்சமுண்ட ஆவடு துறையுளானே.

தெளிவுரை : ஆவடுதுறை அரனே! தேவரீர், அழகிய தன்மையில் உமாதேவியைப் பாகமாகக் கொண்டு அம்மையப்பராய் மேவும் சீலத்தை அறிய மாட்டேன். நஞ்சனை அருந்தி, நீலகண்டராக விளக்கும் ஈசனே ! நான் செய்த வினை யாவும் கண்ணுக்குத் தெரியாமல் நின்று இந்த உலகில் என்னை நலியச் செய்யாதவாறு காத்தருள் புரிவீராக.

556. நெடியவன் மலரினானும் நேர்ந்திரு பாலுநேடக்
கடியதோர் உருவமாகிக் கனலெரி யாகிநின்ற
வடிவின வண்ணம்என்றே என்றுதாம் பேசலாகார்
அடியனேன் நெஞ்சினுள்ளார் ஆவடுதுறையு ளானே.

தெளிவுரை : பிரமனும், திருமாலும் மேலும் கீழும் என இரு பக்கமும் தேடியும் பேருருவமாய் எரியாகி நின்றவர், ஈசன். அப் பெருமான் இத்தகைய வடிவினர் எனவும், இவ்வண்ணம் உடையவர் எனவும் கூறுதற்கு அறியாதவராயினர். அவர், ஆவடுதுறையுள் மேவும் அரனேயாவார். அவர், அடியவனின் நெஞ்சில் உள்ளவர்.

557. மலைக்கு நேராயரக்கன் சென்றுற மங்கை யஞ்சத்
தலைக்கு மேற் கைகளாலே தாங்கினான் வலிமையாள
உலப்பிலா விரலால்ஊன்றி ஒறுத்தவற்கு அருள்கள் செய்து
அலைத்தவான் கங்கைசூடும் ஆவடு துறையுளானே.

தெளிவுரை : உமாதேவி அஞ்சுமாறு, கயிலையைப் பெயர்த்து எடுத்த இராவணனுடைய வலிமை அழியுமாறு, தெவிட்டாத தீஞ்சுடையுடைய திருப்பாத மலரால் ஊன்றி, ஒறுத்து அருள் செய்தவர், கங்கை தரித்து விளங்கும் ஆவடுதுறை அரன்.

திருச்சிற்றம்பலம்

58. திருப்பருப்பதம் (அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம், கர்நூல் மாவட்டம் ஆந்திரா)

திருச்சிற்றம்பலம்

558. கன்றினார் புரங்கள் மூன்றும்
கனலெரி யாகச் சீறி
நின்றதோர் உருவம் தன்னால்
நீர்மையும் நிறையும் கொண்டு
ஒன்றியாங்கு உமையும் தாமும்
ஊர்பலி தேர்ந்து பின்னும்
பன்றிப்பின் வேட ராகிப்
பருப்பத நோக்கி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், முப்புரங்களை நெருப்பில் எரிந்து சாம்பலாகுமாறு சீறியவர்; உமாதேவியாரை ஒருபாகமாக வரித்து, அம்மையப்பராக விளங்குபவர். கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றவர். அவர், அருச்சுனருக்கு அருள் செய்யும் தகைமையில் வேட்டுருவம் தாங்கிப் பன்றியாக வந்த அசுரனை மாய்க்கத் தொடர்ந்தவர். அப் பெருமான், பருப்பத மலையில் வீற்றிருந்து அருள் நோக்கு புரியும் பரமரே.

559. கற்றமா மறைகள் பாடிக்
கடைதொறும் பலியும் தேர்வார்
வானவர் வணங்கி வாழ்த்த
முற்றவோர சடையில் நீரை
யேற்றமுக் கண்ணர்தம்மைப்
பற்றினார்க்கு அருள்கள் செய்து
பருப்பத நோக்கி னாரே.

தெளிவுரை : ஈசன், பெருமை மிக்க வேதங்களைப் பாடியும், மனைகளின் வாயில்கள்தோறும் சென்றும், மண்டை ஓட்டினைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டும் உணவு ஏற்றுத் திரிந்துவர்; தேவர்கள் எல்லாம் வாழ்த்த, கங்கையைச் சடை முடியில் வைத்த முக்கண்ணர்; தம்மைச் சரணடைந்து பற்றும் அடியவர்களுக்கு அருள் புரிபவர். அவர் பருப்பதத்தில் மேவுபவரே.

560. கரவிலா மனத்த ராகிக்
கைதொழு வார்கட் கென்றும்
இரவு நின்று எரியது ஆடி
இன்னருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்று
மாட்டிய வகையராகிப்
பரவுவார்க்கு அருள்கள் செய்து
பருப்பத நோக்கி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், வஞ்சனை இல்லாத நன்மனத்துடன் கைதொழுது ஏத்தும் அடியவர்பால் விளங்குபவர்; இருள் மேவும் மயானத்தில் கையில் நெருப்பேந்தி, நடனம் புரிந்து, உலகினார்க்கு இனிய அருளைப் புரிபவர்; பகைமை கொண்டு தீமை புரிந்த முப்புர அசுரர்களின் புரங்களை எரித்து அழித்தவர்; பரவி ஏத்தும் அடியவர்களுக்கு வேண்டியன வழங்கிப் பாதுகாப்பவர். அப்பெருமான், பருப்பதத்தில் மேவுபவரே.

561. கட்டிட்ட தலைகை யேந்திக்
கனலெரி யாடிச்சீறிச்
சுட்டிட்ட நீறு பூசிச்
சுடுபிணக் காடர் ஆகி
விட்டிட்ட வேட்கை யார்க்கு
வேறிருந்து அருள்கள் செய்து
பட்டிட்ட உடைய ராகிப்
பருப்பத நோக்கி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், மண்டை ஓட்டினை ஏந்தியவர்; நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவர்; சுட்ட சாம்பலைத் திருமேனியில் பூசிச் சுடுகாட்டில் இருப்பவர்; பற்று விட்டவர்களுக்கு வேறாக விளங்கும் தனிச் சிறப்புடையதாக அருள்களை புரிபவர்; பட்டு உடையவர். அவர் திருப்பருப்பதத்தில் மேவுபவரே.

562. கையராய்க் கபாலம் ஏந்திக்
காமனைக் கண்ணாற் காய்ந்து
மெய்யராய் மேனி தன்மேல்
விளங்குவெண் ணீறுபூசி
உய்வராய் உள்கு வார்கட்கு
உவகைகள் பலவும் செய்து
பையரா அரையில் ஆர்த்துப்
பருப்பத நோக்கி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், கபாலத்தைக் கையில் ஏந்தியவர்; மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்துச் சாம்பலாக்டயவர்; திருமேனியில் திருவெண்ணீறு பூசியவர்; ஒரு மனத்தினராய் மேவி, உய்ய வேண்டும் என்னும் கருத்தில் பிறவித் தளையை அறுக்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பேரின்பத்தை அருள்பவர்; நாகத்தை அரையில் இறுகக் கட்டியவர். அவர் பருப்பத மலையில் மேவும் பரமரே.

563. வேடராய் வெய்ய ராகி
வேழத்தின் உரிவை போர்த்து
ஓடராய் உலகம் எல்லாம்
உழிதர்வமர் உமையும் தாமும்
காடராய்க் கனல்கை யேந்திக்
கடிய தோர் விடைமேல் கொண்டு
பாடராய்ப் பூதம் சூழப்
பருப்பத நோக்கி னாரே.

தெளிவுரை : ஈசன், அருச்சுனனுக்கு அருள் செய்யும் பொருட்டு வேட்டுவத் திருக்கோலம் தாங்கியவர்; கடுமை உடையவராகி யானையின் தோலை உரித்துப் போர்த்தவர்; கையில் ஓடு ஏந்தி உலகம் எல்லாம் திரிந்து மேவுபவர்; உமாதேவியுடன் காட்டில் உள்ளவராய் விளங்குபவர்; கையில் அனல் ஏந்தி, இடப வாகனத்தில் ஏறி விளங்குபவர். அப் பெருமான், பண் இசைத்துப் பாடுபவராய்ப் பூத கணங்கள் சூழப் பருப்பதத்தில் மேவுபவரே.

564. மேகம்போல் மிடற்ற ராகி
வேழத்தின் உரிவை போர்த்து
ஏகம்ப மேவினார்தாம்
இமையவர் பரவி ஏத்தக்
காகம்பர் கழறர் ஆகி
கடியதோர் விடையொன் றேறிப்
பாகம் பெண் ணுருவம் ஆனார்
பருப்பத நோக்கி னாரே.

தெளிவுரை : ஈசன், மேகம் போன்ற கரிய மிடற்றினை உடையவர்; யானையின் தோலைப் போர்த்தியவர்; திருவேகம்பத்தில் மேவி விளங்குபவர்; இமையவர் பரவி ஏத்தக் காத்து அருள் புரியும் தாணுவாகுபவர்; வீரக் கழல் அணிந்த திருப்பாதம் உடையவர்; இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து உமையொரு பாகனாக விளங்குபவர். அப்பெருமான், பருப்பதத்தில் மேவுபவரே.

565. பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும்
பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக்
கபாலமோர் கையில் ஏந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளேறு
ஏறிய செல்வம் நல்ல
பாரிடம் பாணி செய்யப்
பருப்பத நோக்கி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், அடியவர்களுடைய இடர்களையும் பிணிகளையும் தீர்த்தருளும் பிஞ்ஞகன்; எந்தை பெருமான்; கரிய கண்டம் உடையவர்; கபாலத்தைக் கையில் ஏந்தியவர்; புகழ் மிக்க இடபவாகனத்தின் மீது ஏறும் செல்வர். அப்பெருமான், பூதகணங்கள் பக்கத்தில் சூழ்ந்து ஆரவாரித்து மகிழ்ந்திருக்கப் பருப்பதத்தில் மேவுபவரே.

566. அங்கண் மால் உடையராய்
ஐவரால் ஆட்டு ணாதே
உங்கண் மால் தீர வேண்டில்
உள்ளத்தால் உள்கி யேத்தும்
செங்கண்மால் பரவி யேத்திச்
சிவன்என நின்ற செல்வர்
பைங்கண்வெள் ளேற தேறிப்
பருப்பத நோக்கி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருமாலால் பிரவி ஏத்தப் பெற்றவராய்ச் சிவன் எனத் திகழ்பவர். அவர், இடப வாகனத்தை உடையவராகிப் பருப்பதத்தில் மேவுபவர். மயக்கம் உடையவராகியும் ஐம்புலன்களால் ஆட்டுவிப்பராகவும் வருந்தும் உங்கள் அறியாமை தீரவேண்டுமானால், அப்பெருமானை உள்ளத்தால் ஒன்றி இருந்து ஏத்துவீராக.

567. அடல்விடை யூர்தி யாகி
அரக்கன் தோள் அடர ஊன்றிக்
கடலிடை நஞ்சம் உண்ட
கறையணி கண்டனார்தாம்
சுடர்விடு மேனி தன்மேல்
சுண்ணவெண் ணீறு பூசிப்
படர்சடை மதியம் சேர்த்திப்
பருப்பத நோக்கி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், இடப வாகனத்தில் அமர்ந்தவர்; இராவணனுடைய தோளை நெரித்தவர்; கடல் நஞ்சினை உண்ட நீல கண்டர்; ஒளிமயமாய் மேவும் திருமேனியில் திருநீறு பூசியவர். அப்பெருமான், படர்ந்து மேவும் சடை முடியின் மீது சந்திரனைச் சூடிப் பருப்பதத்தில் விளங்குபவரே.

திருச்சிற்றம்பலம்

59. திருஅவளிவள் நல்லூர் (அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

568. தோற்றினான் எயிறுகவ்வித்
தொழிலுடை யரக்கன் றன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச்
சிக்கெனத் தவிரும் என்று
வீற்றினை யுடைய னாகி
வெடுவெடுத்து எழுந்த வன்றன்
ஆற்றலை அழிக்க வல்லார்
அவள்இவள் நல்லூராரே.

தெளிவுரை : அரக்கனாகி வளைந்த பற்களை உடையவனாய், நல்லுரையைக் கேட்டு நடக்காதவனாகித் தீயனவே புரியும் இராவணன், தற்பெருமையால், மிக வேகமாகச் சென்று கயிலை மலையை எடுக்க அவனுடைய கொடிய வலிமையை அழித்தவர், அவளிவள் நல்லூரில் மேவும் பரமரே.

569. வெம்பினார் அரக்கர் எல்லாம்
மிகச் சழக்கு ஆயிற் றென்று
செம்பினால் எடுத்த கோயில்
சிக்கெனச் சிதையும் என்ன
நம்பினார் என்று சொல்லி
நன்மையால் மிக்கு நோக்கி
அம்பினால் அழிய எய்தார்
அவளிவள் நல்லூ ராரே.

தெளிவுரை : செம்பினால் செய்யப்பட்ட கோயிலாயினும் சிதைக்கும் சழக்குடைய அரக்கர்களின் தலைவனாகிய இராவணன் அழியுமாறு, தன்னை நம்பியவர்களுக்கு ஆறுதலும் நன்மையும் புரியும் நோக்குடைய இராமபிரானுடைய அம்பின் வழியே இருந்து அருள் செய்தவர், அவளிவள் நல்லூரில் மேவும் பெருமானே.

570. கீழ்ப்படக் கருத லாமோ
கீர்த்திமை யுள்ளதாகில்
தோட்பெரு வலியி னாலே
தொலைப்ப னான் மலையைஎன்று
வேட்பட வைத்த வாறே
விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து
ஆட்படக் கருதிப் புக்கார்
அவளிவள் நல்லூராரே.

தெளிவுரை : தன்னுடைய கீர்த்தியையும் தோளின் வலிமையையும் நிலை நாட்டிக் கயிலையைப் பெயர்த்தெடுப்பேன் என்று முனைந்த இராவணனுடைய தோளும் முடியும் நெரித்து அழித்தவர், சிவபெருமான். அச்செயலானது, மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிப் பின்னர் இரதியின் வேண்டுகோளை ஏற்று அருளிச் செய்த பாங்கினைப் போன்று, இராவணன் மலையின் கீழிருந்து பாடிப் போற்றி, ஏத்த, வாளும் வாழ் நாளும் அருளப் பெற்றது. அவ்வாறு, ஆட்கொள்ளும் பாங்கினர் அவளிவள் நல்லூரில் வீற்றிருக்கும் பரமரே.

571. நிலைவலம் வல்லன் அல்லன்
நேர்மையை நினைய மாட்டான்
சிலைவலம் கொண்ட செல்வன்
சீரிய கயிலை தன்னைத்
தலைவலம் கருதிப் புக்குத்
தாக்கினான் றன்னை யன்று
அலைகுலை யாக்கு வித்தார்
அவளிவள் நல்லூ ராரே.

தெளிவுரை : இராவணன், நிலைத்து மேவும் வெற்றியை உடையவன் அல்லன்; நேர்மையை எண்ணிப் போற்றாதவன். அவ்வரக்கன், மேருமலையை வில்லாகத் தாங்கிய செல்வனாகிய ஈசனின் புனித மலையாகிய கயிலையைத் தன்னுடைய முடியின் வலிமையால் பெயர்த்தான். அஞ்ஞான்று அவனை, நிலைகுலையச் செய்து, திருப்பாத விரலால் ஊன்றி அடக்கியவர், அவளிவள் நல்லூரில் வீற்றிருக்கும் பரமரே.

572. தவ்வலி யொன்ற னாகித்
தனதொரு பெருமை யாலே
மெய்வ்வலி யுடையன் என்று
மிகப்பெருந் தேரை யூர்ந்து
செவ்வலி கூர்விழியாற்
சிரம் பத்தால் எடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லார்
அவளிவள் நல்லூ ராரே.

தெளிவுரை : தனது வலிமையைப் பெருமையாகக் கருதியும், தனது வலிமையே மெய்யானது என்றும், அதற்கு இணையாக வேறு எதுவும் இல்லை என்றும், எண்ணிய இராவணன், பெரிய தேரில் ஊர்ந்து சென்ற போது, தனது பத்துத் தலைகளும் கொண்டு கயிலையை எடுக்கலுற்றான். அவ்வரக்கனுடைய வலிமையினை நெரித்து அழித்தவர் அவளிவள் நல்லூரில் மேவும் பரமரே.

573. நன்மைதான் அறிய மாட்டான்
நடுவிலா அரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று
வலிதனைச் செலுத்த லுற்றுக்
கன்மையால் மலையை யோடிக்
கருதித்தான் எடுத்து வாயால்
அம்மையோ என்னவைத்தார்
அவளிவள் நல்லூ ராரே.

தெளிவுரை : நடுவு நிலைமையற்ற அரக்கர் கோமானாகிய இராவணன், நன்மை தரும் நெறியை அறியாதவன்; வன்மையே கருதித் தனது புயவலிமையால் கல்லென்று கருதிக் கயிலை மலையை எடுத்தவன். பின்னர் அவன், அம்மா என்று அலறுமாறு செய்த ஈசன், அவளிவள் நல்லூரில் வீற்றிருக்கும் பெருமானே.

574. கதம்படப் போது வார்கள்
போதுமக் கருத்தி னாலே
சிதம்பட நின்ற நீர்கள்
சிக்கெனத் தவிரும் என்று
மதம்படு மனத்த னாகி
வன்மையால் மிக்கு நோக்க
அதம்பழத் துருவு செய்தார்
அவளிவள் நல்லூராரே.

தெளிவுரை : சினம் மிகுந்த போது, அதன் கருத்தினால் நல்லறிவு கெடுமாறு எண்ணி, அதனில், சிக்கி மதம் பொருந்திய மனத்தினனாகிய இராவணனை நன்கு நோக்கி அத்திப்பழம் போன்று நசிந்தும் நலிந்தும் செய்த ஈசன், அவளிவள் நல்லூரில் மேவும் பரமரே.

575. நாடுமிக் குழிதர் கின்ற
நடுவிலா அரக்கர் கோனை
ஓடுமிக் கென்று சொல்லி
ஊன்றினான் உகிரி னாலே
பாடிமிக் குய்வன் என்று
பணியநற் றிறங்கள் காட்டி
ஆடுமிக் கரவம் பூண்டார்
அவளிவள் நல்லூராரே.

தெளிவுரை : எல்லா நாடுகளிலும் திரிந்து ஆதிக்கம் செலுத்தி, நடுநிலையின்றி வாழும் அரக்கர் கோனாகிய இராவணன், கயிலையை எடுத்தபோது, ஈசுன் திருப்பாத விரலால் ஊன்றியவர். அவ்வரக்கன், நலிவுற்றுப் பாடிப் பணிந்து உய்வேன் என்று ஏத்தி நிற்க, அவனுக்கு நல்லருளைப் புரியும் பாங்கில், அருள்கலை நல்கியவர், அவர். அப்பெருமான், ஆடுகின்ற  அரவத்தை அணிகலனாகப் பூண்டு அவளிவள் நல்லூரில் மேவும் பரமரே.

576. ஏனமா இடந்த மாலும்
எழில்தரு முளரியானும்
ஞானந்தான் உடைய ராகி
நன்மையை யறிய மாட்டார்
சேனந்தான் இலாவ ரக்கன்
செழுவரை எடுக்க வூன்றி
ஆனந்த அருள்கள் செய்தார்
அவளிவள் நல்லூ ராரே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் தன்னுணர்வு உடையவர்களாகி சிவபெருமானை, அறியாதவர்கள் ஆயினர். அந்நிலையில் கயிலையை எடுத்த இராவணனைக் கயிலை மலையைத் திருவிரலால் ஊன்றி நல்லருள் புரிந்தவர் அப்பெருமான். அவர், அவளிவள் நல்லூரில் மேவும் பரமரே.

577. ஊக்கினான் மலையை யோடி
உணர்விலா அரக்கன் றன்னைத்
தாக்கினான் விரலி னாலே
தலைபத்தும் தகர வூன்றி
நோக்கினான் அஞ்சத்  தன்னை
நோன்பிற வூன்று சொல்லி
ஆக்கினார் அமுத மாக
அவளிவள் நல்லூ ராரே.

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணன் நெரியுமாறு திருப்பாத விரலால் ஊன்றித் தலை பத்தும் துன்புறுமாறு செய்து, அவன் அஞ்சி ஏத்த அருள் புரிந்தவர் ஈசன். அவர் அவளிவள் நல்லூரில் மேவும் பரமரே.

திருச்சிற்றம்பலம்

60. திருப்பெருவேளூர் (அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், மணக்கால்ஐயம்பேட்டை,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

578. மறையணி நாவினானை
மறப்பிலார் மனத்து ளானைக்
கறையணி கண்டன் றன்னைக்
கனலெரி யாடி னானைப்
பிறையணி சடையி னானைக்
பெருவே ளூர்பேணி னானை
நறையணி மலர்கள் தூவி
நாள்தொறும் வணங்கு வேனே.

தெளிவுரை : ஈசன், வேதம் ஓதும் நாவினர்; மறவாது ஏத்தும் அன்புடையவர்களின் இனிய மனத்தில் விளங்குபவர்; எரியும் நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவர்; பிறைச் சந்திரனை அணிந்த சடையினர். அப்பெருமான் பெருவேளூர் என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருப்பவர். அவரைத் தேன் விளங்கும் நறுமண மலர்கள் கொண்டு தூவிப் போற்றி நாள் தோறும் நான் வணங்குவேன்.

579. நாதனாய் உலகம் எல்லாம்
நம்பிரான் எனவும் நின்ற
பாதனாம் பரம யோகி
பலபல திறத்தி னாலும்
பேதனாய்த் தோன்றி னானைப்
பெருவேளூர் பேணி னானை
ஓதநா வுடையனாகி
உரைக்குமாறு உரைக்குற் றேனே.

தெளிவுரை : ஈசன், உலகங்களுக்கெல்லாம் நாதன் எனப்படுபவர்; நமது பிரான் என்று எல்லாரும் ஏத்துமாறு விளங்கும் திருப்பாதத்தினர்; பரமயோகியானவர்; பலப்பல வடிவு தாங்கி பேரருள் புரியும் அருள் திறத்தினர். அப்பெருமான், பெருவேளூரில் மேவி விளங்குபவர்; அவரை, ஓதும் நாவுடையானாகி, உரைத்து ஏத்தலுற்றேன்.

580. குறவிதோள் மணந்த செல்வக்
குமரவேள் தாதை என்றும்
நறவிள நறுமென் கூந்தல்
நங்கையோர் பாகத் தானைப்
பிறவியை மாற்று வானைப்
பெருவேளூர் பேணி னானை
உறவினாய் வல்ல னாகி
உணருமாறு உணர்த்து வேனே.

தெளிவுரை : குறத்தியாய்த் தோன்றிய வள்ளிப் பிராட்டியைத் திருமணம் புரிந்த செல்வக் குமரவேளின் தந்தை, சிவபெருமான். அவர், தேன் மணக்கும் மென்மையான கூந்தலையுடைய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவர்; தன்னை ஏத்தும் அடியவர்களின் பிறவி நோயைத் தீர்த்தருள்பவர். அப்பெருமான், பெருவேளூர் என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருப்பவர். அவரை நன்கு பற்றி இருந்து ஒன்றவல்லவனாகி நான் உணரும் வகையில் உணர்த்துவேன்.

581. மைஞ்ஞவில் கண்டன் றன்னை
வலங்கையின் மழுவொன் றேந்திக்
கைஞ்ஞவின் மானி னோடும்
கனலெரி யாடி னானைப்
பிஞ்ஞகன் றன்னை யந்தண்
பெருவேளூர் பேணி னானைப்
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப்
பொறியிலா அறிவிலேனே.

தெளிவுரை : சிவபெருமான், மைபோன்ற கரிய கண்டத்தை உடையவர்; வலது கையில் மழுப்படை ஏந்தியவர்; கையில் மானும், எரியும் நெருப்பும் விளங்க மேவுபவர்; அழகிய முடிவண்ணம் மேவும் பிஞ்ஞகர்; அழகிய குளிர்ச்சி மிக்க பெருவேளூரில் விரும்பி வீற்றிருப்பவர். அவரைப் பொய்மை நீங்கிய தன்மையில் நினையாதவனாகி சிவஞானமும் அறிவும் அற்றவன் ஆகினனே.

582. ஓடைசேர் நெற்றி யானை
உரிவையை மூடி னானை
வீடதே காட்டுவானை
வேத நான்கு ஆயினானைப்
பேடைசேர் புறவ நீங்காப்
பெருவேளூர் பேணினானைக்
கூடநான் வல்ல மாற்றம்
குருகுமாறு அறிகிலேனே.

தெளிவுரை : சிவபெருமான், அகன்ற மடல் போன்ற நெற்றியில் பட்டம் உடையவர்; யானையின் தோலைப் போர்த்தியவர்; சிவஞானிகளுக்கு முத்திப் பேற்றினை அளிப்வர்; நான்கு வேதமும் ஆனவர்; புறாக்கள் தம் பேடையொடு மகிழ்ந்து மேவும் பெருவேளூரில் விரும்பி வீற்றிருப்பவர்; அப்பெருமானைக் கூடியிருந்து மகிழுமாறு அடையும் வழி அறிகிலேன். அதற்கு இணையாக உள்ள வேறு மாற்றமும் அறிகிலேனே.

583. கச்சைசேர் நாகத் தானைக்
கடல்விடம் கண்டத் தானைக்
கச்சியே கம்பன் றன்னைக்
கனலெரி யாடுவானைப்
பிச்சைசேர்ந்து உழல்வி னானைப்
பெருவேளூர் பேணி னானை
இச்சை சேர்ந்து அமர நானும்
இறைஞ்சு மாறு இறைஞ்சு வேனே.

தெளிவுரை : சிவபெருமான், நாகத்தைக் கச்சையாகக் கட்டியுள்ளவர்; நஞ்சினைக் கண்டத்தில் தேக்கியுள்ளவர்; திருக்கச்சியில் விளங்கும் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர்; எரியும் நெருப்பைக் கையில் ஏந்தி நடனம் புரிபவர்; பலியேற்றுத் திரிபவர்; பெருவேளூரில் விரும்பி உறைபவர். அப்பெருமான், என் விருப்பத்திற்கு உரியவராகி, என் நெஞ்சில் குடி கொண்டு அமர, நானும் அக மலராகிய அட்ட புஷ்பங்களால் ஏத்தி இறைஞ்சுவன்.

584. சித்தராய் வந்து தன்னைத்
திருவடி வணங்கு வார்கள்
முத்தனை மூர்த்தி யாய
முதல்வனை முழுதுமாய
பித்தனைப் பறரும் ஏத்தப்
பெருவேளூர் பேணினானை
மெத்தநே யவனை நாளும்
விரும்புமாறு அறிகிலேனே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னைச் சித்தத்தில் கொண்டு வணங்கும் அடியவர்களுக்கு, முதல்வராகவும் இருந்து, அருள் புரியும் தலைவர்; அண்டங்கள் முழுவதும் நிரம்பி, வியாபித்திருப்பவர்; தான் செய்யும் செயல்களின் விளக்கத்தைப் பிறரால் அறிந்து கொள்ளாதவாறு, காட்சி நல்கும் பித்தர். அப்பெருமான், திருத்தொண்டர்கள் மட்டும் அல்லாது, ஏனையோரும் ஏத்துமாறு பெருவேளூரில் விரும்பி உறைபவர். பேரன்பு கொண்டு திகழும் அப்பெருமானை, நாள்தோறும் அன்பு கொண்டு ஏத்தும் நித்திய வழிபாட்டு  நெறியினை மேற் கொள்ளாதவனானேன்.

585. முண்டமே தாங்கி னானை
முற்றிய ஞானத் தானை
வண்டுலாம் கொன்றை தானை
வளர்மதிக் கண்ணி யானைப்
பிண்டமே ஆயினானைப்
பெருவேளூர் பேணி னானை
அண்டமாம் ஆதி யானை
அறியுமாறு அறிகி லேனே.

தெளிவுரை : சிவபெருமான், மண்டையோட்டு மாலை அணிபவர்; ஞான பரிபூரணர்; கொன்றை மாலையையும் பிறைச் சந்திரனையும் தரித்தவர்; உயிர்க்கும் ஆகும் ஊனாகத் திகழ்பவர்; பெருவேளூரில் விரும்பி வீற்றிருப்பவர். அப்பெருமான், அண்டமாகவும் ஆதியாகவும் விளங்க, நான் அதனை அறிந்து நோக்கும் அறிவு அற்றவனானேன்.

586. விரிவிலா அறிவி னார்கள்
வேறெரு சமயம் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும்
எம்பிராற்கு ஏற்ற தாகும்
பரிவினாற் பெரியோர் ஏத்தும்
பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி உய்யும்
வகையது நினைக்கின் றேனே.

தெளிவுரை : பெருகி ஓங்கும் ஞானம் இன்றிச் சைவ நெறியை விட்டு, வேறு புறமாகிய சமயக் கொள்கை யொன்றைத் தோற்றுவித்து, மனத்தில் காழ்ப்புற்றுப் புறம் கூறினவரே ஆயினும், எம்பிரானாகிய சிவபெருமான், அதனை ஏற்றவராகிக் கருணை வயத்தராய் விளங்குபவர். வேத நூல்களைக் கற்றுத் தேர்ந்த அந்தணர்கள், அன்பினால் ஏத்தும் பெருவேளூரில் விரும்பி வீற்றிருக்கும் அப்பெருமானை, நான் அன்புடன் சார்ந்து வாழ்த்தி, உய்யும் நிலையினை நினைக்கின்றேன்.

587. பொருகடல் இலங்கை மன்னன்
உடல்கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத் தானைக்
கதிரிளங் கொழுந்து சூடும்
பெருகிய சடையி னானைப்
பெருவேளூர் பேணினானை
உருகிய அடியர் ஏத்தும்
உள்ளத்தால் உள்கு வேனே.

தெளிவுரை : சிவபெருமான், இலங்கையின் வேந்தனாகிய இராவணனைக் கயிலை மலையின் கீழ் அடர்த்தியவர்; கருமையான கண்டத்தையுடையவர்; ஒளிவிடும் கதிரின் கொழுந்து போன்ற சடை முடியுடையவர். அப்பெருமான், பெருவேளூரில் விரும்பி வீற்றிருப்பவர். அவர் நெஞ்சுருகிப் போற்றும் அடியவர்களால் ஏத்தப் பெறுபவர். நான் அவரை உள்ளார உள்குவேன்.

திருச்சிற்றம்பலம்

61. திருஇராமேச்சுரம் (அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

588. பாசமும் கழிக்க கில்லா
அரக்கரைப் படுத்துத் தக்க
வாசமிக் கலர்கள் கொண்டு
மதியினால் மால்செய் கோயில்
நேசமிக் கன்பி னாலே
நினைமி னீர் நின்று நாளும்
தேசமிக் கான் இருந்த
திரு இரா மேச்சு ரம்மே.

தெளிவுரை : பற்று நீங்குவதற்கு இயலாத இயல்புடைய அரக்கர்கள் மாளுமாறு போர் செய்து வென்ற இராமபிரான், சிவஞான உணர்வால் நறுமண மலர்கள் கொண்டு பூசித்த கோயில், ஒளிமிக்கதாக விளங்கும் திருஇராமேச்சுரம். ஆங்கு எழுந்தருளியுள்ள ஈசனை, நேயம் மிகுந்து அன்பினால் நாள்தோறும் நினைத்து ஏத்து மின்.

589. முற்றின நாள்கள் என்று
முடிப்பதே கார ணமாய்
உற்றவன் போர்க ளாலே
உணர்விலா அரக்கர் தம்மைச்
செற்றமால் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தைப்
பற்றிநீ பரவு நெஞ்சே
படர்சடை ஈசன் பாலே.

தெளிவுரை : நெஞ்சே ! இராவணனுக்குரிய வாழ் நாள்கள், முடிந்து போன நிலையில் போர் தொடுத்து வெற்றி கொண்ட இராமபிரான் அமைத்து வழிபட்ட கோயிலான இராமேச்சுரத்தைப் பற்றி இருந்து, நீ பரவுக. அக்கோயிலில் வீற்றிருக்கும் ஈசனை ஏத்தி உய்க.

590. கடலிடை மலைகள் தம்மால்
அடைத்து மால் தரும முற்றித்
திடலிடைச் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற்
சுழல்கின் றேன் தூய்மை யின்றி
உடலிடை நின்றும் பேரா
ஐவர்ஆட் டுண்டு நானே.

தெளிவுரை : கடலின் இடையில் மலைக் கற்களை அடைத்துப் பாலம் அமைத்துச் சென்று, இராவணனை அழித்து இராமபிரான், தனது பணியை முடித்துத் தீவுத் திடலில் செய்த கோயிலாகிய முடித்துத் தீவுத் திடலில் செய்த கோயிலாகிய இராமேச்சுரத்தை, என் நெஞ்சுள் வைத்து, நாவால் உரைத்து ஏத்துகின்றேன். தூய்மையற்ற இவ்வுடலில் ஐம்புலன்கள் நின்று துன்புறுத்துகின்றனர். நான் அவர்களால் ஆட்டி வைக்கப்படுகின்றேன்.

591. குன்றுபோல் தோளு டைய
குணமிலா அரக்கர் தம்மைக்
கொன்றுபோர் ஆழி யம்மால்
வேட்கையாற் செய்த கோயில்
நன்றுபோல் நெஞ்சமே நீ
நன்மையை யறிதி யாயில்
சென்றுநீ தொழுதுய் கண்டாய்
திருஇரா மேச்சு ரம்மே.

தெளிவுரை : குன்று போல் திரண்ட தோளுடைய சத்துவகுணமில்லாத அரக்கர்களைக் கொன்று வெற்றி கொண்ட சக்கரப் படையுடைய திருமாலாகிய இராமபிரான், சிவபூசையை விரும்பிச் செய்த கோயில் இராமேச்சுரம். நெஞ்சமே ! நீ, நல்லவன் போல் தோற்றும் கொண்டனையே அன்றி, உண்மையில் நல்லவன் இல்லை, நீ, நற்பொருளை அறிய வேண்டுமானால் இராமேச்சுரும் சென்று தொழுது உய்வாயாக.

592. வீரமிக் கெயிறு காட்டி
விண்ணுற நீண்ட ரக்கன்
கூரமிக் கவனைச் சென்று
கொன்றுடன் கடற் படுத்துத்
தீரமிக் கான் இருந்த
திருஇரா மேச்சு ரத்தைக்
கோரமிக் கார்த வத்தாற்
கூடுவார் குறிப்பு ளாரே

தெளிவுரை : வீர மிக்க கோரைப் பல்லைக் காட்டும் அரக்கனாகிய இராவணன், நீண்ட வாழ் நாளைப் பெற்றுக் கொடுமை புரிபவனானான். அவனைக் கொன்றழித்த தீரமிக்க இராமபிரான், இருந்து சிவபூசையாற்றிய திருஇராமேச்சுரத்தைத் தளராத சிந்தனை யுடன் தொழுது ஏத்துபவர்கள் நற்கதியை அடையும் குறிப்பினை அடையப் பெற்றவர்களாவார்கள்.

593. ஆர்வல நம்மின் மிக்கார்
என்றஅவ் அரக்கர் கூடிப்
போர்வலம் செய்து மிக்குப்
பொருதவர் தம்மை வீட்டித்
தேர்வலம் செற்றமால் செய்
திருஇரா மேச்சு ரத்தைச்
சேர்மட நெஞ்ச மேநீ
செஞ்சடை எந்தை பாலே.

தெளிவுரை : அரக்கர்கள், தம்மை விட வலிமையுடையவர் யாரும் இல்லை என்னும் எண்ணத்தில், வலிமை மிகுந்தவராய்ப் போர் செய்தனர். அத்தகையேரø வீழ்த்தி வெற்றி கொண்ட இராமபிரான், அமைத்தது திருஇராமேச்சுரம். மட நெஞ்சமே ! நீ ஆங்கு அடைந்து செஞ்சடை நாதராகிய ஈசனை வணங்குவாயாக.

594. வாக்கினால் இன்பு உரைத்து
வாழ்கிலார் தம்மை எல்லாம்
போக்கி னாற் புடைத்த வர்கள்
உயிர்தனை உண்டு மால்தான்
தேக்கு நீர் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தை
நோக்கி னால் வணங்கு வார்கள்
நோய்வினை நணுகும் அன்றே.

தெளிவுரை : அரக்கர்கள் இனிமையான உரைகளைப் பேசி வாழாதவர்கள். அவர்களை அழித்து வெற்றி கொண்டவர் திருமால். அவர், கடற்கரையில் அமைத்த திருஇராமேச்சுரத்தைக் கண்டு தரிசித்து வணங்குபவர்களுக்குப் பிறவி நோயும் அதற்குக் காரணமாகிய வினையும் நைந்து கெடும்.

595. பலவுநாள் தீமை செய்து
பார்தன் மேல் குழுமி வந்து
கொலைவிலார் கொடிய ராய
அரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையி னான் செய்த கோயில்
திரு இரா மேச்சு ரத்தைக்
தலையினால் வணங்கு வார்கள்
தாழ்வராம் தவம தாமே.

தெளிவுரை : பல காலங்கள் தீமையே செய்து உலகினை வதைத்துத் துன்புறுத்திக் கொலையே புரியும் வில் தொழிலை மேவிய கொடியவராகிக் அரக்கர்களைக் கொன்று வீழ்த்திய, கோதண்டம் கையிலேந்திய இராமபிரான் செய்து அமைத்த கோயில் திரு இராமேச்சுரம். அதனைத் தலைதாழ்த்தி வணங்கும் அடியவர்களுக்குப் பாவம் தாழ்வடைந்து இற்றழியத் தவப்பயன் பெருகிச் சேர்ந்து நற்கதி உண்டாகும்.

596. கோடிமா தவங்கள் செய்து
குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்க ரத்தால்
எரிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தை
நாடிவாழ் நெஞ்சமே நீ
நன்னெறி யாகு மன்றே.

தெளிவுரை : அரிய பெரிய தவங்கள் செய்து பல வரபலங்களைப் பெற்றுக் குன்று போல வலிமையுடைய அரக்கர்கள் வீழ்ந்து மடியுமாறு சக்கரப் படையைச் செலுத்தி வெற்றி கொண்டவர் திருமால், அவர் பின்னர் இராம அவதாரம் கொண்டு அன்பு மேலிடச் செய்த கோயிலானது, திருஇராமேச்சுரம். நெஞ்சமே ! அதனை நாடி வாழ்வாயாக. அது உனக்கு நன்னெறியைக் கூட்டுவிக்கும்.

597. வன்கண்ணர் வாள ரக்கர்
வாழ்வினை ஒன்ற றியார்
புன்கண்ணர் ஆகி நின்று
போர்கள்செய் தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தைத்
தங்கணால் எய்த வல்லார்
தாழ்வராம் தலைவன் பாலே.

தெளிவுரை : கொடுமையுடைய அரக்கர்கள், நன்கு வாழ்வதற்குரிய செயல் முறைகளை அறியாதவராவர். அவர்கள் பிறர்க்குத் துன்பம் செய்வதையே இயல்பாகக் கொண்டவர்கள், அத்தகையோரைப் போர்செய்து அழித்த இராமபிரான் அமைத்த கோயில், திருஇராமேச்சுரம். அதனைத் தம் கண்களால் தரிசித்து ஏத்துபவர்கள், ஈசனின் திருப்பாத கமலத்தில் பதிந்து விளங்குவார்கள்.

598. வரைகள்ஒத் தேயு யர்ந்த
மணிமுடி அரக்கர் கோனை
விரையமுற் றறவொடுக்கி
மீண்டுமால் செய்த கோயில்
திரைக்கள்முத் தால்வ ணங்கும்
திருஇரா மேச்சு ரத்தை
உரைகள்பத் தாலு ரைப்பார்
உள்குவார் அன்பி னாலே.

தெளிவுரை : மலைகளை ஒத்த நெடிய மணிமுடியுடைய இராவணனை முற்றும் ஒடுக்கி அழித்துத் திரும்பும் போது, இராமபிரான் செய்த கோயில், கடலலைகள் முத்துக்களைக் காணிக்கையாகச் செலுத்தி வணங்கும், திருஇராமேச்சுரம் ஆகும். அதனை இத்திருப்பதிகம் கொண்டு ஏத்துபவர்கள், அன்பின் பெருக்கத்தால் திளைப்பார்கள். இத்திருப்பதிகத்தை ஓதுபவர் அன்பு ததும்பும் உள்ளத்தினர் ஆவார் என்பதாம்.

திருச்சிற்றம்பலம்

62. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)

திருச்சிற்றம்பலம்

599. வேதியா வேத கீதா
விண்ணவர் அண்ணா என்றென்று
ஓதியே மலர்கள் தூவி
ஒருங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய்
படர்சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே.

தெளிவுரை : நான்கு வேதங்களாக விளங்கும் நாதனே ! வேத கீதங்களை ஓதும் பெருமானே ! தேவர்கள் நெருங்கி வந்து தலைவா என்று ஏத்தப் பெறுபவரே ! தேவரீருடைய திருநாமங்களை ஓதி, மலர்கள் தூவி மனம் ஒன்றி கழல்களைக் காண, உமாதேவியாரைத் திருமேனியில் ஒருபாகமாக வைத்துப் படர்ந்து மேவும் சடையின் மீது சந்திரனைச் சூடும் ஆதியே ! ஆலவாயில் திகழும் அப்பனே ! அருள் செய்வீராக.

600. நம்பனே நான்மு கத்தாய்
நாதனே ஞான மூர்த்தீ
என்பொனே ஈசா என்றென்று
ஏத்தி நான் ஏசற்று என்றும்
பின்பினே திரிந்து நாயேன்
பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில்
அப்பனே அருசெ யாயே.

தெளிவுரை : நம்பனே ! நான்கு முகம் கொண்ட நாதனே ! ஞான மூர்த்தீ ! என் பொன் போன்றவனே ! ஈசனே ! எனத் தேவரீரை ஏத்தி வணங்கி என் மனத்திலுள்ள மாசு யாவும் நீங்கப் பெற்றுத் மனத்திலுள்ள மாசு யாவும் நீங்கப் பெற்றுத் தேவரீரைப் பின் பற்றித் திரிந்து, இனிப் பிறவாதவாறு, அன்பனே! ஆலவாயில் மேவும் அப்பனே ! அருள்புரிவீராக.

601. ஒரு மருந்தாகி யுள்ளாய்
உம்பரோடு உலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய்
பேரமுது இன்சு வையாய்க்
கருமருத் தாகி யுள்ளாய்
ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமருந்து ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், ஒப்பற்ற மருந்தாகட விளங்குபவர்; தேவர்களுக்கும் உலகுக்கும் பெரு நன்மைகளைப் புரியும் மருந்தாகி விளங்குபவர்; பேரமுதாகியும் இனிய சுவை மிக்கவராயும் சிவாமிர்தத் தேனாகி அமுதமுமாய் விளங்குபவர்; கருவில் ஆழ்த்தும் பிறவிப் பிணியைத் தீர்க்கும் நன்மருந்தாகுபவர்; என்னை ஆட்படுத்தியுள்ள வினைகளைத் தீர்க்கும் அருமருந்தாய் விளங்குபவர். ஆலவாயில் மேவும் அப்பனே ! தேவரீர் அருள்புரிவீராக.

602. செய்யநின் கமல பாதம்
சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே
மான்மறி மழுவொன் றேந்தும்
சைவனே சால ஞானம்
கற்றறி விலாத நாயேன்
ஐயனே ஆல வாயில்
அப்பனே அருள் செ யாயே.

தெளிவுரை : தேவர்களின் தலைவரே ! செந்தாமரை போன்ற தேவரீருடைய திருப்பாதங்களை மனமானது பொருந்துமாறு காணுமா ! அத்தகைய அறிவைப் பெறாதவனானேன். கருமையான கண்டத்தையுடைய பெருமானே ! மானும் மழுவும் ஏந்தும் சிவபெருமானே ! என் தலைவனே ! ஆலவாயில் மேவும் என் தந்தையே ! அருள் புரிவீராக.

603. வெண்டலை கையில் ஏந்தி
மிகவும் ஊர் பலிகொண்டு என்றும்
உண்டதும் இல்லை சொல்லில்
உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப்
பளகனேன் உளமதார
அண்டனே ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே.

தெளிவுரை : மண்டை ஓட்டினைக் கையில் ஏந்தி ஊர்தொறும் சென்று பலி கொண்ட ஈசனே ! தேவரீர், நஞ்சினையன்றி வேறு உணவை உண்டதும் இல்லை. பண்டு தேவரீரை உளமார நினைத்து ஏத்தாத குற்றுமடையவனானேன். அண்டமாகத் திகழ்பவனே ! ஆலவாயில் மேவும் அப்பனே ! அருள் புரிவீராக.

604. எஞ்சலில் புகலி தென்றென்று
ஏத்திநான் ஏசற் றென்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி
மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த
நற்பொருட் பதமே நாயேற்கு
அஞ்சலென்று ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே.

தெளிவுரை : ஆலவாயில் மேவும் அப்பனே ! குறைவு ஏதும் இன்றி அடைக்கலம் இதுவே என்று ஏத்தி வஞ்சம் அற்றும் நிந்தனையற்றும் விளங்கும் தேவரீருடைய மலரடியைக் காணும் வண்ணம் அருள் செய்வீராக. நஞ்சினைக் கண்டத்தில் வைத்த நற்பொருள் பதமாக விளங்கும் தேவரீர், அஞ்சாதே என அருள் செய்வீராக.

605. வழுவிலாது உன்னை வாழ்த்தி
வழிபடும் தொண்ட னேனுன்
செழுமலர்ப் பாதம்காணத்
தெண்டிரை நஞ்சம் உண்ட
குழகனே கோல வில்லீ
கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே.

தெளிவுரை : கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட குழகனே ! அழகிய மேரு மலையை வில்லாகக் கொண்ட நாதனே ! கூத்தப்பெருமானே! சொக்கநாதக் கடவுளே ! ஆலவாயில் மேவும் அப்பனே ! வழு இல்லாது தேவரீரை வாழ்த்தி வழிபடும் தொண்டனாகிய நான் தேவரீருடைய மலர்ப் பாதத்தைக் காண அருள் செய்வீராக.

606. நறுமலர் நீரும் கொண்டு
நாள்தொறும் ஏத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத்
திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா
மாமறை அங்கம் ஆறும்
அறிவனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே.

தெளிவுரை : கடல் வண்ணராக விளங்கும் திருமாலைப் பாகமாக உடைய ஈசனே ! பெருமை மிக்க மறைகளும் அதன் ஆறு அங்கங்களும் அறியும் அறிவாகிய பரம் பொருளே ! ஆலவாயில் மேவும் அப்பனே ! தேவரீரை நறுமலரும் நீரும் கொண்டு நாள்தொறும் ஏத்திப் பூசித்து வாழ்த்திச் சித்தம் வைத்து வணங்கித் திருவடியில் சேருமாறு, அடியவனுக்கு அருள் செய்வீராக.

607. நலந்திகழ் வாயில் நூலால்
சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரச தாள
அருளினாய் என்று திண்ணம்
கலந்துடன் வந்து நின்றாள்
கருதிநான் காண்ப தாக
அலந்தனன் ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே.

தெளிவுரை : ஆலவாயில் மேவும் அப்பனே ! வாயில் நூல்கொண்டு பந்தர் அமைத்துச் சிவபுண்ணியத்தை மேற் கொண்ட சிலந்தியை, மறுபிறவியில் கோச் செங்கட் சோழ மன்னனாக ஆக்கி, அரசாளுமாறு செய்த ஈசனே ! தேவரீருடன் கலந்து நின்று அன்பிற் குழைந்து இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் நான் வந்து அலைந்து சோர்வுற்றேன் அருள் செய்வீராக.

608. பொடிக்கொடு பூசிப் பொல்லாக்
குரம்பையிற் புந்தி யொன்றிப்
பிடித்துநின் தாள்கள் என்றும்
பிதற்றிநான் இருக்க மாட்டேன்
எடுப்பன்என்று இலங்கைக் கோன்வந்து
எடுத்தலும் இருபது தோள்
அடர்த்தனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே.

தெளிவுரை : ஆலவாயில் மேவும் அப்பனே ! கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய இருபது தோளை அடர்த்த ஈசனே ! நான், திருநீற்றை உடம்பில் பூசி மனம் ஒன்றியும், சிந்தித்தும் தேவரீருடைய தாள் மலரைப் பற்றித் திருநாமங்களை உச்சரித்தும் தியானம் செய்யாதவன். அடியேனுக்கு அருள் செய்வீராக.

திருச்சிற்றம்பலம்

63. திருவண்ணாமலை (அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை)
 
திருச்சிற்றம்பலம்

609. ஓதிமா மலர்களல் தூவி
உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்தோள்
சுடர்மழுப் படையி னானே
ஆதியே அமரர் கோவே
அணிஅணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால்
நினையுமா நினைவி லேனே.

தெளிவுரை : உமாதேவியைப் பாகமாக உடைய பெருமானே ! பெருகி எழுந்த சோதியே ! எட்டுத் தோள் கொண்ட நாதனே ! சுடர் விடும் மழுப் படையுடைய ஈசனே ! ஆதியே ! தேவர்களின் தலைவரே ! அழகு மிளிரும் அண்ணாமலையுள் திகழும் பரமனே ! விதிப்படி தேவரீருடைய திருப்பாதங்களில் மலர்தூவிப் போற்றித் தேவரீரையன்றி என்மனமானது வேறொன்றை நினைதஅது ஏத்துமா ! நான் தேவரீரையன்றி வேறு நினைவு இல்லாதவன் ஆனேன்.

610. பண்தனை வென்ற இன்சொற்
பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக்
கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே
அணியணா மலையு ளானே
தொண்டனேன் உன்னை யல்லால்
சொல்லுமா சொல்லில் லேனே.

தெளிவுரை : பண்ணின் இசையை வென்ற இனிய சொல் பகரும் உமாதேவியைப் பாகமாகக் கொண்ட பரமனே ! நீலகண்டனே ! கார்காலத்தில் மலரும் கொன்றை மலரை மாலையாகத் தரித்த கடவுளே ! தாமரை மலர் போன்ற பாதங்களையுடைய நாதனே ! அண்டமாக விளங்கும் பெருமானே ! தேவர்களின் தலைவனே  அழகிய அண்ணாமலையுள் வீற்றிருக்கும் ஈசனே ! தொண்டனாகிய அடியேன், தேவரீரை யன்றி ஏத்திச் சொல்லுவதற்கு ஏதேனும் சொற்கள் உள்ளனவோ ! தேவரீர், சொற்களுக்கு அடங்காத பெரும் பொருளல்லவா !

611. உருவமும் உயிரும் ஆகி
ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றஎம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாதம் அல்லால்
மற்றொரு மாடு இலேனே.

தெளிவுரை : வடிவமும் அதனில் இயங்கும் உயிரும் ஆகி, ஓதப் பெறும் உலகத்தில், பெருகி விளங்கும் வினையும், அதற்குரியதாகிய பிறவியும், அப்பிறவியை நீக்கும் முத்திப் பேறும் ஆகி விளங்குபவர், சிவபெருமான். அவர், அருவி பொன் சொரியும் அண்ணாமலையில், தேவர் தலைவராய்த் திகழ்பவர். அவரை மருவி நின்று திருவடியை ஏத்துதல் அல்லாது, வேறு செல்வம் யாதும் இல்லை.

612. பைம்பொனே பவளக் குன்றே
பரமனே பால்வெண் ணீறா
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
அணியணா மலையு ளானே
என்பொனனே யுன்னை யல்லால்
ஏதுநான் நினைவி லேனே.

தெளிவுரை : அழகு மிளிரும் பசும் பொன்னே ! பவளக் குன்று போல் விளங்கும் செம்மேனியுடைய பரமனே ! பால் போன்ற திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி மேவும் செம்பொன்னே ! செந்தாமரை போன்ற மென்மையான திருப்பாதம் உடைய நாதனே ! புகழ் மிக்க மாணிக்க மணியே ! அழகு மிக்க பெருமானே ! மேலான மணிகள் கொழித்து மிளிரும் அண்ணாமலையில் வீற்றிருக்கும் இறைவனே ! என் உள்ளத்தில் பொன் போன்று விளங்கும் மேன்மையுடைய ஈசனே ! தேவரீரை அன்றி நான் வேறு எதனையும் நினைத்தற்க்கு இல்லை.

613. பிறையணி முடியி னானே
பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார்
கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமரர் ஏத்தும்
அணிஅணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லால்
யாதுநான் நினைவி லேனே.

தெளிவுரை : பிறைச்சந்திரனைச் சூடிய சடை முடியுடைய ஈசனே ! பிஞ்ஞகா ! உமாதேவியைப் பாகமாக உடைய பெருமானே ! நான்கு மறைகளும் ஆகிய நாதனே ! இறைவனே ! வண்டு சுழலும் கொன்றை மாலை தரித்த பெருமானே ! வாம தேவனே ! ஒலிக்கும் கழல் அணிந்த தேவர்கள் ஏத்தும் அண்ணாமலையில் மேவும் ஈசனே ! தேவரீரை அன்றி நான் வேறு நினைவில்லாதவன்.

614. புரிசடை முடியின் மேலோர்
பொருபுனல் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக்
கருதிய கால காலா
அரிகுல மலிந்த அண்ணா
மலையுளாள் அலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய்
பாதநான் மறப்பி லேனே.

தெளிவுரை : ஈசன், சடை முடியின் மீது கங்கையைத் தரித்தவர்; யானையின் தோலைப் போர்த்தி இருப்பவர்; காலனை மாய்த்த திருப்பாதத்தினர்; குருங்கினங்கள் மலிந்த அண்ணாமலையில் வீற்றிருப்பவர். அழகிய பண்ணிசைக்கும் வண்டுகள் சூழ்ந்த மலர்ப்பாதம் உடைய அப்பெருமானை, நான் மறவாதவன்.

615. இரவியும் மதியும் விண்ணும்
இருநிலம் புனலும் காற்றும்
உரகமார் பவனம் எட்டும்
திசையொளி உருவம் ஆனாய்
அரவுமிழ் மணிகொள் சோதி
அணியணா மலையு ளானே
பரவநின் பாதம் அல்லால்
பரமநான் பற்றி லேனே.

தெளிவுரை : சூரியன், சந்திரன், ஆகாயம், பூமி, நீர், காற்று முலான அட்டமூர்த்தமாகி ஒளியுமிழ் சோதியாய் அண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமானே ! தேவரீருடைய திருப்பாத மலர்களை அன்றி நான் வேறு பற்றில்லாதவன்.

616. பார்த்தனுக்கு அன்று நல்கிப்
பாசுப தத்தை ஈந்தாய்
நீர்த்ததும்பு லாவு கங்கை
நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந்து ஈண்டு கொண்டல்
அணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத்
திறமலால் திறமி லேனே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், பார்த்தனுக்குப் பாசுபத அத்திரத்தை அருளிச் செய்தவர்; கங்கையை நெடிய முடியில் மீது நிலவ வைத்தவர்; ஆர்த்து வந்து கூடும் மேங்களையுடைய அண்ணாமலையில் வீற்றிருப்பவர். தீர்த்தமாய் விளங்கும் தேவரீருடைய திருப்பாதங்களைஅன்றி வேறு திறம் யான் பெற்றிலேன்.

617. பாலுநெய் முதலா மிக்க
பசுவில ஐந்து ஆடுவானே
மாலுநான் முகனும் கூடிக்
காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூசும்
அணியணா மலையுளானே
வாலுடை விடை யாய் உன்றன
மலரடி மறப்பி லேனே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், பால் நெய் முதலாக உள்ள பசுவின் பஞ்ச கௌவியத்தை விரும்பிப் பூசனை பெறுபவர். திருமாலும் பிரமனும் காண்பதற்கு இயலாதவராகி ஓங்கும் ஒளிப்பிழம்பாகி நின்றவர்; மழை விளங்கும் மேகத்தையுடைய பாக்கு மரங்கள் விளங்கும் அண்ணாமலையில் வீற்றிருப்பவர். தேவரீர், பெருமை மிக்க வெள் விடையின் மீது அமர்ந்தவர். உமது திருவடியை யான் மறவாதவன்.

618.  இரக்கம்ஒன்று யாதும் இல்லாக்
காலனைக் கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை யூக்க
ஒருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த அண்ணா
மலையுளாய் அமரர் ஏறே
சிரத்தினால் வணங்கி யேத்தித்
திருவடி மறப்பி லேனே.

தெளிவுரை : இரக்கம் இல்லாத காலனை மாய்த்த எம் தலைவர் சிவபெருமான். அவர், தனது வலிமையால் கயிலையைப் பெயர்த்த இராவணன், ஒரு விரலின் நுனியால் நெரித்தவராகி, அண்ணாமலையில் வீற்றிருப்பவர். தேவர்களின் தலைவராகியும் அப்பரமனை, நான் மறவாது சிரந் தாழ்த்தி வணங்கி ஏத்துகின்றேன்

திருச்சிற்றம்பலம்

64. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

619. பூதத்தின் படையர் பாம்பின்
பூணினார் பூண நூலர்
சீதத்திற்கு பொலிந்த திங்கள்
பொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்
கீதத்திற்கு பொலிந்து ஒசைக்
கேள்வியர் வேள்வி யாளர்
வேதத்தின் பொருளர் வீழி
மிழலைழுள் விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், பூதகணங்களைப் படையாகக் கொண்டுள்ளவர்; பாம்பை ஆபரணமாக அணிந்தவர்; முப்புரிநூல் அணிந்தவர்; குளிர்ச்சி மிக்க பிறைச் சந்திரனைச் சடைமுடியில் தரித்தவர்; நஞ்சினைத் தேக்கிய கண்டத்தை உடையவர்; வேத ஒலியாகவும் கீதமாகவும் அதன் பொருளாகவும் விளங்கி அதனை விரும்பிக் கேட்பவர்; வேள்விக்குரிய தலைவராய் இருந்து ஆள்பவர். அப்பெருமான், வீழி மிழலையுள் மேவும் விகிர்தனாரே.

620. காலையிற் கதிர்செய் மேனி
கங்குலிற் கறுத்த கண்டர்
மாலையின் மதியம் சேர்ந்த
மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையிற் பாகும் போல
அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும்
வேலையின் அமுதர் வீழி
மிழøயுள் விகிர்த னாரே.

தெளிவுரை : ஈசன், காலைச் செங்கதிரவன் போன்ற செம்மேனியர்; இருள் போன்ற கரிய கண்டத்தையுடையவர்; மாலை மதி தரித்த, ஒளிரும் சடை முடியுடையவர்; தேனும் பாலும், கரும்பி சாரும் போன்று அடியவர்களுக்கு இன் சுவையாக நெருங்கி விளங்கி, மகிழ்விப்பவர். பாற்கடலில் கடைந்தெடுக்கப் பெற்ற அமுதமாகத் திகழ்பவர். அவர், வீழி மிழலையுள் மேவும் விகிர்தனாரே.

621. வருந்தின நெருநல் இன்றாய்
வழங்கின நாளர் ஆல்கீழ்
இருந்துநன் பொருள்கள் நால்வர்க்கு
இயம்பினர் இருவ ரோடும்
பொருந்தினர் பிரிந்து தம்பால்
பொய்யராம் அவர்கட்கு என்றும்
விருந்தினர் திருந்துவீழி
மிழலையுள் விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், எதிர்காலம், முற்காலம், இக்காலம் எனப் பெறும் மூன்று காலமும் ஆகுபவர்; கல்லால் மரத்தின் கீழ் இருந்து நாற்பொருள் உண்மையைச் சனகாதி முனிவர்களாகிய, சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகியவர்களுக்கு உபதேசம் செய்தவர்; திருமால், நான்முகன் ஆகியவரோடு பொருந்தி விளங்குபவர்; தமக்குள் மாறுபாடு கொண்டு, அவர்கள் தேடிய காலத்தில் காட்சிக்கு அரிவராகச் சோதிப் பிழம்பாக ஓங்கியவர். விரும்பி ஏத்தும் தகையினர்க்கு நல் விருந்தினர். அவர் வீழி மிழலையுள் மேவம் விகிர்தனாரே.

622. நிலையிலா ஊர்மூன்று ஒன்ற
நெருப்புஅரி காற்றும்அம் பாகச்
சிலையு நான் அதுவுநாகம்
கொண்டவர் தேவர் தங்கள்
தலையினால் தரித்த என்பும்
தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே.

தெளிவுரை : முப்புரங்களை, அக்கினி, திருமால், வாயு வேன் ஆகியோரை அம்பாக அமைத்து, மேரு மலையை வில்லாகவும், வாசுகி, என்னும் நாகத்தை நாணாகவும் கொண்டு எய்து அழித்தவர், சிவபெருமான். அவர், எலும்பு மாலையும் சடை முடியும் உடையவர். அத்தகைய பெருமைக்குரிய திருவேடப் பொலிவுடையவர் வீழி மிழலயுள் மேவும் விகிர்தனாரே.

623. மறையிடைப் பொருளர் மொட்டின்
மலர்வழி வாசத் தேனர்
கறவிடைப் பாலின் நெய்யர்
கரும்பினிற் கட்டி யாளர்
பிறையிடைப் பாம்பு கொன்றைப்
பிணையல்சேர் சடையுள் நீரர்
விறகிடைத் தீயர் வீழி
மிழலையுள் வகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், வேதத்தின் பொருளாக விளங்குபவர்; மலரின் நறுமணத்தின் வழித் தேனாய் விளங்குபவர்; மலரின் நறுமணத்தின் வழித் தேனாய் இனிப்பவர்; கறந்த பாலில் விளங்கும் நெய்யானவர்; கரும்பின் கட்டி போன்று நெடிது பக்திச் சுவையை உள்ளத்தின் ஊற்றென விளைவிப்பவர்; பிறைச் சந்திரன், பாம்பு, கொன்றை மலர் ஆகிய சடை முடியில் திகழுமாறு செய்தவர்; கங்கையைத் தரித்தவர்; விறகில் கண்ணுக்குப் புலனாகாத நெருப்பு போன்றவர். அவர் வழி மிழலையுள் மேவும் விகிர்தனாரே.

624. எண்ணகத்து இல்லை அல்லர்
உளரல்லர் இமவான் பெற்ற
பெண்ணகத்து அரையர் காற்றில்
பெருவலி இருவ ராகி
மண்ணகத்து ஐவர் நீரில்
நால்வர்தீ அதனில் மூவர்
விண்ணகத்து ஒருவர் வீழி
மிழலையுள் விகிர்தனாரே.

தெளிவுரை : சிவபெருமான் நமது எண்ணத்தில் இல்லாதவர் இல்லை, எப்போதும் இருப்பவர். அவர் எப்போதும் உளர் என்று நம்மால் அறியுமாறு விளங்கி நிற்பவர் அல்லர். அவர் மலை மகளாகிய உமாதேவியைப் பாகங் கொண்டு அர்த்த நாரியாக விளங்குபவர். காற்றில் வலிமைமிக்க இராவராக விளங்கும் ஈசன், மண்ணில் ஐவராகவும், நீரில் நால்வராகவும், நெருப்பில் மூவராகவும், ஆகாயத்தில் ஒருவராகவும் திகழ்பவர். அப்பெருமான் வீழி மிழலையுள் மேவும் விகிர்தனாரே.

625. சந்தணி கொங்கை யாளோர்
பங்கினார் சாம வேதர்
எந்தையும் எந்தை தந்தை
தந்தையும் ஆய ஈசர்
அந்தியோடு உதயம் அந்த
ணாளரஆன் நெய்யால் வேட்கும்
வெந்தழல் உருவர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியை ஒரு பாகமாக உடையவர்; சாமவேதமாக விளங்கும்; என் தந்தையும் தந்தையின் தந்தையும், அவர் தந்தையும் ஆகிய தாதை உறவால் திகழ்பவர். உதயமும் அந்தியும் ஆகிய சந்திகளில் அந்தணர்கள் பசுவின் நெய்கொண்டு புரியும் வேள்வித் தழலாக விளங்குபவர். அவர் மிழலைள் மேவும் விகிர்தனாரே.

626. நீற்றினை நிறையப் பூசி
நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி ஒருநாளொன்று
குறைழயக்கண் ணிறைய விட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி
அவன் கொணர்ந்து இழிச்சுங் கோயில்
வீற்றிருந்து அளிப்பர் வீழி
மிழலையுள் விகிர்தனாரே.

தெளிவுரை : திருமால், திருவெண்ணீற்றை நிறையப் பூசி நித்தமும் ஆயிரம் பூக்கள் கொண்டு அருச்சிக்க, ஒரு நாள் ஒரு மலர் குறைவு பட்டதனையறிந்து, தன் கண்ணை இடந்து பற்றி, அருச்சித்து அக்குறையை நிவர்த்தி செய்தார். அத்தகைய அன்பின் ஆற்றலுக்கு ஈடாகச் சக்கரப் படையை அளித்தவர், சிவபெருமான். திருமால், ஈசனைப் பூசிப்பதற்காக விண்ணிலிருந்து கொணர்ந்து மண்ணுலகில் சேர்த்த விமாதில் வீற்றிருந்து அருள்பவர், வீழி மிழலையின் விகிர்தனாரே.

627. சித்திசெய் பவர்கட்கு எல்லாம்
சேர்விடம் சென்று கூடப்
பத்திசெய் பவர்கள் பாவம்
பறிப்பவர் இறப்பி லாளர்
முத்திசெய் பவள மேனி
முதிரொளி நீல கண்டர்
வித்தினின் முளையர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே.

தெளிவுரை : ஈசன், சித்திகளை விரும்புபவர்களுக்குச் சேரும் இடமாகுபவர்; பத்தியுடன் ஏத்தித் தொழுபவர்களுடைய பாவத்தைப் போக்குபவர்; இறப்பிலாதவர்; முத்தியளிக்கும் பவள மேனியர்; நீலகண்டர்; வித்திற்கு முளை போன்று எல்லாச் செயல்களும் கருவாகி நின்று விளங்கச் செய்பவர். அவர் வீழி மிழலையுள் மேவும் விகிர்தனாரே.

628. தருக்கின அரக்கன தேரூர்
சாரதி தடைநி லாது
பொருப்பினை யெடுத்த தோளும்
பொன்முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டங்கு அலறி மீண்டு
நினைந்தடி பரவத் தம்வாள்
விருப்பொடும் கொடுப்பவர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே.

தெளிவுரை : தேரினைச் செலுத்த இயலாத தடையை அறிவித்தும், அதனை ஏற்காது, கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனுடைய தோளும் முடிபத்தும் புண்ணாகுமாறு நெரிப்புண்டு அலற வைத்து, மீண்டும் அவன் நினைந்து ஏத்திப் பரவ, விருப்புடன் வாட்படையைக் கொடுத்து அருளிச் செய்தவர் வீழி மிழலையில் மேவும் விகிர்தனாரே.

திருச்சிற்றம்பலம்

65. திருச்சாய்க்காடு (அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

629. தோடுலா மலர்கள் தூவித்
தொடுதெழு மார்க்கண் டேயன்
வீடுநாள் அணுகிற் றென்று
மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செலலும் அஞ்சிப்
பாதமே சரணம் என்னச்
சாடினார் காலன் மாளச்
சாய்க்காடு மேவி னாரே.

தெளிவுரை : இதழ்களையுடைய மலர்களால் தூவித் தொழுது போற்றும் மார்க்கண்டேயர், உரிய இறுதிக் காலம் நெருங்கி விட்டதென்று கருதி, உயிரைக் கவருமாறு வந்த காலனைக் கண்டு அஞ்சி, ஈசனுடைய திருவடியைப் பற்றிச் சரணம் அடைய, அவர், அக்காலனை மாளும்படி திருப்பாதத்தால் உதைத்தனர். அப்பெருமான் சாய்க்காட்டில் மேவியவரே.

630. வடங்கெழு மலைமத் தாக
வானவர் அசுர ரோடு
கடைந்திட எழுந்த நஞ்சம்
கண்டுபஃ தேவர் அஞ்சி
அடைந்துநுஞ் சரணம் என்ன
அருள்பெரிது உடையர் ஆகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார்
சாய்க்காடு மேவி னாரே.

தெளிவுரை : மேருமலையை மத்தாகக் கொண்டு, தேவர்கள், அசுரர்களுடன் சேர்ந்து பாற்கடலைக் கடைந்த போது, எழுந்த நஞ்சினைக் கண்டு அஞ்சி ஈசனை அடைந்து, தேவரீர் திருவடியே சரணம் என்று வேண்டித் தொழுதனர். அவ்வமயம், அருளின் வயமாகிய ஈசன், அக்கடல் நஞ்சினை உண்டு அபயம் அளித்தனர், அப்பெருமான், சாயக்காட்டில் மேவும் நாதரே.

631. அரணிலா வெளிய நாவல்
அருநிழ லாக ஈசன்
வரணிய லாகித் தன்வாய்
நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை
முடியுடை மன்னன் ஆக்கித்
தரணிதான் ஆள வைத்தார்
சாய்க்காடு மேவி னாரே.

தெளிவுரை : வெண்ணாவல் மரத்தின் நிழலில் மேவிய ஈசனுக்குப் பந்தர் ஒன்றினைத் தன்வாய் நூலினால் அமைத்த சிலந்தியை, மறுமையில் முடியுடை மன்னனாக விளங்கிய கோச் செங்கட்சோழனாகவும், நாயனாராகவும் வைத்தவர், சாய்க்காட்டில் மேவிய பரமரே.

632. அரும்பெருஞ் சிலைக்கை வேட
னாய்விறல் பார்த்தற்கு அன்று
அரம்பெரிது உடைமை காட்டி
ஒள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரிது உடைய னாக்கி
வாளமர் முகத்தின் மன்னும்
சரம்பொலி தூணி ஈந்தார்
சாய்க்காடு மேவி னாரே.

தெளிவுரை : பெரிய வில்லேந்திய வேடனாகத் தோன்றி பார்த்தனுக்குத் தன்னுடைய வீரத்தைக் காட்டி அருள் நல்கும் போர் செய்து, பெரிய வரங்களை அளித்துப் பாசுபதம் முலான அத்திரங்களை ஈந்தவர், சாய்க் காட்டில் மேவும் பரமரே.

633. இந்திரன் பிரமன் அங்கி
எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி
வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திரம் அறியாத் தக்கன்
வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற்கு அருள்செய் தாரும்
சாய்க்காடு ÷வி னாரே

தெளிவுரை : இந்திரன், பிரமன், அக்கினி அட்டவசுக்கள், வேதம் ஓதுபவர்கள், தேவர்கள் ஆகியோர் வணங்கி ஏத்தத் தக்கன் வேள்வி புரிந்தனன். அவ்வேள்வியைத் தகர்த்த போது சந்திரனுக்கு அருள் செய்த பரமன் சாய்க்காட்டில் மேவியவரே. இத்திருப்பாட்டு இந்திரன் பூசித்த தலப் பெருமையையும் சுட்டும்.

634. ஆமலி பாலு நெய்யும்
ஆட்டியரச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப்
பொறாத தன் தாதை தாளைக்
கூர்மழு ஒன்றால் ஓச்சக்
குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக்கு ஈந்தார்
சாய்க்காடு மேவி னாரே.

தெளிவுரை : பசுவின் பஞ்சகௌவியத்தைக் கொண்டு பூசித்துக் கொன்றை மலர்மாலை சூட்டி, ஈசனை வழிபட்ட சண்டீசரின் செயலை விரும்பாதவர், அவர் தந்தை. எனவே, சிவபூசைக்கு ஊறு விளைத்த போது அவருடைய காலை வெட்டினார், சண்டீசர். தந்தையில் காலை வெட்டிய மகனின் சிவபக்திக்குப் பரிசாக, ஈசன், தமக்கு அர்ப்பணித்த கொன்றை முதலான மலர்களை அப்புதல்வருக்கு அளித்து அருள் வழங்கினார். அவர் சாய்க்காட்டில் மேவிய பரமரே.

635. மையறு மனத்தி னாய
பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் அமரர் ஏத்த
ஆயிரம் முதம தாகி
வையக நெளியப் பாய்வான்
வந்திழி கங்கை யென்னும்
தையலைச் சடையில் ஏற்றார்
சாய்க்காடு மேவி னாரே.

தெளிவுரை : குற்றமில்லாத மனத்தினனனாகிய பகீரதச் சக்கரவர்த்தி, பலகாலங்கள் தவம் இருந்து, தமது மூதாதையர்கள் நரகிடை ஆழாமே நீர்க்கடன் புரிதலையொட்டிக் கங்கையை வேண்டினார். ஆயிரம் முகங்கள் கொண்டு வந்த அக் கங்கையைச் சடை முடியில் ஏற்றுச் சிறிய அளவில் உலகினில் பரவுமாறு அருள் செய்தவர் சாக்காட்டில் மேவிய ஈசனே !

636. குவப்பெருந் தடக்கை வேடன்
கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம்
துர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித்
தூயவாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர
ஒருகணை இடந்துஅங்கு அப்பத்
தவப்பெருந் தேவு செய்தார்
சாய்க்காடு மேவி னாரே.

தெளிவுரை : திரட்சியும் நீண்ட கையும் கொண்ட வேடன் கண்ணப்பர், பெரிய வில்லேந்திச் செருப்புக் காலால் நிருமாலியத்தை அகற்றித் தூயவாய்க் கலசத்தின் நீரால் பூசித்தனர். அவர், ஈசனின் திருவிழியில் குருதி சோரத் தன் கண்ணொன்றைக் கணையால் இடந்து அப்பத் தவப் பெருந் தேவராகச் செய்தவர் சாய்க்காடு மேவிய பரமரே.

637. நக்குலா மலர்பன் னூறு
கொண்டுநன் ஞானத்தோடு
மிக்கபூ சனைகள் செய்வான்
மென்மலர் ஒன்று காணா
தொக்குமென் மலர்க்கண் என்றங்கு
ஒருகணை இடந்தும் அப்பச்
சக்கரம் கொடுப்பர் போலும்
சாய்க்காடு மேவி னாரே.

தெளிவுரை : நன்கு மலர்ந்த மலர்கள் பல நூறு கொண்டு நல்ல ஞானத்தோடு சிவபூசை செய்யும் போது, ஒரு மலர் குறையத் தன் கண்ணை இடந்து அப்பிப் பூசித்த பாங்கினர், திருமால். அவருடைய அன்பினைக் கண்டு இரங்கி, சக்கரப்படை அளித்த ஈசன், சாய்க்காட்டில் மேவிய பெருமானே.

638. புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்தும்
ஆயகொண்டு அரக்கன் ஓடிச்
சிவன்திரு மலையைப் போக்கத்
திருமலர்க் குழலி யஞ்ச
வியன்பெற எய்தி வீழ
விரல்சிறிது ஊன்றி மீண்டே
சயம்பெற நாமம் ஈந்தார்
சாய்க்காடு மேவி னாரே.

தெளிவுரை : இராவணன், இருபது தோள்களும், பத்துத் தலைகளும் கொண்டு ஓடிச் சென்று, சிவபெருமான் வீற்றிருக்கும் திருமலையாகிய கயிலையைப் பெயர்த்தான். அப்போது, உமாதேவி அஞ்ச அதனை நோக்கிய ஈசன், அவ்வரக்கன் மிகை கொண்டவனாய் வீழ்ந்து கலங்குமாறு, தனது திருப்பாத விரலால் சிறிது ஊன்றினார், அவன் ஏத்தி வணங்க, வெற்றி பெறுதற்கு உரிய வாள் படையும், இராவணன் என்னும் பெயரும் விளங்குமாறு செய்தவர், அப்பெருமான். அவர், சாய்க்காட்டில் மேவியிருப்பவரே.

திருச்சிற்றம்பலம்

66. திருநாகேச்சரம் (அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

639. கச்சைசேர் அரவர்போலும் கறையணி மிடறர்போலும்
பிச்சைகொண் டுண்பர்போலும் பேரரு ளாளர்போலும்
இச்சையால் மலர்கள்தூவி இரவொடு பகலும்தம்மை
நச்சுவார்க் கிளியர்போலு நாகஈச் சரவனாரே.

தெளிவுரை : ஈசன், அரவத்தைக் கச்சையாகக் கட்டி இருப்பவர்; நஞ்சினைத் தேக்கிக் கறையுடைய கண்டத்தை உண்பவர்; அடியவர்களுக்குப் பேரருளை வழங்குபவர்; பெரு விருப்புடன் மலர்கள் தூவிப் போற்றி, இரவும் பகலும் வழிபடுகின்ற அடியவர்களுக்கு இனிமையானவர். அப்பெருமான் நாகேச்சரத்தில் வீற்றிருப்பவரே.

640. வேடுறு வேடராகி விசயனோடு எய்தார் போலும்
காடுறு பதியர்போலும் கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலும் தீவினை தீர்க்கவல்ல
நாடறி புகழர்போலு நாகஈச் சரவனாரே.

தெளிவுரை : ஈசன், வேடுவத் திருக்கோலம் பூண்டு அருச்சுனரோடு போர் செய்தவர்; சுடுகாட்டினை இடமாகக் கொண்டவர்; கங்கையைச் சடையில் ஏற்றுத் திகழ்பவர்; பக்தர்களின் தீய வினைகளைத் தீர்க்க வல்லவர்; உலகெலாம் புகழ்ந்து ஏத்த விளங்குபவர். அவர் நாகேச்சரத்தில் மேவும் பெருமானே.

641. கற்றுணை வில்லதாகக் கடியரண் செற்றார் போலும்
பொற்றுணைப் பாதம்போலும் புலியதள் உடையர்போலும்
சொற்றுணை மாலைகொண்ட தொழுதெழு வார்கட்கெல்லாம்
நற்றுணை யாவர்போலு நாகஈச் சரவனாரே.

தெளிவுரை : ஈசன், மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; பொன் போன்ற மலரடி கொண்டு அருள் புரிபவர்; புலித் தோலை உடுத்தியவர்; புகழ்ப் பாடல்களைப் பாடித் தொழுது போற்றும் திருத்தொண்டர்களுக்கு, நற்றுணையாக விளங்குபவர். அப்பெருமான் திருநாகேச்சரத்தில் வீற்றிருப்பவரே.

642. கொம்பனார் பாகர்போலும் கொடியுடை விடையர் போலும்
செம்பொனார் உருவம்போலும் திகழ்திரு நீற்றர்போலும்
எம்பிரான் எம்மையாளும் இறைவனே என்றுதம்மை
நம்புவார்க்கு அன்பர்போலு நாகஈச் சரவனாரே.

தெளிவுரை : பூங்கொம்பு போன்ற உமாதேவியைப் பாகமாகக் கொண்டு மேவும் ஈசன், இடபக் கொடி உடையவர்; செம்பொன் போன்ற திருமேனி உடையவர்; திருநீறு தரித்தவர். எம் இறைவனே ! எம் தலைவனே ! எம்மை ஆளுடைய பெருமானே ! என, ஏத்த வழிபடும் அடியவர்களுக்கு அன்புடையவர். அவர் திருநாகேச்சரத்தில் மேவும் பரமரே.

643. கடகரி உரியர்போலும் கனல்மழு வாளர்போலும்
படஅரவு அரையர்போலும் பாரிடம் பலவும்கூடிக்
குடமுடை முழவம் ஆர்ப்பக் கூளிகள் பாட நாளும்
நடநவில் அடிகள்போலு நாகஈச் சரவனாரே.

தெளிவுரை : ஈசன், யானையின் தோலை உரித்தவர்; கனல் உமிழும் வெம்மையுடைய மழுப்படை உடையவர்; அரவத்தை அரையில் கட்டியவர்; பூதகணங்கள் யாவும் கூடி குடமுழவு ஆர்க்கக் கூளிகள் இசைத்துப் பாட, நாள்தோறும் நடனம் நவிலும் பெற்றியுடையவர். அவர் நாகேச்சரத்தில் வீற்றிருக்கும் பரமரே.

644. பிறையுறு சடையர்போலும் பெண்ணொரு பாகர்போலும்
மறையுறு மொழியர்போலும் மால்மறை யவன்றனோடும்
முறைமுறை அமரர்கூடி முடிகலால் வணங்க நின்ற
நறவமர் கழலர் போலு நாகஈச் சரவனாரே.

தெளிவுரை : ஈசன், பிறைச்சந்திரனைச் சடையில் தரித்தவர்; உமாதேவியை பாகம் கொண்டு மேவுபவர்;  வேதங்களை ஓதம் சீலர்; திருமால், பிரமன் மற்றும் தேவர்கள் முறைப்படி கூடித் தலை தாழ்த்தி வணங்கும் தேன் மணம் கமழும் கழலுடையவர். அவர், நாகேச்சரத்தில் வீற்றிருக்கும் பரமரே.

645. வஞ்சகர்க்கு அரியர்போலும் மருவினோர்க்கு எளியர்போலும்
குஞ்சரத்து உரியர் போலும் கூற்றினைக் குமைப்பர் போலும்
விஞ்சையர் இரியஅன்று வேலைவாய் வந்தெழுந்த
நஞ்சணி மிடற்றர்போலு நாகஈச் சரவனாரே.

தெளிவுரை : ஈசன், கரவு கொண்டு மேவும் சூழ்ச்சியுடைய வஞ்சகர்களுக்கு எட்டாதவர்; அன்புடன் சார்ந்து ஏத்துபவர்களுக்கு எளிமையானவர்; யானையின் தோலை உரித்தவர்; காலனை அழித்தவர்; தேவர்கள் கலங்குமாறு தோன்றிய கடல் நஞ்சினைத் தன் மிடற்றினில் தேக்கி வைத்து, நீலகண்டராக விளங்குபவர். அப்பெருமான், நாகேச்சரத்தில் வீற்றிருக்கும் பரமரே.

646. போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும் வெண்பொடி யாடுமேனிப்
பாகமால் உடையர் போலும் பருப்பத வில்லர் போலும்
நாகநாண் உடையர்போலு நாகஈச் சரவனாரே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர், இடப வாகனத்தை உடையவர்; திருவெண்ணீறு பூசிய திருமேனியர்; திருமாலை பாகமாக உடையவர்; மேரு மலையை வில்லாகக் கொண்டவர், வாசுகி என்ற பாம்பை அவ்வில்லுக்கு ஏற்ற நாணாகக் கொண்டவர். அவர் நாகேச்சரத்தில் மேவும் பரமரே.

647. கொக்கரை தாளம்வீணை பாணிசெய் குழகர்போலும்
அக்கரை அணிவர்போலும் ஐந்தலை அரவம்போலும்
வக்கரை அமர்வர்போலும் மாதரைமயல் செய்யும்
நக்கரை உருவர்போலு நாகஈச் சரவனாரே.

தெளிவுரை : ஈசன், கொக்கரை, தாளம், வீணை என மேவும் கருவிகள் முழங்கத் திருக்கூத்துப் புரிபவர்; எலும்பு அணிபவர்; ஐந்து தலையுடைய அரவத்தைக் கட்டியுள்ளவர்; திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவர்; தாருகவனத்து மகளிர், மையல் கொள்ளுமாறு திரிந்து பலியேற்றவர். அவர் நாகேச்சரத்தில் விளங்கும் பரமரே.

648. வின்மையால் புரங்கள்மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையால் அமரர்தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும்
வன்மையால் மலையெடுத்தான் வலியினைத் தொலை வித்தாங்கே
நன்மையால் அளிப்பர் போலுநாக ஈச் சரவனாரே.

தெளிவுரை : ஈசன், மேருமலையை வில்லாகக் கொண்டு மூன்று புரங்களையும் நெருப்பில் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; தனது அருள் வண்ணத்தால் தேவர்களின் தலைவருக்கும் தலைவராகியவர்; தனது வலிமை கொண்டு மலை எடுத்த இராவணனுடைய வலிமையை அழித்தும், அவன் ஏத்தி வணங்க, நன்மையும் அளித்தவர். அவர் நாகேச்சரத்தில் வீற்றிருக்கும் பரமரே.

திருச்சிற்றம்பலம்

67. திருக்கொண்டீச்சரம் (அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொண்டீஸ்வரம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

649. வரைகிலேன் புலன்கள் ஐந்தும்
வரைகிலாப் பிறவி மாயப்
புரையிலே யடங்கி நின்று
புறப்படும் வழியும் காணேன்
அரையிலே மிளிரு நாகத்து
அண்ணலே அங்சல் என்னாய்
திரையுலாம் பழன வேலித்
திருக்கொண் டீச் சரத்து ளானே.

தெளிவுரை : அலைகள் மேவும் நீர் நிலைகளும் வயல்களும் விளங்கும் திருக்கொண்டீச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசனே ! ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி வைக்காதவனாகவும், எல்லையற்ற பிறவிப் பிணியில் நைபவனாகவும், மாயையில் அழிந்து குற்றம் உடையவனாகி, அதிலிருந்து வெளியேறும் வழி காணாத வனாகவும் உள்ளேன். ஒளிமிக்க நாகத்தை அரையில் கட்டி விளங்கும் அண்ணலே ! அஞ்சாதே என உரைத்து அருள்வீராக.

650. தொண்டனேன் பிறந்து வாளா
தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து
பேர்வதோர் வழியும் காணேன்
அண்டனே அண்ட வாணா
அறிவனே அஞ்சல் என்னாய்
தெண்டிரைப் படினம் சூழ்ந்த
திருக்கொண்டீச் சரத்து ளானே.

தெளிவுரை : திருக்கொண்டீச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசனே ! தொண்டனாகிய நான் வினைக்குழியில் வீழ்ந்து, இவ்வுடலைச் சுமந்து, இதிலிருந்து விடுதலை பெறும் வழியைக் காணாது வருந்துகின்றேன். அண்டமாகவும், அண்டத்தில் திகழ்பவராகவும், ஞானமாகவும் விளங்கும் பெருமானே ! அஞ்சாதே என உரைத்து அருள் புரிவீராக.

651. கால்கொடுத்து எலும்பு மூட்டிக்
கதிர்நரம்பு ஆக்கை யார்த்துத்
தோலுடுத்து உதிரம் அட்டித்
தொகுமயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத்து உழைஞர் கூடி
ஒளிப்பதற்கு அஞ்சு கின்றேன்
சேலுடைப் பழனம் சூழ்ந்த
திருக்கொண்டீச் சரத்து லானே.

தெளிவுரை : சேல்கள் விளங்கும் வயல்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசனே ! கால்கள் அமைத்து எலும்புகளைச் சேர்த்து நரம்புகளைக் கொண்டு பிணித்து, உடம்பு என்னும் வடிவம் அமைத்து, அதில் தோலும், உதிரமும் சேர வைத்து, அதன் மீது மயிர்கள் கொண்டு வேய்ந்து காணும் தன்மையது ! இந்த சரீரம். இதனை, அருகில் விளங்கும் உறவினர்கள் கூடி ஓலம் இட்டு ஒரு காலத்தில் மண்ணிட்டு மறைப்பர். அதனை எண்ணி நான் அஞ்சுகின்றேன். தேவரீர், அஞ்சாதே என உரைத்து அருள்புரிவீராக ! என்பது வேண்டுதல் குறிப்பாயிற்று.

652. கூட்டமா ஐவர் வந்து
கொடுந்தொழில் குணத்த ராகி
ஆட்டுவார்க்கு ஆற்ற கில்லேன்
ஆடரவு அசைத்த கோவே
காட்டிடை அரங்க மாக
ஆடிய கடவு ளேயோ
சேட்டிரும் பழன வேலித்
திருக் கொண்டீச் சரத்து ளானே.

தெளிவுரை : வளமையான வயல்களையுடைய திருக்கொண்டீச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசனே ! ஐம்புலன்கள் யாவும் ஒன்று சேர்ந்து, கொடிய குணத்தை உடையவர்களாகி என்னை ஆட்டுகின்றனர். அவர்களால் நான் வருந்துகின்றேன். ஆடுகின்ற அரவத்தை அரையில் கட்டிய தலைவனே ! மயானத்தை அரங்காகக் கொண்டு நடனம் புரியும் கடவுளே ! என்னை அஞ்சேல் என்று ஆட்கொண்டு அருள் புரிவீராக.

653.பொக்கமாய் நின்ற பொல்லாப்
புழுமிடை முடைகொள் ஆக்கை
தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்று
அறுவரும் துயக்கம் எய்த
மிக்குபிவ்று இவர்கள் செய்யும்
வேதனைக்கு அலந்து போனேன்
செக்கரே திகழு மேனித்
திருக்கொண்டீச் சரத்து ளானே.

தெளிவுரை : இந்த தேகமானது, பொய்த்தன்மை உடையது; அழியக் கூடியது; முடை நாற்றம் கொண்டு மறையக் கூடியது. இதனில் ஐம்புலன்கள் நிலைத்து நின்று துன்பத்தை விளைவிக்கின்றனர். 96 வகையால் மேவி சோர்வைத் தருகின்ற, இவர்களுடைய செயல் கண்டு நான் கலங்கினேன். செம்மேனியராகத் திகழும் ஈசனே ! திருக் கொண்டீச்சரத்தில் மேவும் பெருமானே ! அருள் புரிவீராக !

654. ஊனுலா முடைகொள் ஆக்கை
உடைகலம் ஆவ தென்றும்
மானுலா மழைக்க ணார்தம்
வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
நானெலாம் இனைய கால
நண்ணிலேன் எண்ணம் இல்லேன்
தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த
திருக்கொண்டீச் சரத்து ளானே.

தெளிவுரை : ஊன் பெருகிப் புலால் நாறும் தேகமானது, உடைந்த மரக்கலம் போன்று சிதறக் கூடியது, அதனை அறிகிலேன். மான் போன்ற விழியுடைய மாதருடன் வாழ்வதை மெய்யென்று எண்ணி இவ்வளவு காலமும் தேவரீரை நண்ணிலேன். நண்ணி உய்வு பெற வேண்டும் என்று எண்ணவும் இல்லை. தேன் மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்துள் மேவும் ஈசனே ! அருள் புரிவீராக !

655. சாண்இரு மடங்கு நீண்ட
சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்று
அறுவரும் மயக்கம் செய்து
பேணிய பதியி னின்று
பெயரும்போது அறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு
திருக்கொண்டீச் சரத்து ளானே.

தெளிவுரை : இத்தேகமானது ஒரு சாணுக்கு இரு மடங்கு எனப்படும் முழம் என உடையது. இதற்குத் தலைவர் உயிர். ஆயினும் தமக்கு ஒவ்வியவாறு ஐம்புலன்கள் தம்மையே பெருக்கிக் கொண்டும் 96 பேரும் மயக்கத்தைத் தந்தும் இருக்க, அவர்கள் இவ்வுடலிலிருந்து பெயரும் போது நான் அறிய மாட்டேன். திருக் கொண்டீச்சரத்துள் மேவும் ஈசனே ! தேவரீர் அருள் புரிவீராக.

656. பொய்ம்மறித் தியற்றி வைத்துப்
புலால்கமழ் பண்டர் பெய்து
பைம்மறித் தியற்றி யன்ன
பாங்கிலாக் குரம்பை நின்று
கைம்மறித் தனைய வாவி
கழியும் போது அறிய மாட்டேன்
செந்நெறிச் செலவு காணேன்
திருக்கொண்டீச் சரத்து ளானே.

தெளிவுரை : பொய்த் தன்மையில் நின்று புலால் கமழும் இவ்வுடம்பின் வளமைக்காகப் பலவும் செய்து பேணி, இறுதியில் இத்தேகமானது கெட்டுச் சீரழிந்து, ஆவியானது கைம்மறித்து, இத்தேகமானது பயனற்றது எனக் கருதி வெளி÷றும் போது, நான் அறிய மாட்டேன்; செந்நெறியைப் பேணியதில்லை; அதனைச் சேர்க்கும் நெறியும் காணதவனானேன். திருக்கொண்டீச்சரத்தில் மேவும் ஈசனே ! தேவரீர் அருள் புரிவீராக.

657. பாலனாய்க் கழிந்த நாளும்
பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும்
மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும்
குறிக்கோள் இலாது கெட்டேன்
சேறுலாம் பழன வேலித்
திருக்கொண்டீச் சரத்து ளானே.

தெளிவுரை : திருக்கொண்டீச்சரத்தில் மேவும் ஈசனே ! இளமைக் காலத்தில் அறியாமையில் குழந்தை, சிறுவன், பாலன் என்னும் பெயரில் காலத்தைக் கழித்தேன். பின்னர் மாதருடன் குலவிக் காலத்தைக் கழித்தேன். மெலிவும் மூப்பும் வந்து கோலூன்றி நடக்கும் முதியவனாய் நாளைக் கழித்தேன். இத்தனை காலமும் தேவரீரை ஏத்தி வணங்கும் குறிக்கோள் இன்றிக் காலத்தை வீணாக்கினேனே !

658. விரைதரு கருமென் கூந்தல்
விளங்கிழை வேல்ஒற் கண்ணாள்
வெருவர இலங்கைக் கோமான்
விலங்கலை எடுத்த ஞான்று
பருவரை யனைய தோளும்
முடிகலும் பாறி வீழத்
திருவிரல் ஊன்றி னானே
திருக்கொண்டீச் சரத்து ளானே.

தெளிவுரை : கருமையான நறுமணம் கமழும் கூந்தலை உடைய உமாதேவி வெருவுமாறு இராவணன், கயிலை மலையை எடுத்த போது, மலை போன்ற அவ்வரக்கனுடைய தோளும் முடிகளும் நலிந்து வீழுமாறு திருப்பாத விரலை ஊன்றியவர் திருக்கொண்டீச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசனே.

திருச்சிற்றம்பலம்

68. திருவாலங்காடு (அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

659. வெள்ளநீர்ச் சடையர் போலும்
விரும்புவார்க்கு எளியர்போலும்
உள்ளுளே உருகி நின்றங்கு
உகப்பவர்க்கு அன்பர்போலும்
கள்ளமே வினைகள் எல்லாம்
கரிசறுத் திடுவர் போலும்
அள்ளல்ஆம் பழனைமேய
ஆலங்காட்டு அடிகளாரே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடைமுடியில் தரித்துள்ளவர்; விரும்பும் அன்பர்களுக்கு எளியவர்; உள்ளத்தில் பதித்து உருகிப் போற்றும் அன்பர்களுக்குச் சிவனாநந்தத்தைப் பருகுமாறு புரிபவர்; கண்ணுக்குப் புலனாகாமல் மறைந்திருந்து துன்புறுத்தும் வினைகளே வேரறுப்பவர். அவர், வயல் வளம் பெருகி ஓங்கும் பழையனூர் மேல ஆலங்காட்டு அடிகளாரே.

660. செந்தழலுருவர் போலும்
சினவிடை யுடையர் போலும்
வெந்தவெண் ணீறு கொண்டு
மெய்க்கணிந் திடுவர் போலும்
மந்தமாம் பொழில் பழனை
மல்கிய வள்ளல் போலும்
அந்தமில் அடிகள் போலும்
ஆலங்காட்டு அடிகளாரே.

தெளிவுரை : சிவபெருமான், செந்தழல் போன்ற திருமேனியர்; இடப வாகனம், உடையவர்; திருநீற்றைத் திருமேனியில் பூசியவர்; தென்றல் வீசும் பொழில் விளங்கும் பழையனூரில் விளங்கும் வள்ளல்; அந்தம் இல்லாதவர். அவர் ஆலங்காட்டு அடிகளாரே.

661. கண்ணிணாற் காம வேளைக்
கனல்எழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கள் மூன்றும்
எரியுணச் சிரிப்பர் போலும்
பண்ணின்ஆர் முழவும் ஓவாப்
பைம்பொழில் பழனை மேய
அண்ணலார் எம்மை யாளும்
ஆலங்காட்டு அடிக ளாரே.

தெளிவுரை : சிவபெருமான், நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியவர்; தன்னைக் கருதி ஏத்தாத முப்புர அசுரர்கள், எரிந்து சாம்பலாகுமாறு முறுவல் செய்தவர், பண்ணில் திகழும் முழவும் ஒலிக்கும் பழையனூரில் மேவிய அண்ணலார். அவர் எம்மை ஆரும் ஆலங்காட்டு அடிகளாரே.

662. காறிடு விடத்தை யுண்ட
கண்டர்எண் தோளர் போலும்
தூறிடு சுடலை தன்னிற்
சுண்ணவெண் ணீற்றர் போலும்
கூறிடும் உருவர் போலும்
குளிர்பொழிற் பழயனை மேய
அண்ணலார் எம்மை யாளும்
ஆலங்காட்டு அடிக ளாரே.

தெளிவுரை : சிவபெருமான், கொல்லும் தன்மையுடைய கரிய விடத்தை உட்கொண்டு, கண்டத்தில் தேக்கியவர்; எட்டுத் தோள்களை உடையவர்; சுடலையில் திருநீற்றினராய்த் திகழ்பவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு அர்த்தநாரியாய் விளங்குபவர். அவர், பொழில் திகழும் பழையனூரில் மேவும் அண்ணலாய் விளங்கும் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே.

663. பார்த்த னோடு அமர்பொருது
பத்திமை காண்பர் போலும்
கூர்த்தவாய் அம்பு கோத்துக்
குணங்களை அறிவர் போலும்
போர்த்துமோர் ஆவ நாழி
அம்பொடும் கொடுப்பர் போலும்
தீர்த்தமாம் பழனை மேய
திருவாலங் காட னாரே.

தெளிவுரை : சிவபெருமான், பார்த்தனுடன் போர் புரிந்து அவனுடைய சிவபக்தியைக் காண்பவராவார்; அவனைக் குறிவைத்து அம்பு தொடுத்து, அவன் குணங்களை அறிபவர்; மீண்டும் அம்பும் அத்திரங்களும் கொடுத்தருள்பவர். அவர், தீர்த்த மகிமை விளங்கத் திகழும் பழையனூரில் மேவிய திருவாலங்காடனாரே.

664. வீட்டினார் சுடுவெண் ணீறு
மெய்க்குஅணிந் திடுவர் போலும்
காட்டிநின் றாடல் பேணும்
கருத்தினை உடையர் போலும்
பாட்டினார் முழவும் ஓவாப்
பைம்பொழில் பழனை மேயார்
ஆட்டினார் அரவந் தன்னை
ஆலங்காட்டு அடிக ளாரே.

தெளிவுரை : சிவபெருமான், முத்தியுலகத்தின் தலைவர்; திருவெண்ணீற்றினைத் திருமேனியில் அணிந்தவர்; சுடுகாட்டில் நின்று ஆடல் மேவும் கருத்தினர்; இசைப் பாடலில் விருப்பம் உடையவர்; முழவொலி ஓயாது மேவும் பொழில் திகழும் பழையனூரில் மேவுபவர்; அரவத்தை அணிந்து ஆட்டுபவர். அவர் ஆலங்காட்டில் வீற்றிருக்கும் அடிகளாரே.

665. தாளுடைச் செங்கமலத்
தடங்கள்சே வடியர் போலும்
நாளுடைக் காலன் வீழ
உதைசெய்த நம்பர் போலும்
கோளுடைப் பிறவி தீர்ப்பார்
குளிர்பொழிற் பழனைமேழ
ஆளுடை அண்ணல் போலும்
ஆலங்காட்டு அடிக ளாரே.

தெளிவுரை : சிவபெருமான், செந்தாமரை போன்ற பெருமையுடைய திருவடி உடையவர்; வாழ்நாள் நீண்டு உடையவனாகிய காலனை வீழுமாறு செய்து மாய்த்த நம்பர்; வினையால் கொள்ளப்படும் பிறவிப் பிணியைத் தீர்த்தருள்பவர்; குளிர்ந்த பொழில் விளங்கும் பழயனூரில் மேவுபவர்; என்னை ஆளுடைய அண்ணல். அவர் ஆலங்காட்டில் வீற்றிருக்கும் அடிகளாரே.

666. கூடினார் உமைத னோடே
குறிப்புடை வேடம் கொண்டு
சூடினார் கங்கை யாளைச்
சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம்
பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண
ஆலங்காட்டு அடிக ளாரே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியைக் கூடி அம்மையப்பராகிய தன்மையில், அருள் குறிப்பினராய் மேவுபவர்; கங்கையைச் சடை முடியில் தரித்தவர்; சாமவேதத்தை விழைந்து பாடியவர்; பைம் பொழில் விளங்கும் பழையனூரில் மேவியவர்; காளி தேவி காணுமாறு திருநடனம் புரிந்தவர். அவர், ஆலங்காட்டில் வீற்றிருக்கும் அடிகளாரே.

667. வெற்றரைச் சமண ரோடு
விலையுடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார்
குணங்களை உகப்பர் போலும்
பெற்றமே உகந்தங்கு ஏறும்
பெருமையை உடையர் போலும்
அற்றங்கள் அறிவர் போலும்
ஆலங்காட்டு அடிக ளாரே.

தெளிவுரை : சிவபெருமான், சமணரும் சாக்கியரும் கூறும் பொருத்தமற்ற உரைகளை ஏற்காதவர்; சத்துவ குணங்களை உகந்து ஏற்பவர்; இடப வாகனத்தை உகந்து ஏறும் பெருமையுடையவர்; யாருக்கும் தெரியாதவாறு மனத்தின் உள்ளே மறைக்கப்படும் குற்றங்களையும் அறிபவர். அவர், ஆலங்காட்டில் வீற்றிருக்கும் அடிகளே.

668. மத்தனாய் மலையெ டுத்த
அரக்கனைக் கரத்தோடு ஒல்க
ஒத்தினார் திருவி ரலால்
ஊன்றியிட்டு அருள்வர் போலும்
பத்தர்தம் பாவம் தீர்க்கும்
பைம்பொழிற் பழனை மேய
அத்தனார் நம்மை ஆள்வார்
ஆலங்காட்டு அடிகளாரே.

தெளிவுரை : இராவணன், மதியற்றவனாய்க் கயிலை மலையைப் பெயர்க்க, அவனை, அதன்கண் அழுந்துமாறு திருவிரலால் ஊன்றி நெரி செய்து, பின்னர் அவ்வரக்கன் ஏத்திப் போற்ற, அருள் புரிந்தவர். அவர், பக்தர்களுடைய பாவத்தைத் தீர்க்கும் பழையனூரில் மேவிய அத்தன் ஆவார்; நம்மை ஆட்கொள்பவர். அவர் ஆலங்காட்டில் வீற்றிருக்கும் அடிகளாரே.

திருச்சிற்றம்பலம்

69. திருக்கோவலூர் வீரட்டம் (அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

669. செத்தையேன் சிதம்பன் நாயேன்
செடியனேன் அழுக்குப்பாயும்
பொத்தையே போற்றி நாளும்
புகலிடம் அறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கேன்
இருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே
கோவல் வீரட்ட னீரே.

தெளிவுரை : ஈசனே ! நான், பயனற்றவன், பண்பற்றவன், நாய் போன்று இழிந்தவன், குற்றம் உடையவன், அழுக்கு மேவும் உடலை உடையவன். தேவரீரைப் போற்றி நின்று புகலிடம் கொள்ள அறியாதவன். நான் எதனைப் பற்றி நிற்பேன் ! மாயையின் பிணிப்பிலிருந்து வெளியேறுவதற்கு எதுவும் சிந்தியாதவனாகி, ஞான மில்லாதவனாகிக் கலங்குகின்றேன். திருக்கோவலூரில் மேவும் வீரட்டன் நீரே ! அருளிச் செய்வீராக ! நான் செய்வதுதான் என்னே !

670. தலைசுமந்து இருகை நாற்றித்
தரணிக்கே  பொறைய தாகி
நிலையிலா நெஞ்சம் தன்னுள்
நித்தலும் ஐவர் வேண்டும்
விலைகொடுத்து அறுக்க மாட்டேன்
வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
குலைகள்மாங் கனிகள் சிந்தும்
கோவல்வீ ரட்ட னீரே.

தெளிவுரை : ஈசனே ! தலையைச் சுமந்து, இரு கைகளையும் கீழே தொங்குமாறு நின்று, பூமிக்குச் சுமையாய் ஆனேன். அலை மோதும் மனத்துள், ஐம்புலன்கள் நாடி நிற்கும் பொருள்களையே நாடி, ஆசையை அறுக்காதவனானேன். அதனால் நான் தளர்ச்சி அடைந்து நலிந்தேன். திருக்கோவலூரில் மேவும் வீரட்டத்தீரே ! தேவரீர் அருள் புரிவீராக !

671. வழித்தலைப் படவு மாட்டேன்
வைகலும் தூய்மை செய்து
பழித்திலேன் பாசமற்றுப்
பரமநான் பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை
என்நினைந்து இருக்க மாட்டேன்
கெழித்து வந்து அலைக்கும் தெண்ணீர்க்
கோவல்வீ ரட்ட னீரே

தெளிவுரை : திருக்கோவலூர் வீரட்டானத்தில் வீற்றிருக்கும் பெருமானே ! நான், தேவரீருடைய அருள்வழிப் பாதையில் நின்று, வழிபடுவதற்கு முனையாதவன்; நாள்தோறும் நெஞ்சினைத் தூய்மை செய்து, தேவரீரை வணங்கித் தியானித்துத் தீ நெறியின் பால் செல்லும் மனத்தைப் பழித்திலேன்; அவா அற்றவனாகிப் பரவமாட்டேன். பரமனே ! இப்பிறவியை இழிவானதென்று கருதாதவனாகி, என்னுள் மேவும் தேவரீரை நினைந்து ஏத்தாதவனானேன்.

672. சாற்றுவர் ஐவர் வந்து
சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக்
கண்செவி மூக்கு வாயுள்
ஆற்றுவர் அலந்து போனேன்
ஆதியை அறிவொன்று இன்றிக்
கூற்றுவர் வாயிற் பட்டேன்
கோவல்வீ ரட்ட னீரே.

தெளிவுரை : ஈசனே ! ஐம்புலன்கள் இவ்வுடம்புக்குள், இருந்து புயலாகவும் அனலாகவும் கொண்டு, கண், காது, மூக்கு, வாய் வழியாகத் தமது வலிமையைக் காட்டிச் செயல் புரிபவர்கள் ஆயினர். அவர்களுடைய செயல்களைக் கண்டு, நான் துன்புற்றேன். அவர்கள் ஆதிப் பிரானை அறியாதவராகி நிற்க, என்னைத் துன்புறுத்தக் கூற்றுவர் வாயில் அகப்பட்டது போன்ற வனானேன். திருக்கோவலூரில் மேவும் வீரட்டனீரே ! அடியேனைக் காத்தருள் புரிவீராக !

673. தடுத்திலேன் ஐவர் தம்மைத்
தத்துவத் துயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப்
பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார
ஆர்வலித்து அன்பு திண்ணம்
கொடுத்தி லேன் கொடிய வாநான்
கோவல்வீ ரட்ட னீரே.

தெளிவுரை : ஈசனே ! நான், உண்மைத் தத்துவத்தை உணராதவனாகி, ஐம்புலன்களின் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தாதவன் ஆனேன்; சிந்தையைத் தேவரீருடைய திருவடியின் பாற் சேர்த்திலேன், மலர் கொண்டு ஏத்திலேன், மலர் கொண்டு ஏத்திலேன்; அக மலராகிய அட்ட புஷ்பங்களைக் கொண்டு சிந்தையார அன்புகூர ஏத்திலேன்; உறுதி பூண்டு பற்றாதவனானேன்; இத்தனை செய்த கொடியவன் ஆனேன். திருக்கோவலூரில் மேவும் வீரட்டனீரே ! யான் ஆற்றேன் ! அருள் புரிவீராக.

674. மாச்செய்த குரம்பை தன்னை
மண்ணிடை மயக்க மெய்து
நாச்செய்த நாலும் ஐந்து
நல்லன வாய்தல் வைத்துக்
காச்செய்த காயம் தன்னுள்
நித்தலும் ஐவர் வந்து
கோச்செய்து குமைக்க ஆற்றேன்
கோவல்வீ ரட்ட னீரே.

தெளிவுரை : பெருமையுடையதாகச் செய்யப்பட்டது இவ்வுடம்பு. இது, உலகில் மயக்கம் எய்தக் கூடிய தாகும். இதனில், ஒன்பது வாயில்கள் வைத்துக் காக்கும் தன்மை கொள்ள இக்காயத்திற்குள் நாள் தோறும் ஐந்து புலன்கள் நெருங்கி நின்று ஆட்சி செய்து என்னைத் துன்புறுத்துகின்றனர். திருக்கோவலூரில் மேவும் வீரட்டனீரே ! யான் ஆற்றேன் ! அருள் புரிவீராக.

675. படைகள் போல் வினைகள் வந்து
பற்றியென் பக்கல் நின்றும்
விடகிலா ஆத லாலே
விகிர்தனை விரும்பி யேத்தும்
இடையிலேன் என்செய் கேனான்
இரப்பவர் தங்கட்கு என்றும்
கொடையிலேன் கொள்வ தேநான்
கோவல்வீ ரட்ட னீரே.

தெளிவுரை : வினைகளானவை வெம்படைகள் போன்று என்னைப் பற்றி நிற்கின்றன. திருக்கோவலூரில் மேவும் வீரட்டனீரே ! விகிர்தனே ! தேவரீரை விரும்பி ஏத்தும வழி தெரியாதவனானேன். இரப்பவர்களுக்குக் கொடுத்து உதவும் நல்லறம் ஆற்றாது, ஆசை வயப்பட்டுக் கொள்வதையே குணமாகக் கொண்டுள்ளேன். நான் என் செய்வேன் ! அருள் புரிவீராக.

676. பிச்சிலேன் பிறவி தன்னைப்
பேதையேன் பிணக்கம் என்னும்
துச்சுளே அழுந்தி வீழ்ந்து
துயரமே இடும்பை தன்னுள்
அச்சனாய் ஆதி மூர்த்திக்கு
அன்பனாய் வாழ் மாட்டாக்
கொச்சையேன் செய்வ தென்னே
கோவல்வீ ரட்ட னீரே.

தெளிவுரை : நான், பேதைமை உடையவனாகிப் பிறவிப் பிணியைப் பிய்த்து எறியும் வல்லமையற்றவனானேன்; பிணக்கம் கொண்டு பெருந்துயருள் மூழ்கி மன்னுயிர்கள்பால் அன்பு செலுத்தாதவனானேன் ! துன்பத்தில் மூழ்கி ஆழ்கின்றேன்; கடவுளாகிய ஆதி மூர்த்தியை அன்புடன் ஏத்திலேன்; இழிந்தவனானேன். திருக்கோவலூரில் மேவும் வீரட்டனீரே ! நான் செய்வது என்னே ! அருள் புரிவீராக.

677. நிணத்திடை யாக்கை பேணி
நியமம்செய்து இருக்க மாட்டேன்
மணத்திடை ஆட்டம் பேசி
மக்களே சுற்றம் என்னும்
கணத்திடை யாட்டப் பட்டுக்
காதலால் உன்னைப் பேணும்
குணத்திடை வாழ மாட்டேன்
கோவல்வீ ரட்ட னீரே.

தெளிவுரை : நான், ஊன் பெருக்கும் இவ்வுடம்பை பெரிதாகக் கருதிச் சிவாகம விதிப்படி அனுட்டானம் முதலான கிரியைகளைச் செய்யாது காலத்தைக் கழித்தேன்; மணவாழ்க்கையும் களியாட்டமும் மக்கள் சுற்றம் என்னும் பந்தத்தில் ஆட்பட்டுத் தேவரீரை, உள்ளம் உருகி நெகிழ்ந்து ஏத்தாதவனானேன். திருக்கோவலூரில் மேவும் வீரட்டனீரே ! அருள் புரிவீராக.

678. விரிகடல் இலங்கைக் கோனை
விரிகயி லாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச்
சிரங்களும் நெரிய வூன்றிப்
பரவிய பாடல் கேட்டுப்
படைகொடுத்து அருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த
கோவல்வீ ரட்ட னாரே.

தெளிவுரை : சிவபெருமான், பத்துத் தலைகளும் இருபது தோள்களும் உடைய இராவணனைக் கயிலை மலையின் கீழ் நெரியுமாறு ஊன்றிப் பின்னர் அவ்ன இசைத்துப் போற்றிய பாடல்களைப் கேட்டுப் படைக்கலன்களைக் கொடுத்து அருளியவர். அவர், குரவம் கோங்கு ஆகிய மரங்கள் சூழ்ந்த திருக்கோவலூர் வீரட்டத்தில் வீற்றிருப்பவரே.

திருச்சிற்றம்பலம்

70. திருநனிபள்ளி (அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

679. முற்றுணை ஆயி னானை மூவர்க்கும்
சொற்றுணை ஆயினானைச் சோதியை ஆதரித்து
உற்றுணர்ந்து உருகியூறி உள்கசி வுடையவர்க்கு
நற்றணை யாவர்போலு நனிபள்ளி யடிகளாரே.

தெளிவுரை : ஈசன், முன்னின்று காக்கும் துணைவர், மும்மூர்த்திகளுக்கு முதல்வர்; சொற்றுணையாக விளங்குபவர்; சோதியாகத் திகழ்பவர்; அன்பு செலுத்தி வழிபடும் அடியவர்களின் உள்ளம் காதலாகிக் கசிந்து ஏத்த, நற்றுணையாக விளங்குபவர். அவர் நனிபள்ளியில் வீற்றிருக்கும் இறைவரே.

680. புலர்ந்தகால் பூவுநீரும் கொண்டடி போற்றமாட்டா
வலம்செய்து வாயில்நூலால் வட்டமைப் பந்தர்செய்த
சிலந்தியை அரையனாக்கிச் சீர்மைகள் அருளவல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே.

தெளிவுரை : புலர்ந்ததும் ஈசனைப் பூவும் நீரும் கொண்டு பூசனை ஆற்றுதலுக்கு இயலாத நிலையில், வலம் வந்து, வாய் நூலால் பந்தல் வேய்ந்து, சிவ புண்ணியத்தை யாத்த சிலந்தியைக் கோச்செங்கட் சோழ மன்னராக்கிய கருணை வயத்தவர், சிவபெருமான். அவர் நலம் திகழும் சோலை சூழ்ந்த நனிபள்ளியில் வீற்றிருக்கும் அடிகளாரே.

681. எண்பதும் பத்தும் ஆறும் என்னுளே இருந்து மன்னிக்
கண்பழக் கொன்றும் இன்றிக் கலக்கநான் அலக்கழிந்தேன்
செண்பகம் திகழும் புன்னை செழுந்திரட் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே.

தெளிவுரை : தொண்ணூற்றாறு தத்துவங்களும் என்னுள்ளே பொலிந்திருந்து நான் தேவரீரைக் கருதி ஏத்தாதவனாய்க் கலங்குகின்றேன்; அவற்றால் அலைக் கழிக்கப்படுகின்றேன். செண்பகம, புன்னை, குரவம், வேங்கை ஆகிய தருக்கள் சூழ்ந்த நனிபள்ளியில் மேவும் பரமரே ! தேவரீர் அருள் புரிவீராக.

682. பண்ணினார் பாடலாகிப் பழத்தினில் இரதமாகிக்
கண்ணினார் பார்வை யாகிக் கருத்தொடு கற்பமாகி
எண்ணினார் எண்ணமாகி ஏழுலகு அனைத்துமாகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே.

தெளிவுரை : ஈசன், பண்ணொடு விளங்கும் பாடலும், பழத்தினில் சுவையும், கண்ணின் ஒளிப்பார்வையும், கருத்தில் அதன் சங்கல்பமாகிய உள் நினைவும், எண்ணப்படும் நெஞ்சின் எண்ணமாகவும் விளங்குபவர். ஏழுலகும் ஆகிய அப்பெருமான், அன்பு  கொண்டு ஏத்தும் அடியவர்கள் பால் நண்ணி நின்று வினைகளைத் தீர்ப்பவர். அவர் நனிபள்ளியில் வீற்றிருக்கும் பரமரே.

683. துஞ்சிருள் காலைமாலை தொடர்ச்சியை மறந்திராதே
அஞ்செழுத் தோதிநாளும் அரனடிக்கு அன்பதாகும்
வஞ்சனைப் பாற்சோ றக்கி வழக்கிலா அமணர்தந்த
நஞ்சமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே.

தெளிவுரை : இருள் துஞ்சும் காலையும் மாலையும் திருவைந்தெழுத்தை ஓதி, நாள்தோறும் அரனை ஏத்தி, அன்பு பூண்டு வழிபடுக. அது பெருத்த நன்மையை விளைவிக்கும். வஞ்சனையாகப் பால் சோற்றில் நஞ்சு கலந்து கொடுத்த ஞான்று, அக்கொடிய நஞ்சானதுஅழிந்து அமுதாகுமாறு புரிவித்தவர் ஈசன். அவர் நனிபள்ளியில் மேவும் இறைவரே.

684. செம்மலர்க் கமலத்தோனும் திருமுடி காணமாட்டான்
அம்மலர்ப் பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான்
நின்மலன் என்றங்கு ஏதஅது நினைப்பினை அருளிநாளும்
நம்மலம் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே.

தெளிவுரை : பிரமனும் ஈசனின் திருமுடியைக் காணாதவர். அப்பெருமானுடைய திருப்பாதத்தைக் காணச் சென்ற திருமாலும் காணவில்லை. அத்தகைய சிவபெருமானை நினைந்து ஏத்த நம்முடைய மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை நீங்கும். அவ்வாறு அருள் புரியும் அடிகள், நனிபள்ளியில் வீற்றிருக்கும் பெருமானே.

685. அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும் ஆலநஞ்சு அமுதா உண்டார்
விரவித்தம் மடியராகி வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழவொட்டார் நனிபள்ளி அடிகளாரே.

தெளிவுரை : வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றி மேருமலையை மத்தாகக் கொண்டு தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சினை அமுதமாக உட்கொண்டவர், ஈசன். அவர் தமது அடியவர்களை நரகத்தில் வீழுமாறு விட்டு விடாது காப்பாற்றுபவர். அவர் நனிபள்ளியில் வீற்றிருக்கும் இறைவரே.

686. மண்ணுளே திரியும்போது வருவன பலவும் குற்றம்
புண்ணுளே புரைபுயைன் பழுப்பொதி பொள்ளல் ஆக்கை

தெளிவுரை : இவ்வுலகத்தில் பிறந்து வாழும் போது எல்லாக் குற்றமும் அமையும். இவ்யாக்கையும் புண்ணுடையது, அழுக்கும் உடையது.

687. பத்துமோர் இரட்டி தோளான் பாரித்து மலையெடுக்கப்
பத்துமோர்இரட்டி தோள்கள் படருடம்பு அடரவூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப் பரிந்தவற்கு அருள்கொடுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்து நனிபள்ளிப் பரமனாரே.

தெளிவுரை : இருபது தோளுடைய இராவணன், ஆரவாரம் செய்து கயிலை மலையை எடுக்க, அவனுடைய அத்தனை தோள்களும் அடர, ஊன்றிப் பின்னர் கீதங்களைப் பாடக் கேட்டு பரிவுடன் அருள்புரிந்தவர், சிவபெருமான். அவர், பக்தர்களால் பரவி ஏத்தப் பெறும் நனிபள்ளியில் வீற்றிருக்கும் பரமனாரே.

திருச்சிற்றம்பலம்

71. திருநாகைக்காரோணம் (அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்)

திருச்சிற்றம்பலம்

688. மனைவிதாய் தந்தைமக்கள் மற்றுள சுற்றமென்னும்
வினையுளே விழுந்தழுந்தி வேதனைக் கிடமாகாதே
கனையுமா கடல்சூழ்நாகை மன்னுகாரோணத்தானை
நினையுமோ வல்லீராகில் உய்யலா நெஞ்சினீரே.

தெளிவுரை : நன்னெஞ்சுடையவரே ! மனைவி, தாய், தந்தை, மக்கள், மற்றும் உள்ள சுற்றங்கள் யாவும் வினைப் பயனால் வந்தவை. அதில் அழுந்தி வேதனை கொள்ளுவதற்கு இடம் அளிக்காதீர். நாகைக் காரோணத்தில் மேவும் ஈசனை நினைத்து ஏத்த வல்லீராகில் உய்யலாம்.

689. வையனை வையமுண்ட மாலங்கம் தோள்மேற்கொண்ட
செய்யனைச் செய்யபோதிற் றிசைமுகன் சிரமென்றேத்தும்
கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணம் கோயில்கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்த வாறே.

தெளிவுரை : ஈசன், உலகமாக விளங்குபவர்; உலகத்தை உண்ட திருமாலைத் தோளின் மீது சடைடையாகக் கொண்டு மேவும் செம்மேனியர்; பிரமனின் ஒரு தலையைக் கொய்து, கபாலமாக ஏந்தியவர். அவர், காரோணத்தில் கோயில் கொண்ட தலைவர். அப்பெருமானை நினைந்து ஏத்திய நெஞ்சமே ! உய்வுபெற்றினை.

690. நிருத்தனை நிமலன்றன்னை நீணிலம் விண்ணில் மிக்க
விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலமான
கருத்தனைக் கடல்சூழ் நாகைக் காரோணம் கோயில்கொண்ட
ஒருத்தனை உணத்தலால்நாம் உய்ந்தவா நெஞ்சினீரே.

தெளிவுரை : ஈசன், நடனம் புரிபவர்; நிமலனாய் விளங்கி அடியவர்தம் மும்மலங்களையும் நீக்குபவர்; மண்ணுலகம் விண்ணுலகம் ஆகியவற்றில் உள்ளவர்கள் அனைவர்க்கும் மேலானவராயும் பழைமையராகவும் உள்ளவர்; வேதத்தின் வித்தானவர், தோன்றும் எல்லாப் பொருளுக்கும் ஆதிமூலமாக விளங்குபவர்; நாகைக் காரோணத்தில் கோயில் கொண்டு மேவும் ஒப்பற்றவர். நன்நெஞ்சுடையீரே ! அப்பெருமானை ஏத்துதலால் நாம் உய்ந்தனம்.

691. மண்தனை இரந்துகொண்ட மாயனோடு அசுரர்வானோர்
தெண்டிரை கடையவந்த தீவிடம் தன்னையுண்ட
கண்டனைக்கடல் சூழ்நாகைக் காரோணம் கோயில்கொண்ட
அண்டனை நினைந்தநெஞ்சே அம்மநாம் உய்ந்தவாறே.

தெளிவுரை : மூவடி மண் வேண்டிப் பெற்ற திருமாலும் அவருடன் அசுரர்களும் தேவர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடையத் தோன்றி வெளிப்பட்ட கொடிய நஞ்சினை, உண்டு நீல கண்டராக விளங்கியவர், நாகைக் காரோணத்தில் கோõயில் கொண்ட ஈசன். அப்பெருமானை ஏத்தி நெஞ்சே ! நாம் உய்ந்தனம்.

692. நிறைபுனல் அணிந்தசென்னி நீணிலா அரவம்சூடி
மறையொலி பாடியாடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணங்கோயில் கொண்ட
இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே.

தெளிவுரை : ஈசன், கங்கையைச் சடைமுடியில் அணிந்தவர்; சந்திரனையும் அரவத்தையும் சூடியவர்; வேதங்களைப் பாடியும், ஆடல் புரிந்தும் மயானத்தில் மகிழ்ந்து விளங்குபவர்; நாகைக் காரோணத்தில் கோயில் கொண்ட இறைவன். அப்பெருமானை நாள்தோறும் ஏத்திப் போற்றத் துன்பம் யாவும் தீரும்; இன்பம் பெருகும் இது, இம்மை நலத்தினோடு பிறவிப் பிணி நீங்கி, மறுமைக்குரிய முத்திப் பேறும் கையுறும் என்பதாம்.

693. வெம்பனைக் கருங்கை யானை வெருவஅன்று உரிவை போர்த்த
கம்பனைக் காலற் காய்ந்த காலனை ஞாலம் ஏத்தும்
உம்பனை உம்பர் கோனை நாகைக்கா ரோணமேய
செம்பொனை நினைந்தநெஞ் சேதிண்ணநாம் உய்ந்தவாறே.

தெளிவுரை : கொடிய பனைபோன்ற நீண்ட துதிக்கை உடைய கரிய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர், திருவேகம்பர். அவர், காலனை அழித்த திருப்பாதத்தை உடையவர்; உலகம் எல்லாம் போற்றும் தேவர்; தேவர்களின் தலைவர். நாகைக் காரோணத்தில் மேவிய செம்பொன்னானவர். அப்பெருமானை நினைந்த நெஞ்சமே ! திண்ணமாக நாம் உய்ந்தனம். திண்ணம், உய்ந்தவாறு  உறுதித் தன்மையை நன்கு வலியுறுத்தி உணர்த்துதலாயிற்று.

694. வெங்கடுங் கானத்தேழை தன்னொடும் வேடனாய்ச் சென்று
அங்கமர் மலைந்து பார்த்தற்கு அடுசரம் அருளினானை
மங்கைமார் ஆடலோவா மன்னுகா ரோணத்தானைக்
கங்குலும் பகலும் காணப் பெற்றுநாம் களித்த வாறே.

தெளிவுரை : வெம்மை பொருந்திய காட்டில் உமாதேவியோடு வேட்டுவ வடிவு தாங்கிச் சென்று போர் செய்து பார்த்தனுக்குப் பாசுபதம் அருளிச் செய்த ஈசன், மங்கையர் நடனம் ஓய்வின்றி விளங்கும், நாகைக் காரோணத்தில் வீற்றிருக்கும் பெருமான். அவரை, இரவும், பகலும் தரிசித்து நாம் மகிழ்ந்தனர். இது, சிவனாந்தத் தேனைப் பருகிப் பேரின்பம் உற்றனம் என்பதாம்.

695. தெற்றினர் புரங்கம்மூன்று தீயினில் விழஓர் அம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுட் சேர்விலாதார்
கற்றவர் பயிறு நாகைக் காரோணம் கருதியேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே.

தெளிவுரை : பகைமை கொண்ட முப்புர அசுரர்களையும் கோட்டை மதில்களையும் நெருப்பில் சாம்பலாகுமாறு ஓர் அம்பு தொடுத்த வில்லையுடைய ஈசன் வஞ்சகரின் சிந்தையில் மேவாதவர். அவர் நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்தவர்கள்  விளங்கும் நாகைக் காரோணத்தில் திகழ்பவர். அப்பெருமானைக் கருதி ஏத்துபவர்கள், இப்பூவுலகில் நற்கதியடையப் பிறந்தவர்கள் ஆவார்கள். ஏனையோர் பிறந்தும் பிறவாதவராய் நரகிடை உழல்பவரோடு ஒப்பர் என்பதாம்.

696. கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர் கமலபாதத்து
ஒருவிரல் நுதிக்கு நில்லாது ஒண்திறல் அரக்கனுக்கான்
இருதிற மங்கை மாரோடு எம்பிரான் செம்பொனாகம்
திருவடி தரிசித்து நிற்கத் திண்ணநாம் உய்ந்தவாரே.

தெளிவுரை : கடல் சூழ்ந்த நாகைக் காரோணத்தில் மேவும் ஈசன், ஒரு விரல் நுனியை ஊன்ற, அவ்வாற்றலுக்கு ஆற்றாது இராவணன் நெரிப்புண்டு நைந்தான். இருதிறத்து மங்கையராகிய, கங்கையும் உமாதேவியும் கொண்டு விளங்கும் ஈசன், செம்மேனியராக விளங்குபவர். நெஞ்சே ! அப்பரமனின் திருவடியைப் பதித்து இருக்க நாம் உய்ந்தனம். இது ஈசன் திருவடியானது, அடியவரின் நெஞ்சில் மேவுதலும் அப்பெருமான் அவர்களுக்குப் புரியும் அருளும் நனி ஓதப் பெறுதலாயிற்று.

திருச்சிற்றம்பலம்

72. திருஇன்னம்பர் (அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னம்பூர்,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

697. விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் போலும்
பெண்ணொரு பாகம் போலும் பேடலி ஆணர்போலும்
வண்ணமால் அயனும்காணா மால்வரை எரியர்போலும்
எண்ணுரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே.

தெளிவுரை : ஈசன், தேவர்கள் தங்கள் தலையில் தரித்துள்ள மணிமுடிகள் வணங்க மேவும் செம்மையான பாதங்களை உடையவர்; உமாதேவியைப் பாகமாகக் கொண்டு, அம்மையப்பராக விளங்குபவர்; அலியாகவும் ஆணாகவும் திகழ்பவர்; திருமாலும் நான்முகனும் காண்பதற்கு அரியவராகி நெருப்பு மலையாக உயுர்ந்தவர்; ஐம்பூதங்களையும் இரு சுடரும் உயிரும் ஆகிய எட்டுவடிவமுடைய அட்ட மூர்த்தம் ஆனவர்; அநேகராய் விளங்கி அளவிடுவதற்கு அரியவர். அவர், இன்னம்பரில் மேவும் ஈசனாரே.

698. பன்னிய மறையர் போலும் பாம்பரை யுடையர் போலும்
துன்னிய சடையர் போலும் தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும் மாதிட மகிழ்வர் போலும்
என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே.

தெளிவுரை : ஈசன், வேதங்களை நன்கு விரித்தருள்பவர்; பாம்பினை அரையில் கட்டியவர்; நெருங்கிய சடை முடியுடையவர்; பிறைச்சந்திரனும் ஊமத்த மலரும் சூடியவர்; ஒளி மிகுந்த மழுப்படை உடையவர்; உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டு மகிழ்பவர்; என்னையும் அடியவனாக உடையவர். அவர் இன்னம்பரில் மேவும் ஈசனாரே.

699. மறியொரு கையர் போலும் மாதுமை யுடையர் போலும்
பறிதலைப் பிறவிநீக்கிப் பணிகொள வல்லர்போலும்
செறிவுடை அங்கமாலை சேர்திரு உருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே.

தெளிவுரை : ஈசன், மானைக் கையில் ஏந்தியவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர்; அடியவர்களின் பிறவிப் பிணியை நீக்கச் சிவபுண்ணியத்தைச் செய்விப்பவர். தலை மாலை (மண்டையோடு)யை அணியும் அழகிய வடிவத்தினர். செஞ்சடையில் கங்கை தரித்தவர். அவர் இன்னம்பரில் மேவும் ஈசனாரே.

700. விடமலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர்போலும்
கடவுநல் விடையர் போலும் காலனைக் காய்வர்போலும்
படமலி அரவர்போலும் பாய்புலித் தோலர் போலும்
இடர்களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே.

தெளிவுரை : ஈசன், நஞ்சினைக் கண்டத்தில் கொண்டு நீலகண்டராக விளங்குபவர்; தக்கன் செய்த வேள்வியை அழித்தவர்; வேகமாகச் செல்லும் இடபத்தை வாகனமாக உடையவர்; காலனை உதைத்து மாய்த்தவர்; படம் கொண்ட அரவத்தை உடையவர்; புலித்தோலை இடர்களைத் தீர்த்து அருள்பவர். அவர், இன்னம்பரில் மேவும் ஈசனாரே.

701. அளிமலர்க் கொன்றை துன்றும் அவிர் சடையுடையர் போலும்
களிமயிற் சாயலோடும் காமனை விழிப்பர் போலும்
வெளிவளர் உருவர் போலும் வெண்பொடி அணிவர் போலும்
எளியவர் அடியர்க் கென்றும் இன்னம்பர் ஈசனாரே.

தெளிவுரை : ஈசன், வண்டுகள் ரீங்காரம் செய்யும் கொன்றை மலர் பொதிந்த சடை முடியுடையவர்; உமாதேவியை உடனாகக் கொண்டிருப்பினும், யோகியராய் விளங்கி, மன்மதனை விழித்து எரிப்பவர்; வான் முழுவதும் நிறைந்த விசுவரூபமானவர்; திருவெண்ணீறு அணிந்த விளங்குபவர்; அடியவர்களுக்கு எளியவராகக் காட்சி நல்கி, அருள்புரிபவர். அவர் இன்னம்பர் மேவும் ஈசனாரே.

702. கணையமர் சிலையர்போலும் கரியுரி யுடையர் போலும்
துணையமர் பெண்ணர்போலும் தூமணிக்குன்றர் போலும்
அணையுடை அடியர்கூடிஅன்பொரு மலர்கள் தூவும்
இணையடி யுடையர்போலும் இன்னம்பர் ஈசனாரே.

தெளிவுரை : திருமாலை க் கணையாகவும் மேரு மலையை வில்லாகவும் கொண்டு மேவும் ஈசன், யானையின் தோலை அணிந்திருப்பவர்; உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; தூய மணியைப் போன்ற கயிலை மலையை உடையவர்; அடியவர்கள் கூடி அன்புடன் ஏத்தப் பெறும் திருவடிப் பெருமையுடையவர். அவர் இன்னம்பரில் வீற்றிருக்கும் ஈசனாரே.

703. பொருப்பமர் புயத்தர்போலும் புனலணி சடையர் போலும்
மருப்பிள ஆமைதாங்கு மார்பில் வெண்ணூலர் போலும்
உருத்திரமூர்த்தி போலும் உணர்விலார்புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே.

தெளிவுரை : ஈசன், மலை போன்ற திரட்சியான தோளுடையவர்; கங்கை தரித்த சடைமுடியுடையவர்; ஆமையோடும், முப்புரி நூலும் திருமார்பில்ன கெண்டு ஆமையோடும், முப்புரி நூலும் திருமார்பில் கொண்டு விளங்குபவர்; மகாசங்கர கால மூர்த்தியாக விளங்குபவர்; முப்புரங்களை எரித்த மேருமலை வில்லுடையவர். அவர் இன்னம்பரில் வீற்றிருக்கும் ஈசனாரே.

704. காடிடம் உடையர்போலும் கடிகுரல் விளியர் போலும்
வேரு வுடையர் போலும் வெண்மதிக் கொழுந்தர் போலும்
கோடலர் வன்னிதும்பை கொக்கிறது அலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே.

தெளிவுரை : ஈசன், மயானத்தினை இடமாக உடையவர்; பேரொலி கொள்டு விளி செய்து ஆடுபவர்; அருச்சுனருக்கு அருள்புரியும் பாங்கில் வேட்டுவ வடிவம் தாங்கியவர்; வெண்பிறைச் சந்திரனைச் சூடியவர்; வன்னி, தும்பை, கொக்கிறது, கொன்றை மலர் ஆகியவற்றைச் சடைமுடியில் தரித்தவர். அவர், இன்னம்பரில் வீற்றிருக்கும் ஈசனாரே.

705. காறிடு விடத்தையுண்ட கண்டர்எண் தோளர் போலும்
நீறுடை உருவம்போலும் நினைப்பினை அரியர்போலும்
பாறுடைத் தலைகை யேந்திப் பலிதிரிந்து உண்பர் போலும்
ஏறுடைக் கொடியர் போலும் இன்னம்பர் ஈசனாரே.

தெளிவுரை : ஈசன், கைக்கும் கொடிய நஞ்சினைக் கண்டத்தில் கொண்டுள்ளவர்; எட்டுத் தோளுடையவர்; திருநீறு தரித்த திருமேனியர்; அடியவர்தம் உள்ளக் கிடக்கைகள் அனைத்தினையும் அறிபவர், ஆயினும் அவர் நம் மனம் வாக்கு காயத்திற்கு அப்பாற் பட்டவராகி அறிதற்கு அரியவர். பிரமனுடைய மண்டை ஓட்டைக் கபாலமாக ஏந்திப் பலியேற்று உண்பவர்; இடபக் கொடி ஏந்தியவர். அவர் இன்னம்பரில் மேவும் ஈசனாரே.

706. ஆர்த்தெழும் இலங்கைக்கோனை அருவரை அடர்ப்பர் போலும்
பார்த்தனோடு அம்பொருது படைகொடுத்து அருள்வர் போலும்
தீர்த்தமாம் கங்கைதன்னைத் திருச்சடைவைப்பர் போலும்
ஏத்தஏழ் உலகும்வைத்தார் இன்னம்பர் ஈசனாரே.

தெளிவுரை : ஈசன், ஆர்த்து எழுந்து வந்த இராவணனைக் கயிலை மலையால் அடர்த்தவர்; அருச்சுனருடன் போர் செய்து படையாகிய பாசுபதத்தைக் கொடுத்து அருள்பவர்; கங்கையைத் திருச்சடையில் ஏழு உலகங்களையும் படைத்தவர். அவர், இன்னம்பரில் வீற்றிருக்கும் ஈசனாரே.

திருச்சிற்றம்பலம்

73. திருச்சேறை (அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

707. பெருந்திரு இமவான் பெற்ற
பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் தவங்கள் செய்ய
மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனிதன்பால்
அங்கொரு பாக மாகத்
திருந்திட வைத்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.

தெளிவுரை : தக்கனுடைய திருமகளாக அவதரித்த உமாதேவியார், அவ்வடிவத்தை நீத்துப் பர்வதஇராசனின் புதல்வியாகத் திருஅவதாரம் செய்து, சரீரத்தை வருத்தும் நற்றம் புரிய, ஈசன் அப்பெருமாட்டியை மாமணம் கொண்டு தனது திருமேனியில்,  பாகமாக ஏற்று அம்மையப்பராக மேவினர். அவர், சேறை என்னும் தலத்தில் வீற்றிருக்கும் செந்நெறிச் செல்வனாரே. இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் திருநாமம், இத்திருப்பாட்டில் உரைக்கப் பெறுதல் காண்க.

708. ஓர்த்துள வாறு நோக்கி
உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய்யென் றெண்ணி
மயக்கில் வீழ்ந்து அழுந்து வேனைப்
பேர்த்தெனை யாளாக் கொண்டு
பிறவிவான் பிணிகள் எல்லாம்
தீர்த்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.

தெளிவுரை : உண்மையை உணராதவராகிய சமணர்களின் உரைகளை மெய்யென்று எண்ணி அதில் அழுந்திய என்னை, அதிலிருந்து விடுவித்து, ஆளாகக் கொண்டு, பிறவியாகிய பெரும் பிணி முதலான யாவும் தீர்த்தருள் செய்தவர், சேறையில் மேவும் செந்நெறிச் செல்வனாரே.

709. ஒன்றிய தவத்து மன்னி
உடையனாய் உலப்பில் காலம்
நின்றுதம் கழல்கள் ஏத்து
நீள்சிலை விசய னுக்கு
வென்றிகொள் வேட னாகி
விரும்பிவெங் கானகத்துச்
சென்றருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.

தெளிவுரை : ஒன்றிய மனத்தை உடையவனாகித் தவத்தை மேற்கொண்டு, திருவடியை ஏத்திய விசயனுக்கு, வெற்றி கொள் வேடுவ வடிவம் தாங்கி, வெங்கானகத்தினை நாடி அருள் செய்த இறைவன், சேறையில் மேவும் செந்நெறிச் செல்வனாரே.

710. அஞ்சையும் அடக்கி ஆற்றல்
உடையனாய் அநேக காலம்
வஞ்சமில் தவத்துள் நின்று
மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்க ளாகி
விசையொடு பாயும் கங்கை
செஞ்சடை யேற்றார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.

தெளிவுரை : ஐம்புலன்களையும் அடக்கிய ஆற்றல் உடையவனாகி, அநேக ஆண்டுகள் தூய்மையால் மேவும் தவங்களைப் பரிந்த பகீரதனுக்காகப் பல முகங்களாகப் பேராரவாரத்துடன் வேகமாக வந்த கங்கையைத் தனது செஞ்சடையில் ஏற்று அருள் புரிந்தவர், சேறையில் திகழும் செந்நெறிச் செல்வனாரே.

711. நிறைந்தமா மணலைக் கூப்பி
நேசமோடு ஆவின் பாலைக்
கறந்துகொண்டு ஆட்டக் கண்டு
கறுத்ததன் தாதை தாளை
எறிந்தமா ணிக்குஅப்போதே
எழில்கொள்சண் டீசன்என்னச்
சிறந்தபேர் அளித்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.

தெளிவுரை : மணலைக் கூப்பி, நேசமோடு பசுவின் பாலைக் கறந்து பூசனை செய்த செயலைக் கண்டு வெறுத்துச் சினந்து இடர் செய்த எச்சதத்தன் என்னும் பெயர் கொண்ட தன் தந்தையில் தாளை வெட்டி வீழ்த்தியவர் சண்டீசர். அவருக்கு, அஞ்ஞான்றே எழில் மிக்க சண்டீசப் பதம் தந்து சிறந்த பேர் அளித்தவர், சேறையில் மேவும் செந்நெறிச் செல்வனாரே. இது, சிவ புண்ணியத்தின் சிறப்பினை ஏத்திப் போற்றுதலாயிற்று.

712. விரித்தபல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால
பயிரவ னாகி வேழம்
உரித்துமை அஞ்சக் கண்டு
ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.

தெளிவுரை : மூன்று இலையாக விரிந்து ஒளிக் கதிர்களை நவிலும் சூலப் படையும், வெடியோசை போன்று எழுப்பும் தமருகம் என்னும் உடுக்கையும் கையில் கொண்டு, அழகிய கால பைரவனாகி யானையின் தோலை உரித்து, உமாதேவி அஞ்சுமாறு ஒளி மிக்க திருவாய் மலரச் சிரித்தருள் செய்தவர் சேறையில் திகழும் செந்நெறிச் செல்வனாரே.

713. சுற்றமுன் இமையோர் நின்று
தொழுதுதூ மலர்கள் தூவி
மற்றெமை உயக்கொள் என்ன
மன்னுரான் புரங்கள் முன்னம்
உற்றொரு நொடியின் முன்னம்
ஒள்ளழல் வாயில்வீழச்
செற்றருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.

தெளிவுரை : தேவர்கள் சூழ்ந்து நின்று தொழுது மலர் தூவி ஏத்தி, எங்களை உய்யுமாறு காத்தருள்வீராக என்று வேண்டுதல் செய்ய மூன்று புரங்களையும் ஒரு நொடியில் எரிந்து சாம்பலாகுமாறு செய்து அருள் புரிந்தவர், சேறையில் மேவும் செந்நெறிச் செல்வனாரே.

714. முந்தியிவ் வுலகம் எல்லாம்
படைத்தவன் மாலி னோடும்
எந்தனி நாத னேஎன்று
இறைஞ்சி நின்று ஏத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை
அடிமுடி அறியா வண்ணம்
செந்தழல் ஆனார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.

தெளிவுரை : உலகத்தைப் படைக்கும் தொழில் மேவும் பிரமன், திருமாலுடன் இணைந்து எமது ஒப்பற்ற நாதனே ! என்று இறைஞ்சி ஏத்தித் துதிக்க, அந்தமில்லாத சோதியாகவும், அடியும் முடியும் அளவிட முடியாதவாறும் ஆகியவர், சேறையில் வீற்றிருக்கும் செந்நெறிச் செல்வனாரே.

715. ஒருவரு நிகரி லாத
ஒண்திறல் அரக்கன் ஓடிப்
பெருவரை எடுத்த திண்டோள்
பிறங்கிய மடிகள்இற்று
மருவிஎம் பெருமான் என்ன
மலரடி மெள்ள வாங்கித்
திருவருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே.

தெளிவுரை : தனக்கு ஒருவரும் நிகரில்லாத ஆற்றலுடைய இராவணன் கயிலையை எடுத்த போது விரலால் அழுத்தி அவனுடைய தோளும் முடிகளும் நெரிந்து அழியுமாறு புரிந்த அவன், எம்பெருமான் ! என்று ஏத்தி போது, அழுத்திய திருவடியை மெள்ள வாங்கித் திருவருள் செய்தவர், சேறையில் விளங்கும் செந்நெறிச் செல்வனாரே.

திருச்சிற்றம்பலம்

74. பொது

திருச்சிற்றம்பலம்

716. முத்தினை மணியைப் பொன்னை
முழுமுதற் பவளம் ஏய்க்கும்
கொத்தினை வயிர மாலைக்
கொழுந்தினை அமரர்சூடும்
வித்தினை வேத வேள்விக்
கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே.

தெளிவுரை : ஈசன், முழு முதலாக விளங்குபவர். அவர், முத்து, மணி, பொன், பவளக் கொத்து, வயிரம் என விளங்குபவர்; தேவர்கள் ஏத்தி வணங்க, வேதமாகவும் வேள்வியாகவும் விளங்கி நிற்பவர். அன்புடையவராகிய அக்கடவுளை நினைந்த நெஞ்சமானது, அழகுற்ற நெஞ்சமாகிறது.

717. முன்பனை உலகுக் கெல்லாம்
மூர்த்தியை முனிகள் ஏத்தும்
இன்பனை இலங்கு சோதி
இறைவனை அரிவை அஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக்
களிற்றினை உரித்த எங்கள்
அன்பனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே.

தெளிவுரை : ஈசன், யாவர்க்கும் முந்தையராகி விளங்குபவர்; உலகத்தாரால் தொழுது வணங்கப் பெறும் மூர்த்தியானவர்; முனிவர்களால் ஏத்தப் பெறும் தியானப் பொருளாக இன்பம் பயப்பவர்; நன்கு பரவும் சோதியாகத் திகழ்பவர்; இறைவனாகிக் காப்பவர்; வேள்வியிலிருந்து தோன்றி வந்த யானையின் தோலை உரித்து, உமாதேவி அஞ்சுமாறு வீரம் புரிந்தவர்; எங்கள் அன்புக்குரியவர். அப்பெருமானை நினைந்த நெஞ்சமானது அழகுற்றது.

718. கரும்பினும் இனியான் றன்னைக்
காய்கதிர்ச் சோதி யானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்பொடு பிறப்பி லானைப்
பெரும்பொருட் கிளவி யானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே.

தெளிவுரை : ஈசன், கரும்பினும் இனிமையானவர்; கதிரவன் போன்ற ஒளியுடையவர்; கடலில் விளைந்த அமுதமானவர்; இறப்பும் பிறப்பும் அற்றவர்; பெரும் பொருட் சொல்லாகிய திருவைந்தெழுத்தாகுபவர்; பெருந்தவத்தினரால் ஏத்தப் பெறும் ஒண்பொருளாகுபவர். அப்பெருமானை நினைந்து ஏத்துதலே, அழகு மிளிரும் நெஞ்சமாகும்.

719. செருத்தனை அருத்தி செய்து
செஞ்சரம் செலுத்தி ஊர்மேல்
கருத்தனைக் கனக மேனிக்
கடவுளைக் கருதும் வானோர்க்கு
ஒருத்தனை ஒருத்தி பாகம்
பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்ச
நேர்பட நினைந்த வாறே.

தெளிவுரை : போர் செய்தாலன்றி முப்புர அசுரர்களை அழித்தல் ஆகாது என்னும் திருக்குறிப்பால் சரம்தொடுத்த கருத்தன், சிவபெருமான். அவர், கனகம் போன்ற திருமேனியுடைய கடவுள். அவரைக் கருதி ஏத்தும் வானவர்களுக்குத் தலைவராகிய அப்பெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு மகிழ்ந்து, தீராக காதலுடன் திருநடனம் புரிந்து மன்னுயிர்களுக்குப் பேரின்பத்தை வழங்குபவர். அப்பெருமானை நினைக்கும் நெஞ்சமே பெருமை உடையது.

720. கூற்றினை உதைத்த பாதக்
குழகனை மழலை வெள்ளேறு
ஏற்றனை இமையோர் ஏத்த
இருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை அடியர் ஏத்தும்
அமுதனை அமுத யோக
நீற்றனை நினைந்த நெஞ்ச
நேர்பட நினைந்த வாறே.

தெளிவுரை : ஈசன், கூற்றுவனை உதைத்த பாதத்தினர்; குழகர்; மழவிடை ஏறுபவர்; தேவர்கள் ஏத்த சடை முடியின் மீது கங்கையை ஏற்றுத் தரித்தவர்; அடியவர் ஏத்தும் அமுதமாகுபவர்; அமுத யோகத்தை நல்கும் திருநீற்றுமேனியர். அப்பெருமானை நினைக்கும் நெஞ்சமே, பெருமையுடையது.

721. கருப்பனைத் தடக்கை வேழக்
களிற்றினை உரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி
வியன்கயி லாயம் என்னும்
பொருப்பனைப் பொருப்பன் மங்கை
பங்கனை அங்கை யேற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்ச
நேர்பட நினைந்த வாறே.

தெளிவுரை : ஈசன், யானையின் தோலை உரித்தவர்; வீரம் மிக்கவர்; அடியவர்களால் விரும்பப்படுபவர்; நன்கு மேவும் சோதிப் பொருளாகுபவர்; பெருமையுடைய கயிலாயத்தை உடையவர்; மலையரசன் மகளாகிய உமாதேவியைப் பாகமாக உடையவர்; அழகிய கையில் நெருப்பினை ஏந்தியுள்ளவர். அப்பெருமானை நினைந்து ஏத்தும் நெஞ்சமே, சிறப்புடையது.

722. நீதியால் நினைப்பு ளானை
நினைப்பவர் மனத்து ளானைச்
சாதியைச் சங்க வெண்ணீற்று
அண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்கம் இஞூலலா
விளக்கினை அளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே.

தெளிவுரை : ஈசன், விதிப்படி பூசித்து ஏத்துபவர்களுக்கு அருள் புரிபவர்; உளம் கசிந்து ஏத்துவார் மனத்துள் விளங்குபவர்; மேலானவர்; திருவெண்ணீறு தரித்துள்ளவர்; தேவர்களுக்கெல்லாம் ஒளி போன்றவர்; தூண்டாத மணி விளக்காய்த் திகழ்பவர்; அளவிட்டுக் கூற முடியாத சொற்பதம் கடந்த தொன்மையானவர். அப்பெருமானை நினைந்த நெஞ்சம் அழகுடையது.

723. பழகனை உலகுக் கெல்லாம்
பருப்பனைப் பொருப்போடு ஒக்கும்
மழகளி யானையின் தோல்
மலைமகள் நடுங்கப் போர்த்த
குழகனைக் குழவித் திங்கள்
குளிர்சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே.

தெளிவுரை : ஈசன், அன்னியம் யாதும் இன்மையால் யாவும் பழகிய தன்மையுடையவர்; உலகுக்கெல்லாம் பருப்பொருள் ஆகியவர். மலை போன்ற யானையின் தோலை உரித்தவர்; அழகனானவர்; பிறைச் சந்திரனைக் குளிர்ந்த சடை முடியில் மீது பொருந்த வைத்தவர். அவரை நினைந்து ஏத்தி நெஞ்சம் அழகுடையதாகும்.

724. விண்ணிடை மின்னொப் பானை
மெய்ப்பொரும் பொருளொப் பானைக்
கண்ணிடை மணியொப் பானைக்
கடுவிருட் சுடரொப் பானை
எண்ணிடை எண்ண லாகா
இருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே.

தெளிவுரை : ஈசன், மேகத்தின் இடையில் ஒளிரும் மின்னலைப் போன்றவர்; மெய்ம்மையில் பெரும் பொருளானவர்; கண்ணுக்குள் கண்மணி போன்றவர்; இருளின்கண் சுடர் போன்றவர்; எண்ணத்தில் ஏத்தி நினைக்காது, திருமால் பிரமன் ஆகிய இருவரும் தேடியபோது நெடிது உயர்ந்த அண்ணலாகியவர். அப்பெருமானை நினைந்த நெஞ்சம், அழகுடையதே.

725. உரவனைத் திரண்ட திண்டோள்
அரக்கனை ஊன்றி மூன்றூர்
நிரவனை நிமிர்ந்த சோதி
நீள்முடி அமரர் தங்கள்
குரவனைக் குளிர்வெண் திங்கள்
சடையிடைப் பொதியும் ஐவாய்
அரவனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே.

தெளிவுரை : வலிமையுடைய இராவணனை மலையின் கீழ் அடர ஊன்றிய ஈசன், முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர். தேவர்கள் தலைவராகிய அப்பெருமான், பிறைச் சந்திரனைச் சடையில் கண் வைத்து, ஐந்து தலையுடைய நாகத்தைத் தரித்தவர். அவரை நினைந்து ஏத்தும் நெஞ்சம், அழகியதாகும்.

திருச்சிற்றம்பலம்

75. பொது

திருச்சிற்றம்பலம்

726. தொண்டனேன் பட்ட தென்னே
தூயகா விரியி னன்னீர்
கொண்டிருக் கோதி யாட்டிக்
குங்குமக் குழம்பு சாத்தி
இண்டைகொள் டேற நோக்கி
ஈசனை எம்பி ரானைக்
கண்டணைக் கண்டி ராதே
காலத்தைக் கழித்த வாறே.

தெளிவுரை : ஈசனே ! தொண்டனாகிய நான் இத்துணைக் காலமும் என் செய்தேன் ! நன்னீர் கொண்டு பூசனை செய்யவில்லை. குங்குமம் முதலான நறுமணப் பொருள்களைக் கொண்டு ஏத்தவில்லை ! இருக்கு முதலான வேதங்களை ஓதியும், தோத்திரங்களைப் பாடியும், இண்டை மாலை புனைந்து சாற்றியும் பழிபடவில்லø. வேரீரைக் கண்டு தரிசிக்க வில்லை. இவ்வாறு காலத்தைக் கழித்தேனே ! தேவரீர் அருள் புரிவீராக.

727. பின்னிலேன் முன்னிலே னான்
பிறப்பறுத்து அருள்செய் வானே
என்னிலேன் ஆயினே னான்
இளங்கதிர்ப் பயலைத் திங்கள்
சின்னிலா எறிக்கும் சென்னிச்
சிவபுரத்து அமரர் ஏறே
நின்னலாற் களைகண் ஆரே
நீறுசேர் அகலத் தானே.

தெளிவுரை : சிவபெருமான் பெருங்கருணை மேவி ஆட்கொண்ட அருள்வயத்தால், பின்னால் நுகர வேண்டிய  வினையும் முன் வினையும் நீங்கிப் பெற்றனன். என்னுடையது என்னும் பற்றும் இல்லாதவன் ஆனேன். வெண் திங்களைச் சடைமுடியில் சூடிய திருநீறு அன்றித் தாங்கி நின்று அருள் நல்குபவர் யார் உளர் !

728. கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க்
காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியேன் ஆகி நின்று
தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற் றெல்லாம்
உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கி நானும்
விலா இறச் சிரித்திட் டேனே.

தெளிவுரை : ஈசனே ! கள்ளனாகிய நான், அத்தன்மையில் தொண்டினைச் செய்து, காலத்தைக் கழித்தேன். பின்னர். தெளிவு அடைந்தவனாகித் தேவரீரைத் தேடினேன். நினைப்பவர்களின் நினைப்பினை உள்ளிருந்து அறிபவர், தேவரீரே என்று, நாடிக் கண்டேன். எனவே, நான் வெட்கம் கொண்டேன். என்னுடைய கள்ளத் தன்மையும் தேவரீருடைய திருக்குறிப்பின் வழி ஆயிற்று என்பதால், நான் என் அறியாமையில் இருந்த நிலை எண்ணி நகைத்தேன்.

729. உடம்பெனும் மனைய கத்து
உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி
உயிரெனும் திரி மயக்கி
இடம்படு ஞானத் தீயால்
எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை
கழலடி காண வாமே.

தெளிவுரை : உடம்பு என்னும் மனையில் (இல்லம்) உள்ளத்தைக் அகல் விளக்காகவும், உணர்வினை நெய்யாகவும் கொண்டு, உயிர் என்கிற திரியை வைத்து ஞானமாகிய நெருப்பால் எரியுமாறு செய்து நோக்கினால், கடம்பமலர் மாலை அணிந்த முருகக் கடவுளின் தாதையாகிய சிவபெருமானின் திருக்கழலைக் காணலாம்.

730. வஞ்சப்பெண் ணரங்கு கோயில்
வாளெயிற்று அரவந் துஞ்சா
வஞ்சப் பெண் ணிருந்த சூழல்
வான்தவழ் மதியம் தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன்
வாழ்வினை வாழலுற்று
வஞ்சப்பெண் ணுறக்க மானேன்
வஞ்சனேன் என் செய்கேனே.

தெளிவுரை : (வஞ்சப் பெண்ணாகிய) கங்கை சூடிய இடத்தில் அரவமானது, துயிலாது விழித்திருக்க, அச்சூசுழலில் அது, ஈசனின் சடையில் மேவும் சந்திரனை விழுங்க நோக்குகின்றது. உமாதேவியைப் பாகமாகக் கொண்டு மேவும் பெருமானை நோக்கும் கங்கையினில், சந்திரன் தோய்கின்றது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பினைக் கொண்டு விளங்க, நான் ஒரு வஞ்சப் பெண் போன்று ஈசனின் அருட்பேற்றினை மனத்திற் கொண்டு, பொய் உறக்கம் கொண்டேன்.

731. உள்குவார் உள்ளத் தானை
உணர்வெனும் பெருமை யானை
உள்கினே னானும் காண்பான்
உருகினேன் ஊறி யூறி
எள்கினேன் எந்தை பெம்மான்
இருதலை மின்னுகின்ற
கொள்ளிமேல் எறும்பென் உள்ளம்
எங்ஙனம் கூடு மாறே.

தெளிவுரை : ஈசன் தன்னை நிøன்பவர்களின் உள்ளத்தில் மேவி அவர்களுடைய உணர்வாக விளங்குபவர். அவரை, நாள் உள்கி, உருகி, ஊறி நின்று, அரியவராகக் கொள்ளாது எளியவராகக் கருதினேன். இருபக்கமும் நெருப்பும் மின்னி எரிய, இடைப்பட்ட எறும்புபோல், என் உள்ளமானது பரிதவிக்கின்றது. ஈசனுடைய திருவடிப் பேற்றை அடைய வேண்டும் என்று உள்ளம் அலைபாய்கின்றது.

732. மோத்தையைக் கண்ட காக்கை
போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா
மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச்
சொடிகொள் நோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ணம்
உணர்வு தா உலகமூர்த்தீ.

தெளிவுரை : ஈசனே ! ஊனைக் கண்டு காக்கைகள் மொய்த்தல் போல, நான் வல்வினைகளால் மொய்க்கப் பெற்றுத் தேவரீருடைய திருவைந்தெழுத்தை உரையாதவனாய் மயங்குகின்றேன். உலகமூர்த்தியாய் விளங்கும் பெருமானே ! இத்தேகமானது, சீழும், புண்ணும், பிணியும், அழுக்கும் உடையது. இதனை நீக்கிப் பிறவாப் பெரு நலமாகிய வண்ணமும் அதற்கு உபாய மாகும் உணர்வையும் தந்தருள்வீராக.

733. அங்கத்தை மண்ணுக் காக்கி
ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப்
பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்த மேனிச் செல்வா
சாதல்நாள் நாயேன் உன்னை
எங்குற்றாய் என்ற போதா
இங்குற்றேன் என் கண்டாயே.

தெளிவுரை : பரமனே ! என்னுடைய தேகத்தை இம் மண்ணுக்கும், அன்பின் வழியாகிய உணர்வினைத் தேவரீருக்கும் அர்ப்பணித்தேன். உலகப் பற்றினைக் கழிந்து செல்லுமாறு நீக்கி, அதனைச் சிவப்பற்றாக மாற்றி நிலவுகின்றேன். திருவெண்ணீறு குழையைப் பூசிச் சங்கு போன்ற திருமேனியராக மேவும் செல்வனே ! சாயும் நாளாகிய அந்திமக் காலத்தில் நாயேனாகிய அடியவன், தேவரீரை எண்ணி எங்குற்றீர், என்று வினவும் போது நான் இங்கு உற்றேன் என்று உணர்த்தி அருள் புரிவீராக.

734. வெள்ளநீர்ச் சடைய னார்தாம்
வினவுவார் போல வந்தென்
உள்ளமே புகுந்து நின்றார்க்கு
உறங்குநான் புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீர் என்னக்
கலந்துதான் நோக்கி நக்கு
வெள்ளரோம் என்று நின்றார்
விளங்கு இளம் பிறைய னாரே.

தெளிவுரை : ஈசன், கங்கையைச் சடையில் தரித்தவர். அவர், என்னுடைய நலன்களை வினவுவார் போல் வந்து என் உள்ளத்தில் புகுந்து நின்றார். நான் அறியாமையால் உறங்கிக் கிடந்தேன். பின்னர் தெளிந்து, அப்பெருமானை நோக்கிக் கள்ளரோ புகுந்தீர் ! எனக் கேட்டேன். அவர் என்னுள் கலந்தவராய் நோக்கி, நான் கள்ளர் இல்லை, வெள்ளர் (தூய்மையானவர்) என்று நின்றார். அவர், இளமையான பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரே.

735. பெருவிரல் இறைதான் ஊன்றப்
பிறைஎயிறு இலங்க அங்காந்
தருவரை யனைய தோளான்
அரக்கன் அன்று அலறி வீழ்ந்தான்
இருவரும் ஒருவ னாய்
உருவம் அங்கு உடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு
காண்கநான் திரியு மாறே.

தெளிவுரை : ஈசன், தனது பெருமை மிக்க விரல் ஒன்றினை ஊன்ற மலை போன்ற தோளுடைய அரக்கனாகிய இராவணன் அலறி வீழ்ந்தான். அப்பெருமான், கங்கையும் உமாதேவியும் திகழத் தன்பால் கொண்டு விளங்கும் வள்ளல். அவருடைய திருவடியை என் நெஞ்சின்கண் வைத்து நான் திரிகின்றேன் காண்பீராக.

திருச்சிற்றம்பலம்

76. பொது

திருச்சிற்றம்பலம்

736. மருளவா மனத்த னாகி
மயங்கினேன் மதியி லாதேன்
இருளவா அறுக்கும் எந்தை
இணையடி நீழல் என்னும்
அருளவாப் பெறுதல்
அஞ்சிநான் அலமந் தேற்குப்
பொருளவாத் தந்த வாறே
போதுபோய்ப் புலர்ந்த தன்றே.

தெளிவுரை : நான், மருள் உடையவன்; ஆசையும் உடையவன். இத்தகைய தன்மையால் மயங்கி மதியில்லாதவனானேன். இருளாகிய அஞ்ஞானத்தையும், அவா என்னும் பற்றையும் அறுப்பவர், ஈசன். அப்பெருமானுடைய திருவடி நிழலில் இருந்து அருளைப் பெறாதவனாகி அச்சத்தால் துயர் கொண்டேன். அப்போது, பெரும் பொருளாகியும் நிலையானதுமாகிய தேவரீர், என்னைப் பற்றி ஆட்கொண்டு அருள் புரிந்தீர். நான் மகிழ்ந்தேன்.

737. மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையு மன்றே.

தெளிவுரை : மெய்ம்மையாகிய உழவு செய்து, ஈசன் பால் விருப்பம் என்னும் விதைவிதைத்துப் பொய்மையாகிய அஞ்ஞானத்தைக் களை எடுத்துப் பொறுமை என்னும் நீர்பாய்ச்சி, அன்புப் பயிரை வளர்க்க வேண்டும். அந்நிலையில் தன்னையே அறிந்து தகவு எனம் வேலி கொண்டு, செம்மை என்னும் நிலையில் மேவச் சிவகதியை விளைவிக்கும்.

738. எம்பிரான் என்ற தேகொண்டு
என்னுளே புகுந்து நின்றிங்கும்
எம்பிரான் ஆட்ட ஆடி
என்னுளே உழிதர் வேனை
எம்பிரான் என்னைப் பின்னைத்
தன்னுளே கரக்கும் என்றால்
எம்பிரான் என்னின் அல்லால்
என்செய்கேன் ஏழை யேனே.

தெளிவுரை : நான், தலைவனாகிய ஈசனை எண்ணி இருந்தேன். அப்பெருமான், என் உள்ளத்தில் புகுந்து நின்று என்னைச் செலுத்துபவரானார். உள்ளத்தின் உள் புகுந்த அப்பெருமானை, நான் உள்ளத்தின் உள்ளே தேடித் திரிகின்றேன். அவர், என்னைத் தனக்குள்ளே மறைத்துக் கொண்ட பின்னர், அவரை, எம்பெருமான் என்று சொல்வதைத் தவிர, நான் வேறு என்ன செய்வேன்.

739. காயமே கோயி லாகக்
கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மை யாக
மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா
நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப்
போற்றவிக் காட்டி னோமே.

தெளிவுரை : இவ்வுடம்பைக் கோயிலாகவும், நறுமண நினைவுகளையுடைய மனத்தை அடிமையாகவும் கொண்டு, வாய்மையைத் தூய்மையாகவும் வைத்து, மனத்தின் மணியாக மேவும் ஆன்மாவை இலிங்கமாகப் பாவித்து, நேயத்தை நெய்யும் பாலாய் நிறைய அமைத்துப் பூசித்து, இறைவனை ஏத்தினேன்.

740. வஞ்சகப் புலைய னேனை
வழியறத் தொண்டிற் பூட்டி
அஞ்சல்என்று ஆண்டு கொண்டாய்
அதவுநின் பெருமை யன்றே
நெஞ்சகம் கனிய மாட்டேன்
நின்னையுள் வைக்க மாட்டேன்
நஞ்சிடம் கொண்ட கண்டா
என்னென நன்மைதானே.

தெளிவுரை : வஞ்சகமும் கீழ்மையும் உடைய அடியவனைத் தொண்டனாக்கிய நீல கண்டனே ! தேவரீர் என்னை ஆண்டு கொண்டது, தேவரீருடைய பெருமையே ஆகும். ஆயினும், என் நெஞ்சம் பக்தியால் கனியவில்லை; தேவரீரை நினைத்து ஏத்தவும் இல்லை. தேவரீருடைய திருநாமத்தை ஓதி உரைத்தலானது நன்மையே தரும்.

741. நாயினும் கடைப்பட் டேனை
நன்னெறி காட்டி யாண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும்என் நெஞ்சின் உள்ளே
நிலவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகில்
நோக்கிநீ அருள்செய் வாயே.

தெளிவுரை : ஈசனே ! நான், நாயினும் இழிந்தவன். ஆயினும் நன்னெறியினைக் காட்டியருளி ஆட்கொண்டீர். ஆயிரம் அரவம் ஆர்த்துத் திகழும் அமுதனே ! தேவரீர், அமுதம் போன்று என் நெஞ்சினுள் நிலவி, யாவிலும் வியாபித்து மேவும் ஈசனே ! பிறவி நோய் என்னைச் சாருமானால் அதனைத் திருக்கண்ணால் விழித்து நோக்கம் செய்து காத்து, அருள் புரிவீராக.

742. விள்ளத்தான் ஒன்று மாட்டேன்
விருப்பெனும் வேட்கை யாலே
வள்ளத் தேன் போல நின்னை
வாய்மடுத்து உண்டி டாமே
உள்ளத்தே நிற்றி யேனும்
உயிர்ப்புளே வருதி யேனும்
கள்ளத்தே நிற்றி அம்மா
எங்ஙனம் காணு மாறே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீருடைய திருநாமங்களைக் கூறி மனம் ஒரு மித்து ஏத்த மாட்டேன். தேவரீரை விருப்புடன் நினைத்து, வட்டிவில் உள்ள தேன் போல நும்மை வாயால் பருகி உட்கொள்ளவும் மாட்டேன். தேவரீர், என் உள்ளத்தில் நிற்பவர்; உயிர்ப்பாக விளங்குபவர்; மறைந்து விளங்கிக் கள்ளத்தராய் மேவுபவர். நான் எங்ஙனம் காண்பேன். ஈசன் உள்ளத்தின்கண் ஓங்காரமாய் மேவும் மெய்யனாக, உறவே போற்றி உயிரே போற்றி என மாணிக்கவாசகர் அருளிச் செய்தவாறு உள்ளத்தின் கண் ஒளிர்தல் ஓதுதலாயிற்று.

743. ஆசைவன் பாசம் எய்தி
அங்குற் றேன் இங்குற் றேனாய்
ஊசலாட் டுண்டு வாளா
உழந்து நான் உழிதராமே
தேசனே தேச மூர்த்தீ
திரு மறைக் காடு மேய
ஈசனே உன்றன் பாதம்
ஏத்துமாறு அருள்எம் மானே.

தெளிவுரை : ஈசனே ! ஒளிமயமாக விளங்கும் பெருமானே ! திருமறைக் காட்டில் மேவும் பெருமானே ! கொடிய ஆசாபாசங்களால் இங்கும் அங்குமாய் ஊசலாடி அலைந்து, பயனின்றி உழன்று நான் திரியாதவாறும் தேவரீரை ஏத்துமாறும் அருள்புரிவீராக.

744. நிறைவி வேன் நேச மில்லேன்
நினைவிலேன் வினையின் பாச
மறைவிலே புறப்பட் டேறும்
வகையெனக்கு அருளென் எம்மான்
சிறையிலேன் செய்வ தென்னே
திருவடி பரவி யேத்தக்
குறைவி லேன் குற்றம் தீராய்
கொன்றைசேர் சடையி னானே.

தெளிவுரை : ஈசனே ! நான், நிறைவு இல்லாதவன்; நேசம் இல்லாதவன்; தியானம் செய்யும் பாங்கில்லாதவன். வினையின் பாசத்தால் மறைக்கப்பட்டு அஞ்ஞானத்தில் உறங்கும் என்னை, அதிலிருந்து விடுவித்து மேல் நிலைக்குச் செல்லுமாறு அருள் புரிவீராக. இவ்வுடம்பைக் கொண்டு என்ன செய்வது ? திருவடியைப் பரவி ஏத்துவதற்கு நான் குற்றத்தில் குறைவற்றவனாகியவன். கொன்றை, மலர் தரித்த சடை முடியுடைய பெருமானே ! என் குறைகளைத் தீர்த்து அருள்வீராக.

745. நடுவிலாக் காலன் வந்து
நணுகும் போது அறிய வொண்ணா
அடுவன அஞ்சு பூதம்
அவைதமக்கு ஆற்ற லாகேன்
படுவன் பலவும் குற்றம்
பாங்கிலா மனிதர் வாழ்க்கை
கெடுவதிப் பிறவி சீசீ
கிளரொளிச் சடையினீரே.

தெளிவுரை : உள்ளத்தால் ஏற்கப் பெறாத காலன் நண்ணும் போது, அறிய முடியாது. ஐந்து புலன்களும் அடர்த்துத், துன்புறுத்தி ஆற்றலை இழந்தேன். செய்வது யாவும் குற்றம் உடையது. இதுவே மனித வாழ்க்கையின் பாங்கற்ற தன்மை. இப்பிறவி நன்மைக்காக இல்லை, தீமைக்கே ஆயிற்று. இது இகழத்தக்கது. ஒளிரும் சடை முடியுடைய ஈசனே ! அருள் புரிவீராக.

திருச்சிற்றம்பலம்

77. பொது

திருச்சிற்றம்பலம்

746. கடும்பகல் நட்டம் ஆடிக்
கையிலோர் கபாலம் ஏந்தி
இடும்பலிக்கு இல்லந் தோறும்
உழிதரும் இறைவ னீரே
நெடும்பொறை மலையர் பாவை
நேரிழை நெறியமென் கூந்தல்
கொடுங்குழை புகுந்த அன்றும்
கோவணம் அரைய தேயோ.

தெளிவுரை : ஈசனே, கடும் பகலிலும் நடனம் ஆடிக் கையினில் ஒரு கபாலத்தை ஏந்தி, இடுகின்ற பலியை ஏற்க, இல்லங்கள் தோறும் திரியும் இறைவன். தேவரீரே ! நீவிர், பொறுமையின் வயமாகிய மலையரசனின் மகளான உமாதேவியை உடனாகக் கொண்ட போதும், கோவண ஆடையை அணிந்திருப்பது விந்தையே.

747. கோவணம் உடுத்த வாறும்
கோளரவு அசைத்த வாறும்
தீவணச் சாம்பர் பூசித்
திருவுரு இருந்த வாறும்
பூவணக் கிழன னாரைப்
புலியுரி அரைய னாரை
ஏவணச் சிலையி னாரை
யாவரே எழுது வாரே.

தெளிவுரை : ஈசன், கோவண ஆடை உடுத்தியவர்; அரவத்தை அரையில் கட்டியவர்; தீவண்ண முடைய செம்மேனியில், திருவெண்ணீற்றைப் பூசியவர்; செந்தாமரை ஒத்த வண்ணம் உடையவர்; புலியில் தோலை அரையில் கட்டியவர்; மேரு மலையை வில்லாகக் கொண்டு அம்பு தொடுப்பவர். அப்பெருமானை யாவர் காண இயலும்.

748. விளக்கினார் பெற்ற இன்பம்
மெழுக்கினால் பதிற்றி யாகும்
துளக்கிநல் மலர்தொ டுத்தால்
தூயவிண் ணேற லாகும்
விளக்கி ட்டார் பேறு சொல்லின்
மெய்ஞ் ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதம் சொன்னார்க்
அடிகள்தாம் அருளு மாறே.

தெளிவுரை : திருக்கோயிலைத் திருஅலகினால் தூய்மை செய்து சிவ புண்ணியத்தை ஆற்றுபவர்கள், இன்பத்தை அடைவார்கள். இத்திருச் செயலால் மட்டும் அல்லாது தூய நீர் கொண்டு மெழுகித் தூய்மை செய்பவர்களுக்கு, அத்தகைய இன்பமானது பத்து மடங்கு பெருகும். ஈசனை மலர் கொண்டு தூவி அருச்சிப்பவர்கள், தூய்மையான விண்ணுலகத்தை அடையும் பெருமை பெறுவார்கள். சிவாலயத்திற்குத் தீபம் ஏற்று ஒழுகுபவர்கள், மெய்ஞ்ஞானத்தைப் பேறாகக் கொள்வார்கள். இறைவனைப் போற்றிப் பாடும் அன்பர்களுக்கு ஈசன் திருவருள் புரிபவர்.

749. சந்திரற் சடையில் வைத்த
சங்கரன் சாம வேதி
அந்தரத்து அமரர் பெம்மான்
ஆன்நல்வெள் ஊர்தி யான்றன்
மந்திர நமச்சிவாய
ஆகநீறு அணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும்
வெவ்வழல் விறகிட்டு அன்றே.

தெளிவுரை :  ஈசன், சந்திரனைச் சடை முடியில் திகழ வைத்தவர்; சங்கரன்; சாமவேதத்தை ஓதுபவர்; தேவர்களின் தலைவர்; வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவர்; திருவைந்தெழுத்தாகிய நமச்சிவாய என ஓதித் திருவெண்ணீற்றினை அணிய, வினையாகிய நோயானது, எரியும் நெருப்பில் விறகினை இட்டது போல, அழியும்.

750. புள்ளுவர் ஐவர் கள்வர்
புனத்திடைப் புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர்
தூநெறி விளைய வொட்டார்
முள்ளுடை அவர்கள் தம்மை
முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்றங்கு
உணர்வினால் எய்ய லாமே.

தெளிவுரை : வஞ்சகராகிய ஐந்து புலன்கள், கள்வர் எனப் புகுந்து துள்ளிச் சுறை கொண்டு, தூய நெறியினை விளைவிக்காதவராகி உள்ளனர். முள் போன்று குத்தித் தாக்கும் அக் கொடியவர்களை, முக்கண் நாயகனாகிய ஈசனின் திருப்பாத நீழலில் நின்று இருந்து சிவஞான உணர்வு எய்தி, வெல்லலாம்.

751. தொண்டனேன் பிறந்து வாளாத்
தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நாளும்
பெரிய தோர் அவாவிற் பட்டேன்
அண்டனே அமரர் கோவே
அறிவனே அஞ்சல் என்னாய்
தொண்டிரைக் கங்கை சூடும்
திகழ்தரு சடையி னானே.

தெளிவுரை : தொண்டனாகிய யான், பிறந்து, சஞ்சித பிராரத்த வினைக் குழியில் வீழ்ந்து, இவ்வுடம்பைச் சுமந்து, நாள்தோறும், ஆசை வயப்பட்டு அழிகின்றேன். இது இப்பிறவியில் செய்யும் ஆகாமிய வினையைப் பெருக்குவதாயிற்று. ஈசனே ! தேவர்களின் தலைவனே ! யாவையும் அறிந்த பெருமானே ! கங்கை சூடும் சடையுடைய நாதனே ! அஞ்சாதே என, உரைப்பீராக.

752. பாறினாய் பாவி நெஞ்சே
பன்றி போல் அளற்றிற் பட்டுத்
தேறிநீ நினைதி யாயிற்
சிவகதி திண்ண மாகும்
ஊறலே உவர்ப்பு நாறி
உதிரமே ஒழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு
கோலமாக் கருதி னாயே.

தெளிவுரை : பாவத்தில் தோயும் நெஞ்சே ! சேற்றில் திளைக்கும் பன்றியைப் போன்று வினைச் சேற்றில் அழுந்தி இழிவாகின்றனையே ! நீ ஈசனை நினைத்து ஏத்தினால், சிவகதி உறுதியாகக் கிடைக்கும். உவர்ப்பு நீர் பெருகி, நாற்றம் கொண்டு, உதிரம் ஒழுகும் துவராங்கள் கொண்ட தேகத்தால் மூடப்பெற்ற இவ்வுடம்பினை, அழகுடையதெனக் கொண்டனையே ! அதனைத் தவிர்க. ஈசனை எண்ணுக. இது, பன்றியானது இழிவுறுதலை உணராத தன்மையைப் போன்று, உடலின் இழிவை உணராது மயங்கும் உயிருக்கும், உபதேசம் வழங்குதல் ஆயிற்று.

753. உய்த்தகால் உதயத்து உம்பர்
உமையவள் நடுக்கம் தீர
வைத்தகால அரக்க னோதன்
வான்முடி தனக்கு நேர்ந்தான்
மொய்த்தகான் முகிழ்வெண் திங்கள்
மூர்த்தியென் உச்சி தன்மேல்
வைத்தகால் வருந்தும் என்று
வாடிநான் ஒடுங்கி னேனே.

தெளிவுரை : கயிலையின் மீது ஊன்றிய ஈசனது திருவிரலைத் தாங்காத இராவணன், நைந்து வாடினான். திங்களைச் சூடிய நாதனாகிய அப்பெருமான், என் உச்சியின் மீது திருவடியை வைத்த ஞான்று, எனது வன்மைக்கு இறைவனின் மென்மையான மலர்ப்பாதம் வருந்தும் என வாடி நான் ஒடுங்கினேன்.

திருச்சிற்றம்பலம்

78. பொது

திருச்சிற்றம்பலம்

754. வென்றிலேன் புலன்கள் ஐந்தும்
வென்றவர் வளாகந் தன்னுள்
சென்றிலேன் ஆதலாலே
செந்நெறி அதற்கும் சேயேன்
நின்றுமே துளும்பு கின்றேன்
நீசனேன் ஈசனேயோ
இன்றுளேன் நாளை இல்லேன்
என்செய்வான் தோன்றி னேனே.

தெளிவுரை : ஈசனே ! நான், என்னுள் நிலவித் துன்புறுத்தித் தீங்கு விளைவிக்கும் ஐம்புலன்களை வெற்றி கொள்ளாதவன். புலன்களை வென்ற யோகிகளின் பால் சென்றடைந்து, வெற்றி கொள்ளும் செந்நெறியைக் கொள்ளாதவன். உள்ளத்தில் துன்பம் அடைந்து, நீசனாக இழிகின்றேன். இன்று இருப்பதும், நாளை இல்லை என்பதும் ஆகிய தன்மையில் நான், எக்காரணத்தை யொட்டிப் பிறந்தேன். தேவரீர், அருள் புரிந்து ஆட்கொள்வீராக.

755. கற்றிலேன் கலைகள் ஞானம்
கற்றவர் தங்க ளோடும்
உற்றியலன் ஆத லாலே
உணர்வுக்கும் சேயன் ஆனேன்
பெற்றிலேன் பெருந்தடங் கண்
பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளேன் இறைவ னேநான்
என்செய்வான் தோன்றி னேனே.

தெளிவுரை : இறைவனே ! நான், வேதசாத்திர நூல்களைக் கற்றிலேன்; கற்றவர் பால் அடைந்து அதன் சாரத்தைக் கேள்வி ஞானத்தால் பெற்றிலேன்; ஞான உணர்வுக்கு அப்பாற்பட்டவனாகி அஞ்ஞானத்தில் பிடியில் இழிகின்றேன்; நன்மை ஏதும் பெற்றிலேன்; பேதையர் பால் திரிந்து புன்மையனாகிப் பொலி விழந்தேன். நான் எதன் பொருட்டு இப்பிறவியைக் கொண்டு இங்கு உள்ளேன் ! தேவரீர் அருள் புரிவீராக.

756. மாட்டினேன் மனத்தை முன்னே
மறுமையை உணர மாட்டேன்
மூட்டிநான் முன்னை நாளே
முதல்வனை வணங்க மாட்டேன்
பாட்டினாய் போல நின்று
பற்றதாம் பாவம் தன்னை
ஈட்டினேன் களைய மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே.

தெளிவுரை : ஈசனே ! மனத்தை, இக வாழக்கையின் தன்மையில் செலுத்தி, மறுமைக்குரிய உணர்வற்றவனாகி, இளம் பிராயத்தில் முனைந்திருந்து தேவரீரை வணங்காதவனானேன். மெய்பயனின்றித் தன்பற்று உடையவனாகிப் பாட்டுபட்டுப் பாவத்தை ஈட்டினேன். அதனைப் போக்கிக் கொண்டு உய்வு பெறுமாறு தேவரை ஏத்த மாட்டேன். நான் யாது பற்றி இப்பிறவியைக் கொண்டுள்ளேன். தேவரீர் அருள் புரிவீராக.

757. கரைக்கடந்து ஓதம் ஏறும்
கடல்விடம் உண்ட கண்டன்
உரைக் கடந்து ஓது நீர்மை
உணர்ந்திலேன் ஆத லாலே
ஞூரைக் கிடந்து அசையு நாகம்
அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு
இரைக் கடைந்து உருகு கின்றேன்
என்செய்வான் தோன்றி னேனே.

தெளிவுரை : கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்களைக் காத்தருளிய நீலகண்டராகிய சிவபெருமான், சொல்லும் உரைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவராகி, வாக்கு மனோதீதமானவர். அப்பெருமானை நான் உணராதவனானேன். அரவத்தை அரையில் கட்டிய பெருமானே ! உலகத்தில் பெறும் இரையாகிய உணவைக் கொள்ளும் உடல் வாழ்க்கைக்கே உருகித் தேவரீரை உணராதவனானேன். நான் எதன் பொருட்டு இப்பிறவியைக் கொண்டேன் ! அருள் புரிவீராக.

758. செம்மைவெண் ணீறு பூசும்
சிவனவன் தேவ தேவன்
வெம்மைநோய் வினைகள் தீர்க்கும்
விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி
அம்மைநின்று அடிமை செய்யா
வடிவிலா முடிவில் வாழ்க்கைக்கு
இம்மைநின்று உருகு கின்றேன்
என்செய்வான் தோன்றி னேனே.

தெளிவுரை : ஈசன், உயிர்களுக்குச் செம்மையாகிய சிவப்பேற்றினை அளிக்க வல்ல திருவெண்ணீற்றைப் பூசி விளங்குபவர். அவர், தேவர்களுக்கெல்லாம் தலைவர். வெம்மையாகிய பிறவி நோயும், அதற்குக் காரணமாகிய வினையும், தீர்ப்பவர், விகிர்தராகிய அவ்விறைவன் பால் முன்னரே ஏத்தி வணங்காமையால் முடிவற்ற பிறவியை அமைத்துக் கொண்டு இப்போது கலங்குகின்றேன். அன்புடன் ஏத்துகின்றேன். நான் எதன் பொருட்டு இப்பிறவியை அடைய வேண்டும் ! தேவரீர், அருள் புரிவீராக.

759. பேச்சொடு பேச்சுக் கெல்லாம்
பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலேன் ஆதலாலே
கொடுமையை விடுமாறு ஓரேன்
நாச்சொலி நாளு மூர்த்தி
நன்மையை உணர மாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே
என்செய்வான் தோன்றி னேனே.

தெளிவுரை : ஈசனே ! பிறரைப் பற்றிக் குறை கூறுவதையே என் இயல்பாகக் கொண்டு பேசினேன். அத்தகைய சொற்களைக் கூறுதல் கொடியது என்று அறிகிலேன். அவற்றைக் கூச்சம் இல்லாது செய்து, அத்தகை கொடுமையிலிருந்து விடுபடாதவனானேன். நாள்தோறும் தேவரீருடைய திருநாமத்தைக் கூறி, அதனால் நன்மை பெறவேண்டும் என உணரமாட்டேன். எல்லாரும் இகழுமாறு உள்ள இவ்வுடம்பைக் கொண்டு, எதற்காகப் பிறவி எடுத்தேன் ! தேவரீரே ! அருள் புரிவீராக.

760. தேசனைத் தேசமாகும்
திருமா லோர் பங்கன் றன்னைத்
பூசனைப் புனிதன் றன்னைப்
புணரும்புண் டரிகத்தானை
நேசனை நெருப்பன் றன்னை
நிவஞ்சகத்து அகன்ற செம்மை
ஈசனை அறிய மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், ஒளிமயமானவர்; ஒளிமயமாகிய திருமாலை ஒரு பாகமாக உடையவர்; யாவராலும் பூசிக்கப்படுபவர்; எத்தகைய குற்றமும் மேவாத புனிதத் தன்மையுடையவர்; அகத்தாமரையில் வீற்றிருப்பவர்; அன்புடையவர்; தீத்திரட்சியாய் நெடிது ஓங்கிய வடிவத்தை உடையவர்; பஞ்சகிலேசம் அற்ற செம்மை உடையவர். அப் பெருமானை அறியாதவனாகி நான் எதற்கு இப்பிறவியைக் கொண்டேன்.

761. விளைக்கின்ற வினையை நோக்கி
வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக
முயல்கிலேன் இயல வெள்ளம்
திளைக்கின்ற முடியி னான்றன்
திருவடி பரவ மாட்டாது
இளைக்கின் றேன் இருமி யூன்றி
என்செய்வான் தோன்றி னேனே.

தெளிவுரை : ஈசனே ! இப் பிறவியில் நுகரப்படுகின்ற பிராரத்த வினையும் எஞ்சியுள்ள சஞ்சித வினையும், இப் பிறவியில் பெருக்கும் ஆகாமிய வினையும், வாழ்நாள் முடிவுறுதலைக் காட்டும் நரைத்த முடியும், முதுமையும் கொண்ட தேகமும் ஆகியவற்றைச் சிந்தனை செய்யாதவனானேன். வினையைப் போக்கிக் கொள்ளாதவனானேன். கங்கையைச் சடை முடியுள் தரித்த சிவபெருமானே ! தேவரீருடைய திருவடியைப் பரவாதவனாகி, உடல் நைந்து இருமல் கொண்டு இழிகின்றேன். நான் எதற்கு இப் பிறவியை எடுத்தேன் ! தேவரீரே ! அருள் புரிவீராக.

762. விளைவறிவு இலாமை யாலே
வேதனைக் குழியில் ஆழ்ந்து
களைகாணும் இல்லேன் எந்தாய்
காமரங் கற்றும் இல்லேன்
தளையவிழ் கோதை நல்லார்
தங்களோடு இன்பம் எய்த
இளையனும் அல்லேன் எந்தாய்
என்செய் வான் தோன்றினேனே.

தெளிவுரை : ஈசனே ! இம்மை செய்வது யாவும் அதற்கு உரிய வினையை நல்கி வேதனையில் ஆழ்த்தும் என்னும் அறிவு அற்றவனாகித் தீமையே புரிந்தேன்; பற்றுக் கோடு இல்லாதவனாகி வருந்துகின்றேன். எந்தையே ! இசைப் பிரியராகிய தேவரீரை மகிழ்வித்து ஏத்தும் தன்மையில் பண்ணிடை வளரும் இசை அறியாதவன்; அழகிய மகளிர் புரியும், அலகிடல் மெழுகிடல் போன்ற பணிகள் ஆற்றி மகிழும் தன்மையில் உடன் விளங்கித் திருத்தொண்டாற்ற இளைஞனும் அல்லேன் நான் எதற்கு இப் பிறவியை எடுத்தேன் !

763. வெட்டன உடைய னாகி
வீரத்தால் மலையெ டுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச்
சுவைபடக் கீதங் கேட்ட
அட்டமா மூர்த்தி யாய்
ஆதியை ஓதி நாளும்
எட்டனை எட்ட மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே.

தெளிவுரை : கடுமை உணர்வு உடையானாகி, வீரத்தால் மலையெடுத்த இராவணனை அடக்கி, அவன் பாடிய கீதத்தைக் கேட்டு அருள் செய்தவர், சிவபெருமான். அவர் அட்டமூர்த்தியாய் மேவும் ஆதிக் கடவுள். அப்பெருமானை எள்ளளவும் சிந்தியாதும், சிவ வழிபாடின்றியும் இருத்தலால், நான் எட்டி இருந்து நோக்கி மகிழ்வதற்கும் இயாதவனானேன். நான் எதற்கு இப் பிறவியைக் கொண்டேன் !

திருச்சிற்றம்பலம்

79. பொது

திருச்சிற்றம்பலம்

764. தம்மானம் காப்ப தாகித்
தையலார் வலையுள் ஆழ்ந்து
அம்மானை அமுதன் றன்னை
ஆதியை அந்த மாய
செம்மான ஒளிகொள் மேனிச்
சிந்தையுள் ஒன்றி நின்ற
எம்மானை நினைய மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே.

தெளிவுரை : தனது பெருமையைக் காத்துக் கொள்ளும் தன்மையாகும் என நினைத்துக் கொண்டு மாதர்பால் மயங்கி ஆழ்ந்து, அமுதனாகிய சிவபெருமானை ஒன்றி நிற்குமாறு நான், சிந்தை செய்யாதவனானேன். அவர், சோதி வடிவாக விளங்குபவர். அப் பரமனை நினையாத தன்மையில், நான் பிறவி எடுத்ததன் பயன்தான் யாது !

765. மக்களே மணந்த தாரம்
அவ்வயிற்று அவரை யோம்பும்
சிக்குளே அழுந்தி ஈசன்
திறம்படேன் தவமது ஓரேன்
கொப்புளே போலத் தோன்றி
அதனுளே மறையக் கண்டு
இக்களே பரத்தை யோம்ப
என்செய்வான் தோன்றி னேனே.

தெளிவுரை : மக்கள், அவர்களுடைய மனைவி மக்கள் முதலானவர்களைப் பாதுகாக்கும் வாழ்க்கைப் பந்தத்தில் சிக்கி அழுந்தி, நான் ஈசனுடைய புகழைப் பாடிப் போற்றாதவனானேன்; தவநெறியைச் சிந்தனை செய்கிலேன். நீர்க் குமிழியானது நீரில் தோன்றி, நீரிலேயே மறையும் தன்மையைப் போன்று, இவ்வுடம்பைப் பாதுகாப்பதற்கே பிறந்தவனானேன். யாது செய்வேன் !

766. கூழையேன் ஆக மாட்டேன்
கொடுவினைக் குழியில் வீழ்ந்து
ஏழினின் னிசையி னாலும்
இறைவனை யேத்த மாட்டேன்
மாழையொண் கண்ணின் நல்ல
மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையேன் ஆகி நாளும்
என்செய்வான் தோன்றி னேனே.

தெளிவுரை : நான், இறைவன்பால் குழைந்து அன்பு செலுத்தாதவன்; வினையாகிய குழியில் வீழ்ந்து அழுந்துபவன்; ஏழிசை கொண்டு ஈசனை ஏத்தாதவன்; இனிய வகையில் திருத்தொண்டு மேவும் மடந்தை நல்லார்களுக்குத் தீயவன்; அறிவற்றவனாகி நாள் தோறும் உடலையே பேணுபவன். நான் எடுத்த பிறவியின் பயன்தான் யாது !

767. முன்னையென் வினையி னாலே
மூர்த்தியை நினைய மாட்டேன்
பின்னைநான் பித்த னாகிப்
பிதற்றுவன் பேதை யேனான்
என்னுளே மன்னி நின்ற
சீர்மைய தாயி னானை
என்னுளே நினைய மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே.

தெளிவுரை : என்னுடைய தீவினையின் காரணமாக, நான் ஈசனை நினையாதவனானேன். பின்னர் தெளிவு பெற்று, ஈசன்பால் பெரும் பித்தனாகி, அப் பெருமானின் திருநாமத்தைத் திரும்பத் திரும்ப ஓதிப் பிறிதொன்றினையும் நோக்காதவனானேன். சிவபெருமான், என் உள்ளத்தில் விளங்கி நின்ற சிறப்புடையவராகியவர். அவரை நான் உள்ளத்தில் கண்டு தியானித்து ஏத்தாது, புறத்தில் தேடுகின்றேன். என் பிறவியின் பயன்தான் யாது கொல் !

768. கறையணி கண்டன் றன்னைக்
காமரம் கற்றும் இல்லேன்
பிறைநுதல் பேதை மாதர்
பெய்வளை யார்க்கும் அல்லேன்
மறைநவில் நாடி னானை
மன்னிநின்று இறைஞ்சி நாளும்
இறையேயும் ஏத்த மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே.

தெளிவுரை : நான், கறை போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானைப் பண் இசைத்துப் பாடிப் போற்றும் கல்வியில்லாதவன்; மாதர்கள் என்னைக் கனிந்து நோக்காதவாறு கொடுமை செய்த தீயவன். வேதங்களை விரித்தோதிய ஈசனை நெஞ்சிருந்தி ஏத்தாது யான் இவ்வுடம்புடன் இருப்பதுதான் யாது பற்றி !

769. வளைத்துநின்று ஐவர் கள்வர்
வந்தெனை நடுக்கம் செய்யத்
தளைத்துவைத்து உலையை யேற்றித்
தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின்று ஆடுகின்ற
ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்துநின்று ஆடுகின் றேன்
என்செய்வான் தோன்றினேனே.

தெளிவுரை : ஐம்புலன்கள் எனப்படும் கள்வர்கள் என்னை வளைத்து, நடுக்கத்தைச் செய்கின்றனர். அதனை உண்மையில் அறியாதவனாகி, நீர் உலையில் நெருப்பு எழ அவ்வெம்மையில் மகிழும் ஆமையைப் போன்று, புலன்களால் மகிழ்ச்சி கொண்டு பின்னர், வெம்மை தாங்காது மடியும் அவ்வாமையெனப் புலன்களால் சீரழிந்து, உடல் கெட்டு மடிகின்றேன். தெளிவற்றவனாகிய யான் இவ்வாறு மடிவதற்கென்றே இருப்பனோ ! யாது பற்றி இவ்வுடம்பினை அடைந்தேன் !

இது புலனால் நைந்தழியும் உடலின் தன்யையும் அதனை உணராத உயிரின் ஆற்றாமையையும் ஓதுதல் ஆயிற்று.

திருச்சிற்றம்பலம்

80. கோயில் (அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

770. பாளை யுடைக்கமுகு ஓங்கிப்
பன்மாட நெருங்கியெங்கும்
வாலை யுடைபுனல் வந்து ஏறி
வாழ்வயல் தில்லை தன்னுள்
ஆளவுடைக் கழற்சிற்
றம்பலரத்தரன் ஆடல் கண்டால்
பீளை யுடைக் கண்களாற் பின்னைப்
பேய்த் தொண்டர் காண்பதென்னே.

தெளிவுரை : பாக்கு மரங்களும், மாட மாளிகைகளும், வாளை குதித்து மகிழும் நீர் பாயும் வயல்களும் திகழும் தில்லையில் எழுந்தருளிச் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற திருநடனத்தைக் கண்ட தொண்டரின் கண்கள், பிறவற்றைக் காண்பதற்கு நாடுமோ ! காண்பதற்கு வேறு யாது உளது !

771. பொருளிடை பொன்றுடைப் புண்ணிய
மூர்த்தி புலியதளன்
உருவுடை யம்மலை மங்கை
மணாளன் உலகுக் கெல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லைச்சிற் றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு
மற்றினிற் காண்ப தென்னே.

தெளிவுரை : சிவபெருமான், இடப வாகனத்தையுடைய புண்ணிய மூர்த்தி; புலித்தோலை உடையவர்; அழகிய மலை மகளின் மணாளர்; எல்லா உலகங்களுக்கும் செல்வப் பேறாக விளங்கும் அந்தணர்கள் வாழ்கின்ற தில்லையில், சிற்றம்பலத்தில் விளங்குபவர். அப்பெருமானுடைய திருவடியைக் கண்டு மகிழ்ந்த கண் கொண்டு, வேறு ஒன்றினைக் காண்பதற்கு யாது உளது !

772. தொடுத்த மலரொடு தூபமும்
சாந்தும் கொண்டு எப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு
மாலுக்கும் காண் பரியான்
பொடிக்கொண்டு அணிந்து பொன்னாகிய
தில்லைச் சிற் றம்பலவன்
உடுத்த துகில்கொண்ட கண்கொண்டு
மற்றினிக் காண்பதென்னே.

தெளிவுரை : மலர் தொடுத்து மாலை சாற்றித் தூபம் காட்டிச் சந்தனம் முதலானவற்றைக் கொண்டு, எப்போதும் வணங்குகின்ற பிரமன்   திருமால் ஆகியோருக்கும் காண்பதற்கு அரியவனாகியவர் சிவபெருமான். அவர், திருவெண்ணீற்றை நன்கு அணிந்து, பொற்சபையாகிய தில்லைச் சிற்றம்பலத்தில் விளங்குபவர். அப்பெருமான் உடுத்திய துகிலைக் கண்டு மகிழ்ந்த கண் கொண்டு, வேறு ஒன்றைக் காண்பதற்கு யாது உள்ளது !

773. வைச்ச பொருள்நமக்கு ஆகும்என்று
எண்ணி நமச்சிவாய்
அச்சம் ஒழிந்தேன் அணிதில்லை
அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி
உந்தியின் மேலசைத்த
கச்சின் அழகுகண் டாற்பின்னைக்
கண்கொண்டு காண்பதென்னே.

தெளிவுரை : நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தாகிய ஒண்பொருளாவது பிற்காலத்திற்காகச் சேர்த்து வைக்கப் பெறும் பொருளாகும் என்று எண்ணித் தியானித்தேன். அச்சத்தை ஒழித்தேன். அத் திருவைந்தெழுத்துக்கு உரியவரான தில்லையம் பலத்தாடுகின்ற ஈசன், பித்தராகவும், பிறப்பில்லா தவராகவும் விளங்குபவர்; நந்தி என்னும் திருநாமத்தை உடையவர்; உந்தியின் மீது அழகிய கச்சு அணிந்தவர். அப்பரமனின் திருக்கோலத்தை கண்ட கண்கொண்டு பிறிது ஒன்றைக் காண்பதற்கு யாது உள்ளது ?

774. செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற
தில்லைச் சிற்றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள்
கண்டு மகிழ்ந்து நிற்க
நெய்ஞ்ஞின்று எரியும் விளக்கொத்த
நீல மணி மிடற்றின்
கைஞ்ஞின்ற ஆடல்கள்ண் டாற்பின்னைக்
கண்டுகொண்டு காண்பதென்னே.

தெளிவுரை : வயல்கள் நன்கு திகழ, விளங்கும் நீலோற்பவம் மலர்கின்ற தில்லையில் மேவும் சிற்றம்பலத்தில் திகழும் சிவபெருமான், மை விளங்கும் ஒளிமிகுந்த கண்ணுடைய உமாதேவி கண்டு மகிழுமாறு, நெய் கொண்டு எரியும் நெருப்பேந்தி , ஒளி திகழும் நீல கண்டத்தை உடையவராய்க் கையை உயர்த்தி ஆடலைப் புரிபவர். அதனைக் கண்டு மகிழ்ந்த பின்னர் வேறு ஒன்றைக் காண்பதற்கு யாது உள்ளது !

775. ஊனத்தை நீக்கி உலகறிய
என்னை யாட்கொண்டவன்
தேனொத்து எனக்குஇனி யான்தில்லைச்
சிற்றம் பலவன்எங்கோன்
வானத் தவர்உய்ய வன்நஞ்சை
உண்டகண் டத்துஇலங்கும்
ஏனத்து எயிறு கண்டாற்பின்னைக்
கண்கொண்டு காண்பதென்னே.

தெளிவுரை : ஈசன், என்னுடைய மலமாகிய ஊனத்தை நீக்கி, உலகெலாம் அறியுமாறு ஆட்கொண்டவர்; தேன் போன்று இனிமையானவர்; தில்லைச் சிற்றம்பலத்தில் மேவும் எம் தலைவர்; தேவர்கள் உய்யுமாறு கொடிய நஞ்சை உட்கொண்டு, கண்டத்தில் தேக்கி நீலகண்டராகியும், பன்றியின் கொம்பை அணிந்து மேவும் திருமார்பினராகியும், திகழும் அப்பெருமானுடைய திருக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்த கண்கள், வேறு ஒன்றைக் காண்பதற்கு யாது உள்ளது !

776. தெரித்த கணையால் திரிபுரம்
மூன்றும் செந்தீயில் மூழ்க
எரித்த இறைவன் இமையவர்
கோமான் இணையடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற
தில்லைச் சிற்றம்பலவன்
சிரித்த முகங்கண் கண்கொண்டு
மாற்றினிக் காண்பதென்னே.

தெளிவுரை : முப்புரங்களை எரித்துச் சாம்பலாகுமாறு செய்த இறைவன் தேவர்களின் தலைவர் ஆவார். அப் பெருமானுடைய திருவடியை நெஞ்சில் தரித்த நன்மனத்தனின் புன்முறுவல் கொண்ட திருமுகத்தைக் கண்டு தரிசித்த கண் கொண்டு, மற்றொன்றைக் காண்பதற்கு யாது உள்ளது !

777. சுற்றும் அமரர் சுரபதி
நின்திருப்பதா மல்லால்
பற்றொன்று இலோம்என்று அழைப்பப்
பரவையுள் நஞ்சையுண்டான்
செற்றங்கு அநங்கனைத் தீவிழித்தான்
தில்லை அம்பலவன்
நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு
மற்றினிக் காண்பது என்னே.

தெளிவுரை : தேவேந்திரனும், மற்றும் உள்ள தேவர்களும் சூழ்ந்து, ஈசனின் திருப்பாதம் அல்லாது வேறு பற்றுக் கோடு அறிகிலோம் என்று ஏத்தி நிற்க, பாற்கடலில் தோன்றிய நஞ்சினையுண்டு, நீலகண்டராகி நின்று அருள் புரிந்தவர், சிவபெருமான். அவர், மன்மதனை நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கி எரித்தவர். அப்öருமான், தில்லையில் திகழும் அம்பலக் கூத்தன் ஆவார். அவருடைய நெற்றியில் விளங்கும் கண்ணைக் கண்டு தரிசித்து மகிழ்ந்த பின்னர் வேறு ஒன்றைக் காணும் தன்மையில் யாது உள்ளது.

778. சித்தத்து எழுந்த செழுங்கமலத்
தன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற
தில்லைச்சிற் றம்பலவன்
முத்தும் வயிரமும் மாணிக்கந்
தன்னுள் விளங்கியதூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு
மாற்றினிக் காண்ப தென்னே.

றதெளிவுரை : இதயத் தாமரையில் திருவடியையும் பதித்த மனத்தினர் வாழ்கின்ற தில்லையில் மேவும் சிற்றம்பல நாதன்; முத்து, வயிரம், மாணிக்கம் ஆகியன திகழும் திருமுடியில், ஊமத்த மலர் கொண்டவர். அப்பெருமானுடைய திருக்கோல முடியின் அழகைக் கண்ட கண்கள், மற்றொன்றைக் காண்பதற்கு யாது  உளது !

779. தருக்கு மிகுத்துத்தன் தோள்வலி
உன்னித் தடவரையை
வரைக்கைக னால்எடுத்து ஆர்ப்ப
மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்தும்
அணிதில்லை அம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட
கண்கொண்டு காண்பதென்னே.

தெளிவுரை : ஆணவம் மிகுந்தவனாகித் தன் தோளின் வலிமை கொண்டு மலையைக் கைகளால் எடுத்து அர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமா ஊன்றியவர், உமாதேவியின் தலைவராகிய தில்லை அம்பலநாதன். அப்பெருமானுடைய திருப்பாத விரல் கண்டு, மகிழ்ந்த கண் கொண்டு, வேறு ஒன்றைக் காண்பதற்கு யாது உள்ளது.

திருச்சிற்றம்பலம்

81. கோயில் (அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

780. கருநட்ட கண்டனை அண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்யவல்
லானைச்செந் தீமுழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு
இறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்
கோனென்று வாழ்த்துவனே.

தெளிவுரை : சிவபெருமான், கருமை நிலவும் கண்டத்தை உடையவர்; அண்டங்களின் தலைவர்; கற்பகத் தருவைப் போன்று அடியவர்கள் உள்ளத்தில் மேவி, விரும்பியதைத் தருபவர்; போரை நிலை நாட்டிய அசுரர்களுடைய மூன்று மதில்களையும் எரித்துச் சாம்பலாக்கியவர்; கையில் எரியும் நெருப்பை ஏந்தித் திருநடனம் புரிபவர்; தில்லையில் விளங்கும் இறைவர்; சிற்றம்பலத்தில் பெருமை மிகும் திருநடனம் புரிபவர்; தேவர்களின் தலைவர். அப்பெருமானை யான் வாழ்த்தினேன்.

781. ஒன்றி யிருந்து நினைமின்கள்
உந்தமக்கு ஊனமில்லைக்
கன்றிய காலனைக் காலால்
கழந்தான் அடியவர்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட்
சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாய்என்னும் எம்பெரு
மான்றன் திருக்குறிப்பே.

தெளிவுரை : சிவபெருமானைச் சிந்தை ஒன்றி இருந்து நினைப்பீராக. அது, பிறவி நோய் என்னும் ஊனத்தை விலக்கும். அப் பெருமான், மார்க்கண்யேடருக்காகச் காலனை உதைத்தவர். அவர், திருநடம் புரியும் தில்லைச் சிற்றம்பலத்தை நாடிச் சென்று தொழுமின். உயரே எழுப்பிக் காட்டும் அருள் தன்மையுடைய அப்பரமனின் வலக்கரமானது, என்று வந்தாய் என்று நும்மை வினவி அருள் புருடயும் திருக்குறிப்பை உணர்த்துவதாகும்.

782. கன்மன வீர்சுழி யுங்கருத்
தேசொல்லிக் காண்பதென்னே
நன்மன வர்நவில் தில்லையுள்
சிற்றம் பலத்து நட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றது
போலப் பொலிநதிலங்கி
என்மன மேயொன்றிப் புக்கனல்
போந்த சுவடில்லையே

தெளிவுரை : கல் போன்ற வன்மையுடைய நெஞ்சினை உடையீர் ! பயனற்ற சொற்களைப் பேசிக் காணும் பயன்தான் என்ன ? நல்ல மனத்தையுடையவர்கள் போற்றும் தில்லைச் சிற்றம்பலத்தில், கனகசபையில் திருவெண்ணீறு பூசிய திருமேனியராகிப் பொலிந்து விளங்கிய ஈசன் என் மனத்துள் ஒன்றிப் புகுந்தனர். அப்பெருமான் புகுந்த சுவடுதான் தெரியவில்லை.

783. குனித்த புருவமும் கொல்வைச் செவ்
வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல்
மேனியில் பால்வெண் ணீறும்
இனித்தம் உடைய எடுத்தபொற்
பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ
தேஇந்த மாநிலத்தே.

தெளிவுரை : வளைந்த புருவம், கோவைப் பழம் போன்ற சிவந்த வாய், இனிய புன்னகை, குளிர்ந்த சடை, பவளம் போன்ற செம்மேனி, திருமேனியில் திகழும் பால் போன்ற திருவெண்ணீறு, உயிர்க்கு இனிமை சேர்க்கும் தூக்கிய திருவடி ஆகிய இவற்றைக் கொண்டு புரியும் ஈசனின் திருநடனக் காட்சியைக் காணப் பெற்றால், இவ்வுலகத்தில் மனிதப் பிறவி யானது தேவையுடைய ஒன்றே. இத்திருக்கோலக் காட்சியைக் கண்டு தரிசித்த செம்மையானது பிறவியின் பயனாயிற்று.

784. வாய்த்தது நந்தமக்கு ஈதுஓர்
பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசு பதமருள்
செய்தவன் பத்தருள்வீர்
கோத்தன்று முப்புரம் தீவளைத்
தான் தில்லை அம்பலத்துக்
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பதன்
றோ நந்தம் குழைமையே.

தெளிவுரை : இப்பிறவியானது, நமக்கு வாய்த்த நற்பேறு என மதித்துப் பெருமை கொள்வீராக. பக்திப் பெருந்தகையீர் ! பார்த்தனுக்குப் பாசுபதத்தை அருளிச் செய்த சிவபெருமான், முப்புரங்களை நெருப்பால் எரித்துச் சாம்பலாக்கியவர். அவர் தில்லை அம்பலக் கூத்தன். அப்பெருமானுக்கு அடிமை பூண்டு அன்புடையவனாக இருப்பதல்லவா நமக்குக் குழைந்து மேவும் பக்திமையாகும் !

785. பூத்தன பொற்சடை பொன்போல்
மிளிரப் புரிகணங்கள்
ஆர்த்தன கொட்டி அரித்தன
பல்குறட் பூதகணம்
தேத்தென என்றுஇசை வண்டுகள்
பாடுசிற் றம்பலத்துக்
கூத்தனிற் கூத்துவல் லாருளரோ
என்றன் கோல்வளைக்கே

தெளிவுரை : அழகிய சடையானது, பொன் போன்று பூத்து மிளிரப் பக்த கணங்கள் ஆர்த்து எழ, முழவு முதலான வாத்தியங்களைக் குறள் வடிவப் பூதகணங்கள் முழங்கத் தேத்தென என வண்டுகள் இசைபாடச் சிற்றம்பலத்தில் ஆடும் கூத்தப் பெருமானுடைய திருநடனத்தைவிட வலிமை உடையது வேறு உண்டோ !

786. முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்
நோக்கு முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித்
தோலும்என் பாவ நெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை அம்பலக்
கூத்தன் குரைகழலே.

தெளிவுரை : திருமுடியில் ஊமத்த மலரும், முக்கண்ணின் நோக்கும், முறுவலிக்கும் திருநகையும், திருக்கரத்தில் உடுக்கையும், குழையப் பூசிய திருவெண்ணீறும், உமாதேவியைப் பாகமாக கொண்டு திகழும் திருவடிவமும், புலித் தோலாடையும் கொண்டு விளங்கும் சிவபெருமான், என்னுடைய நெஞ்சில் குடிகொண்ட பெருமைதான் என்னே ! தில்லை அம்பலக் கூத்தனின் திருக்கழலின் பெருமை தான் என்னே !

787. படைக்கல மாகஉன் நாமத்து
எழுத்துஅஞ்சு என் நாவிற் கொண்டேன்
இடைக்கலம் அல்லேன் எழுபிறப்
பும்உனக்கு ஆட்செய்கின்றேன்
வணங்கித் தூநீறு அணிந்துள்
அடைக்கலம் கண்டாய் அணிதில்லைச்
சிற்றம் பலத்து அரனே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீருடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைப் படைக்கலமாகக் கொண்டு, என் நாவால் உச்சரிப்பவனானேன்; எழுகின்ற பிறப்புகள் தோறும் தேவரீருக்கே அடிமை பூண்டு ஆட் செய்கின்றேன்; என்னை ஒதுக்கித் தள்ளினும் பிரிந்து போக மாட்டேன். தில்லைச் சிற்றம்பலத்தில் அணிந்து தேவரீருக்கு அடிமை பூண்டு தொழுது வணங்கி, அடைக்கலம் ஆனேன்.

788. பொன்னொத்த மேனிமேல் வெண்ணீறு
அணிந்து புரிசடைகள்
மின்னொத்து இலங்கப் பலிதேர்ந்து
உழலும் விடங்கர்வேடச்
சின்னத்தி னால்மலி தில்லையுள்
சிற்றம்பலத்து நட்டம்
என்அத்தன் ஆடல்கண்டு இன்புற்ற
தால்இவ் இருநிலமே.

தெளிவுரை : ஈசன், பொன் போன்ற அழகிய திருமேனியில் வெண்ணீறு அணிந்து, சடைமுடிகள் மின்போன்று ஒளிர்ந்து விளங்கப் பலி தேர்ந்து உழலும் விடங்கர்; திருநீறு உருத்திராக்கம் அணியப் பெற்ற சிவ சின்னத்தினால் பொலியும் தில்லையுள், சிற்றம்பலத்துள் நடனம் புரிபவர். என் அத்தனாகிய அப்பெருமான் புரியும் ஆனந்தத் திருநடனத்தால், இவ்வுலகமானது இன்புற்றதே.

789. சாட எடுத்தது தக்கன்றன்
வேற்வியிற் சந்திரனை
வீட எடுத்தது காலனை
நாரண நான்முகனும்
தேட எடுத்தது தில்லையும்
சிற்றம் பலத்து நட்டம்
ஆட எடுத்திட்ட பாதமன்
றோ நம்மை ஆட்கொண்டதே.

தெளிவுரை : ஈசனுடைய திருப்பாதமானது, தக்கள் செய்த வேள்வியில் பங்கேற்ற சந்திரனைத் தேய்ப்பதற்காகத் தூக்கி எடுக்கப்பட்டது. அத்திருப்பாதம் காலனை உதைப்பதற்கும், நாரணனும் பிரமனும் தேடும் தன்மையிலும் எடுக்கப் பெற்றது; அத்திருப்பாதம் தில்லைச் சிற்றம்பலத்தில் நடனம் புரிய எடுக்கப்பட்டது; அது அன்றோ நம்மை ஆட்கொண்டது.

திருச்சிற்றம்பலம்

82. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

790. பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட
ஞான்றுநின் பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளினம் ஏந்தின
என்பர் நளிர்மதியம்
கால்கொண்ட வண்கைச் சடைவிரித்து
ஆடும் கழுமலவர்க்கு
ஆளன்றி மற்றும் உண்டோ அந்தண் ஆழி அகலிடமே.
ஆழி அகலிடமே.

தெளிவுரை : உலகில், வெள்ளம் பரவிப் பிரளய காலம் கண்ட போதும் பறவை இனங்கள் ஏத்திக் காக்கும் பெருமையுடையது கழுமலம். அத்தலத்தில் வீற்றிருந்து, சடை விரித்து ஆடும் ஈசனுக்கு ஆளாக இருப்பதன்றி, வேறு புகலிடம் இப்பூவுலகில் உள்ளதோ !

791. கடையார் கொடிநெடு மாடங்கள்
எங்கும் கலந்திலங்க
உடையான் உடைதலை மாலையும்
சூடி உகந்தருளி
விடைதான் உடையஅவ் வேதியன்
வாழும் கழுமலத்துள்
அடைவார் வினைகள் அவைஎள்க
நாடொறும் ஆடுவரே.

தெளிவுரை : வாயில்கள் விளங்கும் நெடு மாடங்களில் கொடிகள் திகழ விளங்கத் தலைமாலை (மண்டை ஓட்டு மாலை) சூடி மகிழ்ந்து, இடப வாகனத்தினை உடைய சிவபெருமான் வீற்றிருக்கும் கழுமல நகரினை அடைபவர்களுக்கு, வினையானது பற்றாது விலகிச் செல்லும்.

792. திரைவாய்ப் பெருங்கடல் முத்தம்
குவிப்ப முகந்துகொண்டு
நுரைவாய் நுளைச்சியர் ஓடிக்
கழுமலத்துள் ளழுந்து
விரைவாய் நறுமலர் சூடிய
விண்ணவன் றன்னடிக்கே
வரையாப் பரிசிவை நாள்தொறும்
நந்தமை யாள்வனவே.

தெளிவுரை : கடலலையின் வாயிலாகக் கடலானது முத்துக்களைக் குவிக்க, நெய்தல் நில மகளிர் விரைவில் அவற்றைக் கொண்டு இம் முத்துக்கள் யாவும் கழுமலத்துள் மேவும் விண்ணோர் பெருமானாகிய ஈசனுக்கு உரிய பரிசு இதுவே என நாள்தோறும் ஏத்தும் தன்மையுடையதாகும்.

793. விரிக்கும் அரும்பதம் வேதங்கள்
ஓதும் விழுமிய நூல்
உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர்
கேட்கில் உலக முற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள்
பாடக் கழுமலவன்
நிருத்தம் பழம்படி யாடும்
கழல்நம்மை ஆள்வனவே.

தெளிவுரை : வேதங்கள் ஓதும் திருப்பாதம் கழுமலத்தில் மேவும் ஈசனின் திருவடியாகும். அவ்வேதமானது, ஓதும் விழுமயி நூலாகவும், உரைக்கும் பொருளாகவும் திகழும். உலகெல்லாம் ஒலிக்கும் பறைகொண்டு பூதகணங்கள் பாட நடனம் புரியும் அப் பரமனின் திருக்கழலே, நம்மை ஆளும் தகைமைத்து.

794. சிந்தித்து எழுமனமே நினை
யா முன் கழுமலத்தைப்
பந்தித்த வல்வினை தீர்க்கவல்
லானைப் பசுபதியைச்
சந்தித்த கால மறுத்தும்என்று
எண்ணி இருந்தவர்க்கு
முந்தித் தொழுகழல் நாள்தொறும்
நந்தமை ஆள்வனவே.

தெளிவுரை : மனமே ! திருக்கழுமலத்தைச் சிந்தித்து எழுவாயாக. பந்தம் கொண்டு நின்னைப் பற்றிக் கொண்டிருக்கும் கொடிய கழிந்த காலங்களில் நேர்ந்த வினைகளை தீர்த்தருளும் உயிர்த் தலைவர், அக்கழுமலத்தில் விளங்கும் ஈசன். வாழ் நாளில்  சென்று கழிந்த காலங்களில் நேர்ந்த வினைகளை அறுத்து நீக்குவது எவ்வாறு கூடும் என்று எண்ணி இருந்தவர்களுக்கு, அப் பரமனுடைய திருவடியானது, நாள்தோறும் ஆட்கொண்டு அருள் புரியும் தன்மையதே.

795. நிலையும் பெருமையும் நீதியும்
சால அழகுடைத்தாய்
அலையும் பெருவெள்ளத்து அன்று
மிதந்தஇத் தோணிபுரம்
சிலையில் திரிபுரம் மூன்று
எரித் தார்தம் கழுமலவர்
அலரும் கழலடி நாள்தொறும்
நந்தமை ஆள்வனவே.

தெளிவுரை : மகாப் பிரளய காலத்திலும் அழியாது மிதந்து நிலைத்தும், பெருமையுடனும் நியமம் வழுவாதும் அழகுடனும் விளங்கும் சிறப்புடையது, தோணிபுரம். ஆங்கு, மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்த இறைவனாகிய கழுமல நகர் வீற்றிருக்க, அப்பெருமானுடைய மலர் போன்ற திருவடியானது, நாள்தோறும் நம்மை ஆட்கொண்டு அருள் புரிவனவே.

796. முற்றிக் கிடந்துமுந் நீரின்
மிதந்துடன் மொய்த்தமரர்
சுற்றிக் கிடந்துதொழப் படு
கின்றது சூழரவம்
தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந்
துன்றிவெண் திங்கள்
கற்றைச் சடைமுடி யார்க்கிடம்
ஆய கழுமலமே.

தெளிவுரை : மிகத் தொன்மையாகி முதிர்ந்ததும், கடலில் மிதந்து விளங்கியும், தேவர்களால் சூழ்ந்து தொழப்படுவதும் உடையது, கழுமலம். ஒளிமிக்க கொன்றை மலரும், வெண்மையான சந்திரனும் இணைந்து, கற்றையாக மேவும் சடை முடியுடன் திகழ விளங்கும் ஈசனுக்கு இடமாவது அக்கழுமலமே.

797. உடலும் உயிரும் ஒருவழிச்
செல்லும் உலகத்துள்ளே
அடையும் உனைவந்து அடைந்தார்
அமரர் அடியிணைக் கீழ்
நடையும் விழவொடு நாள்தொறும்
மல்கும் கழுமலத்துள்
விடையன் தனிப்பதம் நாள்தொறும்
நம்மை ஆள்வனவே.

தெளிவுரை : ஈசனே ! புலன்கள் தாக்குதலால் மோதுறும் உடன் ஒரு வழியும், உயிர் ஒரு வழியும் ஆகிய தன்மையில் மாறுபட்டு இயங்கும் இவ்வுலகத்தில், தேவரீரைத் தரிசிக்கும் தன்மையில் தேவர்கள் எல்லாரும் கூடி நாள்தோறும் விழா மல்கும் இடப வாகனத்தில் வீற்றிருக்குமுஞூ தேவரீரின் திருப்பாதம் நாள்தோறும் ஏத்தும் எம்மை ஆட்கொள்ளும் செம்மையானதே.

798. பரவைக் கடல்நஞ்சம் உண்டதும்
இல்லைஇப் பார்முழுதும்
நிரவிக் கிடந்து தொழப்படு
கின்றது நீண்டிருவர்
சிரமப் படவந்து சார்ந்தார்
தழலடி காண்பதற்கே
அரவக் கழலடி நாள்தொறும்
நந்தமை ஆள்வனவே.

தெளிவுரை : பரந்து விளங்குகின்ற பாற்கடலில் தோன்றி நஞ்சினை உட்கொண்டபோது திருமேனியில் கலவாது, ஈசனின் திருக்கண்டமானது தன்னிடையே நிறுத்திக் கொண்டு, நீலகண்டம் என்று மிளிர்ந்தது. திருமால், பிரமன் ஆகிய இருவரும், அத்தகைய பெருமானைக் காண்பதற்குத் திரிய, அவருடைய திருக்கழல் நாள்தொறும் நம்மை ஆட்கொள்கின்றன.

799. கரையார் கடல்சூழ் இலங்கையர்
கோன்றன் முடிசிதறத்
தொலையா மலரடி ஊன்றலும்
உள்ளம் விதிர் விதிர்த்துத்
தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன்
கழுமலம் காண்பதற்கே
அலையாப் பரிசிவை நாள்தொறும்
நந்தமை ஆள்வனவே.

தெளிவுரை : இராவணனுடைய முடி பத்தும் சிதறுமாறு, தனது திருப்பாத மலரால் ஊன்றித் தலைவனாய் உயர்ந்த ஈசன் வீற்றிருக்கும் திருக்கழுமலத்தைக் காண்பதற்குப் பெரும் பரிசாகிய  பேறு வாய்க்கப் பெற்றது. அது, நாள்தொறும் நம்மை ஆட்கொள்ளும் தன்மைத்தே.

திருச்சிற்றம்பலம்

83. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

800. படையார் மழுவொன்று பற்றிய
கையன் பதிவினவில்
கடையார் கொடிநெடு மாடங்கள்
ஓங்கும் கழுமலமாம்
மடைவாய்க் குருகினம் பாளை
விரிதொறும் வண்டினங்கள்
பெடைவாய் மதுவுண்டு பேரா
திருக்கும் பெரும்பதியே.

தெளிவுரை : கையில் மழுப்படை ஏந்தியுள்ள ஈசனுடைய பதியானது, யாது என வினவில், அது, நீண்ட வாயில்களில் கொடிகள் திகழ, மாட மாளிகைகள் பெருகும் கழுமலம்  என்னும் நகரம் ஆகும். அப்பெரும்பதியானது, மடைகளில் திகழும் குருகுகளுடன், வண்டினங்கள் பெடையுடன் மதுவுண்டு மகிழ்ந்திருக்கும் இயல்புடையது.

திருச்சிற்றம்பலம்

84. பொது

திருச்சிற்றம்பலம்

801. எட்டாம் திசைக்கும் இரு திசைக்
கும்இறை வா முறையென்று
இட்டார் அமரர்வெம் பூசல்
எனக் கேட்டு எரிவிழியா
ஒட்டாக் கயவர் திரிபுர
மூன்றையும் ஓரம்பினால்
அட்டான் அடிநிழல் கீழ்அதன்
றோ என்றன் ஆருயிரே.

தெளிவுரை : ஈசனே ! எட்டுத் திசைகளாகிய தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் இரு திசைகளாகிய மேல் நோக்காகிய ஆகாயம், கீழ் நோக்காகிய பாதாளம் ஆகியவற்றின் இறைவரே ! தேவர்கள் அஞ்சிக் கலங்கி முறையிட, முப்புர அசுரர்களையும் அவர்களுடைய கோட்டைகளையும் ஓரம்பினால் எரித்த ஈசனே ! என் ஆரூயிரானது தேவரீருடைய திருவடிகீழ் உள்ளதே அன்றோ.

802. பேழ்வாய் அரவின் அரைக்கமர்ந்து
ஏறிப் பிறந்திலங்கு
தேய்வாய் இளம்பிறை செஞ்சடை
மேல்வைத்த தேவர்பிரான்
மூவான் இளகான் முழுஉல
கோடு மண் விண்ணு மற்றும்
ஆவான் அடிநிழற் கீழதன்
றோ என்றன் ஆருயிரே.

தெளிவுரை : அரவத்தை அரையில் கட்டிய ஈசன், இளைய பிறைச் சந்திரனைச் சிவந்த சடையின் மீது விளங்குமாறு சூடிய தேவர்பிரான் ஆவார். அப் பெருமான், மூப்பில்லாதவர்; மெலிவும் இல்லாதவர்; அவர், உலகமாகவும், மண்ணலகும் விண்ணுலகும் ஆகியவர். அவருடைய திருவடியின் நிழற்கீழ் அன்றோ என் ஆருயிர் திகழ்கின்றது.

803. தரியா வெகுளிய னாய்த் தக்கன்
வேள்வி தக்ர்த்துகந்த
எரியார் இலங்கிய சூலத்தி
னான்இமை யாதமுக்கட்
பெரியான் பெரியார் பிறப்பறுப்
பான் என்றும் தன் பிறப்பை
அரியான் அடிநிழற் கீழதன்
றோ என்றன் ஆருயிரே.

தெளிவுரை : பெருஞ் சினம் கொண்டவனாகிய தக்கனின் வேள்வியைத் தகர்த்து உகந்த ஈசன், எரி உமிழும் சூலப்படையுடையவர்; முக்கண்ணுடைய பெருந்தகையாளர்; வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பெரியவர்களின் பிறப்பினை அறுப்பவர்; தான் பிறப்பில்லாதவர். அப் பெருமானுடைய திருவடி நிழலின் கீழ் அன்றோ எனது ஆரூயிர் உள்ளது.

804. வடிவடை வாள்நெடுங் கண்ணுமை
யாளையொர் பால்மகிழ்ந்து
வெடிகொள் அரவொடு வேங்கை
அதள்கொண்டு மேல்மருவிப்
பொடிகொள் அகலத்துப் பொன்பிதிர்ந்
தன்னபைங் கொன்றையந்தார்
அடிகள் அடிநிழற் கீழதன்
றோஎன்றன் ஆருயிரே.

தெளிவுரை : அழகுடைய நெடிய கண்ணுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ந்து ஏற்று, அம்மை அப்பரமாக மேவும் சிவபெருமான், அரவத்தை அணிகலனாகக் கொண்டவர்; புலித்தோலை உடையாகக் கொண்டு விளங்குபவர்; திருநீற்றினைத் திருமார்பில் தரித்தவர்; பொன் விரிந்து போன்ற கொன்றை மலரை மாலையாக அணிந்தவர். அவருடைய திருவடி நிழலின்கீழ் அல்லவா என்னுடைய ஆரூயிர் உள்ளது.

805. பொறுத்தான் அமரர்க்கு அமுதருளி
நஞ்சம் உண்டுகண்டம்
கறுத்தான் கறுப்பழ காஉடை
யான் கங்கை செஞ்சடைமேல்
செறுத்தான் தனஞ்சயன் சேணார்
அகலம் கணையொன்றினால்
அறுத்தான் அடிநிழற் கீழதன்
றோ என்றன் ஆருயிரே.

தெளிவுரை : சிவபெருமான், கடலில் தோன்றிய நஞ்சினைத் தனது கண்டத்தில் தங்குமாறு செய்து உண்டு, அத்தகைய கண்டத்தைக் கறுப்பழகாய் மிளிறுமாறு செய்தவர். அவர், கங்கையைச் செஞ்சடையின் மீது பொருந்தி இருக்குமாறு புரிந்தவர்; அருச்சுனனர் மீது அம்பு தொடுத்தவர். அப்பெருமானுடைய திருவடி நிழற் கீழ் அன்றோ, என்னுடைய ஆருயிர் திகழ்கின்றது.

806. காய்ந்தான் செறற்குஅரி யான்என்று
காலனைக் காலொன்றினால்
பாய்ந்தான் பணைமதில் மூன்றும்
கணையென்னும் ஒள்ளழலால்
மேய்ந்தான் வியனுலகு ஏழும்
விளங்க விழுமிய நூல்
ஆய்ந்தான் அடிநிழற் கீழதன்
றோ என்றன் ஆருயிரே.

தெளிவுரை : எவராலும் பேரிட்டு வெல்வதற்கு அரியவனாகிய காலனைத் திருப்பாதம் ஒன்றினால் உதைத்து வீழ்த்திய சிவபெருமான், முப்புர அசுரர்களுடைய கோட்டைகளை ஓர் அம்பினால் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். ஏழு உலகங்களையும் காத்தருளும் அப் பெருமான், விழுமிய நூலாகிய வேத ஆகமங்களை விரித்து ஓதியவர். அவருடைய திருவடியின் கீழன்றோ என்னுடைய ஆருயிர் விளங்குகின்றது.

807. உளைந்தான் செறுதற்கு அரியான்
தலையை உகிரதனால்
களைந்தான் அதனை நிறைய
நெடுமால் கணார்குருதி
வளைந்தான் ஒருவிர லின்னொடு
வீழ்வித்துச் சாம்பர் வெண்ணீறு
அளைந்தான் அடிநிழற் கீழதன்
றோ என்றன் ஆருயிரே.

தெளிவுரை : ஈசன், பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றைத் தன் நகத்தினால் கொய்து அதனைக் கபாலமாக ஏந்திப் பலி கொண்டவர்; திருமால் தனது ஒரு கண்ணினைக் குருதி சோர இடந்து பூசிக்க மகிழ்ந்து ஏற்றவர்; திருவெண்ணீற்றை நிறையப் பூசுபவர். அப் பெருமானுடைய திருவடி நிழற்கீழ் அன்றோ எனது ஆரூயிர் திகழ்கின்றது.

808.முந்திவட் டத்திடைப் பட்டதெல்
லாமுடிவேந்தர் தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டு அலைப்
புண்பதற்கு அஞ்சிக்கொல்லோ
நந்திவட் டம்நறு மாமலர்க்
கொன்றையும் நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யான்அடிச்
சேர்ந்தது என் ஆருயிரே.

தெளிவுரை : முற்காலத்தில் (இளமையில்) மன்னர்களின் படை பலத்திற்கும ஆணைக்கும் அஞ்சி, அலைப் புண்டு இருந்தனன். ஆனால் இன்று, அட்ட மலர்களில் ஒன்றாகிய நந்தியாவட்டம், பிரணவபுட்பமாகிய கொன்றை மலர் ஆகியவற்றினைத் திருமுடியில் சூடிய செஞ்சடை நாதருடைய திருவடியின்கீழ் என்னுடைய ஆருயிரானது சேர்ந்து பதிந்து விளங்குகின்றது.

809. மிகத்தான் பெரியதொர் வேங்கை
யதள்கொண்டு மெய்ம் மருவி
அகத்தான் வெருவநல் லாளை
நடுக்குறுப் பான்வரும் பொன்
முகத்தாற் குளிர்ந்திருந்து உள்ளத்தி
னாலுகப் பான்இசைந்த
அகத்தான் அடிநிழற் கீழதன்
றோ என்றன் ஆருயிரே.

தெளிவுரை : ஈசன், புலியின் தோலை உடுத்தி உமாதேவியின் உள்ளத்தில் அச்சம் கொள்ளுமாறு செய்பவர்; அழகிய திருமுகத்தில் பொலிவும், உள்ளத்தில் உவகையும் கொண்டு விளங்குபவர்; அப் பெருமானுடைய திருவடி நிழலின்கீழ் அன்றோர் என்னுடைய ஆருயிர் பொருந்தி விளங்குகின்றது.

810. பைம்மாண் அரவல்குற் பங்கயச்
சீறடி யாள் வெருவக்
கைம்மா வரிசிலைக் காமனை
அட்ட கடவுள் முக்கண்
எம்மான் இவனென்று இருவரும்
ஏத்த எரிநிமிர்ந்த
அம்மான் அடிநிழற் கீழதன்
றோ என்றன் ஆருயிரே.

தெளிவுரை : பாம்பின் படம் போன்ற அல்குலும் தாமரை போன்ற மென்மையான சிற்றடியும் உடைய உமாதேவி அஞ்சுமாறு, யானையின் தோலை உரித்தர், சிவபெருமான். அவர், மன்மதனை எரித்தவர்; திருமாலும் பிரமனும் ஏத்திப் போற்றப் பெருஞ் சோதி வடிவாகியவர். அவருடைய திருவடி நிழலின்கீழ் அன்றோ என்னுடைய ஆருயிரானது விளங்குகின்றது.

811. பழகவொர் ஊர்தியரன் பைங்கண்
பாரிடம் பாணிசெய்யக்
குழலும் முழவொடு மாநட
மாடி உயர்இலங்கைக்
கிழவன் இருபது தோளும்
ஒருவிர லால்இறுத்த
அழகன் அடிநிழல் கீழதன்
றோ என்றன் ஆருயிரே.

தெளிவுரை : இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமான், பூதகணங்கள் தாளம் இடவும், குழலும் முழவும் இயம்பவும், சிறப்பான நடனம் புரிந்தவர். அவர் இலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய இருபது தோளும், திருப்பாதத்தின் ஒரு விரல் கொண்டு அடர்த்து, நலியுமாறு செய்த அழகர். அப் பெருமானுடைய திருவடி நிழலின்கீழ் அன்றோ என்னுடைய ஆருயிர் விளங்குகின்றது.

திருச்சிற்றம்பலம்

85. திருச்சோற்றுத்துறை (அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

812. காலை எழுந்து கடிமலர்
தூயன தாம் கொணர்ந்து
மேலை அமரர் விரும்பும்
இடம்விரை யான்மலிந்த
சோலை மணங்கமழ் சோற்றுத்
துறையுறை வார் சடைமேல்
மாலை மதியும் அன்றோஎம்
பிரானுக்கு அழகியதே.

தெளிவுரை : தேவர்கள் காலை எழுந்து, தூய நறுமண மலர்களைக் கொணர்ந்து, விரும்பி ஏத்த, மணம் கமழும் சோலை விளங்குகின்ற இடமாவது, சோற்றுத் துறையாகும். ஆங்கு வீற்றிருக்கும் எம்பெருமானுக்கு, நீண்ட சடை முடியின் மீது விளங்குகின்ற சந்திரன் அன்றோ அழகுடையது.

813. வண்டணை கொன்றையும் வன்னியும்
மத்தமும் வாளரவும்
கொண்டணைந் தேறு முடியுடை
யான்குரை சேர்கழற்கே
தொண்டணைந் தாடிய சோற்றுத்
துறையுறை வார்சடைமேல்
வெண்டலை மாலையன் றோஎம்
பிரானுக்கு அழகியதே.

தெளிவுரை : வண்டுகள் சுழன்று ஒலிக்க மணம் கமழும் கொன்றை மலர், வன்னிப் பத்திரம், ஊமத்தம் மலர் ஆகியவற்றுடன் ஒளி மிக்க அரவத்தைக் கொண்டு விளங்கும் முடியுடையவர், சிவபெருமான். அப் பெருமான், தொண்டர்கள் பூசிக்க, விளங்கும் சோற்றுத் துறையில் வீற்றிருப்பவர். அவருக்கு வெண்மையான தலை மாலை அல்லவா அழகுடையது !

814. அளக்கு நெறியினன் அன்பர்கள்
தம்மனத்து ஆய்ந்துகொள்வான்
விளக்கும் அடியவர் மேல்வினை
தீர்த்திடும் விண்ணவர்கோன்
துளக்கும் குழையணி சோற்றுத்
துறையுறை வார்சடை மேல்
திளைக்கும் மதியமன் றோஎம்
பிரானுக்கு அழகிய தே.

தெளிவுரை : ஈசன், உலகத்தவர்க்குப் படியளப்பவர்; அன்பர்களின் உள்ளத்தை நன்கு அறிபவர்; பக்தியால் பாடிப் போற்றும் அடியவர்களின் மீது உள்ள வினைகளைத் தீர்த்தருளும் தேவதேவர். அவர், அசைகின்ற குழையைக் காதில் அணிந்து சோற்றுத் துறையில் உறைபவர். அப் பெருமானுடைய சடை முடியின் மீது திளைத்து மேவும் சந்திரன் அல்லவா அவருக்கு அழகினைத் தரவல்லது !

815. ஆய்ந்தகை வாளர வத்தொடு
மால்விடை யேறியெங்கும்
பேர்ந்தகை மானிடம் ஆடுவர்
பின்னு சடையிடையே
சேர்தகைம் மாமலர் துன்னிய
சோற்றுத் துறையுறைவார்
ஏந்துகைச் சூல மழுயும்
பிரானுக்கு அழகியதே.

தெளிவுரை : ஈசன், கையில் அரவத்தைக் கொண்டும், இடப வாகனத்தில் ஏறியும், மானை இடக் கரத்தில் ஏந்தியும் நடனம் புரிபவர். அவர், சிறப்புடைய மலர்கள் சடை முடியில் பின்னிச் சூடியவராய்ச் சோற்றுத் துறையில் உறைபவர். அத்தகைய எம்பிரானாகிய அவருக்குக் கையில் ஏந்திய சூலமும் மழுவும் அழகுடையதாகும்.

816. கூற்றைக் கடந்ததும் கோளரவு
ஆர்த்ததும் கோளுழுவை
நீற்றில் துதைந்து திரியும்
பரிசதும் நாமறியோம்
ஆற்றிற் கிடந்துஅங்கு அலைப்ப
அலைப்புண்டு அசைந்த தொக்கும்
சோற்றுத் துறையுறை வார்சடை
மேலதொர் தூமதியே.

தெளிவுரை : ஈசன், கூற்றுவனை உதைத்து அழித்தவர்; நாகத்தைக் கங்கணமாகக் கட்டியும் ஆபரணமாகக் கொண்டு உள்ளவர்; புலித்தோலை உடுத்தியவர்; திருநீற்றினைத் திருமேனியில் பூசிக் கையில் கபாலம் ஏந்திப் பலி ஏற்றவர். ஆயினும் அச்சிறப்புக்களை நாம் நேரில் கண்டதில்லை. அப் பெருமான். சோற்றுத் துறையில் வீற்றிருந்து கங்கையைச் சடை முடியில் தரித்து மேவ, அதனுடன் விளங்கும் சந்திரன், கங்கை நீரின் அலைகளால் அசைந்து மேவும் சிறப்பைக் கொண்டு திகழ்கிறது.

817. வல்லாடி நின்று வலிபேசு
வார்கோளர் வல்லசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும்
வானவர் வந்திறைஞ்சச்
செல்லாடி நின்று பயில்கின்ற
சோற்றுத் துறை யுறைவார்
வில்லாடி நின்ற நிலைஎம்
பிரானுக்கு அழகியதே.

தெளிவுரை : வலிமை மிக்கவராகியும் வன்மை பேசியும், தீமைகள் புரிந்தும், கொன்றும், கொடுமை புரியும் அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தி அழித்தாலும் அத்தேவர்கள், பக்தியுடன் ஏத்திப் போற்றிச் சோற்றுத் துறையில் வீற்றிருக்கும் ஈசனைப் பணிபவராயினர். எம் தலைவராகிய அப்பெருமானுக்கு, வில்லேந்தி மேவும் திருவடிவமானது, அழகியதாக மிளிர்கின்றது.

818. ஆயம் உடையது நாமறி
யோம்அர ணத்தவரைக்
காயக் கணைசிலை வாங்கியும்
எய்தும் துயக்கறுத்தான்
தூயவெண் ணீற்றினன் சோற்றுத்
துறையுறை வார்சடைமேல்
பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கைஎம்
மானுக்கு அழகியதே.

தெளிவுரை : ஈசன், மேவும் படைகளின் சிறப்பினை யாம் அறிவோம். முப்புர அசுரர்கள் அழியுமாறு வில்லேந்திக் கணை தொடுத்துத் தேவர்களின் துயர்களைத் தீர்த்தருளிய பரமன், தூய திருவெண்ணீறு அணிந்தவராய்ச் சோற்றுத் துறையில் உறைபவர். எம்பெருமானுக்கு, நீண் சடை முடியின் மீது பாய்ந்து செல்லும் அலையுடைய கங்கையானது அழகுடையது ஆகும்.

819. அண்டர் அமரர் கடைந்தெழுந்து
ஓடிய நஞ்சதனை
உண்டும் அதனை ஒடுக்கவல்
லான்மிக்க உம்பர்கள் கோன்
தொண்டு பயில்கின்ற சோற்றுத்
துறையுறை வார்சடைமேல்
இண்டை மதியமன் றோஎம்
பிரானுக்கு அழகியதே.

தெளிவுரை : அசுரர்களும், தேவர்களும் கடைந்தபோது எழுந்த நஞ்சை உட்கொண்டு கண்டத்தில் ஒடுக்க வல்லவர், தேவர்களின் தலைவராகித் திருத்தொண்டர்கள் பரவி ஏத்தும் சோற்றுத் துறையில் வீற்றிருக்கும் ஈசன் ஆவார். நீண்ட சடை முடியின்மீது விளங்கும் இண்டைசேர் சந்திரன் அன்றோ எம்பிரானாகிய இறைவனுக்கு அழகுடையது !

820. கடல்மணி வண்ணன் கருதிய
நான்முகன் தானறியா
விடமணி கண்டம் உடையவன்
தான்எனை ஆளுடையான்
சுடரணிந்து ஆடிய சோற்றுத்
துறையுறை வார்சடைமேல்
படமணி நாகமன் றோஎம்
பிரானுக்கு அழகியதே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் அறியாதவராகி விளங்கிய நீலகண்டர், என்னை ஆளுடைய ஈசன். அவர், சூரிய பகவான் பூசித்து வழிபட்ட சோற்றுத் துறையுறையும் எம்பெருமான். அவருக்குச் சடை முடியின் மீது விளங்கும் படம் கொண்ட நாகம் அன்றோ அழகுடையது !

821. இலங்கைக்கு இறைவன் இருபது
தோளும் முடிநெரியக்
கலங்க விரலினால் ஊன்றி
அவனைக் கருத்தழித்த
துலங்கல் மழுவினன் சோற்றுத்
துறையுறை வார் சடைமேல்
இலங்கு மதியம்அன் றோஎம்
பிரானுக்கு அழகியதே.

தெளிவுரை : இராவணனுடைய இருபது தோளும் முடியும் நெரியுமாறு, விரலினால் ஊன்றி, அவ்வரக்கனின் கருத்தினை அழித்தவர், ஒளி மிகுந்த மழுப்படை உடையவராய்ச் சோற்றுத்துறையில் வீற்றிருக்கும் ஈசன். நீண்ட சடை முடியுடைய எம்பிரானாகிய அவருக்கு. ஒளிகொண் திகழும் சந்திரன் அல்லவா அழகுடையது !

திருச்சிற்றம்பலம்

86. திருஒற்றியூர் (அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

822. செற்றுக் களிற்றுரி கொள்கின்ற
ஞான்று செருவெண் கொம்பொன்று
இற்றுக் கிடந்தது போலும்
இளம்பிறை பாம்பதனைச்
சுற்றிக் கிடந்தது கிம்புரி
போலச் சுடரிமைக்கும்
நெறிக்கண் மற்றதன் முத்தொக்கு
மாலொற்றி யூரனுக்கே.

தெளிவுரை : சிவபெருமான், யானையைக் கொன்று அதன் தோலை உரித்த போது அதன் கொம்பு ஒன்று ஒடிந்து விழுந்ததானது, ஒற்றியூர் மேவும் ஈசனின் இளம்பிறை போன்றும்; பாம்பு சுற்றிக் கொண்டு இருப்பதானது, கிம்புரி போன்றும்; நெற்றிக் கண்ணானது, முத்துப் போன்றும் விளங்கிற்று.

823. சொல்லக் கருதியது ஒன்றுண்டு
கேட்கில்தொண் டாய்அடைந்தவர்
அல்லற் படக்கண்டு பின்என்
கொடுத்தி அலைகொள் முந்நீர்
மல்லல் திரைச்சங்க நித்திலம்
கொண்டுவம் பக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந்து எற்று
ஒற்றி யூர்உறை உத்தமனே.

தெளிவுரை : வளப்பம் மிகுந்த சங்குகளும் முத்துக்களும் கொண்டு கரைக்குக் கடலலைகள் வாயிலாகச் சேர்க்கும் ஒற்றியூரில் மேவும் உத்தமனே ! நான் சொல்ல வேண்டும் என்று கருதுவது ஒன்று உண்டு. திருத்தொண்டர்கள் அல்லல் அடைந்து துன்புறுவதைக் கண்டு வாளா இருக்கின்றீர். பின் யாதுதான் கொடுக்கப் போகின்றீர் !

824. பரவை வருதிரை நீர்க்கங்கை
பாய்ந்துக்க பல்சடைமேல்
அரவம் அணிதரு கொன்றை
இளந்திங்கள் சூடியதோர்
குரவ நறுமலர் கோங்கம்
அணிந்து குலாய சென்னி
உரவுதிரை கொணர்ந்து எற்றொற்றி
யூருறை உத்தமனே.

தெளிவுரை : பரவி வரும் அலைகளை உடைய கங்கை, சடை முடியின்மேல் இருந்து சிதற; அரவம், அழகிய கொன்றை மலர், பிறைச்சந்திரன், குரவம், கோங்கம் ஆகியன சென்னியில் சூடிக் கடல் அலைகளைக் கொணர்ந்து மோதும் ஒற்றியூரில், உத்தமனாகிய ஈசன் வீற்றிருப்பவர்.

825. தானகம் காடரங் காக
உடையது தன்னடைந்தார்
ஊனக நாறு முடைதலை
யிற்பலி கொள்வதுந்தான்
தேனக நாறுந் திருவொற்றி
யூருறை வாரவந்தாம்
தானக மேவந்து போனகம்
வேண்டி உழிதர்வரே.

தெளிவுரை : தேன் மணம் கமழும் திருவொற்றியூரில் உறையும் பெருமான், இல்லங்கள் தோறும் சென்று உணவு கொள்ளும் தன்மையில், ஊன் நாற்றம் உடைய முடைத் தலையாகிய பிரம கபாலம் ஏந்திப் பலி ஏற்பவர். அப்பெருமான், மயானத்தை அரங்காகக் கொண்டு நடனம் புரிபவர்.

826. வேலைக் கடல்நஞ்சம் உண்டுவெள்
ளேற்றோடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க்கு உறைவிடம்
ஆவது வாரிகுன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெற்
கழனி அருகணைந்த
சோலைத் திருவொற்றி யூரை
எப்போதும் தொழுமின்களே.

தெளிவுரை : பாற்கடலில் தோன்றி நஞ்சினை உண்டு, வெள்ளை இடபத்தின் மீது வீற்றிருக்கும் மாலைக் கதிரவனின் வண்ணம் போன்ற செஞ்சடையுடைய ஈசனுக்குரிய உறைவிடமாவது, வருவாய் குன்றாத கரும்பும், செந்நெல்லும் விளையும் கழனிகளும், அதன் அருகில் நெருங்கிய சோலைகளும் உடைய, திருவொற்றியூர் ஆகும். அத்திருத்தலத்தை எப்போதும் தொழுவீராக.

827. புற்றினில் வாழும் அரவுக்கும்
திங்கட்கும் கங்கைஎன்னும்
சிற்றிடை யாட்கும் செறிதரு
கண்ணிக்கும் சேர்விடமாம்
பெற்றுடை யான்பெரும் பேச்சுடை
யான்பிரி யாதெனையாள்
விற்றடை யான்ஒற்றி யூருடை
யான்றன் விரிசடை யே.

தெளிவுரை : ஈசன், இடபத்தை வாகனமாக உடையவர்; பெரும்பொருள் நல்கும் சொல்லாகிய திருவைந்தெழுத்துக்கு உரியவர்; பிரிதல் இல்லாது என்னை ஆட்கொள்பவர்; என்னை விற்பதற்கும் உரியவர். அவர் ஒற்றியூரில் விளங்குகின்றவர். அப்பெருமான் தரித்து மகிழும் அரவம், சந்திரன், கங்கை, செழுமையான மலர்கள் ஆகியவற்றுக்குச் சேர்விடமாகத் திகழ்வது, அவருடைய விரிந்த சடையே.

828. இன்றரைக் கண்ணுடை யார்எங்கும்
இல்லை இமயம் என்னும்
குன்றரைக் கண்ணல் குலமகட்
பாவைக்குக் கூறிட்டநாள்
அன்றரைக் கண்ணும் கொடுத்துஉமை
யாளையும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர்
ஒற்றி யூருறை உத்தமனே.

தெளிவுரை : இக் காலத்தில் அரைக் கண்ணுடையவர் எவரும் இல்லை. இமாசல மன்னனின் நற்குல மகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட போது, அரைக் கண்ணும் கொடுத்துத் தான் ஒன்றரைக் கண்ணுடையவராய்த் திகழ்பவர், ஒற்றியூரில் உறையும் உத்தமனாகிய ஈசனே.

829. சுற்றிவண்டி யாழ்செயும் சோலையும்
காவும் துதைந் திலங்கும்
பெற்றிகண் டால்மற்றி யாவரும்
கொள்வர் பிறரிடை நீ
ஒற்றிகொண் டாய்ஒற்றி யூரையும்
கைவிட்டுறுமென்று எண்ணி
விற்றிகண் டாய்மற்று இதுஒப்பது
இல்லிடம் வேதியனே.

தெளிவுரை : வண்டுகள் சுற்றி யாழ் போன்று இசைக்கும் வளமும் எழிலும் மிகுந்த சோலையும், காலவும் நெருங்கி விளங்குவதைக் கண்டால், யாவரும் அதனை ஏற்பர். ஈசனே ! தேவரீர், பிறரிடம் ஒற்றி கொண்டு விளங்குபவர்; ஒற்றியூரையும் கைவிட்டுவிட வேண்டும் என்று எண்ணினால், வேதநாயகனே ! இதைப் போன்ற இனிய இடம் வேறு யாது உளது !

830. சுற்றிக் கிடந்து ஒற்றி யூரன்என்
சிந்தை பிரிவறியான்
ஒற்றித் திரிதந்து நீயென்ன
செய்தி உலகம் எல்லாம்
பற்றித் திரிதந்து பல்லொடு
நாமென்று கண்குழித்துத்
தெற்றித்து இருப்பதல் லால்என்ன
செய்யும்இத் தீவினையே.

தெளிவுரை : ஒற்றியூரில் வீற்றிருக்கும் ஈசன், என் சிந்தையிலிருந்து நீங்காதவராகி என்னைச் சுற்றி இருப்பவர். எனவே தீவினையானது செயலற்றி, யாங்கும் திரிந்து, பல்லைக் கடித்தும், நாக்கைத் துழவி மென்றும், சோக வயப்பட்டு கண்ணைக் குழித்தும், ஒரு புறமாக வேறுபட்டுச் செயலற்றும் இருப்பதன்றி, வேறு என்ன செய்யும் ?

831. அங்கட் கடுக்கைக்கு முல்லைப்
புறவ முறுவல் செய்யும்
பைங்கண் தலைக்குச் சுடலைக்
களவி பருமணிசேர்
கங்கைக்கு வேலை அரவுக்குப்
புற்றுக் கலைநிரம்பாத்
திங்கட்கு வானம் திருவொற்றி
யூரர் திரு முடியே.

தெளிவுரை : திருவொற்றியூரில் வீற்றிருக்கும் ஈசனின் திருச்சடை முடியானது, தேன் துளிர்க்கும் கொன்றைக்குத் திகழும் முல்லை நிலமாகும்; மண்டை ஓட்டுக்குச் சுடலை ஆகும்; முத்தும் பவளமும் கொண்டு செழிப்புடன் மேவும் கங்கைக்குக் கடலாகும்; சூடும் அரவத்திற்குப் புற்றாகும்; பிறைச் சந்திரனுக்கு வானமாகும்.

832. தருக்கின வாளரக் கன்முடி
பத்திறப் பாதந்தன்னால்
ஒருக்கின வாறுஅடி யேனைப்
பிறப்பறுத்து ஆளவல்லான்
நெருக்கின வானவர் தானவர்
கூடிக் கடைந்த நஞ்சைப்
பருக்கினவாறு என்செய்கேன் ஒற்றி
யூருறை பண்டங்கனே.

தெளிவுரை : ஒற்றியூரில் வீற்றிருந்து, பண்டரங்கம் என்னும் திருக்கூத்து புரியும் ஈசன், தருக்குற்ற இராவணனுடைய பத்துத் தலைகளையும் தன் பாதத்தால் அழுத்தி நெரியச் செய்தவர்; அடியேனுடைய பிறவிப் பிணியைத் தீர்த்து ஆட்கொள்பவர்; தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சை அருந்தி, அருள் புரிந்தவர். தேவரீருடைய பெருங் கருணைக்கு நான் எவ்வகையில் அன்பு செலுத்தி ஏத்துவேன் !

திருச்சிற்றம்பலம்

87. திருப்பழனம் (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

833. மேவித்து நின்று விளைந்தன்
வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன
அல்லல் அவைஅறுப்பான்
பாவித்த பாவனை நீயறி
வாய்பழ னத்தரசே
கூவித்துக் கொள்ளும் தனையடி
யேனைக் குறிக்கொள்வதே.

தெளிவுரை : பழனத்தில் வீற்றிருக்கும் ஈசனே ! என்னைப் பற்றிக் கொண்டு நின்று விளைவித்திருந்த துன்பம் எல்லாம் கழிந்தன. அத்தகைய துன்பம் யாவும் தீருமாறு செய்த செயல்களைத் தேவரீர், அறிவீர். தேவரீர், அடியேனைக் கூவித்து அடிமை கொண்ட குறிப்பன்றோ இத் தன்மைக்கு ஆயிற்று.

834. சுற்றிநின் றார்புறம் காவல்
அமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு
நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர
சேயுன் பணியறிவான்
உற்றுநின் றார்அடி யேனைக்
குறிக்கொண்டு அருளுவதே.

தெளிவுரை : பழனத்தில் வீற்றிருக்கும் ஈசனே ! தேவர்கள் புறம் சூழ்ந்த நிற்கத் திருமாலும் பிரமனும் திருவடியின் கீழ் வந்து, பற்றுக் கொண்டு விளங்கித் தேவரீருடைய ஆணையை நோக்கிக் காத்திருக்கின்றனர். அஞ்ஞான்று தேவரீர் அடியேனைக் குறித்து ஆட்கொண்டு அருளும் கருணைதான் என்னே !

835. ஆடிநின் றாய்அண்டம் ஏழும்
கடந்துபோய் மேலவையும்
கூடிநின் றாய்குவி மென்முலை
யாளையும் கொண்டுடனே
பாடிநின் றாய்பழ னத்தர
சேஅங்கொர் பால்மதியம்
சூடிநின் றாய்அடி யேனைஅஞ்
சாமைக் குறிக்கொள்வதே.

தெளிவுரை : பழனத்தில் மேவும் ஈசனே ! தேவரீர், திருநடனம் புரிந்து விளங்குபவர்; ஏழு அண்டங்களையும் கடந்து ஓங்குபவர்; உமாதேவியாரை உடனாகக் கொண்டு திகழ்பவர்; பால் போன்ற வெண்மதியைச் சூடுபவர்; தேவரீர், அடியேனைக் குறியாகக் கொண்டு, அஞ்சாமையை அருளிச் செய்த கருணை தான் என்னே !

836. எரித்துவிட் டாய்அம்பி னாற்புர
மூன்றுமுன் னேபடவும்
உரித்துவிட் டாய்உமை யாள்நடுக்
கெய்தவொர் குஞ்சரத்தைப்
பரித்துவிட் டாய்பழனத் தரசே
தரித்துவிட் டாய்பழனத் தரசே
கங்கை வார்சடைமேல்
தரித்துவிட் டாய்அடி யேனைக்
குறிக்கொண்டு அருளுவதே.

தெளிவுரை : பழனத்தில் மேவும் ஈசனே ! தேவரீர், முப்புரங்களை அம்பு தொடுத்து எரித்தவர்; உமாதேவியார் நடுங்குமாறு யானையின் தோலை உரித்தவர்; வேகத்தை உடைய கங்கையைக் கட்டுப் படுத்தி, நீண்ட சடை முடியின் மீது தரித்தவர். தேவரீர், அடியவனுக்குக் குறிக்கொண்டு அருளிய கருணைதான் என்னே !

837. முன்னியு முன்னி முளைத்தன
மூவெயி லும்உடனே
மன்னியும் அங்கும் இருந்தனை
மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறி
வாய்பழ னத்தரசே
முன்னியும் முன்னடி யேனைக்
குறிக்கொண்டு அருளுவதே.

தெளிவுரை : முன்னி நின்று முளைத்த எதிர்த்த மூன்று கோட்டைகளையும் மாயுமாறு செய்தவர் ஈசன். அவர், பல்வேறு சமயங்களில் சொல்லப்படும் பொருள்களையும் அறிபவர். அவர் பழனத்தில் மேவும் இறைவர். அப்பெருமான், அடியேனை முன்னின்று ஆட்கொண்ட குறிப்பானது அருளின தன்மைத்தே.

838. ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந்
தேபடைத் தான்தலையைக்
காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று
காமனைக் காலனையும்
பாய்ந்தறுத் தாய்பழ னத்தரசே
என் பழவினை நோய்
ஆய்ந்தறுத் தாய்அடி யேனைக்
குறிக் கொண்டு அருளுவதே.

தெளிவுரை : பழனத்தில் மேவும் அரசே ! தேவரீர், படைத்தல் தொழில் புரியும் பிரமனின் தலை ஒன்றினை இன்பனாக இருந்து அறுத்தீர்; மன்மதனை நெற்றிக் கண்ணால் தீய்த்தீர்; காலனைப் பாய்ந்து திருப்பாதத்தால் உதைத்து அழித்தீர்; என்னுடைய பழவினையாகிய சஞ்சித கன்மத்தையும் பிராரத்த கன்மத்தையும் நைந்து அழியுமாறு செய்தீர். தேவரீர், அடியேனைக் குறித்து அருள் புரிந்த கருணைதான் என்னே ! இது எல்லா வினைகளும் நீங்கியதை உணர்த்திற்று.

839. மற்றுவைத் தாய்அங்கொர் மாலொரு
பாக மகிழ்ந்துடனே
உற்றுவைத் தாய்உமை யாளொடும்
கூடும் பரிசெனவே
பற்றிவைத் தாய்பழ னத்தரசே
அங்கொர் பாம்பு ஒருகை
சுற்றிவைத் தாய்அடி யேனைக்
குறிக்கொண்டு அருளுவதே.

தெளிவுரை : பழனத்தில் வீற்றிருக்கும் ஈசனே ! தேவரீர், திருமாலை ஒரு பாகத்தில் வைத்தவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு அம்மையப்பராக மேவுபவர்; பாம்பைக் கையில் கட்டி வைத்திருப்பவர். தேவரீர், அடியேனைக் குறியாகக் கொண்டு அருளிய கருணைதான் என்னே !

840. ஊரினின் தாயொன்றி நின்றுவிண்
டாரையும் ஒள்ளழலால்
போரினின் றாய்பொறை யாய்உயிர்
ஆவிசுமந்து கொண்டு
பாரில்நின் றாய்பழ னத்தரசே
பணி செய்பவர் கட்கு
ஆரநின் றாய்அடி யேனைக்
குறிக்கொண்டு அருளுவதே.

தெளிவுரை : பழனத்தில் வீற்றிருக்கும் ஈசனே ! வேதரீர், ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குத் தாவித் திரிந்து சென்று தாக்கும் முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கச் செய்தவர், உடலின்கண் மேவும் உயிருக்கு உயிராகி விளங்குபவர். திருப்பணி யாற்றும் திருத்தொண்டர்களின் மனம் நிறையுமாறு திகழ்பவர். தேவரீர் அடியேனைக் குறியாகக் கொண்டு அருளிச் செய்த கருணைதான் என்னே !

841. போகம்வைத் தாய்புரி புன்சடை
மேலொர் புனலதனை
யாகம்வைத் தாய்மலை யாரமட
மங்கை மகிழ்ந்துடனே
பாகம்வைத் தாய்பழ னத்தரசே
உன் பணியருளால்
ஆகம்வைத் தாய்அடி யேனைக்
குறிக் கொண்டு அருளுவதே.

தெளிவுரை : பழனத்தில் வீற்றிருக்கும் ஈசனே ! தேவரீர், மென்மையான சடையில் கங்கையை வைத்தவர்; உமாதேவியைத் திருமார்பில் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; திருத்தொண்டர்கள் திருப்பணி செய்வதற்கும் தொண்டு செய்வதற்கும் இத்தேகத்தை அருளிச் செய்தவர். தேவரீர், அடியவனைக் குறிக் கொண்டு ஆளாக்கி அருளிய கருணைதான் என்னே.

842. அடுத்திருந் தாய்அரக் கன்முடி
வாயொடு தோள்நெரியக்
கெடுத்திருந் தாய்க்கிளர்ந்தார்வலி
யைக்கிளை யோடுடனே
படுத்திருந் தாய்பழ னத்தரசே
புலியின் னுரிதோல்
உடுத்திருந்த தாய்அடி யேனைக்
குறிக்கொண்டு அருளுவதே.

தெளிவுரை : பழனத்தில் வீற்றிருக்கும் அரசே ! தேவரீர், இராவணனுடைய முடி, வாய், தோள் ஆகியன நெரியுமாறு அடர்த்தவர்; அசுரர்களை அழித்தவர்; புலியின் தோலை உடுத்தியவர். தேவரீர், அடியேனைக் குறிக்கொண்டு ஆளாக ஏற்று அருள் புரிந்த கருணை தான் என்னே !

திருச்சிற்றம்பலம்

88. திருப்பூந்துருத்தி (அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருப்பூந்துருத்தி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

843. மாலினை மாலுற நின்றான்
மலைமகள் தன்னுடைய
பாலனைப் பால்மதி சூடியைப்
பண்புஉண ரார்மதில் மேல்
போலனைப் போர்விடை யேறியைப்
பூந்துருத் திம் மகிழும்
ஆலனை ஆதிபு ராணனை
நாம்அடி போற்றுவதே.

தெளிவுரை : பூந்துருத்தியில் மகிழ்ந்து வீற்றிருக்கும் ஈசன், திருமால் மயக்கம் உறுமாறு நின்றவர்; உமாதேவியைத் தன்பால் கொண்டு அம்மையப்பராய் விளங்குபவர்; பால் போன்ற வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடியவர்; நற்பண்பு நீங்கிய அசுரர்களின் முப்புரங்களை எரித்தவர்; இடப வாகனத்தில் ஏறி விளங்குபவர்; ஆல் நிழலில் மேவி அறம் உறைத்தவர். ஆதி புராணராகிய அப்பெருமானின் மலரடியைப் போற்றி நாம் வணங்குகின்றனம்.

844. மறியுடை யான்மழு வாளினன்
மாமலை மங்கையொர்பால்
குறியுடை யான்குணம் ஒன்றுஅறிந்
தார்இல்லை கூறில்அவன்
பொறியுடை வாளர வத்தவன்
பூந்துருத்திய் யுறையும்
அறிவுடை ஆதிபு ராணனை
நாம் அடி போற்றுவதே.

தெளிவுரை : பூந்துருத்தியில் வீற்றிருக்கும் ஆதி புராணர், மானும் மழுப்படையும் உடையவர்; மலைமகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; அப்பெருமானுடைய குணவிசேடத்தை அறிந்தவர் யாரும் இல்லை. அரவத்தை அணியாக உடைய அப்பரமனின் திருவடியை நாம் போற்றுவோம்.

845. மறுத்தவர் மும்மதில் மாயவொர்
வெஞ்சிலை கோத்தொர் அம்பால்
அறுத்தனை ஆலதன் கீழனை
ஆல்விடம் உண்டு அதனைப்
பொறுத்தனைப் பூதப் படையனைப்
பூந்துருத்திய் யுறையும்
நிறத்தனை நீல மிடற்றனை
யான்அடி போற்றுவதே.

தெளிவுரை : சிவபெருமான், பகைத்து நின்ற முப்புர அசுரர்கள் மாயுமாறு, மேரு மலையை வில்லாகக் கொண்டு அம்பு தொடுத்து அழித்தவர்; கல்லால் மரத்தின்கீழ் இருந்து அறங்களை உபதேசித்தவர்; கொடிய விடத்தை உட்கொண்டு அதனைக் கண்டத்தில் தேக்கிக் கொண்டவர்; பூத கணங்களைப் படையாகக் கொண்டவர்; பூந்துருத்தியில் உறையும் ஒளிமயமானவர். அப் பெருமானுடைய திருவடி யான் போற்றினேன்.

846. உருவினை ஊழி முதல்வனை
ஓதி நிறைந்து நின்ற
திருவினைத் தேசம் படைத்தனைச்
சென்றடைந் தேனுடைய
பொருவினை யெல்லாம் துரந்தனைப்
பூந்துருத்திய் யுறையும்
கருவினைக் கண்மூன்று உடையனை
யான்அடி போற்றுவதே.

தெளிவுரை : சிவபெருமான், அழகிய வடிவு உடையவர்; ஊழியின் முதல்வராக விளங்குபவர்; வேத ஆகமங்களை விரித்து ஓதிப் பூரண ஞானம் உடையவராய்ச் செழித்துத் திகழ்பவர்; சோதி வடிவாகியவர்; சென்றடைந்து, திருவடியைப் பற்றிய அன் வினை முழுதும் தீர்த்தவர். பூந்துருத்தியில் மூலமாகிய கருப்பொருளாய் முக்கண்ணுடைய  அப் பெருமானுடைய திருவடிக் கமலங்களை, யான் போற்றுவேன்.

847. தக்கன்றன் வேள்வி தகர்த்தவன்
சாரம் அதுவன்று கோள்
மிக்கன மும்மதில் வீயவொர்
வெஞ்சிலை கோத்தொர் அம்பால்
புக்கனன் பொன்திகழ் தன்னதோர்
பூந்துருத் திய்யுறையும்
நக்கனை நங்கள்பி ரான்றனை
நான்அடி போற்றுவதே.

தெளிவுரை : சிவபெருமான் தக்கனுடைய வேள்வியைத் தகர்த்தவர்; நற்பயன் விளைவிக்காத வலிமையுடையதான மூன்று மதில்களையும் மேருமலையை வில்லாகக் கொண்டு, ஓர் அம்பினால் எய்து, எரித்துச் சாம்பலாக்கியவர்; பொன் போன்று பெருமையுடன் திகழும் பூந்துருத்தியில் உறையும் ஈசன் ஆவார். எங்கள் பெருமானாகிய அத்தலைவனின் திருவடி மலரை நான் போற்றி வணங்குகின்றேன்.

848. அருகடை மாலையும் தான்உடை
யான்அழ கால்அமைந்த
உருவுடை மங்கையும் தன்னொரு
பால்உல காயுநின்றான்
பொருபடை வேலினன் வில்லினன்
பூந்துருத்திய் யுறையும்
திருவுடைத் தேச மதியனை
யானடி போற்றுவதே.

தெளிவுரை : சிவபெருமான், அருகருகே தொடுக்கப் பெற்றுக் கட்டிய இண்டை மாலையை உடையவர்; அழகு மிளிரும் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; உலகம் யாவுமாகவும் விளங்குபவர்; சூலப்படை உடையவர்; மலை வில்லேந்திய நாகபாணியாகத் திகழ்பவர்; பூந்துருத்தியில் உறைபவர்; வளமையும் ஒலியும் உடைய சந்திரனைச் சூடியவர். அப் பரமவை நான் போற்றுகின்றேன்.

849. மன்றியும் நின்ற மதிலரை
மாய வகைகெடுக்கக்
கன்றியும் நின்று கடுஞ்சிலை
வாங்கிக் கனல்அம்பினால்
பொன்றியும் போகப்
பூந்துருத்திப் திய்யுறையும்
அன்றியும் செய்தபி ரான்றனை
யான்அடி போற்றுவதே.

தெளிவுரை : பகைத்தும் எதிர்த்தும் நின்ற முப்புர அசுரர்களையும், அவர்களுடைய கோட்டைகளையும், பெரிய மலைவில் கொண்டு நெருப்பாகிய அம்பினால் எய்து, எரித்து மாய்த்தவர் சிவபெருமான். பூந்துருத்தியில் உறையும் அப்பெருமான், யாவற்றினையும் உள்ளதாகச் செய்பவர்; இல்லாததாகவும் செய்பவர். அப் பரமனின் திருவடி மலரை நான் போற்றினேன்.

850. மின்னிறம் மிக்க இடையுமை
நங்கையொர் பால்மகிழ்ந்தான்
என்னிறம் என்றம ரர்பெரியார்
இன்னந் தாம்அறியார்
பொன்னிற மிக்க சடையவன்
பூந்திருத்திய் யுறையும்
என்னிற எந்தை பிரான்றனை
யான்அடி போற்றுவதே.

தெளிவுரை : மின்னலைப் போன்ற ஒளிமிக்க இடை உடைய உமாதேவியை ஒரு பக்கத்தில் பாகமாகக் கொண்டு மகிழ்ந்த சிவபெருமான் எத்தகைய வண்ணம் உடையவர் என்று, தேவர்களும் மற்றும் உள்ள பெரியவர்களும் அறியாத தன்மையில் உள்ளவர். பொன் போன்று ஒளி மிகும் சடையுடைய அப்பெருமான், பூந்துருத்தியில் உறைபவர்; ஒளி வண்ணம் ஆகுபவர். எந்தை பெருமானாகிய அவருடைய திருவடி மலரை ஏத்திப் போற்றுவோமாக.

851. அந்தியை நல்ல மதியினை
ஆர்க்கும் அறிவரி
செந்தியை வாட்டும்செம் பொன்னிசைச்
சென்றடைந் ÷னுடைய
புந்தியைப் புக்க அறிவனைப்
பூந்துருத்திய் யுறையும்
நந்தியை நங்கள்பி ரான்றனை
நானடி போற்றுவதே.

தெளிவுரை : சிவபெருமான், அந்திப் பொழுதாகத் திகழ்பவர்; நல்ஞானமாக விளங்குபவர்; அறிதற்கு அரிய செந்தீவண்ணர்; செம்பொன் போன்று ஒளிர்பவர்; திருவடியைச் சென்றடைந்த அடியவனின் புந்தியில் மேவுபவர்; பூந்துருத்தியில் உறையும் ஈசன் ஆவார். எங்கள் தலைவராகிய அவருடைய திருவடி மரை நான் பணிந்து போற்றுகின்றேன்.

852. பைக்கையும் பாந்தி விழிக்கையும்
பாம்பு சடையிடையே
வைக்கையும் வானிழி கங்கையும் மங்கை நடுக்குறவே
மொய்க்கை யரக்கனை ஊன்றினான்
பூந்துருத் திய்யுறையும்
மிக்கநல் வேத விகிர்தனை
நானடி போற்றுவதே.

தெளிவுரை : படத்தை விரித்து பங்துங்கியும் விளங்கும் பாம்பைச் சடையில் வைத்து மேவும் சிவபெருமானின் முடியில் விளங்கும் கங்கையும் அங்கத்தில் பாகம் கொண்டுள்ள உமாதேவியும் நடுங்குமாறு கயிலையை எடுத்த இராவணனைத் திருப்பாதத்தால், ஊன்றி நெரித்தவர், பூந்துருத்தி உறையும் இறைவன். அத்தகைய வேத முதல்வனின் திருவடி மலரை நான் போற்றுகின்றேன்.

திருச்சிற்றம்பலம்

89. திருநெய்த்தானம் (அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

853. பாரிடம் சாடிய பல்லுயிர்
வானம ரர்க்கருளிக்
காரடைந் தகடல் வாயுமிழ்
நஞ்சமு தாகஉண்டான்
ஊரடைந்து இவ்வுல கிற்பலி
கொள்வது நாம்அறியோம்
நீரடைந் தகரை நின்றநெய்த்
தானத்து இருந்தவனே.

தெளிவுரை : பாரில் உள்ள உயிர்களுக்கும் மற்றும் தேவர்களுக்கும் அருள் புரியும் தன்மையில் கடலில் தோன்றிய நஞ்சினை அமுதல் போன்று உட்கொண்டு, நீலகண்டனாகிய ஈசன் ஊர்தொறும் சென்று கபாலம் ஏந்திப் பலி ஏற்ற செயலை, நாம் அறியோம். காவிரி ஆற்றின் கரையில் மேவும் நெய்த்தானத்தில் வீற்றிருக்கும் அவ் இறைவன் கருணை வயத்தவரே.

854. தேய்ந்திலங் கும்சிறு வெண்மதி
யாய்நின் திருச்சடைமேல்
பாய்ந்த கங்கைப் புனல்பன்
முகமாகிப் பரந்தொலிப்ப
ஆய்ந்திலங் கும்மழு வேலுடை
யாய் அடி யேற்குஉரைநீ
ஏந்திள மங்கையும் நீயும்நெய்த்
தானத்து இருந்ததுவே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடியவர்; பல முகங்களாக விரிந்தோடும் கங்கையைத் தரித்தவர்; மழுப் படையும் சூலப் படையும் ஏந்தியவர்; தேவரீர் உமாதேவியை உடனாகக் கொண்டு நெய்த்தானத்தில் வீற்றிருக்கும் அருள் தன்மையை அடியேனுக்கு உரைத்தருள்வீராக.

855. கொன்றடைந் தாடிக் குமைத்திடும்
கூற்றம்ஒன் னார்மதில் மேல்
சென்றடைந்து ஆடிப் பொருததும்
தேசமெல் லாம்அறியும்
குன்றடைந்து ஆடும் குளிர்பொழில்
காவிரி யின்கரைமேல்
சென்றடைந் தார்வினை தீர்க்கும்நெய்த்
தானத்து இருந்தவனே.

தெளிவுரை : ஈசனே ! கூற்றுவனைப் போன்று கொலைத் தன்மையுடைய கொடுமைகள் செய்யும் முப்புர அசுரர்களின் மதில்களை எரித்த தேவரீருடைய வீரச் செயலை, உலகம் யாவும் அறியும். குன்றுகளின் இடையில் அடைந்து, பாய்ந்து வரும் காவிரியின் கரையில் குளிர்ந்த பொழில்கள் விளங்கச் சென்று தரிசித்தவர்களின் வினை தீர்க்கும் நெய்த்தானத்தில் இருப்பவர், தேவரீரே.

856.கொட்டு முழவர வத்தொடு
கோலம் பலஅணிந்து
நட்டம் பலபயின்று ஆடுவர்
நாகம் அரைக் கசைத்துக்
சிட்டம் திரிபுரம் தீயெழச்
செற்ற சிலை யுடையான்
இட்டம் உமையொடு நின்றநெய்த்
தானத்து இருந்தவனே.

தெளிவுரை : ஈசன், கொட்டுகின்ற முழவு ஒலித்து மேவப் பல வண்ணங்களையுடைய திருக்கோலம் தாங்கிப் பல விதமான நடனங்களைப் புரிபவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; தவத்தினர்; முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கும் தன்மையில் மேரு மலையை வில்லாகக் கொண்டுள்ளவர். அப்பெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு அம்மையப்பராக நெய்த்தானத்தில் இருப்பவரே.

857. கொய்ம்மலர்க் கொன்றை துழாய்வன்னி
மத்தமும் கூவிளமும்
மெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக்
கற்றைவிண் ணோர்பெருமான்
மைம்மலர் நீல நிறங்கருங்
கண்ணியோர் பால்மகிழ்ந்தான்
நின்மலன் ஆடல் நிலயம்
நெய்த்தானத்து இருந்தவனே.

தெளிவுரை : ஈசன், கொன்றை மாலை, வன்னிப் பத்திரம், ஊமத்த மலர், வில்வ இதழ் மற்றும் மெய்ம் மலர் வேய்ந்த விரிந்த சடை உடையவர்; தேவர்களின் தலைவர்; நீலோற்பல மலர் போன்ற கண்ணுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு உகந்தவர். மலத்துள் சாராது திகழ்ந்து, அடியவர்களின் மும்மலங்களை, இன்மையாக்குபவர். அப்பெருமான் திருநடனம் புரியும் கூத்தராக, நெய்த்தானத்தினை இடமாகக் கொண்டு திகழ்பவரே.

858. பூந்தார் நறுங்கொன்றை மாலையை
வாங்கிச் சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை யேறிப்பல்
பூதப் படைநடுவே
போந்தார் புறவிசை பாடவும்
ஆடவும் கேட்டருளிச்
சேர்ந்தார் உமையவ ளோடுநெய்த்
தானத்து இருந்தவனே.

தெளிவுரை : ஈசன், நறுமணம் கமழும் கொன்றை மாலையை விரும்பி அணிந்தவர்; இடப வாகனத்தில் ஏறிப் பூதப் படைகளின் நடுவே விளங்கியவர்; அக் கணத்தினர் இசைத்துப் பாடும் புகழ்ப் பாடல்களைக் கேட்டு அருளியவர். அப்பெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு நெய்த்தானத்தில் வீற்றிருப்பவரே.

859. பற்றின பாம்பன் படுத்த
புலியுரித் தோலுடையான்
முற்றின மூன்று மதில்களை
மூட்டி எரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன்
சூல மழுவொருமான்
செற்றுநம் தீவினை தீர்க்குநெய்த்
தானத்து இருந்தவனே.

தெளிவுரை : ஈசன், பாம்பைக் கையில் பற்றி உள்ளவர்; புலியைக் கொன்ற அதன் தோலை உரித்து உடையாகக் கொண்டவர்; மூன்று அசுரர் புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; பூதப் படைகள் சூழ விளங்குபவர்; மான், மழு, சூலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளவர்; அப்பெருமான் நம்முடைய தீய வினைகளைத் தீர்க்கும் நெய்த்தானத்தில் வீற்றிருப்பவரே.

860. விரித்த சடையினன் விண்ணவர்
கோன்விடம் உண்டகண்டன்
உரித்த கரியுரி மூடிஒன்
னார்மதில் மூன்றுடனே
எரித்த சிலையினன் ஈடழி
யாதுஎன்னை ஆண்டுகொண்ட
தரித்த உமையவ ளோடு நெய்த்
தானத்து இருந்தவனே.

தெளிவுரை : ஈசன், விரிந்து மேவிய சடை உடையவர்; தேவர்களின் தலைவர்; நஞ்சினை உண்டு நீலகண்டனாக விளங்குபவர்; யானையின் தோலைப் போர்த்திருப்பவர்; பகைவராகிய மூன்று அசுரர்களுடைய கோட்டைகளை, மேருவை வில்லாகக் கொண்டு எரித்தவர்; அடியவர்களுக்கு அருள் செய்யும் பெருமைக்குரியவராகிக் குறைவின்றி என்னை ஆட்கொண்டவர். அவர் உமாதேவியை ஒரு பாகமாகத் தரித்துள்ளவராகி, நெய்த்தானத்தில் வீற்றிருப்பவரே.

861. தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை
துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளர
வும்கங்கை தான்புனைந்தான்
தேங்கார் திரிபுரம் தீயெழ
எய்து தியக்கறுத்து
நீங்கான் உமையவ ளோடுநெய்த்
தானத்து இருந்தவனே.

தெளிவுரை : ஈசனே, உறக்கம் இல்லாதவர்; அசைவு அற்றவராகி நிலைப்பாடு உடையவர்; செஞ்சடையில் கொன்றை மாலை சூடியவர்; கங்கையும் சந்திரனும், அரவும் தரித்தவர், திரிபுரங்களை அழித்துத் தேவர்களின் அயற்சியை நீக்கியவர். அவர், உமாதேவியோடு பிரியாது நெய்த்தானத்தில் இருப்பவரே.

862. ஊட்டிநின் றான்பொரு வானில
மும்மதில் தீயம்பினால்
மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து
வீழவும் வானவர்க்குக்
காட்டிநின் றான்கத மாக்கங்கை
பாயவொர் வார்சடையை
நீட்டிநின் றான்திரு நின்றநெய்த்
தானத்து இருந்தவனே.

தெளிவுரை : ஈசன், வானில் திரியும் மும்மதில்களைக் கொண்ட அசுரர்களின் கோட்டைகளை அக்கினியாகிய அம்பு எய்து எரித்துச் சாம்பலாக்கியவர்; கங்கையைச் சடை முடியில் ஏற்றவர். அவர், திருமகள் செழித்து மலரும் நெய்த்தானத்தில் வீற்றிருப்பவரே.

திருச்சிற்றம்பலம்

90. திருவேதிகுடி (அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

863.கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன்
செய்யினில் நீல மணங்கம ழும்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை நாமடைந்து ஆடுதுமே.

தெளிவுரை : ஈசன், கையினில் காற்றுடன் சேர்ந்து கொழுந்து விட்டு எரியும் நெருப்பை ஏந்தியவர்; நாகத்தைக் கொண்டுள்ளவர்; கனல் உமிழும் வெம்மை உடைய சூலத்தை உடையவர்; கொடிய நஞ்சினை உட்கொண்டவர்; விரிந்த சடை யுடைய தேவதேவர். அவர், வயல்களில் நீலோற்பலம் மலர விளங்கும் வேதிகுடியின் தலைவர். ஆராஅமுதமாக விளங்கும் அப்பெருமானை, நாம் சார்ந்து மகிழ்ந்திருப்போமாக.

864. கைத்தலை மான்மறி யேந்திய கையன் கனல்மழுவன்
பொய்த்தலை யேந்தி நற்பூதி யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துகளும் திரு வேதிகுடி
அத்தனை ஆராஅமுதினை நாம்அடைந்து ஆடுதுமே.

தெளிவுரை : ஈசன், கையில் மான் கன்றும், கனன்று வெம்மை உமிழும் மழுவும் ஏந்தியவர்; பிரம கபாலம் ஏந்தித் திருநீறு பூசிப் பலிக்காகத் திரிபவர்; வாளை பாய்ந்து குதிக்கும் வளப்பம் மிகுந்த வயல்களையுடைய திருவேதிகுடியில் மேவும் இறைவன், ஆவார்; ஆரா அமுதமாக இனிமை தருபவர். அவரை நாம் சென்றடைந்து மகிழ்வோமாக.

865. முன்பின் முதல்வன் முனிவன்எம் மேலை வினைகழித்தான்
அன்புஇல் நிலையில் அவுணர் புரம்பொடி யானசெய்யும்
செம்பொனை நன்மலர் மேலவன் சேர்திரு வேதிகுடி
அன்பனை நம்மை யுடையனை நாமடைந்து ஆடுதுமே.

தெளிவுரை : ஈசன் முன்னைப் பழம் பொருளுக்கும் முன்னைப் பழம் பொருளாகியும், பின்னையும் புதுமை உடையவராகியும், ஆதியும் அந்தமும் இல்லா முதல்வராய் சீலத்தில் மேவுபவர்; என்னைப் பற்றியிருந்த வினைகளை நீக்கியவர்; அன்பு அற்ற நிலையினராகிய அசுரர்களுடைய மூன்று புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியவர்; செம்பொன் போன்ற பெருமையும் தூய்மையும் உடையவர். அவர், பிரமன் வழிபாடு செய்த திருவேதிகுடியில் வீற்றிருக்கும் அன்புக்குரியவர். அப்பெருமான், நம்மை ஆளாக உடையவர். அவரை நாம் அடைந்து மகிழ்வோமாக.

866. பத்தர்கள் நாளு மறவார் பிறவியை ஒன்றறுப்பான்
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடமுன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம ழுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை நாம்அடைந்து ஆடுதுமே.

தெளிவுரை : சிவபெருமான், நாள்தோறும் மறவாது ஏத்தி வழிபடும் பக்தர்களின் பிறவிப் பிணியைத் தீர்த்தருள்பவர்; பற்று நீங்கிய சீவன் முத்தர்களாய்த் திகழ்ந்த பெருமக்களை இவ்வுலகத்திலிருந்து உயர்த்தி, மேல் நிலைக்குச் செலுத்துபவர்; கொத்துப் போன்று விளங்கும் கொன்றை மலர் சூடித் திருவேதி குடியில் மேவும் இறைவன். அவர், ஆராஅமுது போன்று விளங்க நாம் சென்றடைந்து ஏத்தி மகிழ்வோமாக.

867. ஆன்அணைந்து ஏறும் குறிகுணம் ஆர்அறி வார்அவர்கை
மான்அணைந்து ஆடு மதியும் புனலும் சடைமுடியன்
தேன்அணைந்து ஆடிய வண்டு பயில்திரு வேதிகுடி
ஆன்அணைந்து ஆடு மழுவனை நாம்அடைந்து ஆடுதுமே.

தெளிவுரை : ஈசன், இடபத்தை வாகனமாககக் கொண்டு விளங்குபவர். அப் பெருமானுடைய திருக்குறிப்பை அறிபவர் யார் உளர் ! அவர் கையில் மான் விளங்கும். சந்திரனும் கங்கையும் சடையில் விளங்கும். தேன் பருகிய வண்டுகள் ஆடுகின்ற திருவேதிகுடியில் பசுவின் பஞ்ச கௌவியத்தால் அபிடேகம் கொள்ளும் மழுவேந்திய அப் பரமனை, நாம் சென்றடைந்து ஏத்தி மகிழ்வோமாக.

868. எண்ணும்எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்திரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாம்அடைந்து ஆடுதுமே.

தெளிவுரை : ஈசன்  எண்ணும், எழுத்தும், அதன் பொருளும் விரிவும், குணமும் குறிப்பும் அறிபவர். யாவும் அறியும் ஈசனைத் தோத்திரங்களாலும், இசை மொழியாலும் வானவர்கள் ஏத்திப் பணிவர். பணிபவர்களுடைய கொடிய வினைகள் யாவையும் தீர்க்கும் தலைவர், அப்பெருமான் ஆவார். அவர், நண்ணுதற்கு அரிய அமுதம் போன்றவர். அப்பரமன், திருவேதிகுடியில் வீற்றிருந்து அருள் புரிபவர். அவரை அடைந்து மகிழ்வோமாக. அரியதாகிய அமுதினை அடையும் இடம் திருவேதிகுடி என்பதாம்.

869. ஊர்ந்த விடையுகந்து ஏறிய செல்வனை நாம்அறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையொர் பாக மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப் பிரான்திரு வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்ணமு தையடைந்து ஆடுதுமே.

தெளிவுரை : ஈசன் இடபத்தை உகந்து வாகனமாகக் கொண்டு திகழும் செல்வர். அவர், உமாதேவியை உடனாகக் கொண்டு அம்மையப்பராக மகிழ்ந்து வீற்றிருப்பவர்; கங்கையைச் சடையில் வைத்து மேவும் செல்வர். அவர் வயல்கள் சூழ்ந்த திருவேதிகுடியில் குளிர்ந்த அமுதம் போன்று விளங்குபவர். அவரை அடைந்து மகிழ்ந்து ஏத்தி இன்புறுவோமாக.

870. எரியும் மழுவினன் எண்ணியு மற்றொரு வன்தலையுள்
திரியும் பலியினன் தேயமும் நாடும்எல்லாம் உடையான்
விரியும் பொழிலணி சேறுதிகழ்திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்க ளோடுஅடைந்து ஆடுதுமே.

தெளிவுரை : ஈசன், கனல் உமிழும் மழுப்படையுடையவர்; பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பலி ஏற்பவர்; ஆயினும் எல்லா உலகங்களும் உடையவர். அவர் குளிர்ந்த பொழில் திகழும் திருவேதிகுடியில் அரிய அமுதமாக விளங்க, நாம் அடியவர் திருக்கூட்டத்தினரோடு சென்றடைந்து ஏத்தி, மகிழ்ந்து இன்புறுவோமாக.

871. மையணி கண்டன் மறைவிரி நாவன் மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங்கம ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆராஅமுதினை நாம்அடைந்து ஆடுதுமே.

தெளிவுரை : ஈசன், கரிய கண்டத்தை உடையவர்; வேதங்களை விரித்து ஓதும் திருநாவினர்; மதிப்புடையதும் மகிழ்வினைத் தரவல்லதும் ஆகிய திருநீற்றினை உடையவர்; மழுப்படை உடையவர்; செந்தாமரை மலரின் மணம் கமழும் திருவேதிகுடியில், ஆராஅமுது எனத் திகழும் தலைவர். அவரை அடைந்து மகிழ்வோமாக.

872. வருத்தனை வாளரக்கன்முடி தோளொடு பத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா அருளனைப் பூதப் படையுடைய
திருத்தனைத் தேவர்பிரான் திருவேதி குடியுடைய
அருத்தனை ஆரா அமுதினை நாம்அடைந்து ஆடுதுமே.

தெளிவுரை : ஈசன், இராவணனுடைய தோள்களுடன் பத்துத் தலைகளும் நெரியுமாறு வருத்திக் கயிலை மலையைப் பொருத்தி ஊன்றியவர்; பின்னர் ஏத்த அருள் புரிந்தவர்; பூத கணங்களைப் படையாகக் கொண்டவர்; தேவர்களின் தலைவர். அவர் திருவேதிகுடியில் மேவும் உமாதேவியோடு வீற்றிருக்கும் ஆராஅமுது ஆனவர். அவருடைய திருவடியை அடைந்து, நாம் மகிழ்ந்து விளங்குவோமாக.

திருச்சிற்றம்பலம்

91. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

873. குறுவித்த வாகுற்ற நோய்வினை
காட்டிக் குறுவித்த நோய்
உறுவித்த வாவுற்ற நோய்வினை
தீர்ப்பான் உகந்தருளி
அறிவித்த வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
செறிவித்தவா தொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழ்எனையே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர் என்னைக் குறுகுமாறு செய்து அருளியவர்; யான் வேறு சமய நெறியில் இருந்த குற்றத்தால் சூலை நோய் காட்டித் தேவரீர் பால் நெருங்கிச் சேர வைத்து, அதனைத் தீர்த்தருளியவர்; என்னை உலகுக்கெல்லாம் நாவுக்கரசர் என்று அறிவித்தவர்; திருவையாற்றில் வீற்றிருக்கும் அடிமைத் தன்மையைச் செழிப்புற அருள்வித்தவர். தொண்டனாகிய அடியேனைத் திருப்பாத மலரடிக் கீழ் சேர்த்தவர் நீவிரே !

874. கூர்வித்த வாகுற்ற நோய்வினை
காட்டியும் கூர்வித்தநோய்
ஊர்வித்த வாஉற்ற நோய்வினை
தீர்ப்பான் உகந்தருளி
ஆர்வித்த வாறுஅடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
சேர்வித்த வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழ்எனை யே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர் என்னைத் திருவடியின் கீழ் விளங்குமாறு சேர்ந்தவர்; என் குற்றத்தின் விளைவாகச் சூலை நோய் காட்டிச் சேர்வித்தவர்; அந்நோயைத் தீர்த்தருளி உகந்து அருளியவர்; அன்பின் ஆர்வம் பெருக, ஐயாற்றில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு அடிமை செய்யுமாறு சேர்வித்தவர். தேவரீருடைய திருவடிக்கீழ்த் தொண்டனாகிய அடியேன் இருக்க அருளியவர், தேவரீரே.

875. தாக்கினவா சல மேவினை
காட்டியுந் தண்டித்த நோய்
நீக்கினவாநெடு நீரினின்று
ஏற நினைந்தருளி
ஆக்கின வாறுஅடி யேனைஐ
யாறன் அடிமைமக்களே
நோக்கின வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழ்எனையே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், நான் பிழை செய்தபோது தாக்கி, வினையின் செயல்காட்டிச் சூலை நோய் காட்டித் தண்டித்துப் பின், அந்நோய் நீங்குமாறு செய்தவர்; கடலின்கண் எறிந்தபோது என்னை அதிலிருந்து கரையேறச் செய்தருளி அடியவன் ஆக்கியவர்; ஐயாற்றில் மேவும் இறைவனுக்கு அடிமை பூணச் செய்தவர். தொண்டனேனைத் திருவடிக்கீழ் இருத்தியவர் தேவரீரே.

876. தருக்கின நான்தக வின்றியும்
ஓடச் சலமதனால்
நெருக்கின வாநெடு நீரினின்று
ஏற நினைந்தருளி
உருக்கின வாறடி யேனைஐ
யாறன அடிமைக் களே
பெருக்கின வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழ்எனையே.

தெளிவுரை : ஈசனே ! நான் தருக்கின நாளில் என்னை வளைத்தும் சூலை நோயால் நெருக்கிய தேவரீர், அருள்புரிந்து கடலில் இருந்து கரை ஏறி உய்யுமாறு புரிந்தருளியவர்; அடியேன் பக்தியால் கசிந்து உருகுமாறு செய்தவர்; ஐயாற்றின் இறைவன் மாட்டு அடிமைகள் பெருக்கி ஏத்துமாறு புரிந்தவர். தொண்டனாகிய என்னைத் திருவடிக்கீழ் இருத்தியவர் தேவரீரே.

877. இழிவித்த வாறிட்ட நோய்வினை
காட்டி இடர்ப்படுத்துக்
கழிவித்த வாகட்ட நோய்வினை
தீர்ப்பான் கலந்தருளி
அழிவித்த வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
தொழுவித்த வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழ்எனையே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், அடியனை இழிவாகு மாறு சூலை நோய் காட்டி, என் வினையின் தன்மையையும் காட்டி, இடரைத் தந்து, பின்னர் விலகுவித்து, நோயும் வினையும் தீர்த்தருளியவர்; ஐயாற்றில் மேவும் பெருமானின் அடிமைக்கண் செலுத்தி என்னைப் பேரின்பத்தில் அழுத்தியவர்; தொழுமாறு பணிவித்தவர். தொண்டனேனைப் பொன்னடிக்கீழ் இருத்தியது, தேவரீரே அன்றோ !

878. இடைவித்த வாறுஇட்ட நோய்வினை
காட்டி இடர்ப் படுத்து
உடைவித்த வாறுஉற்ற நோய்வினை
தீர்ப்பான் உகந்தருளி
அடைவித்த வாறுஅடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழ்எனையே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், நான் இடைப்பட்டுப் புறத்தே இருக்க, இடைப் புகுந்து சூலை நோய் காட்டி, வினை காட்டி, இடர் தந்து, பின் அவை யாவும் உடைந்து சிதறுமாறு, உற்ற நோயும் வினையும் தீர்த்தவர்; உகந்து அருள் செய்து என்னைத் திருவடிக் கண் அடைவித்தவர்; ஐயாற்று இறைவன்பால் அடிமைப் பணிகளை ஆற்றத் தொடர்வித்தவர். தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் சேர்த்து இருத்தியது தேவரீரே அன்றோ !

879.படக்கின வாபட நின்றுபன்
னாளும் படக்கினநோய்
அடக்கின வாறுஅது அன்றியும்
தீவினை பாவம் எல்லா
மடக்கின வாறுஅடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
தொடக்கின வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழ்எனையே.

தெளிவுரை : ஈசனே ! பல நாளும் சேர்ந்த வினையால் நான் துன்புற்றபோது, தேவரீர், என்னைக் கடிதில் திருப்பி அடக்கியவர்; தீவினையும் பாவமும் தீர்த்தருளியவர்; அடியேனைத் தடுத்து அடக்கி ஐயாற்றின் இறைவனுக்கு அடிமைகள் பூணுமாறு செய்தவர். தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் இருத்தியவர், தேவரீரே அல்லவா !

880. மறப்பித்த வாவல்லை நோய்வினை
காட்டி மறப்பித்தநோய்
துறப்பித்த வாதுக்க நோய்வினை
தீர்ப்பான் உகந்தருளி
இறப்பித்த வாறுஅடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழ்எனையே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீரை, நான் மறக்குமாறு செய்து, வலிய வினையாகிய சூலை நோயைக் காட்டிய நீவிர், மறப்பாகிய நோயைப் போக்கி, உடல் நோயாகிய சூலையைப் போக்கி, வினைகளைப் போக்கி உகந்து அருள் புரிந்தவர்; என்னைப் பாசங்களிலிருந்து கடக்கச் செய்து, ஐயாற்று இறைவனுக்கு அடிமை ஆக்கியவர்; சிறப்பாகிய சிவானந்தத்தைப் புரிந்தவர். தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் இருத்தியவர், தேவரீரே அல்லவா !

881. துயக்கின வாதுக்க நோய்வினை
காட்டித் துயக்கினநோய்
இயக்கின வாறுஇட்ட நோய்வினை
தீர்ப்பான் இசைந்தருளி
அயக்கின வாறுஅடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
மயக்கின வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழ்எனையே.

தெளிவுரை : ஈசனே ! நான் தளர்ந்து சோர்வு கொண்டு இருந்தபோது, தேவரீர், நோயும் வினையும் காட்டி என்னை இயக்கித் துன்பத்தை விளைவித்த நோயும், வினையும் தீர்த்தருளி புரிந்தவர். அடியேனை, ஐயாற்றின் இறைவனுக்கு இசையுமாறு அருளி, அடிமைகள் ஆகுமாறு பக்தி கொள்ளச் செய்தவர். தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் இருத்தியவர், தேவரீரே அல்லவா !

882. கறுத்தும்இட் டார்கண்டம் கங்கை
சடைமேற் கரந்தருளி
இறுத்தும்இட் டார்இலங் கைக்குஇறை
தன்னை இருபது தோள்
அறுத்தும்இட் டார்அடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
பொறுத்தும்இட் டார்தொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழ்எனையே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், நஞ்சினைக் கண்டத்தில் கறையுமாறு தேக்கியவர்; கங்கையைச் சடை முடியின் மீது கரந்து (மறைத்து) வைத்தருளியவர்; இராவணனுடைய இருபது தோளும் நெரியுமாறு ஊன்றியவர்; அடியேனை ஐயாற்று இறைவனுக்கு அடிமை பூணுமாறு அருளித் தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் இருத்தியவர், தேவரீரே அல்லவா ! இத் திருப்பதிகமானது, ஈசன் பொன்னடிக்கீழ் இருந்து அடிமை கொண்டு விளங்கி, மன்னுயிரானது சிவானந்தத் தேனைப் பருகி இன்பத்தில் திளைத்தல் வேண்டும் என உணர்த்துவதாயிற்று.

திருச்சிற்றம்பலம்

92. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

883. சிந்திப் பரியன சிந்திப்
பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன முத்தி
கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை
தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந்து ஆடும்ஐ
யாறன அடித்தலமே.

தெளிவுரை : சடையில், பாம்பினைச் சுற்றிப் பிறைச் சந்திரனை அணிந்து, திருநடம்புரியும் ஐயாற்றீசரின் திருவடித்தலமானது, சிந்தனை செய்யும் அறிவிற்கு எட்டாததும், சிந்தையில் ஏத்தும் அன்பர்களுக்குத் தேன் என இனிமை தருவதும் மன்னுயிர்களுக்கு முத்தியைக் கொடுப்பதும் ஆகும். அவை உயிரை மொய்த்துப் பந்தம் கொண்டு பிறவியைத் தரும் வினைகளைத் தீர்ப்பனவே.

884. இழித்தன ஏழேழ் பிறப்பும்
அறுத்தன என்மனத்தே
பொழித்தன பேரெழிற் கூற்றை
உதைத்தன போற்றவர்க்
கிழித்தன தக்கன் கிளரொளி
வேள்வியைக் கீழமுன்சென்று
அழித்தன ஆறங்கம் ஆனஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : திருவையாற்றில், வேதத்தின் அங்கமாக விளங்கும் ஐயாற்றீசனுடைய திருவடித்தலமானது, இழித்தற்குரியதாகிய ஏழேழ் பிறவிகளையும் அறுத்தொழிக்கும். அத் திருவடி மலர்கள், என் மனத்தில் புகுந்து பேரெழில் நல்கின; கூற்றுவனை உதைத்தன; தக்கன வேள்வியைப் போற்றி நின்று துணை புரிந்தவர்களைத் தாக்கி அழித்து, அவ்வேள்வியையும் அழியுமாறு செய்தன.

885. மணிநிறம் ஒப்பன பொன்னிற
மன்னின மின்னியல் வாய்
கணிநிறம் அன்ன கயிலைப்
பொருப்பன காதல்செய்யத்
துணிவன சீலத்தர் ஆகித்
தொடர்ந்து விடாத தொண்டர்க்கு
அணியன சேயன தேவர்க்குஐ
யாறன் அடித் தலமே.

தெளிவுரை : திருவையாற்றில் மேவும் ஐயாற்றீசனது திருவடித் தலமானது, மாணிக்கம் போன்ற செம்மையும், பொன் போன்ற அழகும், மின்னல் போன்ற ஒளியும் உடையன; கயிலை மலையைப் போன்று விளங்குவன; பத்தி செய்யப்படுவன; ஆசார சீலமும் ஒழுக்க நெறியும் உடைய திருத்தொண்டர்களுக்கு அண்மையுடையதாகவும் அது அல்லாதவர்க்கு அரியதாகவும் உடையன.

886. இருள்தரு துன்பப் படல
மறைப்ப மெய்ஞ்ஞான மென்னும்
பொருள்தரு கண்ணிழந்து உண்பொருள்
நாடிப் புகலிழந்த
குருடரும் தம்மைப் பரவக்
கொடுநர கக்குழிநின்று
அருள்தரு கைகொடுத்து ஏற்றும் ஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : ஐயாற்றில் மேவும் ஈசனின் திருவடித்தலமானது, அஞ்ஞானமாகிய துன்பத்தால் மெய்ஞ்ஞானம் என்னும் நற்பொருள் தோன்றாது, துன்புறுவோருக்கு அருள் தந்து நரகக் குழியிலிருந்து கை கொடுத்து மேலே ஏற்றும் பெருமையுடையன.

887. எழுவாய் இறுவாய் இலாதன
வெங்கட் பிணி தவிர்த்து
வழுவா மருத்துவன் ஆவன
மாநர கக்குழிவாய்
விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன
மீட்பன மிக்கஅன்போடு
அழுவார்க்கு அமுதங்கள் காண்கஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : திருவையாற்றில் எழுந்தருளியுள்ள ஈசனின் திருவடித்தலமானது, ஆதியும் அந்தமும் இல்லாதன; கொடிய பிணி தீர்க்கும் மருந்தாய் விளங்குவன; நரகத்தில் சேர்ந்து அழுந்தாதவாறு அடியவர்களை மீட்டு அருள் புரிவன; பக்தி பூண்டு, கசிந்து உருகும் அன்பர்களுக்கு, அமுதம் போன்று இனிமை தரவல்லன.

888. துன்பக் கடலிடைத் தோணித்
தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக் கரைமுகந்து ஏற்றும்
திறத்தன மாற்றயலே
பொன்பட் டொழுகப் பொருந்தொளி
செய்யும்அப் பொய்பொருந்தா
அன்பர்க்கு அணியன காண்கஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : ஐயாற்றீசனின் திருவடித் தலமானது, திருத்தொண்டர்களைத் துன்பக் கடலிலிருந்து கறையேறச் செய்யும் தோணி போன்று விளங்கி அருளும் தகைமையுடையது. பொன்னும் பொருளும் பொய்மை உடையதெனக் கண்டு, உலகப் பற்றினை ஒழிந்த மெய்யன்பர்களுக்கு அப் பெருமானின் திருவடி அண்மையில் இருப்பன எனக் காண்பீராக.

889. களித்துக் கலந்ததொர் காதற்
கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுதுமுன் னின்றஇப்
பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையமுது ஊட்டி
அமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வம் ஆக்கும்ஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : ஐயாற்றீசனின் திருவடித் தலமானது, மனம் கலந்த அன்போது கசிந்து உருகிக் காவிரித் தீர்த்தத்தில் நீராடித் தொழுது, முன்னின்று வணங்கும் பக்தர்களுக்குத் தேவர்கள் ஏத்தத் தேனும் அமுதும் பரிவுடன் அளித்துப் பெருஞ் செல்வத்தைப் பெறுமாறு செய்யும்.

890. திருத்திக் கருத்தனைச் செவ்வே
நிறுத்திச் செறுத்துடலை
வருத்திக் கடிமலர் வாளெடுத்து
ஓச்சி மருங்கு சென்று
விருத்திக் குழக்கவல் லோர்கட்கு
விண்பட் டிகையிடுமால்
அருத்தித்து அருந்தவர் ஏத்தும்ஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : நன்கு விருப்பத்துடன் ஏத்தி வணங்கும் ஐயாற்றீசனின் திருவடித்தலமானது, அடியவர்கள், தம்மையும் அறியாது தீவினைப் பயனால் புறும் சென்றாலும், அவர்களைத் திருத்திப் புறம் போக ஒட்டாது காத்து. நன்னெறிக்கு ஆட்படுத்தும்; விரதம் முதலானவை அனுட்டித்து மணம் கமழும் மலர் கொண்டு ஏத்தும் திருத்தொண்டர்களுக்குச் சாமீப நிலையினை அருளிச் செய்து, மருங்கு இருக்கும் மாண்பு அளித்து, உயர்ந்த விருதும் வழங்கும் தன்மையைப் புரியும்.

891. பாடும் பறண்டையும் ஆந்தையும்
ஆர்ப்பப் பரந்து பல்பேய்
கூடி முழவக் குவிகவிழ்
கொட்டக் குறுநரிகள்
நீடும் குழல் செய்ய வைய
நெளிய நிணப்பிணக்காட்டு
ஆடும் திருவடி காண்கஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : பறண்டை, ஆந்தை முதலானவை ஆர்த்துப் பாடல் வகை போன்று ஒலித்து மேவ பேய்க் கூட்டங்கள் கூடி முழவத்தைக் கொட்டி முழக்க, நரிகள் நீண்டு ஊளையிட்டு ஒலி எழுப்ப, பூமியில் மனம் சுளித்து நெளியுமாறு உள்ள பிணங்கள் உடைய மயானத்தில் ஐயாற்றீசனின் திருவடித் தலமானது நடனத்தைக் கொள்கின்றன.

892. நின்போல் அமரர்கள் நீள்முடி
சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போது உழக்கிப் பவளம்
தழைப்பன பாங்கறியா
என்போலிகள் பறித்திட்ட
இலையும் முகையுமெல்லாம்
அம்போது எனக்கொள்ளும் ஐயன்ஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : ஐயாற்றீசன் திருவடித் தலமானது, தேவர்கள் நீண்ட முடிகளைச் சாய்த்துப் பவளம் முதலான உயர்ந்த மணிகளும் மலர்களும் கொண்டு ஏத்தித் திகழ, என் போன்றவர்களும் பறித்த இலை மொட்டு ஆகியவற்றையும் அழிகிய மலர்களாகக் கொள்ளும் பெருமையுடையன.

893. மலையார் மடந்தை மனத்தன
வானோர் மகுடமன்னி
நிலையா இருப்பன நின்றோர்
மதிப்பன நீணிலத்துப்
புலையாடு புன்மை தவிர்ப்பன
பொன்னுல கம்அளிக்கும்
அலையார் புனற்கொன்னி சூழ்ந்தஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : அலைகளைக் கொண்டு விளங்கும் பொன்னிக் கரையில் மேவும் ஐயாற்றீசன் திருவடித் தலமானது, மலைமகளாகிய உமாதேவியாரின் மனத்தில் விளங்குவன; வானவர்களின் மகுடத்தில் ஒளிர்ந்து நிலைத்திருப்பன; யோக நெறியில் நிற்போர் உணர்வன; மண்ணுலகத்தில் புன்மையாகிய பிறவி கொள்ளும் பிறவியை நீக்குவன; பொன்னுலகத்தை அளிப்பன.

894. பொலம் புண்டரீகப் புதுமலர்
போல்வன போற்றியென்பார்
புலம்பும் பொழுதும் புணர்துணை
யாவன பொன்னைனயாள்
சிலம்பும் செறிபா டகமும்
செழுங்கிண் கிணித்திரளும்
அலம்பும் திருவடி காண்கஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : ஐயாற்றீசனின் திருவடித் தலமானது, பொன் போன்று ஒளிர்ந்து விளங்கும் தாமரை மலர் போன்று விளங்குவன; போற்றி செய்து ஏத்துபவர்களுக்குத் துணையாக விளங்குவன; உமாதேவிக்குரிய சிலம்பும், பாடகமும் கிண்கிணியும் ஆகியன அணிந்து மேவும் சிறப்புடையன.

895. உற்றார் இலாதார்க்கு உறுதணை
யாவன ஓதி நன்னூல்
கற்றார் பரவப் பெருமை
யுடையன காதல்செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி
வானகந் தான்கொடுக்கும்
அற்றார்க்கு அரும்பொருள் காண்கஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : ஐயாற்றீசனின் திருவடித் தலமானது, இல்லறத்தினார்க்கும் துறவறத்தினார்க்கும் உறுதுணையாக விளங்குவன; சிவாகமங்களில் தேர்ந்த சிவஞானிகளால் பெருமையுடன் விரும்பி ஏத்தப்படுவன; மனம் உருகிப் போற்றும் அன்பர்களுக்கு, மேல் நிலையைக் கொடுப்பன; பற்று நீங்கிய பரமஞானிகளுக்கு, அரும் பொருளாக விளங்குவன.

896. வானைக் கடந்தண்டத் தப்பால்
மதிப்பன மந்திரிப்பார்
ஊனைக் கழித்துய்யக் கொண்டருள்
செய்வன  உத்தமர்க்கு
ஞானச் சுடராய்  நடுவே
உதிப்பன நங்கைஅஞ்ச
ஆனை உரித்தன காண்கஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : ஐயாற்றீசனின் திருவடித் தலமானது, தேவர்களுடைய உலகத்தைக் கடந்து, அண்டம் கடந்து அப்பாலும் மதிக்கப் பெறுவன; திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தை ஓதுபவர்களுக்குப் பிறவிப் பிணியைத் தீர்த்தருள் புரிவன; உத்தமர்களுக்கு ஞானச் சுடராக விளங்குவன; அப்பெருமான், உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்தவர். அப் பரமனைக் கண்டு தொழுமின்.

897. மாதிர மானில மாவன
வானவர் மாமுகட்டின்
மீதன மென்கழல் வெங்கச்சு
வீக்கின வெந்நமனார்
தூதரை யோடத் துரப்பன
துன்பறத் தொண்டுபட்டார்க்கு
ஆதர மாவன காண்கஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : ஐயாற்றீசன் திருவடித் தலமானது, பெருமையுடைய நிலவுகம் ஆவன; விண்ணவர் உலகம் ஆவன; கொடிய இயமனின் தூதரை உதைத்து ஓடச் செய்வன; பிறவித் துன்பத்திலிருந்து நீங்க வேண்டும் என்னும் நோக்கத்தில் உள்ள திருத்தொண்டர்களுக்கு, அன்புடன் ஆக்குவிப்பன. அத்தகைய திருவடித் தலத்தைத் தரிசித்து ஏத்துக.

898. பேணித் தொழுமவர் பொன்னுலகு
ஆளப் பிறங்கருளால்
ஏறிப்படிநெறி யிட்டுக்
கொடுத்திமை யோர்முடிமேல்
மாணிக்கம் ஒத்து மரகதம்
போன்று வயிரமன்னி
ஆணிக் கனகமும் ஒக்கும்ஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : ஐயாற்றீசனின் திருவடித் தலமானது, தொழுபவர்களுக்குப் பொன்னுலகத்தை ஆளும் அருளைத் தருவன; வேதர்களின் முடிமேல் திகழும் மாணிக்கம், மரகதம், வயிரம், பொன் என விளங்குவன.

899. ஓதிய ஞானமும் ஞானப்
பொருளும் ஒலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியும்
ஆவன விண்ணு மண்ணும்
சோதியும் செஞ்சுடர் ஞாயிறும்
ஒப்பன தூமதியோடு
ஆதியும் அந்தமும் ஆனஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : ஐயாற்றீசனின் திருவடித் தலமானது, ஞானமும் அதன் பொருளாகவும், வேத ஒலியாகவும் வேள்வியாகவும் ஆவன; விண்ணுலகமும், மண்ணுலகமும், சோதியும், செஞ்சுடராகிய சூரியனும் சந்திரனும் ஆவன; ஆதியும் அந்தமும் ஆகி விளங்குவன.

900. கணங்கு முகத்துத் துணைமுலைப்
பாவை சுரும்பொடு வண்டு
அணங்கும் குழலி அணியார்
வளைக்கரம் கூப்பி நின்று
வணங்கும் பொழுதும் வருடும்
பொழுதும் வண்காந்தன் ஒண்போது
அணங்கும் அரவிந்தம் ஒக்கும்ஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : ஐயாற்றீசனின் திருவடித் தலமானது, வண்டுகள் மொய்க்கும் கூந்தலுடைய அழகிய வளையல் அணிந்த உமாதேவியார் காந்தள் போன்று விளங்கும் கைகளால் கூப்பி வணங்கச் செந்தாமரை மலரை ஒக்கும்.

901. கழலார் துயர்வெயிற் சுட்டிடும்
போதடித் தொண்டர்துன்னும்
நிழலா வனஎன்றும் நீங்காப்
பிறவி நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ
கால வனங்கடந்த
அழவார் ஒளியன காண்கஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : ஐயாற்றீசனின் திருவடித் தலமானது, கடுமையான வெயிலின் வெப்பத்தால் திருத்தொண்டர்கள் சோர்ந்து நலியாது, நிழல் போன்று செறிந்து விளங்குவன; பிறவாமையைக் கொடுத்து அருள்வன; நீங்காத வினைகள் யாவும் நீங்குமாறு செய்வன. அழல் போன்ற ஒளியுடையன.

902. வலியான் தலைபத்தும் வாய்விட்டு
அலற வரைஅடர்த்து
மெலியா வலியுடைக் கூற்றை
உதைத்துவிண் ணோர்கள் முன்னே
பலிசேர் படுகடைப் பார்த்துப்பன்
னாளும் பலர்இகழ
அலியா நிலைநிற்கும் ஐயன்ஐ
யாறன் அடித்தலமே.

தெளிவுரை : தலைவனாகிய ஐயாற்றீசனின் திருவடித் தலமானது, வலிமை மிக்க இராவணனை வாய்விட்டு அலறுமாறு அடர்த்தும், மெலிதல் இல்லாத கூற்றுவனை உதைத்தும், தேவர்களின் முன்பாக மனைதொறும் கபாலம் ஏந்திப் பலி ஏற்றும், பலரும் இகழுமாறு அலியாகவும் விளங்குவன.

திருச்சிற்றம்பலம்

93. திருக்கண்டியூர் வீரட்டம் (அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

903. வானவர் தானவர் வைகல்
மலர்கொணர்ந்து இட்டிறைஞ்சித்
தானவர் மால்பிர மன்னறி
யாத தகைமையினான்
ஆனவன் ஆதிபு ராணனன்
றோடிய பன்றி எய்த
கானவனைக் கண்டி யூர்அண்ட
வாணர் தொழுகின்றதே.

தெளிவுரை : ஈசன், தேவர்களாலும் அசுரர்களாலும் நாள்தோறும் மலர் கொண்டு ஏத்தப்படுபவர்; திருமால் பிரமன் ஆகியவர்களால் அறிதற்கு அரியவராகித் திகழ்ந்தவர்; ஆதி புராணர்; அருச்சுனருக்கு அருள் செய்யும் தகைமையால் வேட்டுவ வடிவம் தாங்கிப் பன்றி வடிவத்தில் இருந்த அசுரனை மாய்த்தவர். அப் பெருமான் கண்டியூரில் மேவும் அண்டவாணர். அவரை, என் நெஞ்சமானது தொழுது ஏத்துகின்றது.

904. வான மதியமும் வாளர
வும்புன லோடுசடைத்
தானம் அதுஎன வைத்துழல்
வான்தழல் போலுருவன்
கான மறியொன்று கையுடை
யான்கண்டி யூர்இருந்த
ஊனமில் வேதம் உடையனை
நாம்அடி உள்குவதே.

தெளிவுரை : ஈசன், பிறைச் சந்திரனும், அரவும், கங்கையும் சடை முடியில் வைத்துத் திரிபவர்; தழல் போன்ற செம்மேனியர்; காட்டில் திரியும் மானைக் கையில் கொண்டுள்ளவர். பெருமையுடன் திகழும் வேதநாயகனாகிய அப்பெருமான், கண்டியூரில் வீற்றிருப்பவர். அவருடைய திருவடியை நெஞ்சில் பதித்து ஏத்துவோமாக.

905. பண்டங் கறுத்ததொர் கையுடை
யான்படைத் தான்தலையை
உண்டங் கறுத்ததும் ஊரொடு
நாடவை தானறியும்
கண்டங் கறுத்த மிடறுடை
யான்கண்டி யூர்இருந்த
தொண்டர் பிரானைக் கண்டீர்அண்ட
வாணர் தொழுகின்றதே.

தெளிவுரை : ஈசன், யானையின் தோலை உரித்தவர்; பிரமனின் தலையைக் கொய்தவர்; நஞ்சினை உண்டு கறுத்த மிடறு உடையவர்; அண்டவாணராய்க் கண்டியூரில் வீற்றிருப்பவர்; தொண்டர்களால் ஏத்திப் போற்றப்படுபவர். அப் பெருமானைக் கண்டு மகிழ்ந்தவர்களே ! என் நெஞ்சமானது அவரைத் தொழுது ஏத்துகின்றது.

906. முடியின்முற் றாததொன்று இல்லைஎல்
லாம்உடன் தானுடையான்
கொடியும் உற்றவ் விடை யேறியொர்
கூற்றொரு பாலுடையான்
கடியமுற் றவ்வினை நோய்களை
வான்கண்டி யூர்இருந்தான்
அடியுமுற் றார்தொண்ர் இல்லைகண்
டீர்அண்ட வானவரே.

தெளிவுரை : ஈசனின் திருக்குறிப்பில் தோன்றுவனயாவும், உடனே நிகழ்ந்து நிறைவேறத் தக்கதாகும். அவர், எல்லாவற்றையும் உடையவர்; இடபக் கொடி உடையவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு இடப வாகனத்தில் வீற்றிருப்பவர்; அடியவர்களின் வினைகளைத் தீர்த்தருள்பவர்; கண்டியூரில் வீற்றிருப்பவர். அப் பெருமானின் திருவடிக்கீழ் உள்ளவர்கள் திருத்தொண்டர்களே; வானவர்கள் இல்லை. இது, ஈசன் திருவடியின்பால் திருத்தொண்டர்கள் அன்றி, மற்றவர்கள் எத்துணை உயர்ந்தவர்களாயினும் நாடுதல் இயலாது ஓதிற்று.

907. பற்றியொர் ஆனை உரித்தபி
ரான்பவ ளத்திரள்போல்
முற்றும் அணிந்ததொர் நீறுடை
யான்முன்ன மேகொடுத்த
கற்றங் குடையவன் தானறி
யான்கண்டி யூர்இருந்த
குற்றமில் வேதம் உடையானை
யாம்அண்டர் கூறுவதே.

தெளிவுரை : ஈசன், யானையைப் பற்றி அதன் தோலை உரித்தவர்; பவளம் போன்ற செம்மேனியின் முழுமையும் திருவெண்ணீறு அணிந்து விளங்குபவர்; காவியுடை அணிந்த சமணரால் அறியப்படாதவர்; கண்டியூரில் வீற்றிருப்பவர்; எல்லாக் குற்றங்களையும் களைந்து தீர்க்கும் வேதத்தை உடையவர். அவரை யாம் அணித்து இருக்குமாறு ஏத்துதும்.

908. போர்ப்பனை யானை உரித்த
பிரான்பொறி வாயரவம்
சேர்ப்பது வானத் திரைகடல்
சூழல கம் இதனைக்
காப்பது காரண மாகக்கொண்
டான்கண்டி யூர்இருந்த
கூர்ப்புடை யொள்வாள் மழுவனை
யாமண்டர் கூறுவதே.

தெளிவுரை : ஈசன், போர்த் தன்மையுடைய பனைபோன்ற நீண்ட துதிக்கையுடைய யானையின் தோலை உரித்தவர்; அரவத்தை அணிந்துள்ளவர்; இவ்வுலகமானது ஆதிசேடனால் தாங்கப்படுகிறது என்னும் காரணத்தைக் கொண்டு அரவத்தைச் சடை முடியில் சேர்த்து விளங்குபவர். அவர் கண்டியூரில் மழுப்படை ஏந்தி வீற்றிருப்பவர். அப் பரமனை, யாம் அண்மையுறக் கூறி ஏத்தும்.

909. அட்டது காலனை ஆய்ந்தது
வேதம்ஆறு அங்கம்அன்று
சுட்டது காமனைக் கண்ணத
னாலே தொடர்ந்துஎரியக்
கட்டவை மூன்றும் எரித்த
பிரான்கண்டி யூர்இருந்த
குட்டமுன் வேதப் படையனை
யாம்அண்டர் கூறுவதே.

தெளிவுரை : ஈசன், காலனை அழித்தவர்; நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஆய்ந்து விரித்து ஓதியவர்; யோக நிட்டையில் இருந்து அன்று மன்மதனை நெற்றிக் கண்ணால் சுட்டு எரித்தவர்; மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரித்த தலைவர்; கடல் போன்று விரிந்து விளங்கும் வேதங்களைப் படைத்தவர். அப் பெருமானை யான் அண்மையுறம் போற்றி ஏத்துதும்.

910. அட்டும் ஒலிநீர் அணிமதி
யும்மல ரானவெல்லாம்
இட்டுப் பொதியும் சடைமுடி
யான்இண்டை மாலையங்கைக்
கட்டும் அரவது தானுடை
யான்கண்டி யூர்இருந்த
கொட்டும் பறையுடைக் கூத்தனை
யாம்அண்டர் கூறுவதே.

தெளிவுரை : ஈசன், கங்கையும் சந்திரனும் மலர்களும் கொண்டு விளங்கும் சடை முடியில் இண்டை மாலை உடையவர்; கையில் அரவத்தைக் கங்கணமாகக் கட்டி உள்ளவர்; கண்டியூரில் வீற்றிருப்பவர்; கொட்டுகின்ற பறைக்கு ஏற்பத் திருக்கூத்து ஆடுபவர். அப் பரமனை, யாம் அண்மையுறக் கூறி ஏத்துதும்.

911. மாய்ந்தன தீவினை மங்கின
நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவம் செறுக்ககல்
லாநம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டி யூர்எம்
பிரான்அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோஅடி
யேனையாட் கொண்டவனே.

தெளிவுரை : யாராலும் செற்று அழிக்க இயலாத வலிமையுடைய மன்மதனை எரித்த பெருமான், கண்டியூரில் வீற்றிருக்கும் எம்பிரான் ஆவார். அவர், வேதத்தின் அங்கங்கள் ஆறினையும் ஆய்ந்தவர்; அடியேனை ஆட்கொண்டவர். அதனால் என்தீவினை மாய்ந்தன; நோய்கள் யாவும் நீங்கின்; பாவங்கள் அழிந்தன.

912. மண்டிமலையை எடுத்துமத்து
ஆக்கிஅவ் வாசுகியைத்
தண்டிஅமரர் கடைந்த
கடல்விடம் கண்டருளி
உண்ட பிரன்நஞ்சு ஒளித்த
பிரான்அஞ்சி ஓடி நண்ணக்
கண்ட பிரான்அல்ல னோகண்டி
யூர்அண்ட வானவனே.

தெளிவுரை : மேரு மலையை எடுத்து மத்தாக ஆக்கி வாசுகி என்னும் நாகத்தை கயிறாகக் கொண்டு கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சினைக் கண்டு, தேவர்கள் அஞ்சி ஓடினர்; ஈசனை நண்ணி ஏத்தினர். அப்பெருமான், அக்கடல் நஞ்சினைத் தன் கண்டத்தில் ஒளித்த நீல மணி மிடற்றனராக அருள்புரிந்தவர். தேவர்களின் தலைவராகிய அவர், கண்டியூரில் வீற்றிருப்பவர் அல்லவா !

திருச்சிற்றம்பலம்

94. திருப்பாதிரிப்புலியூர் (அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

913. ஈன்றாளு மாய்எனக்கு எந்தையு
மாய்உடன் தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்துஉகந்
தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன்
திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன்
தன்னடி யோங்களுக்கே.

தெளிவுரை : ஈசன், என்னை ஈன்ற தாய் ஆகியவர்; எனக்குத் தந்தை ஆகியவர்; எனக்கு உடன் தோன்றினவராயினர். இம் மூன்றினையும் படைத்து உகந்த ஈசன், என் மனத்துள் இருப்பவர். அவர், என்னைத் தாங்கிக் கொண்டவர். தேவர்களுக்கு அன்பனாகிய அப்பெருமான் திருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களுக்குத் தோன்றாத் துணையாக விளங்குபவர்.

914. பற்றாய் நினைந்திடப் போதுநெஞ்
சேஇந்தப் பாரை முற்றும்
சுற்றா யலைகடல் மூடினும்
கண்டேன் புகனமக்கு
உற்றான் உமையவட்கு அன்பன்
திருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியி
னான்றன் மொய்கழலே.

தெளிவுரை : நெஞ்சமே ! இவ் உலகத்தைச் சுற்றி அலையாதே ! மகாப்பிரளயம் கண்ட இவ் உலகமானது கடலால் சூழப்பட்டாலும், நமக்குப் புகலிடமாக  விளங்குவதும், உற்ற பாதுகாப்பாகத் திகழ்வதும், உமாதேவியாரின் அன்புக்கு உரியவராகிய ஈசன் ஆவார். அப் பெருமானைப் பற்றாகக் கொண்டு நினைந்து சரண் அடைவாயாக. அவர், திருப்பாதிரிப் புலியூரில் இளம்பிறைச் சந்திரனைச் சூடி அமர்ந்திருப்பவர். அவருடைய திருக்கழலை ஏத்துக.

915. விடையான் விரும்பியென் உள்ளத்து
இருந்தான் இனிநமக்குஇங்கு
அடையா அவலம் அருவினை
சாரா நமனை அஞ்சோம்
புடையார் கமலத்து அயன்போல்
பவர்பா திரிப்புலியூர்
உடையான் அடியர் அடிஅடி
யோங்கட்கு அரியதுண்டே.

தெளிவுரை : ஈசன், இடபத்தை வாகனமாக உடையவர்; என் உள்ளத்தில் விரும்பிக் குடிகொள்பவர். எனவே, நமக்குத் துன்பம் தரும் வினை அடையாது; நமனைக் கண்டு அஞ்ச மாட்டோம். தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் போன்ற மேலானவர்கள் எல்லாம் திருப்பாதிரிப்புலியூரில் மேவும் ஈசனுக்கு அடியவர்கள் ஆவார். எனவே அப் பெருமானின் திருவடிக்கு அடியோங்களாகிய எமக்குக் கைகூடுவதற்கு அரியது என்று ஏதேனும் உள்ளதோ ! எதுவும் அரியது இல்லை என்பது குறிப்பு.

916. மாயமெல் லாம்முற்ற விட்டிருள்
நீங்க மலைமகட்கே
நேய நிலாவ இருந்தான்
அவன்றன் திருவடிக்கே
தேயமெல் லாநின்று இறைஞ்சும்
திருப்பா திரிப்புலியூர்
மேயநல் லான்மலர்ப் பாதம்என்
சிந்தையுள் நின்றனவே.

தெளிவுரை : ஈசன், மாயத் தன்மையை அகற்றி, அஞ்ஞானம் நீங்க, உமாதேவியை நேயத்தோடு பொருந்தி விளங்குபவர். அப்பெருமானுடைய திருவடியை உலகம் யாவும் ஏத்தும். அது, திருப்பாதிரிப் புலியூரில் வீற்றிருக்கும் நலம் புரியும் ஈசனின் மலர்ப் பாதம் ஆகும். அத் திருப்பாதம் என் சிந்தையுள் நின்றனவே.

917. வைத்த பொருள்நமக்கு ஆம்என்று
சொல்லி மனத்தடைத்துச்
சித்தம் ஒருக்கிச் சிவாய
நமவென்று இருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வார்
அவர்பா திரிப்புலியூர்
அத்தன் அருள்பெற லாமோ
அறிவிலாப் பேதைநெஞ்சே.

தெளிவுரை : அறிவு இலாத பேதை நெஞ்சே ! நாம் சேர்த்து வைக்கும் இகப் பொருள் யாவும் நமக்கு ஆகும் என்று சொல்லி மயங்கும் மனத்தினைத் தடுத்து நிறுத்துக. சித்தத்தை ஒருமுகப்படுத்திச் சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தை நெஞ்சில் நிறுத்துக. அவ்வாறு இருந்தாலன்றித் திருப்பாதிரிப் புலியூரில் விளங்கும் தண்ணொளி போன்ற அத்தனின் அருள் பெறல் ஆகுமோ ! ஆகாது என்பது குறிப்பு.

918. கருவாய்க் கிடந்துன் கழலே
நினையும் கருத்துடை யேன்
உருவாய்த் தெரிந்து உன்றன்நாமம்
பயின்றேன் உனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய
நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா
திரிப்புலி யூர்அரனே.

தெளிவுரை : திருப்பாதிரிப்புலியூரில் வீற்றிருக்கும் ஈசனே ! இம் மண்ணுலகில் பிறந்து தேவரீரின் திருக்கழலையே நினைக்கும் கருத்துடையவனானேன். தேவரீருடைய திருநாமத்தினைத் தெரிந்து உமது திருவருளால் வாயின் செம்மை பொலியச் சிவாய நம என்று ஓதித் திருவெண்ணீறு அணிந்தேன். சிவகதியைத் தருவீராக.

919. எண்ணாது அமரர் இரக்கப்
பரவையுள் நஞ்சøயுண்டாய்
திண்ணார் அசுரர் திரிபுரம்
தீயெழச் செற்றவனே
பண்ணார்ந்து அமைந்த பொருள்கள்
பயில்பா திரிப்புலியூர்க்
கண்ணார் நுதலாய் கழல்நம்
கருத்தில் உடையனவே.

தெளிவுரை : ஈசனே ! தேவர்கள், இறைஞ்சி ஏத்திப் பாற்கடலில் தோன்றிய நஞ்சின் வெம்மையிலிருந்து காத்தருள வேண்டும் என வேண்டுதல் புரிய, அக்கொடிய நஞ்சினை ஒரு பொருட்டாக எண்ணாது தேவரீர், உட்கொண்டீர். வலிமை மிக்க அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்துச் சாம்பலாக்கினீர். பண்ணின் இசை விளங்கும் பாதிரிப்புலியூரில் வீற்றிருக்கும் ஈசனே ! நெற்றியில் கண்ணுடைய பரமனே ! தேவரீருடைய திருக்கழல்கள் அடியேனின் கருத்தில் உடையனவே.

920. புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
உன்னடி என் மனத்தே
வழுவாது இருக்க வரந்தர
வேண்டும்இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்தருள்
செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை
மேல்வைத்த தீவண்ணனே.

தெளிவுரை : இவ்வுலகில் தொழுகின்றவர்களுக்குக் கருணையுடன் வீற்றிருந்து அருள் புரியும் பாதிரிப் புலியூரில், கங்கையைச் செஞ்சடை மேல் வைத்து மேவும் தீ வண்ணனே ! புழுவாகப் பிறவி கொண்டாலும் தேவரீருடைய திருவடியானது, வழுவுதல் இல்லாது என்னுடைய மனத்தில் பதிந்து இருக்கு மாறுவரம் தருவீராக.

921. மண்பாத லம்புக்கு மால்கடல்
மூடிமற்று ஏழுலகும்
விண்பால் திசைகெட்டு இருசுடர்
வீழினும் அஞ்சல் நெஞ்சே
திண்பால் நமக்கென்று
திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட்
சுடரான் கழலிணையே.

தெளிவுரை : மண்ணுலகம் கடலால் மூடப்பட்டு அழிந்தாலும், சூரியன் சந்திரன் ஆகிய சுடர்கள் திசயிலிருந்து திரிந்து மாறுபட்டு வீழ்ந்து அழிவைத் தந்தாலும் நெஞ்சே ! அஞ்சாதே ! நமக்க உறுதியாக இருந்து காக்கும் பொருள் ஒன்று கண்டோம். அது, திருப்பாதிரிப் புலியூரில் வீற்றிருக்கும், நெற்றியல் கண்ணுடைய கடவுட் சுடராகிய, ஈசனின் கழலிணையே.

922. திருந்தா அமணர்தம் தீநெறிப்
பட்டுத் திகைத்து முத்தி
தருந்தாள் இணைக்கே சரணம்
புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா அரக்கன் உடல்நெரித்
தாய்பா திரிப்புலியூர்
இருந்தாய் அடியேன் இனிப்பிற
வாமல் வந்து ஏன்றுகொள்ளே

தெளிவுரை : திருப்பாதிரிப்புலியூரில் வீற்றிருக்கும் அரனே ! திருத்தம் கொள்ளாத அமணரின் தீய நெறியில் உழன்று திகைத்து, முத்தி தரும் தாளிணையாகிய தேவரீரிடம் சரணம் புகுந்தேன். கயிலையை எடுத்த இராவணனுடைய உடலை நெரித்த ஈசனே ! அடியேன் இனிப் பிறவாது இருக்கும் தன்மையில் தேவரீர் வந்து ஏற்றுத் தாங்கிக் கொள்வீராக.

திருச்சிற்றம்பலம்

95. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)
 
திருச்சிற்றம்பலம்

923. வான்சொட்டச் சொட்டநின்று அட்டும்
வளர்மதி யோடு அயலே
தேன்சொட்டச் சொட்டநின்று அட்டும்
திருக்கொன்றை சென்னி வைத்தீர்
மான்பெட்டை நோக்கி மணாளீர்
மணீநீர் மிழலயுளீர்
நான்சட்ட வும்மை மறக்கினும்
என்னைக் குறிக் கொள்மினே.

தெளிவுரை : ஈசனே ! வானில் அமுத தாரைகளைப் பொழில் சந்திரனையும், அருகே தேன் துளிர்க்கும் கொன்றை மலர்களையும் சென்னியில் வைத்து மேவும் தேவரீர், உமாதேவியாரின் மணாளராக மிழலையுள் வீற்றிருப்பவர். தேவரீரை நான் மறக்கினும், அடியேனை மறவாது குறியாகக் கொண்டு அருள் புரிவீராக.

924. அந்தமும் ஆதியும் ஆகிநின்
றீர்அண்டம் எண்திசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்
றீர்பசு ஏற்றுகந்தீர்
வெந்தழல் ஓம்பும் மிழலையுள்
ளீர்என்னைத் தென்திசைக்கே
உந்திடும் போது மறக்கினும்
என்னைக் குறிக்கொள்மினே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், அந்தமும் ஆதியும் ஆனவர்; அண்டங்களும் எட்டுத் திக்குகளும், பந்தம் தரும் உலகமும், முத்திப் பேறும் நிலவச் செய்பவர்; இடப வாகனத்தில் வீற்றிருப்பவர்; வேள்வி புரிந்து உலகினை மலரச் செய்யும் மிழலை நகருள் உள்ளவர். என்னைத் தென்திசைக்கு உரியவனான காலன், உந்தித் தள்ளும்போது, நான் மறந்தாலும், தேவரீர் அடியேனை மறவாது குறியாகக் கொண்டு காத்தருள் புரிவீராக.

925. அலைக்கின்ற நீர்நிலம் காற்றனல்
அம்பரம் ஆகிநின்றீர்
கலைக்கன்று சேரும் கரத்தீர்
கலைப்பொரு ளாகி நின்றீர்
விலக்கின்றி நல்கு மிழலையு
ளீர்மெய்யிற் கையொடு கால்
குலைக்கின்று நும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொள் மினே.

தெளிவுரை : நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐம்பூதங்களாக விளங்கும் ஈசனே ! மானைக் கரத்தில் கொண்டுள்ள பெருமானே ! எல்லா வடிவங்களையும் உடைய கலைப் பொருளாகி மேவும் பரமனே ! வேறு பாடின்றி எல்லாருக்கும் அருள் வழங்கும் மிழலை நாதனே ! கைகளும் கால்களும் அசைவின்றித் தேவரீரை நினைந்து ஏத்த மறந்தாலும் அடியேனைக் குறியாகக் கொண்டு அருள்புரிவீராக.

926. தீத்தொழி லான்தலை தீயிலிட
டுச்செய்த வேள்வி செற்றீர்
பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை
யீர்பிடித் துத்திரியும்
வேய்த் தொழி லாளர் மிழலையுள்
ளீர்விக்கி அஞ்செழுத்தும்
ஒத்தொழிந்து உம்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொள்மினே.

தெளிவுரை : ஈசனே ! தீய தொழில் மேவிய தக்கனுடைய வேள்வியில், அவனுடைய தலையை அறுத்துச் செற்ற தேவரீர், உமாதேவியை ஒரு பாகமாக உடையவர்; அந்தணர்கள் வேள்வி புரியும் மிழலையுள் வீற்றிருப்பவர். அந்திம காலத்தில் நான் விக்கித் திருவைந்தெழுத்தை ஓதுதற்கு மறப்பினும் தேவரீர் என்னைக் குறியாகக் கொண்டு காத்து அருள்புரிவீராக.

927. தோட்பட்ட நாகமும் சூலமும்
சுற்றியும் பத்திமையால்
மேற்பட்ட அந்தணர் வீழியும்
என்னையும் வேறுடையீர்
நாட்பட்டு வந்து பிறந்தேன்
இறக்க நமன்தமர்தம்
கோட்பட்டு நும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொள்மினே.
தெளிவுரை : ஈசனே ! தோளில் நாகமும் சூலப் படையும் விளங்கப் பக்தி கொண்டு ஏத்தும் அந்தணர்கள் திகழும் வீழிமிழலையை உடைய தேவரீர், அடியேனையும் ஆட்கொண்டவர். நான், என் வாழ் நாள் நிறைவுற்றதும் இறப்பதற்குப் பிறந்தேன். நமனுடைய தூதர்கள் என் உயிரைக் கவரும் தருணத்தில், தேவரீரை நான் மறந்தாலும், என்னைக் குறியாகக் கொண்டு காத்தருள் புரிவீராக.

928. கண்டியிற் பட்ட கழுத்துடை
யீர்கரி காட்டில் இட்ட
பண்டியிற் பட்ட பரிகலத்
தீர்பதி வீழிகொண்டீர்
உண்டியிற் பட்டினி நோயில்
உறக்கத்தில் உம்மைஐவர்
கொண்டியிற் பட்டு மறக்கினும்
என்னைக் குறிக் கொள்மினே.

தெளிவுரை : உருத்திராக்க மாலையைக் கழுத்தில் அணிந்து மேவும் ஈசனே ! சுடுகாட்டில் இருக்க வேண்டிய மண்டை ஓட்டினைப் பிச்சைப் பாத்திரமாக உடையவரே ! வீழிமிழலையைப் பதியாக உடைய பெருமானே ! நான், உணவு கொள்கின்ற போதும், பட்டினியாய்ப் பசித்துள்ள போதும், உடற்பிணியால் தளர்ச்சியுற்ற போதும், உறக்கத்திலும், ஐம்புலன்களால் சார்ந்து என் நிலை மறந்து இருந்த போதும், தேவரீரை நான் மறந்தாலும், அடியேனைக் குறியாகக் கொண்டு அருள் புரிவீராக.

929. தோற்றம்கண் டான்சிரம் ஒன்றுகொண்
டீர்தூய வெள்ளெருது ஒன்று
ஏற்றம்கொண் டீர்எழில் வீழி
மிழலை இருக்கை கொண்டீர்
சீற்றம்கொண்டு என்மேற் சிவந்ததொர்
பாசத்தால் வீசியவெம்
கூற்றம்கண்டு உம்மை மறக்கினும்
என்னைக் குறிக் கொள்மினே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து கபாலமாகக் கொண்டு விளங்கியவர்; வெள்ளை இடபத்தை வாகனமாகக் கொண்டு ஏறி அமர்ந்தவர்; அருளின் எழில் திகழும் வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவர். சீற்றத்தின் தன்மையுடைய கூற்றுவன், என்மேல் கொடிய பாசக் கயிற்றை வீசி உயிரைக் கவரும்போது, நான் தேவரீரை மறந்தாலும், என்னைக் குறிக் கொண்டு காத்தருள் புரிவீராக.

930. சுழிப்பட்ட கங்கையும் திங்களும்
சூடிச் சொக்கம் பயின்றீர்
பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை
யீர்படர் தீப்பருக
விழிப்பட்ட காமனை விட்டீர்
மிழலையுள் மீர்பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினும்
என்னைக் குறிக் கொள்மினே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், கங்கையும் சந்திரனும் சூடிச் சொக்கம் என்னும் நடனத்தைப் புரிந்தவர்; பாம்பை அரையில் கட்டியவர்; மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தவர்; மிழலை என்னும் பதியில் வீற்றிருப்பவர். பிறவித் தளையால் இடர்ப்பட்டுத் தேவரீரை மறந்தாலும், என்னைக் குறியாகக் கொண்டு அருள் புரிவீராக.

931. பிள்ளையிற் பட்ட பிறைமுடி
யீர்மறை யோதவல்லீர்
வெள்ளையிற் பட்டதொர் நீற்றீர்
வரிநீர் மிழலையுள்ளீர்
நள்ளையிற் பட்டுஐவர் நக்கரைப்
பக்க நமன் தமர்தம்
கொள்ளையிற் பட்டு மறக்கினும்
என்னைக் குறிக் கொள்மினே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், இளம்பிறைச் சந்திரனை முடியில் கொண்டுள்ளவர்; வேதங்களை விரித்தோதவல்லவர்; பால் போன்ற வெண்மையான திருநீறு அணிந்தவர்; நீர்வளம் மிகுந்த மிழலை நகரில் வீற்றிருப்பவர்; ஐம்புலன்களின் நடுவில் நான் அகப்பட்டு, அவர்கள் என்னைப் பரிகசித்துப் பிய்த்து வஞ்சிக்க, நமனுடைய தூதுவர்கள் என் உயிரைக் கொள்ளை கொள்ளும் போது, தேவரீரை நான் மறந்தாலும், என்னைக் குறியாகக் கொண்டு காத்தருள் புரிவீராக.

932. கறுக்கொண்டு அரக்கன் கயிலையைப்
பற்றிய கையுமெய்யும்
நெறுக்கொண்டு இறச்செற்ற சேவடி
யாற்கூற்றை நீறுசெய்தீர்
வெறிக்கொன்றை மாலை முடியீர்
விரிநீர் மிழலையுள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொள்மினே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், இருள் கொண்ட அரக்கனாகிய இராவணன், வஞ்சம் கொண்டனவாகிக் கயிலையைப் பற்றி எடுக்கக் கையும் மெய்யும் நெருக்கி நலியுமாறு செற்றவர்; திருவடியால் கூற்றுவனை அழித்தவர்; நறுமணம் கமழும் கொன்றை மாலை அணிந்த திருமுடியுடையவர்; நீர் வளம் மிக்க மிழலையுள் வீற்றிருப்பவர். இறக்கும் காலத்தில் தேவரீரை நான் மறந்தாலும் என்னைக் குறியாகக் கொண்டு காத்து அருள் புரிவீராக.

திருச்சிற்றம்பலம்

96. திருச்சத்திமுற்றம் (அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்தி முற்றம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

933. கோவாய் முடுகி அடுதிறற்
கூற்றம் குமைப்பதன்முன்
பூவார் அடிச்சுவடு என்மேற்
பொறித்துவை போகவிடில்
மூவாமுழுப்பழி மூடும்கண்
டாய்முழங் கும்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

தெளிவுரை : நெருப்பை ஏந்தித் திருச்சத்திமுற்றத்தில் உறையும் ஈசனே ! சிவக்கொழுந்தே ! தானே தலைமை பூண்டவன் என்று முனைந்து, போர்திறமையுடைய கூற்றுவன், என்னை வஞ்சித்து அழிப்பதற்கு முன்னே, தேவரீர், பூப்போன்ற திருவடிச் சுவட்டினை என் மீது பொறித்து வைப்பீராக. அவ்வாறு செய்யாது விட்டீர் ஆயின், எக்காலத்திலும் மறையாத முழுப் பழியானது தேவரீரைச் சூழும்.

934. காய்ந்தாய் அனங்கன் உடலம்
பொடிபடக் காலனைமுன்
பாய்ந்தாய் உயிர்செகப் பாதம்
பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்தாய்ந்து அறுப்பாய் அடியேற்கு
அருளாய்உன் அன்பர்சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக் கொழுந்தே.

தெளிவுரை : திருச்சத்திமுற்றத்தில் உறையும் சிவக்கொழுந்தே ! தேவரீர், மன்மதனை எரித்தவர்; காலனின் உயிர் பிரிந்து ஏகுமாறு உதைத்தவர்; பணிந்து ஏத்துபவர்களுடைய பிறவிகளை ஆய்ந்து நீக்கி அருளுஞூபவர். அன்பர்களுடைய சித்தத்தில் மேவும் தேவரீர், அடியேற்கு அருள்வீராக.

935. பொத்தார் குரம்பை புகுந்துஐவர்
நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போல் மறுகும்என்
சிந்தை மறுக்கொழிலி
அத்தா அடியேன் அடைக்கலம்
கண்டாய் அமரர்கள்தம்
சித்தா திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

தெளிவுரை :  தேவர்களுடைய சித்தத்தில் மேவித் திருச்சத்திமுற்றத்தில் உறையும் சிவக்கொழுந்தீசப் பெருமானே ! ஒன்பது துவாரங்களையுடைய இவ்வுடம்பில் புகுந்து, ஐவராகிய புலன்கள் நாள்தோறும் இடையறாது மத்தில் கடையப் பெறும் தயிர் போல, என் சிந்தையில் புகுந்து வஞ்சித்துத் துன்புறுத்துகின்றன. அத்தனே ! தேவரீரிடம் அடைக்கலம் புகுந்தேன். காத்தருள் புரிவீராக.

936. நில்லாக் குரம்பை நிலையாக்
கருதிஇந் நீள்நிலத்தொன்று
இல்லாக் குழிவீழ்ந்து அயர்வுறு
வேனைவந்து ஆண்டுகொண்டாய்
வில்லேர் புருவத்து உமையாள்
கணவா விடிற் கெடுவேன்
செல்வா திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

தெளிவுரை : திருச்சத்திமுற்றத்தில் உறையும் செல்வனே ! சிவக்கொழுந்தீசனே ! நிலைத்திருக்கத் தகுதியில்லாத இவ்வுடம்பை, நிலையுடையதாக எண்ணிப் பல திறப்பட்ட இடர்க்குழியில் வீழ்ந்து அயற்சி யுற்றேன். என்னை ஆண்டு கொண்டு அருள்புரிவீராக. உமாதேவியின் நாயகரே ! வேதரீர், அடி÷னைக் கைவிடில் என்செய்வேன் !

937. கருவுற் றிருந்துன் கழலே
நினைந்தேன் கருப்புவியில்
தெருவிற் புகுந்தேன் திகைத்தடி
யேனைத் திகைப்பொழிலி
உருவிற் றிகழும் உமையாள்
திருவிற் பொலிசத்தி முற்றத்து
உறையும் சிவக் கொழுந்தே.

தெளிவுரை : செல்வம் பொலியும் சத்திமுற்றத்தில் உறையும் ஈசனே ! சிவக்கொழுந்து பெருமானே ! கருவுற்ற நாள் முதலாகத் தேவரீருடைய திருக்கழலையே நினைத்திருந்தேன். ஊரிடைத் தெருவில் புகுந்தபோது திகைத்து நின்றேன். அம்மையப்பராக விளங்கும் தேவரீர், அத்தகைய திகைப்பை ஒழித்தருள்வீராக. வேறுபட்டுக் கைவிடில் கொடுவேன். காத்தருள் புரிவீராக.

938. வெம்மை நமன்தமர் மிக்கு
விரவி விழுப்பதன் முன்
இம்மைஉன் தாள்என்றன் நெஞ்சத்து
எழுதிவை ஈங்குஇகழில்
அம்மை அடியேற்கு அருளுதி
என்பது இங்கு ஆர்அறிவார்
செம்மை தருசத்தி முற்றத்து
உறையும் சிவக் கொழுந்தே.

தெளிவுரை : செம்மை தருகின்ற சத்திமுற்றத்தில் உறையும் சிவக்கொழுந்து நாதனே ! கொடிய நமனுடைய தூதுவர்கள் என்னைக் கவர்ந்து என் உடலைச் சாய்த்த, விழச் செய்வதற்கு முன்னர், இப் பிறவியில் தேவரீருடைய திருவடி மலரை என் நெஞ்சில் எழுதி வைப்பீராக. அவ்வாறு இன்றி ஈங்கு இகழ்ந்து, மறுபிறவியில் தேவரீர் அடியேற்கு அருளுதலை எங்ஙனம் அறிதல் இயலும்.

939. விட்டார் புரங்கள் ஒருநொடி
வேரஓர் வெங்கணையால்
சுட்டாய்என் பாசத் தொடர்பறுத்து
ஆண்டுகொள் தும்பிபம்பும்
மட்டார்குழலி மலைமகள்
பூசை மகிழ்ந்தருளும்
சிட்டா திருச் சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

தெளிவுரை : தேன் மணம் கமழும் மலர்க் கூந்தலை உடைய உமாதேவியார் பூசித்து மகிழ்ந்தருளும் சிட்டனே ! திருச்சத்திமுற்றத்தில் உறையும் சிவக்கொழுந்து பெருமானே ! தேவரீர், பகைவராகிய மூன்று அசுரர்களின் புரங்கள் ஒரு நொடியில் வெந்து சாம்பலாகுமாறு, அக்கினியாகிய கணையால் எரித்தவர். உலகப் பற்றுக் கொண்டு மேவும் என் பாச உணர்வினை அறுத்து, ஆண்டு கொள்வீராக.

940. இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு
இமையோர் பொறைஇரப்ப
நிகழ்ந்திட்ட அன்றே விசயமும்
கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள்
தீரப் புரிந்த நல்காய்
திகழ்ந்த திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

தெளிவுரை : திருச்சத்திமுற்றத்தில் உறையும் சிவக்கொழுந்தே ! நீலகண்டப் பெருமானே ! இகழ்ந்த புரிந்த தக்கனின் வேற்வியைத் தகர்த்த தேவரீர், ஆங்கு யாகத்தில் பங்கேற்ற தேவர்கள் பொறுத்தருளுமாறு வேண்ட, அவ்வாறே அருள்புரிந்து ஆற்றலைப் புரிந்தீர். ஈசனே ! அதனை அடியேன் புகழ்ந்து ஏத்தியவன் ஆனேன். தேவர்களுடைய குற்றத்தைப் பொறுத்து அருள் புரிந்த பாங்கில், அடியவனின் புன்மைகளைப் பொறுத்து அருள் புரிவீராக.

941. தக்கார்வம் எய்திச் சமணர்தவிர்ந்து
உன்றன் சரண்புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன்திறம்
அல்லால் எனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா
மிகவட மேருஎன்னும்
திக்கா திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

தெளிவுரை : மிகுந்த அன்பினால் தில்லையில் திருநடம் புரியும் அன்பனே ! வடமேரு என்று போற்றப்படும் மேலான திக்கில் திகழும் ஈசனே ! திருச்சத்திமுற்றத்தில் வீற்றிருக்கும் சிவக்கொழுந்தே ! நான் சமணத்தைத் தவிர்த்துப் பேரன்புடன் தேவரீரைச் சரண் புகுந்தேன். நான் தேவரீருடைய திருவடியில் சரணம் அடைந்த பிறகு, என்னுடைய விருப்பம் என்பதும் நான் அடையும் பயன் என்பதும் தேவரீருடைய அருள் திறமேயன்றி, எனக்கு வேறு யாது உள்ளது !

942. பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப்பு
உற்றவன் பொன்முடித் தோள்
இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட்டு
அலற இரங்கி ஒள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய்
குற்றக் கொடுவினை நோய்
செறுத்தாய் திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

தெளிவுரை : திருச்சத்திமுற்றத்தில் உறையும் சிவக்கொழுந்தே ! இராவணன், கயிலை மலையை எடுக்க, அவனுடைய பொன் முடியும் தோளும் அழியுமாறு, திருப்பாத விரல் ஒன்றினால் ஊன்றி அலறச் செய்த தேவரீர், இரக்கம் கொண்டு ஒளி மிகுந்த வாளைக் கொடுத்தீர்; கொடியவனாகிய என்னுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொடிய வினைகளையும் பிறவிப் பிணியையும் நீக்கி அருள் செய்தவர். தேவரீரே. உமது கருணையை எவ்வாறு புகழ்ந்து ஏத்துவேன் !

திருச்சிற்றம்பலம்

97. திருநல்லூர் (அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், நல்லூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

943. அட்டுமின் இல்பலி என்று என்று
அகங்கடை தோறும்வந்து
மட்டவி ழுங்குழ லார்வளை
கொள்ளும் வகையென் கொலோ
கொட்டிய பாணி எடுத்திட்ட
பாதமும் கோளரவும்
நட்டநின்று ஆடிய நாதர்நல்
லூர்இடங் கொண்டவரே.

தெளிவுரை : தாளம் கொட்டும் தன்மைக்கு ஏற்ற திருப்பாதத்தைத் தூக்கி அரவும் ஆட, நின்று ஆடியவர், நல்லூரில் வீற்றிருக்கும் ஈசன். அப்பெருமான், தாருகாவனத்தில் உள்ள மகளிரின் இல்லங்கள்தோறும் சென்று உணவு இடுவீராக என்று கூறிக் கை வளையல்களைக் கொள்ளும் வகைதான் என்கொலோ !

944. பெண்ணிடம் பண்டைய தன்றுஇவை
பெய்பலிக்கு என்றுழல்வார்
நண்ணிட்டு வந்து மனைபுகுந்
தாருநல் லூரகத்தே
பண்ணிட்ட பாடலர் ஆடல
ராய்ப்பற்றி நோக்கிநின்று
கண்ணிட்டுப் போயிற்றுக் காரணம்
உண்டு கறைக் கண்டரே.

தெளிவுரை : பெண்ணாசை என்பது தொன்மையான தன்மையதன்று. பலி ஏற்க வேண்டும் என்னும் பான்மையில் ஈசன் திரிந்த பாங்காயிற்று. திருநல்லூரில் மேவும் பெருமான், பண் கொண்டு பாடுபவரும் ஆடுபவரும் ஆகிக் கறையுடைய கண்டத்தையுடைய வராய்க் கண் சாடை காட்டி, மனை புகுந்து பில கொண்டவராவார். இது, ஈசன், தாருகவனத்து மகளிர்தம் மனைதொறும் சென்று பலி ஏற்ற அழகினை ஓதிற்று.

945. படஏர் அரவல்குல் பாவைநல்
லீர்பக லேஒருவர்
இடுவார் இடைப்பலி கொள்பவர்
போலவந்து இல்புகுந்து
நடவார் அடிகள் நடம்பயின்று
ஆடிய கூத்தர்கொலோ
வடபாற் கயிலையும் தென்பால்
நல்லூரும்தம் வாழ்பதியே.

தெளிவுரை : படம் கொண்டு விளங்கும் அரவத்தைப் போன்ற அல்குல் உடைய பாவையர்கள் இடுகின்ற பலியைக் கொள்பவர் போல வந்து, இல்லம் புகுந்து, திருநடனம் புரியும் கூத்தர் அன்றோ, வடபுரத்தில் கயிலை மலையும், தென்புரத்தில் நல்லூரும் இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர்.

946. செஞ்சுடர்ச் சோதிப் பவளத்
திரள்திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டன்நல் லூர்உறை
நம்பனை நானொருகால்
துஞ்சிடைக் கண்டு கனவின்
தலைத் தொழு தேற்கவன்தான்
நெஞ்சிடை நின்றுஅகலான்பல
காலமும் நின்றனனே.

தெளிவுரை : செஞ்சுடர் ஆகிய சோதியும் பவளத் திரளும் உடைய திருமேனியில் முத்துப் போன்று ஒளிரும் நஞ்சினைக் கண்டத்தில் கொண்டவர். நல்லூரில் உறையும் சிவபெருமான். நான் துயிலும் போது ஒருமுறை அப்பெருமானைக் கனவில் கண்டு தொழுதேன். அவர் என் நெஞ்சிலிருந்து அகலாது நெடிது காலம் நின்றனரே.

947. வெண்மதி சூடி விளங்கநின்
றானைவிண் ணோர்கள்தொழ
நண்ணில யத்தொடு பாடல்அ
றாதநல் லூரகத்தே
திண்ணில யம்கொண்டு நின்றான்
திரிபுர மூன்றெரித்தான்
கண்ணுளும் நெஞ்சத்து அகத்தும்
உளகழற் சேவடியே

தெளிவுரை : ஈசன், வெண்மையான சந்திரனைச் சூடியவர்; விண்ணோர்களால் தொழுது ஏத்தப் படுபவர்; இயலத்துடன் பொருந்திய பாடல்களை எல்லாக் காலங்களிலும் பாடப் பெறும் நல்லூரில், திண்மையுடன் கோயில் கொண்டு விளங்குபவர்; முப்புரங்களை எரித்தவர். அவருடைய சேவடியானது, என் கண்ணிலும் நெஞ்சிலும் உள்ளது.

948. தேற்றப்படத்திரு நல்லூ
ரகத்தே சிவன்இருந்தால்
தோற்றப் படச்சென்று கண்டுகொள்
ளார்தொண்டர் துன்மதியால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினில்
தேடிய ஆதரைப் போல்
காற்றிற் கடுத்துல கெல்லாம்
திரிதர்வர் காண்பதற்கே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பவர்; அப்பெருமான், மெய்ப் பொருளானவர். அவர் நல்லூரில் இருப்பவர். அவரை அவ்விடத்தில் எல்லாத் தொண்டர்களும் காட்சிக்குப் புலப்படுமாறு சென்று தரிசிக்க வேண்டும். அவ்வாறின்றேல் துன்மதியால் ஆற்றில் தேடி அலைந்து குளத்திலும் தேடுதலைப் போலப் பயனற்றதாகும். இது, காற்றினும் மிக வேகமாகத் திரியுமாறு ஆகி நையும் தன்மையதாம்.

949. நாட்கொண்ட தாமரைப் பூத்தடம்
சூழ்ந்தநல் லூரகத்தே
கீட்கொண்ட கோவணம் காவென்று
சொல்லிக் கிறிபடத்தான்
வாட்கொண்ட நோக்கி மனைவி
யொடும்அங்கொர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும்அன்
றோஇவ் அகலிடமே.

தெளிவுரை : தாமரை மலரும் பொய்கையுடைய நல்லூரானது, கோவணத்தைப் பாதுகாப்பாயாக என்று சொல்லிப் பின்னர் வன்மை பேசி, அமர்நீதி நாயனாரை மனைவியோடு ஈசன் ஆட்கொண்டு அருளிய திருவருள் பதிந்த இடமன்றோ ! இத் திருப்பாட்டானது அமர்நீதி நாயனாரின் வரலாற்றைக் கூறும் திருத்தலச் சிறப்பினை உணர்த்திற்று.

950. அறைமல்கு பைங்கழல் ஆர்ப்பநின்
றான்அணி யார்சடைமேல்
நறைமல்கு கொன்றையந்தாருடை
யானுநல் லூரகத்தே
பறைமல்கு பாடலன் ஆடலன்
ஆகிப் பரிசழித்தான்
பிறைமல்கும் செஞ்சடை தாழநின்று
ஆடிய பிஞ்ஞகனே.

தெளிவுரை : ஈசன், காலில் வீரக் கழல் ஒலிக்க, அழகுடைய சடையின் மீது கொன்றை மலர் மாலை விளங்க, நல்லூரில் மேவிப் பாடலும் ஆடலும் நிகழ்த்தி, என்னைத் தன் வயப்படுத்தியவர். அவருடைய, பிறை அணிந்த செஞ்சடை விரிந்து அலைய அவர் திருநடனம் புரியும் பிஞ்ஞகனே.

951. மன்னிய மாமறை யோர்மகிழ்ந்து
ஏத்த மருவியெங்கும்
துன்னிய தொண்டர்கள் இன்னிசை
பாடித் தொழுது நல்லூர்க்
கன்னியர் தாமும் கனவிடை
உன்னிய காதலரை
அன்னியர் அற்றவர் அங்கண
னேஅருள் நல்கு என்பரே.

தெளிவுரை : மறைவல்ல அந்தணர்கள் போற்றி மகிழ்ந்து ஏத்த, நெருங்கிய திருத்தொண்டர்கள் இனிய இசையினால் தொழுது வணங்க, நல்லூரில் மேவும் கன்னியர் கனவிலும் மறவாது அங்கணனே அருளாய் என ஈசனை ஏத்தித் திகழ்வார்கள்.

952. திருவமர் தாமரை சீர்வளர்
செங்கழு நீர்கொள் நெய்தல்
குருவமர் கோங்கம் குராமகிழ்
சண்பகம் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட
மலிமறை யோர்கள் நல்லூர்
உருவமர் பாகத்து உமையவள்
பாகனை உள்குதுமே.

தெளிவுரை : திருமகள் வீற்றிருக்கும் தாமரை, சிறப்புடைய செங்கழுநீர்ப் பூக்கள், நெய்தல், கோங்கம், குரவம், மகிழம், சண்பகம் ஆகிய மலர்கள், பிரணவ புட்பமாகிய கொன்றை மலர், வன்னி ஆகியவை விளங்குகின்ற நிண்ட கொடிகளும் உயர்ந்த மாடங்களும் திகழ, அந்தணர்கள் வேதம் மேவி இருப்பது நல்லூர் ஆகும். ஆங்கு அம்மையப்பராக விளங்கும் ஈசனை நினைத்து ஏத்துவோமாக.

953. செல்லேர் கொடியன் சிவன்பெருங்
கோயில் சிவபுரமும்
வல்லேன் புகவு மதில்சூழ்
இலங்கையர் காவலனைக்
கல்லார் முடியொடு தோள்இறச்
செற்ற கழலடி யான்
நல்லூர் இருந்த பிரான் அல்ல
னோநம்மை ஆள்பனே.

தெளிவுரை : மிகவும் கொடியவனாகிய நான், சிவ பெருமான் வீற்றிருக்கும் கோயிலும் சிவபுரமும் சார்ந்திலேன். இலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய மணிகள் பதித்த முடியும், தோளும் நலியுமாறு செற்ற திருக்கழலையுடைய பெருமான். நல்லூரில் வீற்றிருக்கும் தலைவன் அல்லவா ! அவர் நம்மை ஆள்பவரே.

திருச்சிற்றம்பலம்

98. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

954. அந்திவட் டத்திங்கட் கண்ணியன்
ஐயாறு அமர்ந்து வந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின்
றானையும் பொய்என்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை
அலம்பச் சிறிது அலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை
வளாவிய நம்பனையே

தெளிவுரை : மாலை நேரத்தில் தோன்றும் மூன்றாம் பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடி, ஐயாறு அமர்ந்த ஈசன், என் புந்தியில் புகுந்து நின்றவர். அவர், சடை முடியில் நந்தியா வட்டமும் கொன்றை மலரும் அணிந்த பெருமான். என் நெஞ்சில் புகுந்த இறைவனைப் பொய் எனல் ஒல்லுமோ ?

955. பாடகக் கால்கழற் கால்பரி
திக்கதி ருக்க அந்தி
நாடகக் கானங்கை முன்செங்கண்
ஏனத்தின் பின்னடைந்த
காடகக் கால்கணங் கைதொழுங்
காலெங் கணாய் நின்றகால்
ஆடகக் காலரி மால்தேர
வல்லன்ஐ யாற்றனவே.

தெளிவுரை : ஈசன், பாடகம் எனப்படும் காலணியும் வீரக்கழலும் அணிந்து, சூரியனின் ஒளி சிந்தும் அந்தியில் உமாதேவியுடன் கானகத்தில் ஏனத்தின் பின்செல்லப் பதிணென் கணங்களும் ஏத்திய பாங்குடையது. அப் பெருமானுடைய திருப்பாதம் ஆகும். அத் திருப்பாதம், என் கண்களாகி நின்றன. அத்தகைய பொற்றாளினைத் திருமால் தேர்ந்து அறிய வல்லரோ ! அத் திருப்பாதங்கள் ஐயாற்றில் உள்ளனவே.

திருச்சிற்றம்பலம்

99. திருக்கச்சியேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

956. ஓதுவித் தாய்முன் னறவுரை
காட்டி அமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி
தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக்
கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாய்உகப் பாய்முனி
வாய்கச்சி யேகம்பனே.

தெளிவுரை : திருக்கச்சியில் வீற்றிருக்கும் திருவேகம்பப் பெருமானே ! தேவரீர், இளமையில் கல்வி புகட்டி ஓதுவித்தருளினீர்; பின்னர் சமணர்களின் தரும நூலைக் காட்டி அவர்களுடன் சேர்வித்து வருந்துமாறு செய்தீர்; சூலை நோய் கொண்டு பிணிக்கப் பெற அதனைத் தீர்த்தருளினீர்; என் நெஞ்சிற் கலந்து புகுந்து நின்றீர்; தேவரீருக்குச் செய்தும் ஏத்தும் திருத்தொண்டில் வஞ்சனையாகிய குற்றம் புரியப் புளியும் வளாரினால் மோதுவிப்பீர், குற்றம் செய்பவர்களை முனிந்து மறக் கருணையும், புண்ணியம் செய்பவர்களை உகந்து அறக் கருணையும் புரிபவர் தேவரீரே ஆவீர்.

957. எத்தைக்கொண்டு எத்தகை யேழை
அமணொடு இசைவித்துஎனைக்
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு
வித்துஎன்னக் கோகுசெய்தாய்
முத்தின்திரளும் பளிங்கனிற்
சோதியும் மொய்பவளத்
தொத்தினை யேய்க்கும் படியாய்
பொழிற்கச்சி யேகம்பனே.

தெளிவுரை : முத்தின் திரட்சியும், பளிங்கின் சோதியும் பவளத்தின் கொத்தும் அன்ன தன்மையுடைய பொழிற் சிறக்கும் கச்சியில் விளங்கும் திருவேகம்பப் பெருமானே ! எக்காரணத்தைக் கொண்டு அமணரோடு என்னை இசைவித்துக் குருடனுக்கு ஊமை வழிகாட்டுவதைப் போன்று என்னைக் இழியுமாறு செய்தீர் ?

958. மெய்யம்பு கோத்த விசயனொடு
அன்றொரு வேடுவனாய்ப்
பொய்யம்பு எய்துஆவம் அருளிச்செய்
தாய்புர மூன்றெரியக்
கையம்புஎய் தாய்நுன் கழலடி
போற்றாக் கயவர் நெஞ்சில்
குய்யம்பெய் தாய்கொடி மாமதில்
சூழ்கச்சி யேகம்பனே.

தெளிவுரை : பெரிய மதில்களும், நீண்ட கொடிகளும் விளங்குகின்ற கச்சியில் வீற்றிருக்கும் திருவேகம்பப் பெருமானே ! தேவரீர் மெய்யான அம்புகளைத் தொடுத்துப் போரிட்ட விசயனோடு, வேடுவனாகத் திருவடிவம் தாங்கிப் பொய்க் கணை தொடுத்துப் போர் செய்து, பாசுபதம் முதலான அத்திரங்களை அருளிச் செய்தீர்; முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு, ஓர் அம்பு எய்து வீரம் காட்டினீர்; திருவடியைப் போற்றி ஏத்தாத கயவருடைய நெஞ்சில் மறைந்து நிற்பீர்.

959. குறிக்கொண்டு இருந்துசெந் தாமரை
ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற
மால நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை
வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங்
காஞ்சியெம் பிஞ்ஞகனே.

தெளிவுரை : காஞ்சியில் வீற்றிருக்கும் ஈசனே ! தேவரீர், ஆயிரம் செந்தாமரை மலர் கொண்டு நாள்தோறும் அர்ச்சித்தும், இண்டை மாலை புனைந்து சாற்றியும், வழிபட்ட திருமாலுக்கு ஒரு பூ குறையுமாறு புரிந்து, அவருடைய கண்ணைப் பறித்து அர்ச்சிக்குமாறு செய்பவர்; பிறைச் சந்திரனை நீண்ட சடை முடியில் சூடியவர்.

960. உரைக்கும் கழிந்துஇங்கு உணர்வரி
யான்உள்கு வார்வினையைக்
கரைக்கும் எனக்கை தொழுவதல்
லாற்கதி ரோர்கள் எல்லாம்
விரைக்கொள் மலரவன் மால்எண்
வசுக்கள்ஏ காதசர்கள்
இரைக்கும் அமிர்தர்க்கு அறியவொண்
ணான்எங்கள் ஏகம்பனே.

தெளிவுரை : எங்கள் திருவேகம்பப் பெருமான், செல்லப்படும் உரைகளுக்கும் எண்ணப்படும் உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டவர்; வினையைத் தீர்த்தருள் புரிவீராக எனத் தொழுது ஏத்தும் அடியவர்களுக்கு அருள் புரிபவர்; திருமால், பிரமன் மற்றும் பன்னிரு ஆதித்தர்கள், பதினொரு உருத்திரர்கள், அட்ட வசுக்கள், மருத்துவர் இருவர் என வரும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அறியவொண்ணாதவர்.

961. கருவுற்ற நாள்முத லாகஉன்
பாதமே காண்பதற்கு
உருகிற்றேன் உள்ளமும் நானும்
கிடந்துஅலந்து எய்த்துஒழிந்தேன்
திருவொற்றியூரா திருஆல
வாயா திருஆரூரா
ஒருபற்றி லாமையும் கண்டுஇரங்
காய்கச்சி யேகம்பனே.

தெளிவுரை : திருக்கச்சித் திருவேகம்பப் பெருமானே ! நான் கருவுற்ற நாள் முதல் தேவரீருடைய திருப்பாதத்தைக் காண்பதற்கு உருகினேன்; உள்ளமும் உயிரும் கிடந்து அலைந்து தேவரீருடைய திருப்பாதத்தைக் காணப் பெறாது துயர் உற்றேன்; திருவொற்றியூர், திருஆலவாய், திருஆரூர் ஆகிய திருத்தலங்களில் வீற்றிருப்பவர் நீவிரே ! வேறு எப் பற்றும் இன்றித் தேவரீரையே பற்றி இருக்கும் என்னைக் கண்டு இரக்கம் கொண்டு அருள் புரிவீராக.

962. அரிஅயன் இந்திரன் சந்திர
ஆதித்தர் அமரர்எல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை
யார் உணங்காக் கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக
முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை யேகம்ப
என்னோ திருக்குறிப்பே.

தெளிவுரை : ஈசனே ! திருமால், பிரமன், இந்திரன், சந்திரன், ஆதித்தன் மற்றும் தேவர்கள் எல்லாரும் தேவரீர் வீற்றிருக்கும் வாயிற்புரத்தில் நின்று காண்பதற்கு இயலாது வருந்துதல் ஆயினர். சிவானந்த போகத்தில் விளங்கி மேவும் முனிவர்கள் புலம்புகின்றனர். எரியும் நெருப்புப் போன்று சிவந்த சடை உடைய திருவேகம்பப் பெருமானே ! தேவரீருடைய திருக்குறிப்புதான் யாதோ ?

963. பாம்பரைச் சேர்த்திப் படரும்
சடைமுடிப் பால்வண்ணனே
கூம்பலைச் செய்த கரதலத்து
அன்பர்கள் கூடிப்பன்னாள்
சாம்பரைப் பூசித் தரையிற்
புரண்டுநின் தாள்சரண்என்ற
ஏம்பலிப் பார்கட்கு இரங்குகண்
டாய்கச்சி யேகம்பனே.

தெளிவுரை : கச்சியேகம்பப் பெருமானே ! பாம்பை அரையில் கட்டிப் படரும் சடை முடியுடையவராகிப் பால் போன்ற திருவெண்ணீறு பூசிய ஈசனே ! அன்பர்கள் கூடி நின்று கைகளைக் கூப்பித் தொழுது பலகாலம் நோன்பிருந்து திருவெண்ணீறு பூசித் தேவரீருடைய திருவடியைச் சரணம் என்று உடல் வருத்தம் பாராது மகிழ்ச்சியுடன் ஏத்துபவர்களுக்கு இரங்கி அருளிச் செய்வீர்.

964. ஏன்றுகொண் டாய்என்னை எம்பெரு
மான்இனி அல்லம்என்னில்
சான்றுகண் டாய்இவ் வுலகமெல்
லாம்தனி யேன்என்றெனை
ஊன்றிநின் றார்ஐவர்க்கும் ஒற்றிவைத்
தாய்பின்னை யொற்றியெல்லாம்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப
மேய சுடர்வண்ணனே.

தெளிவுரை : திருக்கச்சி ஏகம்பத்தில் மேவி விளங்கும் சுடர் வண்ணனே ! தேவரீர், என்னை ஏற்றுக் கொண்டவர்; நான் உமது அடிமை; அதனை இல்லை என்று யாரும் சொல்ல முடியாதவாறு சான்று காட்டியவர்; நான் தனித்தவன் எனக் கருதி ஐம்புலன்களும் என்னைத் துன்புறுத்திய ஞான்று, தேவரீர் அவர்களை மாயச் செய்தவர்.

965. உந்திநின் றார்உன்றன் ஒலக்கச்
சூளைகள் வாய்தல் பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவர்
ஈட்டம் பணி யறிவான்
வந்துநின் றார்அய னும்திரு
மாலும் மதிற்கச்சி யாய்
இந்தநின் றோம்இனி எங்ஙன
மோவந்து இறைஞ்சுவதே.

தெளிவுரை : மதிலின் பெருமையுடைய திருக் கச்சியேகம்பத்தில் மேவும் பெருமானே ! தேவரீருடைய திருமகாமண்டபத்தில் அரம்பையர்கள் உந்திப் போந்து நிற்கவும், தேவர்கள் நெருங்கிச் சூழவும், திருக்கட்டளையை நிறைவேற்றும் பொருட்டுத் திருமாலும் பிரமனும் திருமுன்னர் மேவினர். யாம் இவ்விடத்தில் நின்று கொண்டிருக்கின்றோம். எங்ஙனம் சார்ந்து வந்து இறைஞ்சுவதே !

திருச்சிற்றம்பலம்

100. திருஇன்னம்பர் (அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னம்பூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

966. மன்னு மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொரு
ளாயின தூக்கமலத்து
அன்ன வடிவின அன்புடைத்
தொண்டர்க்கு அமுதரும்பி
இன்னல் களைவன இன்னம்ப
ரான்றன் இணையடியே.

தெளிவுரை : இன்னம்பரில் மேவும் ஈசனின் இணையடிகள், உமாதேவியாரால் வருடப் பெற்றன; வேதங்கள் கூறும் மெய்ப் பொருளாகியன்; தாமரை மலர் போன்ற மென்மையுடையன; அன்புடைய தொண்டர்களுக்கும் அமுதம் அளித்து இனிமை புரிந்து துயர்களைத் தீர்க்கும் அருள் தன்மையுடையன.

967. பைதற் பிணக்குழைக் காளிவெங்
கோபம்பங் கப்படுப்பான்
செய்தற் கரிய திருநடம்
செய்தன சீர்மறையோன்
உய்தற் பொருட்டு வெங்கூற்றை
உதைத்தன உம்பர்க் கெல்லாம்
எய்தற்கு அரியன இன்னம்ப
ரான்றன் இணையடியே.

தெளிவுரை : இன்னம்பரில் மேவிய இறைவனின் இணையடிகள், கோபம் கொண்டு போட்டியிட்டு நடனம் புரிந்த காளிதேவி, பங்கம் கொள்ளுமாறு நடனம் புரிந்தன; மார்க்கண்டேயர் உய்யும் பொருட்டுக் கொடிய கூற்றுவனை உதைத்து அழித்தன; அவை, தேவர்களும நெருங்க முடியாதவாறு அரிய பெருமை உடையன.

968. கணங்குநின் றார்கொங்கை யாளுமை
சூடின தூமலரால்
வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின
மன்னு மறைகள்தம்மில்
பிணங்கிநின்று இன்னன என்றுஅறி
யாதன பேய்கணத்தோடு
இண்ஙகிநின்று ஆடின இன்னம்ப
ரான்றன் இணையடியே.

தெளிவுரை : இன்னம்பரில் மேவும் இறைவனின் இணையடிகளானவை, உமாதேவியாரால் ஏத்தப் பெறுவன. தேவர்களால் தூமலர கொண்டுப் தூவிப் போற்றி அருச்சிக்ப்படுவன ! வேதங்களால் தேடியும் அறியப்படாதன; பேய்க் கணங்களோடு இணங்கி நின்று ஆடுவன.

969. ஆறொன் றியசம யங்களின்
அவ்வவர்க்கு அப்பொருள்கள்
வேறொன்றி லாதன விண்ணோர்
மதிப்பன மிக்குவமன்
மாறொன்றி லாதன மண்ணொடு
விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறொன்றி லாதன இன்னம்ப
ரான்றன் இணையடியே.

தெளிவுரை : இன்னம்பரில் மேவும் இறைவனின் இணையடிகள், ஆறு சமய நெறிகளுக்கும் அவ்வப் பொருள்களின் நெறியாகி, விண்ணோர்களால் மதித்து ஏத்துவனவாகி, விண்ணுலகமும் மண்ணுலகமும் மாய்ந்தாலும், எக்காலத்திலும் அழியாது நிலைத்து விளங்கும் சிறப்புடையன.

970. அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றி
னாலடல் அங்கியின் வாய்க்
கரக்கமுன் வைதிகத் தேர்மிசை
நின்றன கட்டுருவம்
பரக்கவெங் கானிடை வேடுரு
வாயின பல்பதிதோறு
இருக்க நடந்தன இன்னம்ப
ரான்றன் இணையடியே.

தெளிவுரை : இன்னம்பரில் மேவும் ஈசனின் இணையடிகள், முப்புரத்து அசுரர்களை அம்பு தொடுத்து எரித்துச் சாம்பலாக்கும் தன்மையில் வேதக் குதிரைகளைப் பூட்டிய தேர்மிசை நின்றன; அர்ச்சுனருக்கு அருள் செய்யும் பொருட்டுக் காட்டின்கண் வேடுவ வடிவம் தாங்கிச் சென்றன; பிரம கபாலம் ஏந்திப் பல ஊர்கள் திரிந்து, பலி ஏற்பதற்காக நடந்தன.

971. கீண்டும் கிளர்ந்தும்பொற் கேழல்முன்
தேடின கேடுபடா
ஆண்டும் பலபல ஊழியும்
ஆயின ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்கநின்று
ஆடின மேவு சிலம்பு
ஈண்டும் கழலின இன்னம்ப
ரான்றன் இணையடியே.

தெளிவுரை : இன்னம்பரில் மேவும் இறைவனின் இணையடிகள், திருமால் பன்றி வடிவம் தாங்கிப் பூமியைக் குடைந்து சென்று தேடியும் காலம் பல ஊழிகள் சென்றும் காண முடியாதபடி ஆயின; வேதப் பொருள்களை வேண்டுவார் தன்மையில் அவ்வவர்க்கு உரியவாறு திருநடனம் புரிவன; சிலம்பும் கழலும் கொண்டு மேவுவன.

972. போற்றும் தகையன பொல்லா
முயலகன் கோபப் புன்மை
ஆற்றும் தகையன ஆறு
சமயத்து அவரவரைத்
தேற்றும் தகையன தேறிய
தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றும் தகையன இன்னம்ப
ரான்றன் இணையடியே.

தெளிவுரை : இன்னம்பர் என்னும் தலத்தில் மேவும் ஈசனின் இணையடிகள், யாவராலும் போற்றி ஏத்தப்படுவன; சினந்து வந்து புன்மையனாகிய முயலகன் மீது நின்று நடனம் புரிந்து விளங்குவன; ஆறு சமயத்தினரைத் தேற்றி உய்வித்தருள்வன; ஆறு சமயத்தினரைத் தேற்றி உய்வித்தருள்வன; பக்குவன் பெற்ற ஆன்மாக்களாகிய சீவன்முத்தர்களைச்  சிவநெறியில் ஒழுகும் திருத்தொண்டர்களைச் செந்நெறிக்கே ஆக்கி, மும்மல நீக்கம் செய்து முத்தி தருவன.

973. பயம்புன்மை சேர்தரு பாவம்
தவிர்ப்பன பார்ப்பதிதன்
குயம்பொன்மை மாமல ராகக்
குலாவின கூடவொண்ணாச்
சாயம்புஎன் றேதகு தாணுஎன்
றேசதுர் வேதங்கள் நின்று
இயம்பு கழலின் இன்னம்ப
ரான்றன் இணையடியே.

தெளிவுரை : இன்னம்பரில் மேவும் ஈசனின் இணையடிகள், மன்னுயிர்களின் பயம், புன்மையைத் தரும் பாவங்கள் ஆகியனவற்றைத் தவிர்த்து ஆள்வன; உமாதேவியின் திருமேனியெனத் திகழ்வன; சுயம்பு என்றும் ஈசன் என்றும் நான்கு வேதங்களாலும் ஏத்தப் பெறுவன.

974. அயனொடு மாலிந் திரன் சந்த்ரா
தித்தர் அமரர் எலாம்
சயசய என்றுமுப் போதும்
பணிவன தண்கடல்சூழ்
வியனில் முற்றுக்கும் விண்ணுக்கும்
நாகர் வியனகர்க்கும்
இயல்பரம் ஆவனஇன்னம்ப
ரான்றன் இணையடியே.

தெளிவுரை : இன்னம்பரில் வீற்றிருக்கும் ஈசனின் இணையடிகள், பிரமன், திருமால், இந்திரன், சந்திரன், ஆதித்தர், தேவர்கள் என யாவராலும் சயசய என்று முப்போதுகளாகிய காலை, நண்பகம் (உச்சி), மாலை ஆகிய காலங்களில் போற்றி வணங்கப்படுவன; விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் ஆகியவற்றுக்கும் இயல் பரம் ஆவன.

975. தருக்கிய தக்கன்றன் வேள்வி
தகர்த்தன தாமரைப்போது
உருக்கிய செம்பொன் உவமன்இ
லாதன ஒண்கயிலை
நெருக்கிய வாளரக் கன்தலை
பத்து நெரித்தவன்றன்
இருக்கியல் பாயின இன்னம்ப
ரான்றன் இணையடியே.

தெளிவுரை : இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் இணையடிகள், தருக்கி நின்ற தக்கனுடைய வேள்வியைத் தகர்த்தன; உவமையாகக் கூறுவதற்குத் தாமரை மமலர் மற்றும் உருக்கிய செம்பொன் என்றாலும் இணையாகாதன; இராவணனுடைய பத்துத் தலைகளையும் நெரித்தன; அவன் ஏத்தி ஓதிய வேதங்களாக மேவுவன.

திருச்சிற்றம்பலம்

101. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

976. குலம்பலம் பாவரு குண்டர்முன்
னேநமக்கு ண்டு கொலோ
அலம்பலம் பாவரு தண்புனல்
ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி
யான்திரு மூலட்டானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

தெளிவுரை : ஆள் பலம் உடைய மூர்க்கரின் முன்பாக நமக்குப் பலம் உண்டுகொல் ! நீரின் ஒலியானது விளங்கிப் பெருகி வளம் பெருகும் ஆரூரில், பரந்த சடையுடைய ஈசன், சிலம்பின் ஒலி பரவத் திருவடியைத் தூக்கி ஆடுகின்ற பெருமான் ஆவார். அவர் வீற்றி திருமூலத்தானத்தில் திருத்தொண்டர்கள் பக்தி பூண்டு கசிந்துருகிக் கண்ணீர் பெருகி நிற்க, நாம் அத்தகையோருக்குத் தொண்டராவது புண்ணியம். அப்புண்ணியம் நமக்கு உண்டோ ! இத்தகைய புண்ணியமானது மூர்க்கரின் ஆள்பலத்தை விட விஞ்சியது என்பது குறிப்பால் உணர்த்துதலாயிற்று.

977. மற்றிடம் இன்றி மனைதுறந்து
அல்லுணா வல்லமணர்
சொற்றிடம் என்று துரிசுபட்
டேனுக்கும் உண்டு கொலோ
விற்றிடம் வாங்கி விசயனொடு
அன்றொரு வேடுவனாய்ப்
புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

தெளிவுரை : இருப்பிடம் இன்றி, மனையைத் துறுந்து இரவில் உணவு கொள்ளாத வன்மையுடைய அமணர்களுடைய சொற்களை உறுதி பயப்பனவாகக் கருதி குற்றத்தினை அடைந்தேன். அத்தகைய அடியேனுக்கு, வேடுவ வடிவம் தாங்கி விசயனோடு போரிட்ட புற்றிடங் கொண்ட பெருமானுடைய திருத் தொண்டருக்குத் தொண்டராகும் புண்ணியம் உண்டுகொல்.

978. ஒருவடி வின்றிநின்று உண்குண்டர்
முன்னமக்கு உண்டுகொலோ
செருவடி வெஞ்சிலை யாற்புரம்
அட்டவன் சென்றடையாத்
திருவுடை யான்திரு வாரூர்த்
திருமூலட் டானன் செங்கண்
பொருவிடை யானடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்தவர், சிவபெருமான். அவர், சென்றடையாத் திருவுடையவர்; திருவாரூர்த் திருமூலத்தானத்தில் விளங்குபவர்; போர்த் தன்மை உடைய செங்கண் மிளிரும் இடபத்தை வாகனமாக உடையவர். அப்பெருமானின் அடித்தொண்டருக்குக் தொண்டராகும் புண்ணியம் நமக்கு உண்டுகொல் !

979. மாசினை யேறிய மேனியர்
வன்கண்ணர் மொண்ணரைவிட்டு
ஈசனை யேநினைந்து ஏசறு
வேனுக்கும் உண்டுகொலோ
தேசனை ஆரூர்த் திருமூலட்
டானனைச் சிந்தைசெய்து
பூசனைப் பூசுரர் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

தெளிவுரை : மாசுடையவரும் கொடிய தன்மையுடைய வரும் ஆகிய சமணர் தம் நெறியினின்று விலகி ஈசனையே நினைந்து விரும்புகின்றேன். ஆரூர்த் திருமூலத்தானத்தில் வீற்றிருக்கும் சோதியைப் பூசனை செய்யும் அந்தணர்களின் தொண்டர்களுக்குத் தொண்டராகும் புண்ணியமானது, அடியேனுக்கும் உண்டு கொல் !

980. அருந்தும் பொழுதுஉரை யாடா
அமணர் திறம்அகன்று
வருந்தி நினைந்துஅர னேயென்று
வாழ்த்துவேற்கு உண்டுகொலோ
திருந்திய மாமதில் ஆரூர்த்
திருமூலட் டானனுக்குப்
பொருந்தும் தவமுடைத் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

தெளிவுரை : உணவு அருந்தும் பொழுது உரையாடல் செய்யாத இயல்பினையுடைய அமணர்களின் கோட்பாட்டிலிருந்து விலகி ஈசன் திருக்கழலை நினைந்து அரனே என்று வாழ்த்தி ஏத்துகின்றேன். ஆரூரில் மேவும் திருமூலட்டானர்பால் மனத்தை அடிமையாக்கி மேவும் தவத்தினர்க்குத் தொண்டராகும் புண்ணியமானது அடியேனுக்கும் உண்டு கொல் !

981. விங்கிய தோள்களும் தாள்களு
மாய்நின்று வெற்றரையே
மூங்கைகள் போல்உண்ணு மூடர்முன்
னேநமக்கு உண்டுகொலோ
தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த்
திருமூலட் டானன்செய்ய
பூங்கழ லானடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

தெளிவுரை : மிக்க பருமை யுடையவர்களாய் உண்ணும் போது உரை செய்யாது மேவும் அமணர்பால் நான் முன் இருந்திருக்க, ஆரூர்த் திருமூலட்டனாரின் செம்மை மிகும் பூங்கழலைத் தொழும் தொண்டர்க்குத் தொண்டராகும் புண்ணியம் உண்டு கொல் !

982. பண்ணிய சாத்திரப் பேய்கள்
பறிதலைக் குண்டரைவிட்டு
எண்ணில் புகழீசன் றன்னருள்
பெற்றேற்கும் உண்டுகொலோ
திண்ணிய மாமதில் ஆரூர்த்
திருமூலட் டானன் எங்கள்
புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே

தெளிவுரை : தாமே உண்டாக்கி வகுத்துக் கொண்ட சாத்திரங்களைக் கொள்கின்ற அமணரை விட்டு விலகி வந்து எண்ணிற்கு அடங்காத பெரும் புகழுடன் விளங்கும் ஈசனின் இனிய அருளைப் பெற்றனன். திண்மையான மதில்களையுடைய ஆரூர்த் திருமூலட்டானர் எங்கள் புண்ணிய மூர்த்தி ஆவார். அப்பெருமானின் திருவடியை ஏத்தும் தொண்டர்க்குத் தொண்டராகும் புண்ணியம் அடியேனுக்கு உண்டு கொல்.

983. கரப்பர்கள் மெய்யைத் தலைபறிக்
கச்சுகம் என்னும் குண்டர்
உரைப்பன கேளாதுஇங்கு உய்யப்போந்
தேனுக்கும் உண்டுகொலோ
திருப்பொலி யாரூர்த் திருமூலட்
டானன் திருக்கயிலைப்
பொருப்பன் விருப்பவர் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

தெளிவுரை : சமணர் உரைத்த சொற்களை விடுத்து இங்கு உய்வதற்காக வந்தேன். செல்வம் திகழும் ஆரூர்த் திருமூலத்தானத்தில் மேவும் இறைவன், திருக்கயிலை மலையில் விளங்குபவர். அப் பெருமானை விருப்பம் கொண்டவராய் ஏத்தும் தொண்டர்க்குத் தொண்டராகும் புண்ணியும் அடியேனுக்கும் உண்டு கொல் !

984. கையிலிடு சோறு நின்றுண்ணும்
காதல் அமணரை விட்டு
உய்யுநெறி கண்டிங்கு உய்யப்போந்
தேனுக்கும் உண்டுகொலோ
ஐயன் அணிவயல் ஆரூர்த்
திருமூலட் டானனுக்குப்
பொய்யன் பிலாஅடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

தெளிவுரை : நின்று கொண்டு உணவைக் கொள்வதில் விருப்பம் உடைய அமணரை விட்டு விலகி, உய்யும் நெறியைக் கண்டு இத் தலத்தில் உய்வதற்காகப் போந்தேன். தலைவனாகிய ஆரூர் மூலட்டானத்தில் மேவும் ஈசனுக்குப் பொய்யன்பிலாத திருவடித் தொண்டர்க்குத் தொண்டராகும் புணுஞூணியம் அடியேனுக்கும் உண்டுகொல் !

985. குற்றுமுடைய அமணர்
திறமது கையகன்றிட்டு
உற்றகருமம் செய்து உய்யப்போந்
தேனுக்கும் உண்டுகொலோ
மற்பொலி தோளான் இராவணன்
றன்வலி வாட்டுவித்த
பொற்கழ லான்அடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

தெளிவுரை : குற்றம் உடைய அமணர் தம் கொள்கையை நீத்து உற்ற பணி செய்து உய்யப் போந்தனன். இராவணனுடைய வலிமையை வதைத்த பொறண்கழல் உடைய ஈசனின் அடத் தொண்டர்க்குத் தொண்டராகும் புண்ணியம், அடியேனுக்கும் உண்டுகொல் !

திருச்சிற்றம்பலம்

102. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

986. வேம்பினைப் பேசி விடக்கினை
ஓம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றம்
துணையென்று இருத்திர்தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர்
அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித்
தொண்டுபட்டு உய்ம்மின்களே.

தெளிவுரை : உயிர்க்கு நன்மை பயவாத கைப்புச் சொற்களைக் கூறி, ஊன் பெருக்கும் இத்தேகத்தைப் பாதுகாத்துப் பிறவிக்குக் காரணமாகும் வினையைப் பெருக்கி, வயிற்றினை வளர்த்து, நமக்குச் சுற்றமே துணை என்று கருதி இருக்கும் மாந்தர்காள் ! தொண்டு பேணுவீர். ஆம்பல் பூக்களும் மலர்ப் பொய்கையும் உடைய ஆரூர் மேவிய ஈசனின் திருவடிக்கீழ் இருந்து, திருவெண்ணீறு அணிந்து, மனம் அசையாது ஒரு மித்து நின்று, தொண்டு புரிந்து, ஏத்தி உய்வீராக.

987. ஆராய்ந்து அடித்தொண்டர் ஆணிப்பொன்
ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிப்பந்தம் பங்குனி
உத்திரம் பாற்படுத்தான்
நாரூர் நறுமலர் நாதன்
அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் திருவிளக்கு இட்டமை
நீள்நாடு அறியுமன்றே.

தெளிவுரை : மாற்றறியா ஆணிப் பொன் போன்ற உறுதியும், தூய்மையும் மேன்மையும், பெருமையும் கொண்டு மேவும் தொண்டனார், ஆரூர்ப் பெருமானை அகத்தில் இருத்திய நம்பி நந்தி அடிகள் ஆவார். அவர் தண்ணீரால் விளக்கிட்டுத் திருப்பணி செய்தவர். பாரில் மேவும் ஊர்கள் யாவும் நன்கு மலர இணைக்கும் அன்பின் நார் போன்று விளங்கும் இத்தலமாகிய ஆரூரில் நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழா மிக்க சிறப்புடையதாகும்.

988. பூம்படி மக்கலம் பொற்படி
மக்கலம் என்றிவற்றால்
ஆம்படி மக்கலம் ஆகிலும்
ஆரூர் இனித அமர்ந்தார்
தாம்படி மக்கலம் வேண்டுவ
ரேற்றமிழ் மாலைகளால்
நாம்படி மக்கலம் செய்து
தொழுதும் மடநெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! ஆரூர்ப் பெருமான், திருவடிவத்தினைப் பூவாலும் பொன்னாலுமுஞூ எழில் அலங்காரம் செய்து காண இனிது வீற்றிருப்பவர். அப்பெருமான் திருக்குறிப்பால் உணர்த்தி அருள் புரிவாராயின், தமிழ்ப் பாடல்களால் நாம் படிமம் செய்து ஏத்துதும்.

989. துடிக்கின்ற பாம்பரை யார்த்துத்
துளங்கா மதியணிந்து
முடித்தொண்டர் ஆகிமுனிவர்
பணிசெய்வ தேயுமன்றிப்
பொடிக்கொண்டு பூசிப் புகும்தொண்டர்
பாதம் பொறுத்தபொற்பால்
அடித்தொண்டன் நந்தியென் பானுளன்
ஆரூர் அமுதினுக்கே.

தெளிவுரை : பாம்பை அரையில் இறுகக் கட்டி, அசைவில்லாத சந்திரனை மூடிக்கொண்டு மேவும் சிவசொரூபம் உடைய தலையாய தொண்டர்களும் முனிவர்களும் ஈசற்குப் பணி செய்யவும், திருநீறு பூசிய திருத்தொண்டர்கள திருப்பாதம் தாங்கிப் புகழ் விளங்கி மேவவும், அணுக்கத் தொண்டராம் நமிநந்தியடிகள் என்பவர் தொண்டாற்றவும் உள்ளனர். அத்தகைய பேரருள் மேயபிரான் ஆரூரின் அமுதம் எனத் திகழும் பரமரே.

990. கரும்பு பிடித்தவர் காயப்பட்
டார்அங்கொர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்புறப்
பட்டார் இவர்கள் நிற்க
அரும்பவிழ் தண்பொழில் சூழ்அணி
ஆரூர் அமர்ந்த பெம்மான்
விரும்பு மனத்தினை யாதென்று
நானுன்னை வேண்டுவதே.

தெளிவுரை : கரும்பாகிய சுவையுள்ளதைக் கொண்டு விளங்கும் மன்மதனை எரித்து, இரும்பாகிய கோடாலியைக் கொண்ட சண்டேசுவருக்கு இன்புறச் செய்த பெருமான், ஈசன். அவர், தண்மை விளங்கும் பொழில் சூழ்ந்த ஆரூரில் வீற்றிருப்பவர். ஈசனே ! தேவரீரை விரும்பும் மனத்தினை உடையான், யாது வேண்டுவதே !

991. கொடிகொள் விதானம் கவரி
பறைசங்கம் கைவிளக்கோடு
இடிவில் பெருஞ்செல்வம் எய்துவர்
எய்தியும் ஊனமுல்லா
அடிகளும் ஆரூர் அகத்தினர்
ஆயினும் அந்தவளப்
பொடிகொண்டு அணிவார்க்கு இருளொக்கும்
நந்தி புறப்படிலே.

தெளிவுரை : திருவாரூரில், கொடி, விதானம், கவரி, பறை, சங்கு முழக்கம், கை விளக்கு, அழிதலும் குறைதலும் இல்லாத அளவற்ற பெருஞ் செல்வம் குறைதலும் இல்லாத அளவற்ற பெருஞ் செல்வம் ஆகியன யாவும் எய்தி, ஊனம் இல்லாத திருத்தொண்டர்கள் உள்ளனர். ஆயினும், அத்தகைய நீறுஅணியும் திருத்தொண்டர்கள் நமிநந்தி அடிகளின் தரிசனம் காணாராயின் இருளைக் கண்டது போல் அயர்வு கொள்வர்.

992. சங்கொலிப் பித்திடு மின்சிறு
காலைத் தட அழலில்
குங்குலி யப்புகைக் கூட்டென்றும்
காட்டி இருபதுதோள்
அங்குலம் வைத்தவன் செங்குரு
திப்புன லோடஅஞ்ஞான்று
அங்குலி வைத்தான் அடித்தா
மரை என்ன ஆண்டனவே.

தெளிவுரை : திருத்தொண்டர்களே ! சங்குகளை ஒலித்து முழக்குவீர் ! குங்குலியப் புகை காட்டி ஏத்துவீர் ! இருபது தோளுடைய இராவணன் நெரியுமாறு விரலினால் மலையை ஊன்றி, இரத்தப் பெருக்கினைக் செய்தவர், ஈசன். அப்பெருமானுடைய திருவடித் தாமரையானது என்னை ஆட்கொண்டன.

திருச்சிற்றம்பலம்

103. திருநாகைக்காரோணம் (அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்)

திருச்சிற்றம்பலம்

993. வடிவுடை மாமலை மங்கைபங்
காகங்கை வார்சடை யாய்
கடிகமழ் சோலை கலவு
கடல்நாகைக் காரோணனே
பிடிமத வாரணம் பேணும்
துரகநிற் கப்பெரிய
இடிகுரல் வெள்ளெரு
என்னைகொல் எம்இறையே.

தெளிவுரை : அழகும் பெருமையும் உடைய இமாசலத்தின் மங்கையாகிய உமாதேவியாரைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு மேவும் ஈசனே ! கங்கையை நீண்ட சடையில் கொண்டு விளங்கும் பெருமானே ! நறுமணம் கமழும் சோலை விளங்கும் கடல் நாகைக் காரோணத்தில் மேவும் பரமனே ! போற்றப்படுகின்ற யானையும் குதிரையும் விடுத்துத் தேவரீர், இடியோசை போன்று குரல் எழுப்பும் வெள்ளை இடபத்தை வாகனமாகக் கொண்டு ஏறுகின்றீர். எம் இறைவனே ! இது என்கொல் !

994. கற்றார் பயில்கடல் நாகைக்கா
ரோணத்துஎம் கண்ணுதலே
வில்தாங் கியகரம் வேல்நெடுங்
கண்ணி வியன்கரமே
நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித்
தகர நின்கரமே
செற்றார் புரம்செற்ற சேவகம்
என்னைகொல் செப்புமினே.

தெளிவுரை : வேதங்களைக் கற்ற மேன்மக்கள் பயிலும் கடல் சூழ்ந்த நாகையில் திகழும் காரோணத்தில் வீற்றிருக்கும் எம் கண்ணுதலே ! தேவரீர், பகைமை கொண்ட முப்புரங்களைக் கணை தொடுத்து எரித்து அழித்த போது, வில்லைத் தாங்கிப் பிடித்த திருக்கரமானது, இடப்பாகத்தில் வேல் போன்ற நெடிய விழியுடைய உமாதேவியின் திருக்கரமே, நெடுமையான வில்லைத் திருப்பாதத்தால் அழுத்தி, நாண் வலித்துத் தொடுத்த கரமானது, தேவரீருடைய திருக்கரம். தேவரீருடைய அருளிச் செயலின் கருணையை, அளவிட்டு உரைப்பதற்கு அரியதே !

995. தூமென் மலர்க்கணை கோத்துத்தீ
வேள்வி தொழிற் படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த
கடல்நாகைக் காரோண நின்
நாமம் பரவி நமச்சிவாய
என்னும் அஞ்செழுத்தும்
சாம்அன்று உரைக்கத் தருதிகண்
டாய்எங்கள் சங்கரனே.

தெளிவுரை : தூய்மையான மென்மலர்களைக் கணையாகத் தொடுத்து எய்த மன்மதனை எரியுமாறு செய்து, சாம்பலாக்கிய ஈசனே ! கடல் சூழ்ந்த நாகையில் மேவும் காரோணத்தில் வீற்றிருக்கும் பெருமானே ! தேவரீருடைய திருநாமமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தை, உயிரானது பிரிகின்ற காலத்தில் எங்கள் சங்கரனே ! அடியேன் உரைக்குமாறு அருள் புரிவீராக.

996. பழிவழி யோடிய பாவிப்
பறிதலைக் குண்டர்தங்கள்
மொழிவழி யோடி முடிவேன்
முடியாமைக் காத்துக்கொண்டால்
கழிவழி ஓதம் உலவும்
கடல்நாகைக் காரோணஎன்
வழிவழி யாளாகும் வண்ணம்
அருள்எங்கள் வானவனே.

தெளிவுரை : சமணர்களின் மொழிவாய்ப்பட்டு உழன்று, அழிய இருந்த என்னைத் தடுத்துக் காத்தருளிய ஈசனே ! கால் சூழ்ந்த நாகையில் மேவும் காரோணத்தில் வீற்றிருக்கும் நானே ! தேவரீருக்கு வழி வழியாக ஆட்பட்டுக் பெருமையடையும் பேற்றினை அருள்வீராக.

997. செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை
வெண்ணகைத் தேன்மொழியார்
வந்துவலம் செய்து மாநடம்
ஆட மலிந்த செல்வக்
கந்த மலிபொழில் சூழ்கடல்
நாகைக்கா ரோணம் என்றும்
சிந்தைசெய் வாரைப் பிரியாது
இருக்கும் திரு மங்கையே.

தெளிவுரை : செம்மையின் வண்ணம் திகழும் வாயும், கரிய கண்களும், முத்துப் போன்ற வெண்மையான பற்களும் இனிய மொழியும் உடைய மகளிர், வலம் செய்து நடனம் புரியும் நறுமணச் சோலை சூழ்ந்த இடமாவது, கடல் நாகைக் காரோணம் ஆகும். அத் திருத்தலத்தைச் சிந்தை செய்பவர்கள்பால் திருமகள் பிரியாது வாசம் செய்வாள்.

998. பனைபுரை கைம்மத யானை
உரித்த பரஞ்சுடரே
கனைகடல் சூழ்தரு நாகைக்கா
ரோணத்துஎங் கண்ணுதலே
மனைதுறந்து அல்லுணா வல்லமண்
குண்டர் மயக்க நீக்கி
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என்இனி
யான்செயும் இச்சைகளே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்த பரஞ்சுடரே ! கடல் சூழ்ந்த நாகைக் காரோணத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானே ! இல்லறத்தைத் துறந்து இரவில் உறவு கொள்ளாதவராகிய வலிய அமணர்பால் ஆட்கொண்ட தேவரீருக்கு யான் செய்ய வேண்டிய கைம்மாறுதான் யாது? இது, ஈசன் புரிந்த பேரருளுக்குக் கைம்மாறு யாதும் ஈடாகாது என்பதும், மறவாது ஏத்துதலை அன்றி, மன்னுயிரால் ஆற்றுவதும் யாதும் இல்லை என்பதும் குறிப்பு.

999. சீர்மலி செல்வம் பெரிது
உடைய செம்பொன் மாமலையே
கார்மலி சோலை கலவு
கடல்நாகைக் காரோணனே
வார்மலி மென்முலை யார்பலி
வந்திடச் சென்றிரந்து
ஊர்மலி பிச்சைகொடு உண்பது
மாதிமை யோஉரையே.

தெளிவுரை : சிறப்பின் மிக்க செல்வம் பெரிதும் உடைய மேருமலையாக உடைய பெருமானே ! கருமுகில் தவழும் சோலை சூழ்ந்த கடல் விளங்கும் நாகையில் மேவும் காரோணத்தில் வீற்றிருக்கும் ஈசனே ! மகளிர் இல்லம்தோறும் சென்று பலி தேர்ந்து பிச்சை எடுத்து உண்பது தகுந்ததாமோ ! உரைப்பீராக.

1000. வங்கமலிகடல் நாகைக்கா
ரோணத்துஎம் வானவனே
எங்கள் பெருமானொர் விண்ணப்பம்
உண்டது கேட்டருளீர்
கங்கை சடையுட் கரந்தாய்அக்
கள்ளத்தை மெள்ளஉமை
நங்கை ஆறியிற்பொல் லாதுகண்
டாய்எங்கள் நாயகனே.

தெளிவுரை : கடல் நாகைக் காரோணத்தில் வீற்றிருக்கும் நாயகனே ! எம் வானவனே ! எங்கள் பெருமானே ! தேவரீரிடம் ஒரு விண்ணப்பம் உண்டு, கேட்டருள்க. கங்கையைச் சடை முடியில் மறைத்து வைத்துள்ளீர் ! அக் கள்ளத்தைத் தேவரீருடைய திருமேனியில் பாகங் கொண்டு மேவும் உமாதேவியார் மெள்ள அறிந்தால், பொல்லாங்கு விளையும் அல்லவா ! என் செய்வீர் ! இது, உலகியலை ஒட்டிக் கவி நயம் தோன்ற விளம்புதலாயிற்று.

1001. கருந்தடங் கண்ணியும் தானும்
கடல்நாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை என்றிறைஞ்
சாதன்று எடுக்கலுற்றான்
பெருந்தலை பத்தும் இருபது
தோளும் பிதிர்ந்தலற
இருந்தரு ளிச்செய்த தேமற்றுச்
செய்திலன் எம்இறையே.

தெளிவுரை : நீலாயதாட்சி என்னும் திருநாமம் கொண்ட தேவியுடன் காரோணத்தான் மேவும் திருமலை என ஏத்தி வழிபாடு செய்யாத இராவணனுடைய தலையும் தோளும் நெரித்து அலறுமாறு அருளிச் செய்ததும் அன்றி, எம் இறைவன் செய்தது வேறு யாதும் இல்லை.

திருச்சிற்றம்பலம்

104. திருவதிகைவீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1002. மாசில்ஒள் வாள்போல் மறியு
மணிநீர்த் திரைத்தொகுதி
ஊசலை யாடியங்கு ஒண்சிறை
அன்னம் உறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய
வண்டுபண் பாடல்கண்டு
வீசும் கெடில வடகரைத்
தேஎந்தை வீரட்டமே.

தெளிவுரை : எம் தந்தையாகிய ஈசன் எழுந்தருளியுள்ள வீரட்டமானது கெடில நதியின் வடகரையில் உள்ளது. அக்கெடில நதியானது, நீல மலர்களில் உள்ள தேனைப் பருகிய வண்டுகள் இசைக்க, அன்னப் பறவைகள் உறங்கத் தெளிந்த நீரையுடைய பெருமையுடையது.

1003. பைங்கால் தவளை பறைகொட்டப்
பாசிலை நீர்ப்படுகர்
அங்கால் குவளை மேலாவி
உயிர்ப்ப அருகு லவும்
செங்கால் குருகிவை சேரும்
செறிகெடி லக்கரைத்தே
வெங்கால் குருசிலை வீரன்
அருள்வைத்த வீரட்டமே.

தெளிவுரை : வெம்மையுடைய மேருமலையை வில்லாகக் கொண்டு ஈசன் வீற்றிருக்கும் வீரட்டமானது, கெடில நதியின் கரையில் உள்ளது. அக்கெடில நதியானது, கரையில் உள்ள நீர்க் குழிகளில் தவளைகள் பறையொலி போன்று எழுப்பவும், குவளை மலர்கள் செறிந்து மேவ செங்காற் குருகுகள் சேர்ந்து விளங்கும் பெருமையும் உடையது.

1004. அம்மலர்க் கண்ணியர் அஞ்சனம்
செந்துவர் வாய்இளையார்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு
மாலை எடுத்தவர்கள்
தம்மருங் குற்கிரங் கார்தடந்
தோள்மெலி யக்குடைவார்
விம்மு புனற்கொடி லக்கரைத்
தேஎந்தை வீரட்டமே.

தெளிவுரை : எந்தை ஈசன் வீற்றிருக்கும் வீரட்டமானது கெடில நதிக்கரையில் உள்ளது. அக்கொடில நதியானது, அழகிய செந்தாமரை போன்ற கண்களையுடைய இளைய மங்கையர்கள் மையும் சந்தனமும் பூசியவர்களாய், மலர்கள் சூடிய கூந்தலை உடையவர்களாய்க் குடைந்தாடும், நீர்வளம் உடையது.

1005. மீனுடைத் தண்புனல் வீரட்ட
ரேநும்மை வேண்டுகின்றதி
யானுடைச் சில்குறை ஒன்றுள
தானுறுந்தண் ணெருக்கின்
தேனுடைக் கொன்றைச் சடையுடைக்
கங்கைத் திரைதவழும்
கூனுடைத் திங்கட் குழவியெப்
போதும் குறிக்கொள்மினே.

தெளிவுரை : மீன்கள் திகழும் குளிர்ந்த நீர் உடைய கெடில நதிக்கரையில் உள்ள வீரட்டத்தில் விளங்கும் ஈசனே ! தேவரீர்பால் சிறிய விண்ணப்பம் ஒன்றுள்ளது. எருக்கம் பூவும், தேன் மணக்கும் கொன்றை மலரும் விளங்கும் சடையில் திகழும் கங்கையின் அலைகளால் திங்கள் குழவியைக் குறிக்கொண்டு அருள்வீராக.

1006. ஆரட்ட தேனும் இரந்துண்டு
அகமக வன்திரிந்து
வேரட்ட நிற்பித் திடுகின்ற
தால்விரி நீர்ப் பரவைச்
சூரட்ட வேலவன் தாதையைச்
சூழ்வய லார்அதிகை
வீரட்டத் தானை விரும்பா
அரும்பாவ வேதனையே.

தெளிவுரை : யார் சமைத்தாலும் அகந்தோறும் திரிந்து நின்று அவர்கள் இடுகின்றதால், அதனை ஏற்றுக் கொண்டு மகிழும் ஈசன், சூரனை அழித்த வேலனின் தாதையானவர். அவர், வயல் சூழ்ந்த அதிகையில் மேவும் வீரட்டத்தில் உள்ளவர். பாவமும் துன்பமும் அப் பெருமானை எக்காலத்திலும் அணுகுவதில்லை. இது நிமலன், அமலன் என்னும் சொல்லின் பெருளினை உணர்த்துவதாயிற்று.

1007. படர்பொற் சடையும் பகுவாய்
அரவும் பனிமதியும்
சுடலைப் பொடியும்எல் லாம்உள
வேஅவர் தூயதெண்ணீøர்க்
கெடிலக் கரைத்திரு வீரட்டர்
ஆவர்கெட் டேன்அடைந்தார்
நடலைக்கு நற்றுணை யாகும்கண்
டீர்அவர் நாமங்களே.

தெளிவுரை : படர்ந்து விரிந்து பொலியும் பொன் போன்ற சடையும், பாம்பும், சந்திரனும், சுடலையின் சாம்பலும் உடைய ஈசன், தெளிந்த நீர் விளங்கும் கெடிலந்திக் கரையில் திகழும் வீரட்டேஸ்வரர் ஆவர். அப்பெருமானின் திருநாமங்கள், துன்பத்தலிருந்து காத்துத் துணையாக விளங்கும் பெருமையுடையன எனத் தெளிவீராக.

1008. காளம் கடந்ததொர் கண்டத்த
ராகிக்கண் ணார் கெடில
நாளங் கடிக்கொர் நகரமு
மாதிற்கு நன்இசைந்த
தாளங்கள் கொண்டு குழல்கொண்டும்
யாழ்கொண்டும் தாம்அங்ஙனே
வேளங்கள் கொண்டும் விசும்புசெல்
வாரவர் வீரட்டரே.

தெளிவுரை : நஞ்சினை உடைய கண்டத்திராகிய ஈசன், கெடில நதிக்கரையில் உள்ள நகரில் உமாதேவியாருக்கு இசைவான பாட்டும், தாளுமும், குழலும், யாழும் கொண்டு தாம் நடனம் ஆடி, வானில் திகழ்வார். அவர் வீரட்டரே.

திருச்சிற்றம்பலம்

105. திருப்புகலூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1009. தன்னைச் சரண்என்று தாளடைந்
தேன்றன் அடியடையப்
புன்னைப் பொழிற்புக லூர்அண்ணல்
செய்வன கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத்து என்வினை
கட்டறுத்து ஏழ்நரகத்து
என்னைக் கிடக்கலொட் டான்சிவ
லோகத்து இருத்திடுமே.

தெளிவுரை : நான், சரணம் என்று ஈசன் திருத்தாளைப் பற்றி அடைந்து நிற்கப் புன்னைப் பொழில் விளங்கும் புகலூரில் வீற்றிருக்கும் அண்ணல், அருளிய தன்மையைக் கேட்பீராக. அப்பெருமான், என்னுடைய பிறவியை அறுத்து, வினைக் கட்டறுத்து, ஏழ் நரகில் புகவொட்டாது காத்தருளினார். அப்பெருமானின் பேரருளானது, என்னைச் சிவலோகத்தில் இருக்கச் செய்யும்.

1010. பொன்னை வகுத்தன்ன மேனிய
னேபுணர் மென்முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்த
னேதமி யேற்கு இரங்காய்
புன்னை மலர்த்தலை வண்டுஉறங்
கும்புக லூர்அரசே
என்னை வகுத்திலை யேல்இடும்
பைக்கிடம் யாதுசொல்லே.

தெளிவுரை : பொன் போன்ற திருமேனியுடைய ஈசனே ! உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்கும் பெருமானே ! தமியனேற்கு இரக்கம் கொண்டு அருள் புரிவீராக. புன்னை மலர்களில் உள்ள தேனை, வண்டு உண்டு உறங்கும் புகலூரில் மேவும் நாதனே ! என்னை அருள் வயத்தினனாகச் செய்யீராயின், யான் துன்பத்திற்கே இடமாகி நைவேன். அடியேனைக் காத்தருள் புரிவீராக.

1011. பொன்னள வார்சடைக் கொன்றையி
னாய்புக லூர்அரசே
மன்னுள தேவர்கள் தேடு
மருந்தே வலஞ்சுழியாய்
என்னளவே உனக்கு ஆட்பட்டு
இடைக்கலத் தேகிடப்பார்
உன்னள வேஎனக்கு ஒன்றும்
இரங்காத உத்தமனே.

தெளிவுரை : பொன்னை ஒத்த நீண்ட சடையில்  கொன்றை மலர் தரித்து மேவும் புகலூர் நாதனே ! பெருமைக்குரிய தேவர்கள் தேடுகின்ற மருந்தே ! திருவலஞ் சுழியில் மேவும் ஈசனே ! தேவரீர்பால் நான் இடைக்காலத்தில் ஆட்பட்டுக் கிடக்கின்றேன். உத்தமனே ! தேவரீர் இரக்கம் கொண்டு அருள் புரிவீராக.

1012. ஓணப்பிரானும் ஒளிர்மா
மலர்மிசை உத்தமனும்
காணப் பராவியும் காண்கின்
றிலர்களும் நாலைந்துடைத்
தோணப் பிரானை வலிதொலைத்
தோன்தொல்லை நீர்ப்புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக்
குறுகா கொடுவினையே.

தெளிவுரை : திருவோண நாளுக்குரிய திருமாலும், மலர் மிசை விளங்கும் பிரமனும் காண்பதற்கு அரியவராகிய சிவபெருமான், இருபது கரமுடைய இராவணனுடைய வலிமையை அழித்த நீர்வளம் மேவும் புகலூரில் வீற்றிருக்கும் கோணப் பிரான் ஆவார். அப் பெருமானை நாம் அடைய, வினை நம்மை அடையாது.

திருச்சிற்றம்பலம்

106. திருக்கழிப்பாலை (அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை, கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1013. நெய்தற் குருகுதன் பிள்ளையென்று
எண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழிப்
பாலை யதனுறைவாய்
பைதற் பிறையொடு பாம்புடன்
வைத்த பரிசறி யேஎம்
எய்தப் பெறின்இரங் காதுகண்
டாய்நம் இறையவனே.

தெளிவுரை : தாழைக் குருத்தினைக் கண்டு நெருங்கிச் சென்று தனது பிள்ளை என நோக்கும் நெய்தற் குருகுகள் உள்ள இடமாகிய கழிப்பாலையில் மேவும் ஈசனே ! இளமையான பிறை சந்திரனுடைய பாம்பினை உடன் வைத்த பரிசினை யாம் அறிய மாட்டோம். இறைவனே ! இரக்கம் கொண்டு அருள் புரிவீராக.

1014. பருமா மணியும் பவளமுத்
தும்பரந்து உந்திவரை
பொருமால் கரைமேல் திரைகொணர்ந்து
எற்றப் பொலிந்து இலங்கும்
கருமா மிடறுடைக் கண்டன்எம்
மான்கழிப் பாலைஎந்தை
பெருமான் அவர்என்னை யாளுடை
யான்இப் பெருநிலத்தே.

தெளிவுரை : பருத்த மாணிக்க மணியும் பவளமும் முத்தும் பரந்து பெருகி உந்திக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் கடல் அலைகள் எற்றும் கழிப்பாலையில் மேவும் நீலகண்டனாகிய எம் ஈசனே, இப்புவியில் என்னை ஆளாக உடையவரே.

1015. நாட்பட்டு இருந்து இன்பம் எய்தலுற்று
இங்கு நமன்தமரால்
கோட்பட்டு ஒழிவதன் முந்துற
வேகுளிர் ஆர்த்தடத்துத்
தாள்பட்ட தாமரைப்  பொய்கையந்
தண்கழிப் பாலை யண்ணற்கு
ஆட்பட்டு ஒழிந்தமன் றேவல்ல
மாயிவ் வகலிடத்தே.

தெளிவுரை : நெடுங்காலம் இருந்து இன்பத்தை அடைந்து பின்னர் நமனுடைய ஆட்களால் வளைக்கப் பெற்றுத் துன்புறுவதன் முன்னர், தாமரைப் பொய்கை விளங்கும் கழிப்பாலையில் மேவும் ஈசற்கு நாம் ஆட்பட்டு, இவ் உலகத்தில் அத்தகைய இடர்களை ஒழித்தனம்.

திருச்சிற்றம்பலம்

107. திருக்கடவர்வீரட்டம் (அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1016. மருட்டுயர் தீரஅன்று அர்ச்சித்த
மாணி மார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவாள்
எயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம்
பதைப்ப உதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட
வூர்உறை உத்தமனே.

தெளிவுரை : மருட்சியால் உற்ற துயர் தீர அன்று அருச்சித்து ஏத்தி பிரமசாரியாகிய மார்க்கண்டேயருக்காக கரிய மேனியும் வளைந்த பல்லும் நெருப்பு போன்ற தலைமுடியும் சுருட்டி மடங்கிய நாவும் கொண்ட வெங்கூற்றுவனைப் பதைத்து அழியுமாறு உதைத்த சேவடி உடைய ஈசன், கடவூரில் உறையும் உத்தமனே ஆவார்.

1017. பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்து
ஓதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணிதன் இன்னுயிர்
உண்ண வெகுண்டு அடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு
திப்புனல் ஆறொழுக
உதைத்தெழு சேவடியான்கட
வூர்உறை உத்தமனே.

தெளிவுரை : பதமாக எழும் மந்திரமாகிய திருவைந்தெழுத்தை ஓதிப்பேரன்பு கொன்று இனிமை விளங்க ஏத்தும் பிரமசாரியாகிய மார்க்கண்டேயரின் இன்னுயிரைக் கொள்ளும் நோக்கில், வெகுண்டு எழுந்த காலனைக் கண்ணில் குருதி பெருக உதைத்த சேவடியுடையவர், கடவூரில் வீற்றிருக்கும் உத்தமன் ஆவார்.

1018. கரப்புறு சிந்தையர் காண்டற்கு
அரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணின் நீள்புனற்
கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன்
காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட்
வூர்உறை உத்தமனே.

தெளிவுரை :  ஈசன், சிந்தையில் வஞ்சனை உடையவர்களுக்குத் தென்படாதவர்; மன்மதனை நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கி எரித்துச் சாம்பலாக்கியவர்; செஞ்சடையில் பெருகும் கங்கையும் பொங்கி எழும் அரவும் கொண்டுள்ளவர்; பால் போன்ற வெண்மை திகழும் திருநீற்றைத் திருமேனியில் குழைத்துப் பூசி விளங்குபவர்; காலனைச் சேவடியால் உதைத்து அழித்தவர். அப் பெருமான், கடவூரில் உறையும் உத்தமன் ஆவார்.

1019. மறித்திகழ் கையினன் வானவர்
கோனை மனமகிழ்ந்து குறித்தெழு மாணிதன் ஆருயிர்
கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக்
காலனைத் தானலற
உறுக்கியசேவடி யான்கட
வூர்உறை உத்தமனே.

தெளிவுரை : சிவபெருமான், மான் கன்றைக் கையினில் உடையவர்; தேவர்களின் தலைவர்; மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வேண்டும் எனக் கொதித்தெழுந்த சிந்தையுடன் சினந்து, கையில் சூலப் படையுடன் வந்த காலனைத் தன் சேவடியால் உதைத்து அழித்தவர். அப் பெருமான் கடவூரில் வீற்றிருக்கும் உத்தமன் ஆவார்.

1020. குழைத்திகழ் காதினன் வானவர்
கோனைக் குளிர்ந்தெழுந்து
பழக்கமொடு அர்ச்சித்த மாணிதன்
ஆருயிர் கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக்
காலனைத் தானலற
உழக்கிய சேவடி யான்கட
வூர்உறை உத்தமனே.

தெளிவுரை : ஈசன், காதில் குழையை அணிந்துள்ளவர்; தேவர்களின் தலைவர் ஆவார்; சிவபூசை செய்யும் நித்தியப் பணியை ஆற்றும் பிரமசாரியாகிய மார்க்கண்டேயரின் உயிரைக் கொள்ள வேண்டும் எனச் சூலப்படை ஏந்தி வந்த காலனைத் தன் பாதத்தால் உதைத்து, அலறுமாறு செய்து வருத்தி வீழ்த்தியவர். அப்பெருமான், கடவூரில் உறையும் உத்தமன்.

1021. பாலனுக்காய்அன்று பாற்கடல்
ஈந்து பணைத் தெழுந்த
ஆலினிற் கீழ்இருந்து ஆரணம்
ஓதி அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமும் கொண்டு
தொடர்ந்தடர்ந்து ஓடிவந்த
காலனைக் காய்ந்தபி ரான்கட
வூர்உறை உத்தமனே.

தெளிவுரை : ஈசன், உபமன்யு முனிவர் பாலுக்காக அழுதபோது, பாற்கடல் ஈந்தவர்; கல்லால மர நிழலில் இருந்து, சனகாதி முனிவர்களுக்கு வேதப் பொருளை ஓதி அருளியவர்; மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சூலமும் பாசமும் கொண் பின் தொடர்ந்து அடர்ந்து வந்த காலனை அழித்தவர். அவர், கடவூரில் உறையும் உத்தமனே.

1022.  படர்சடைக் கொன்றையும் பன்னக
மாலை பணிகயிறா
உடைதலை கோத்துழல் மேனியன்
உண்பலிக்கு என்றுழல்வோன்
சுடர்பொழி மூவிலை வேலுடைக்
காலனைத் துண்டமதா
உடறிய சேவடி யான்கட
வூர்உறை உத்தமனே.

தெளிவுரை : ஈசன், படர்ந்து விளங்கும் சடையில் கொன்றை மாலையும், பாம்பு மாலையும், பாம்பைக் கயிறாகக் கொண்டு, கோத்த மண்டை ஓட்டு மாலையும் அணிந்து, உண்பதற்காகப் பலிகொண்டு உழன்றவர்; சூலப் படை கொண்டு மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் காலால் அழித்தவர். அவர், கடவூரில் உறையும் உத்தமனே.

1023. வெண்டலை மாலையும் கங்கை
கரோடி விரிசடை மேல்
பெண்டுஅணி நாயகன் பேய்உகந்து
ஆடும் பெருந்தகையான்
கண்தனி நெற்றியின் காலனைக்
காய்ந்து கடலின்விடம்
உண்டரும் செய்தபி ரான்கட
வூர்உறை உத்தமனே.

தெளிவுரை : ஈசன், மண்டை ஓட்டு மாலை அணிந்தவர்; கங்கையை முடி மாலையாகக் கொண்டவர்; அதனைப் பெண் மாலையாக அணி கொண்ட நாயகர்; பேய்க் கணங்களை உகந்து அவற்றுடன் ஆடுபவர்; பெருந்தகையுடைய யோகியாக இருப்பவர்; நெற்றியில் கண்ணுடையவர்; காலனை உதைத்தவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு தேவர்களுக்கு அருள்புரிந்தவர். அப்பெருமான், கடவூரில் உறையும் உத்தமனே.

1024. கேழலதாகிக் கிளறிய
கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந்
திட்டஅம் மாலவற்கு அன்று
ஆழியும் ஈந்து அடுதிறற்
காலனை அன்றடர்த்து
ஊழியுமாய பிரான்கட
வூர்உறை உத்தமனே.

தெளிவுரை : ஈசன், பன்றி வடிவாகிய திருமால், காண்பதற்கு அரிதாய் உயர்ந்தவர்; அத்திருமால் தனது கண்ணை இடந்து அருச்சிக்க ஆழிப் படை அளித்தவர்; திறல் கொண்ட காலனை அழித்தவர் ! ஊழிக் காலமாகி எக்காலத்தில் நிலைப் பொருளாய் மேவும் அப்பெருமான், கடவூரில் உறையும் உத்தமனே !

1025. தேன்திகழ் கொன்றையும் கூவிள
மாலை திருமுடிமேல்
ஆன்திகழ் ஐந்துஉகந்து ஆடும்
பிரான்மலை ஆர்த்தெடுத்த
கூன்திகழ் வாளரக் கன்முடி
பத்தும் குலைந்து விழ
ஊன்றிய சேவடி யான்கட
வூர்உறை உத்தமனே.

தெளிவுரை : ஈசன், தேன் திகழும் கொன்றை மாலையும், வில்வ மாலையும், திருமுடியின்மேல் தரித்திருப்பவர்; பசுவின் பஞ்சகௌவியத்தை உகந்து பூசனையாக ஏற்பவர்; கயிலையை எடுத்த இராவணனுடைய முடிகள் பத்தும் நலியுமாறு, ஊன்றிய திருவடி உடையவர். அப்பெருமான், கடவூரில் உறையும் உத்தமனே.

திருச்சிற்றம்பலம்

108. திருமாற்பேறு (அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர், வேலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1026. மாணிக்கு உயிர்பெறக் கூற்றை
உதைத்தன மாவலிபால்
காணிக்கு இரந்தவன் காண்டற்கு
அரியன கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப்
படுவன பேர்த்தும் அஃதே
மாணிக்கம் ஆவன மாற்பேறு
உடையான் மலரடியே.

தெளிவுரை : திருமாற்பேறு என்னும் தலத்தில் மேவும் ஈசனின் மலரடிகள், மார்க்கண்டேயருக்கு உயிர் நிலைத்திருக்கும்படி கூற்றுவனை உதைத்தன; மாவலிச் சக்கரவர்த்தியின்பால் மூவடி யாசித்த திருமாலால், காண்பதற்கு அரியன; கண்டு தரிசித்த சிவஞானிகளால் ஏத்திப் பரவப்படுவன; மாணிக்கம் ஆவன.

1027. கருடத் தனிப்பாகன் காண்டற்கு
அரியன காதல்செய்யில்
குருடர்க்கு முன்னே குடிகொண்டு
இருப்பன கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன்
செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பேறு
உடையான் மலரடியே

தெளிவுரை : கருட வாகனத்தில் விளங்கும் திருமாலால் காண்பதற்கு அரியனவாகிய திருமாற்பேற்றில் வீற்றிருக்கும் ஈசனின் மலரடிகள்; புறக் கண் அற்றார்க்கும், அகக்கண்களில் விளங்கித் திகழ்வன; மலரினும் மென்மையான உமாதேவியின் அழகிய கரத்தால் வருடச் சிவப்பன.

திருச்சிற்றம்பலம்

109. திருத்தூங்கானை மாடம்

திருச்சிற்றம்பலம்

1028. பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு
விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற்கு இச்சையுண்
டேல்இருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலம்என்
மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை
மாடச் சுடர்க் கொழுந்தே.

தெளிவுரை : மேகம் சூழும் குளிர்ச்சி பொருந்திய கடந்தை என்னும் திருப்பெயர் கொண்ட தலத்தில் தூங்கானை மாடத்தில் மேவும் சுடர்க் கொழுந்தீசப் பெருமானே !  தேவரீரின் பொன்னார் திருவடிக்கு விண்ணப்பம் ஒன்று உள்ளது. அதனை ஏற்று அருள் புரிவீராக. என்னுடைய உயிரானது தேவரீரைப் போற்றி செய்து வழிபடுவதற்குத் திருவுள்ளம் உடையதாயின், கூற்றுவன் என்பால் வாராது இருக்க மின்னலைப் போன்று ஒளிரும் மூவிலைச் சூலத்தை என்மீது பொறித்து அருள்வீராக.

1029. ஆவா சிறுதொண்டன் என்நினைந்
தான்என்று அரும்பிணி நோய்
காவா தொழியிற் கலக்குமுன்
மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப்
பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுள் தூங்கானை
மாடத்துஎம் புண்ணியனே.

தெளிவுரை : செந்தாமரை பூக்கள் விளங்கும் கடந்தையுள் தூங்கனைமாடத்துள் மேவும் ஈசனே ! ஆ.. ! ஆ.. ! இச்சிறிய தொண்டன் ஏதும் பெரிய அளவால் நினைத்து ஏத்திலன் என்று கருதி, என்பால் உள்ள பிணியும் நோயும் தீர்த்தருளாது இருப்பின், தேவரீர்பால் பழியே நிலவும். அன்புடன் விரும்பி ஏத்துபவர்களுக்கு அருள் புரியும் தலைவனே ! தேவரீரின் திருவடியாகிய திருநீற்றினை என்மேல் பூசி அருள்புரிவீராக.

1030. கடவுந் திகிரி கடவாது
ஒழியக் கயிலையுற்றான்
படவுந் திருவிரல் ஒன்றுவைத்
தாய்பனி மால்வரை போல்
இடவம் பொறித்து என்னை யேன்றுகொள்
ளாய்இருஞ் சோலை திங்கள்
தடவும் கடந்தையுள் தூங்கானை
மாடத்துஎம் தத்துவனே.

தெளிவுரை : தண்மையுடன் விளங்கும் சோலையும், சந்திரனை முட்டும் உயர்ந்த மாடங்களும் உடைய கடந்தையுள், தூங்கானைமாடத்தில் வீற்றிருக்கும் ஈசனே ! தேரினைத் தடுத்த கயிலையைப் பெயர்த்த இராவணனைத் திருவிரல் ஒன்றினால் நெரித்த தேவரீர், என்மீது இடபக் குறியைப் பொறித்து என்னை ஏற்றுக் கொள்வீராக.

திருச்சிற்றம்பலம்

110. பொது

திருச்சிற்றம்பலம்

1031. சாம்பலைப் பூசித் தரையிற்
புரண்டுநின் தாள்பரவி
ஏம்பலிப் பார்கட்கு இரங்குகண்
டாய்இருங் கங்கையென்னும்
காம்பலைக் கும்பணைத் தோளி
கதிர்ப்பூண் வனமுலைமேல்
பாம்பலைக் கும்சடை யாய்எம்மை
ஆளும் பசுபதியே.

தெளிவுரை : கங்கை என்னும் நங்கையையும் பாம்பினையும் சடைமுடியில் தாங்கி, எம்மை ஆட்கொண்டு மேவும் பசிபதியே ! திருவெண்ணீற்றைக் குழையப் பூசித் தேவரீருடைய திருவடியைப் பரவி ஏத்தி மகிழ்பவர்களுக்கு, அருள்புரிவீராக.

1032. உடம்பைத் தொலைவித்துன் பாதம்
தலைவைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்குகண்
டாய் இருள்ஓடச் செந்தீ
அடும்பொத் தனைய அழல்மழு
வாஅழலே உமிழும்
படம்பொத்து அரவுஅரை யாய்எம்மை
ஆளும் பசுபதியே.

தெளிவுரை : இருள் விலகுமாறு செந்தீ, அடும்பு போன்ற அனல் உமிழும், ஒளியுடைய மழுப்படையைக் கொண்ட ஈசனே ! வெம்மையை உமிழும் அரவத்தை அரையில் கட்டி விளங்கும் பெருமானே ! எம்மை ஆளும் பசுபதியே ! உடலின் மீது பற்றின்றித் தேவரீருடைய திருப்பாதத்தைத் தலையாகக் கொண்டு மேவும் உத்தமர்களாகிய பக்தர்கள் துன்புறாதவாறு, இரக்கம் கொண்டு அருள்வீராக.

1033. தாரித் திரம்தவி ராஅடி
யார்தடு மாற்றம் என்னும்
மூரித் திரைப் பொளவ நீக்குகண்
டாய்முன்னை நாளொருகால்
வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை
வேள்வெந்து வீழச்செந்தீப்
பாரித்த கண்ணுடை யாய்எம்மை
ஆளும் பசுபதியே.

தெளிவுரை : மன்மதன், பூங்கணைகள் ஐந்தினைத் தொடுக்க, அவனை வெந்து வீழுமாறு விழித்த நெற்றிக் கண்ணுடைய ஈசனே ! எம்மை ஆளும் பசுபதியே ! அடிவர்களின் வறுமையை நீக்குவீராக; இடம், காலம், அறிவு ஆகியவற்றால் கொள்ளும் தடுமாற்றத்தை நீக்குவீராக; மூப்பினால் வரும் தளர்ச்சியும் அலைப்பும் தீர்த்தருள்வீராக.

1034. ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாதுன்
பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்விகண்
டாய்அண்ட மேயணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப்
பிளந்துவேய்த் தோளியஞ்சப்
பருவரைத் தோலுரித் தாய்எம்மை
ஆளும் பசுபதியே.

தெளிவுரை : அண்டங்கள் நடுங்கப் பெரிய மலை போன்ற வடிவத்துடன் பிளிறக் கொண்டு வந்த யானையைப் பிளந்து, அதன் தோலை உரித்து உமாதேவியும் அஞ்சுமாறு வீரம் புரிந்த ஈசனே ! எம்மை ஆளும் பசுபதியே ! பிறரைத் தஞ்சம் எனக் கருதாது தேவரீர் திருப்பாதத்தையே இறைஞ்சும் அடியவர்களின்பால் பற்றியுள்ள வினைகளைத் தீர்த்தருள்வீராக.

1035. இடுக்கொன்றும் இன்றிஎஞ் சாமையுள்
பாதம் இறைஞ்சுகின் றார்க்கு
அடர்க் கின்ற நோயை விலக்குகண்
டாய்அண்டம் எண்திசையும்
சுடர்த்திங்கள் சூடிச் சுழல்கங்கை
யோடும் சுரும்புதுன்றிப்
படர்கொண்ட செஞ்சடை யாய்எம்மை
ஆளும் பசுபதியே.

தெளிவுரை : எண் திசையும் ஒளி திகழும் சந்திரனைச் சூடிக் கங்கையும் தரித்துச் சுரும்புகள் சுழலும் சடை முடியுடைய ஈசனே ! எம்மை ஆளும் பசுபதியே ! தேவரீருடைய திருப்பாதத்தை ஏத்தும் அடியவர்களுக்கு இடையூறு இன்றி விளங்குமாறு செய்வீராக; அவர்களை வருத்தும் நோயை விலக்குவீராக.

1036. அடலைக் கடல்கழி வானின்
னடியிணை யேஅடைந்தார்
நடலைப் படாமை விலக்குகண்
டாய்நறுங் கொன்றைதிங்கள்
சுடலைப் பொடிச்சுண்ண மாசுணம்
சூளா மணிகிடந்து
படரச் சுடர்மகு டாஎம்மை
ஆளும் பசுபதியே.

தெளிவுரை : நறுமணம் கமழும் கொன்றையும் சந்திரனும், திருவெண்ணீறும், பாம்பும், சூளாமணியும் படரும் ஒளி திகழ்ச் சடா மகுடம் உடைய ஈசனே ! எம்மை ஆளும் பசுபதியே ! துன்பக் கடலிலிருந்து நீங்கும் பொருட்டுத் தேவரீரின் திருவடியை அடைந்தவர்கள் துயரத்தை நுகராதவாறு அருள்புரிவீராக.

1037. துறவித் தொழிலே புரிந்துன்
சுரும்படியே தொழுவார்
மறவித் தொழிலது மாற்றுகண்
டாய்மதில் மூன்றுடைய
அறவைத் தொழில் புரிந்து அந்தரத்
தேசெல்லு மந்திரத் தேர்ப்
பறவைப் புரமெரித் தாய்எம்மை
ஆளும் பசுபதியே.

தெளிவுரை : அந்தரத்தில் பறந்து சென்று அழிக்கும் தொழில்களைச் செய்த மூன்று அசுரர்களின் புரங்களை எரித்துச் சாம்பலாக்கிய ஈசனே ! எம்மை ஆளும் பசுபதியே ! பற்றற்றவராகிய அடியவர்கள் தேவரீரை மறவாதவாறு செய்வித்தருள்வீராக.

1038. சித்தத் துருகிச் சிவன்எம்பி
ரான்என்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின்
றார்பிணி தீர்த்தருளாய்
மத்தத்து அரக்கன் இருபது
தோளும் முடியுமெல்லாம்
பத்துற்று உறநெரித் தாய்எம்மை
ஆளும் பசுபதியே.

தெளிவுரை : உன்மத்தம் உற்ற இராவணனுடைய இருபது தோளும் முடி பத்தும் நலியுமாறு நெரித்த ஈசனே ! எம்மை ஆளும் பசுபதியே ! சித்தம் உருகக் கசிந்து எமது தலைவன் என்று சிந்தையுள்ளே இருத்திப் பித்தர் போன்று பேரானந்தம் கொள்ளும் அடியவர்களின் பிணியைத் தீர்த்தருள்வீராக.

திருச்சிற்றம்பலம்

111. பொது

திருச்சிற்றம்பலம்

1039. விடையும் விடைப்பெரும் பாகாஎன்
விண்ணப்பம் வெம்மழு வாள்
படையும் படையாய்  நிரைத்தபல்
பூதமும் பாய்புலித்தோல்
உடையு முடைதலை மாலையும்
மாலைப் பிறையொதுங்கும்
சடையும் இருக்கும் சரக்கறை
யோஎன் தனிநெஞ்சமே.

தெளிவுரை : சினவிடையுடைய ஈசனே ! விடையின் மீது ஏறும் பெருமானே ! எனது விண்ணப்பம். வெம்மையுடைய மழுவாகிய படையும், பூதகணங்கள் நிறைந்த படையும், புலித்தோல் உடையும், மண்டை ஓடுகளைக் கோத்த மாலையும், பிறைச் சந்திரன் விளங்கும் சடை முடியும் என் நெஞ்சில் குடி கொண்டு விளங்கும் அது சரக்கு அறையோ !

1040. விஞ்சத் தடவரை வெற்பா என்
விண்ணப்பம் மேலிலங்கு
சங்கக் கலனும் சரிகோ
வணமும் தமருகமும்
அந்திப் பிறையும் அனல்வாய்
அரவும் விரவிஎல்லாம்
சந்தித்து இருக்கும் சரக்கறை
யோஎன் தனிநெஞ்சமே.

தெளிவுரை : அகன்ற மலைகள் பல சூழ்ந்து விளங்கக் கயிலை மலையில் மேவும் ஈசனே ! என் விண்ணப்பம். தேவரீரின் திருமேனியில் விளங்கும் சங்கால் ஆகிய குழையும், கோவணமும், உடுக்கையும், பிறைச் சந்திரனும், வெம்மைமிகு அரவும் ஆகியன யாவும் விரவி மேவும் என் தனி நெஞ்சமானது சரக்கு அறையோ !

1041. வீந்தார் தலைகலன் ஏந்தீஎன்
விண்ணப்பம் மேல் இலங்கு
சாந்தாய வெந்த தவளவெண்
ணீறும் தகுணிச்சமும்
பூந்தா மரைமேனிப் புள்ளி
உழைமான் அதள்புலித்தோல்
தாந்தாம் இருக்கும் சரக்கறை
யோஎன் தனிநெஞ்சமே.

தெளிவுரை : எண்ணற்றவர்களாய் அழிந்த நூறு கோடி பிரமர், ஆறு கோடி நாராயணர், கணக்கில்லாத இந்திரர்கள் ஆகியோரின் மண்டை ஓடுகளை அணிகலனாக உடைய பெருமானே ! என் விண்ணப்பம். தேவரீர்பால் மேலாக இலங்கும் திருவெண்ணீறு, தகுணிச்சம், பூந்தாமரை மேனி, மான் தோல், புலித்தோல் ஆகியன யாவும் விரவி விளங்கும் என் தனி நெஞ்சமானது சரக்கு அறையோ !

1042. வெஞ்சமர் வேழத்து உரியாய்என்
விண்ணப்பம்மேல் இலங்கு
வஞ்சமா வந்த வருபுனல்
கங்கையும் வான்மதியும்
நஞ்சமாக நாக நகுசிர
மாலை நகுவெண்தலை
தஞ்சமா வாழும் சரக்கறை
யோஎன் தனிநெஞ்சமே.

தெளிவுரை : யானையைப் போர் செய்து கொன்று அதன் தோலை உரித்த ஈசனே ! என் விண்ணப்பம். தேவரீரின் மீது இலங்குகின்ற கங்கையும், சந்திரனும், நஞ்சுடைய நாகமும், தலைமாலை ஆகியன விரவி விளங்கும் என் தனிநெஞ்சமானது சரக்கு அறையோ !

1043. வேலைக் கடல்நஞ்சம் உண்டாய்என்
விண்ணப்பம் மேல்இலங்கு
காலற்க டந்தான் இடம்கயி
லாயமும் காமர்கொன்றை
மாலைப் பிறையும் மணிவாய்
அரவும் விரவி எல்லாம்
சாலக் கிடக்கும் சரக்கறை
யோஎன் தனி நெஞ்சமே.

தெளிவுரை : கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்ட ஈசனே ! என் விண்ணப்பம். மேன்மையாய் விளங்கும் காலனை மாய்த்த இடமும், கயிலாயமும், கொன்றை மாலையும், பிறைச் சந்திரனும், மணிவாய் அரவும் விரவி எல்லாம் நன்று விளங்கும் என் நெஞ்சமானது சரக்கு அறையோ !

1044. வீழிட்ட கொன்றையந் தாராய்என்
விண்ணப்பம் மேல் இலங்கு
சூழிட் டிருக்குநற் சூளா
மணியும் சுடலைநீறும்
ஏழிட் டிருக்குநல் அக்கும்
அரவும்என்பு ஆமையோடும்
தாழிட் டிருக்கும் சரக்கறை
யோன்என் தனி நெஞ்சமே.

தெளிவுரை : கொன்றை மாலை அணிந்த ஈசனே ! என் விண்ணப்பம். மேன்மையாய் விளங்கும் சூளாமணி, சுடலை நீறு, அக்குமணி, அரவு, என்பு, ஆமை ஓடு ஆகியன யாவும் விளங்க மேவும் என் நெஞ்சமானது, சரக்கு அறையோ !

1045. விண்டார் புரமூன்றும் எய்தாய்என்
விண்ணப்பம் மேல்இலங்கு
தொண்டா டியதொண்டு அடிப்பொடி
நீறும் தொழுதுபாதம்
கண்டார்கள் கண்டிருக் குங்கயி
லாயமும் காமர்கொன்றைத்
தண்டார் இருக்கும் சரக்கறை
யோஎன் தனி நெஞ்சமே.

தெளிவுரை : பகைமை கொண்டு போர் செய்த முப்புரங்களைக் கணை ஒன்றினால் எய்து, எரிந்து சாம்பலாகுமாறு புரிந்த ஈசனே ! என் விண்ணப்பம். மேன்மையாக விளங்கும், திருத்தொண்டர்களும், அடியார்க்கு அடியவர்களும் திருவெண்ணீறும், திருவடி போற்றியவர்களும், விளங்கும் கயிலாயமும், கொன்றை மலரும் விரவி ஏத்தி இருக்கும் என் நெஞ்சமானது சரக்கு அறையோ !

1046. விடுபட்டி யேறுகந்து ஏறிஎன்
விண்ணப்பம் மேல்இலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை
குழல்தாளம் வீணை மொந்தை
வடுவிட்ட கொன்றையும் வன்னியும்
மத்தமும் வாளரவும்
தடுகுட்ட மாடும் சரக்கறை
யோஎன் தனிநெஞ்சமே !

தெளிவுரை : இடப வாகனத்தில் உகந்து ஏறும் ஈசனே ! என் விண்ணப்பம். மேன்மையாக விளங்கும் கொடு கொட்டி, கொக்கரை, தக்கை, குழல், தாளம், வீணை, மொந்தை கொன்றை மலர், வன்னி இலை (பத்திரம்), ஊமத்தம் பூ, அரவு என விரவுதல் செய்யும் என் நெஞ்சமானது சரக்கு அறையோ !

1047. வெண்திரைக் கங்கை விகிர்தாஎன்
விண்ணப்பம் மேல்இலங்கு
கண்டிகை பூண்டு கடிசூத்
திரமேற் கபாலவடம்
குண்டிகை கொக்கரை கோணற்
பிறைகுறட் பூதப்படை
தண்டிவைத் திட்ட சரக்கறை
யோஎன் தனி நெஞ்சமே.

தெளிவுரை : கங்கையைச் சடை முடியில் தரித்த ஈசனே ! என் விண்ணப்பம். மேன்மையாக விளங்குகின்ற கண்டிகை, கடி சூத்திரம், தலை மாலை, கமண்டலம், கொக்கரை, பிறைச் சந்திரன், பூதப்படைகள் என விரவும் என் நெஞ்சமானது சரக்கு அறையோ !

1048. வேதித்த வெம்மழு வாளீஎன்
விண்ணப்பம் மேல்இலங்கு
சோதித் திருக்குநற் சூளா
மணியும் சுடலைநீறும்
பாதிப் பிறையும் படுதலைத்
துண்டமும் பாய்புலித் தோல்
சாதித் திருக்கும் சரக்கறை
யோஎன் தனிநெஞ்சமே.

தெளிவுரை : நன்கு வடித்த வெம்மை மிகும் மழுப்படையை ஏந்தி விளங்கும் ஈசனே ! என் விண்ணப்பம். மேன்øயாக விளங்குகின்ற சோதியுடன் திகழும் சூளாமணி, சுடலை நீறு, பிறைச் சந்திரன், மண்டை ஓடு, புலித்தோல் என விரவும் யாவும் விளங்கும் என் நெஞ்சமானது சரக்கு அறையோ !

1049.விவந்தா டியகழல் எந்தாய்என்
விண்ணப்பம் மேல்இலங்கு
தவந்தான் எடுக்கத் தலைபத்து
இறுத்தனை தாழ்புலித் தோல்
சிவந்தா டியபொடி நீறும்
சிரமாலை  சூடிநின்று
தவந்தான் இருக்கும் சரக்கறை
யோஎன் தனிநெஞ்சமே.

தெளிவுரை : வீரக்கழல் அணிந்து திருநடனம் ஆடிய எந்தை ஈசனே ! என் விண்ணப்பம். மேலாக விளங்குகின்ற தவத்தினைப் போன்று விளங்கும் கயிலை மலையை வணங்கி ஏத்தாது, அசைத்து எடுத்த இராவணனுடைய தலை பத்தும் நெரித்தவர், தேவரீர். புலித்தோல், சிவந்த திருமேனியில் ஆடிய நீறு, தலை மாலை சூடிய திருக்கோலம் ஆகியன விளங்கும் என் நெஞ்சமானது சரக்கு அறையோ !

திருச்சிற்றம்பலம்

112. பொது

திருச்சிற்றம்பலம்

1050. வெள்ளிக் குழைத் துணி போலும்
கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி
நூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை
சூடிவெள் ளென்பு அணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறளம்
பூசிய வேதியனே.

தெளிவுரை : ஈசன், வெண்மையான குழையணிந்தவர்; வெண்மையான கபாலத்தை ஏந்தியவர்; வெண்ணிற முப்புரி நூல் அணிந்தவர்; விரிந்த சடை முடியில் வெள்ளித் தகடு போன்ற வெண்பிறை சூடி, வெள்ளை எலும்பு அணிந்தவர்; பவளம் போன்ற திருமேனியில் வெண்மையான திருநீறு பூசியவர் . அவர், தூய்மை திகழும் வேதியனே !

1051. உடலைத் துறந்துல கேழும்
கடந்துல வாததுன்பக்
கடலைக் கடந்துய்யப் போயிட
லாகும் கனகவண்ணப்
படலைச் சடைப்பர வைத்திரைக்
கங்கைப் பனிப்பிறைவெண்
சுடலைப் பொடிக்கட வுட்குஅடி
மைக்கண் துணிநெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! பொன் வண்ணமாகிய சடை முடியில் கங்கையைத் தரித்துக் குளிர்ந்த பிறைச் சந்திரனைச் சூடித் திருநீறு அணிந்து விளங்கும் கடவுளாகிய ஈசனுக்கு, அடிமை கொள்க, அவ்வாறு இருப்பின், நவத் துவாரங்களையுடைய இவ் அழுக்கு உடம்பானது துறந்து, ஏழுலகங்களாகிய அண்டத்தைக் கடந்து, பிறவித் துன்பத்திலிருந்து நீங்கிப் பாச நீக்கம் பெற்றுச் சிவானந்தத் தேனைப் பருகி, முத்திப் பேற்றினை அடைந்து இன்புற்று உய்யலாம்

1052. முன்னே உரைத்தால் முகமனே
ஒக்கும்இம் மூவுலகுக்கு
அன்னையும் அத்தனும் ஆவாய்
அழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியும்என்
ஆவி கழிந்ததற்பின்
என்னைப் மறக்கப் பெறாய்எம்
பிரான் உன்னை வேண்டியதே.

தெளிவுரை : ஈசனே ! அழல் வண்ணனே ! முன்னின்று உரைக்கும் போது, முகமன் போன்று அமையும். ஆயினும், இம் மூவுலகுக்கும் அன்னையும் தந்தையும் தேவரீரே அல்லவா ! தேவரீரையே நினைந்து ஏத்தும் என் ஆவியானது இவ்வுடலிலிருந்து பிரிந்து சென்ற பின்னர், என்னை மறவாது குறித்தருளுமாறு வேண்டுகின்றேன்.

1053. நின்னைஎப் போது நினையவொட்
டாய்நீ நினையப்புகில்
பின்னையப் போதே மறப்பித்துப்
பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னைஎப் போது மறந்திட்டு
உனக்குஇனி தாஇருக்கும்
என்னைஒப் பார்உள ரோசொல்லு
வாழி இறையவனே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீரை நான் எல்லாக் காலமும் நினையுமாறு செய்ய வொட்டீர் ! அவ்வாறு நினைந்து வழிபட வேண்டும் எனக் கருதும் போதும், அப்போதே அதனை மறக்கச் செய்து, பிறிது ஒன்றின்பால் பற்றுமாறு செய்வீர் ! தேவரீரை நான் மறந்தும், தேவரீருக்கு இனியவனாக இருக்கும் என்னைப் போன்று இவ்வுலகில் யார் உளர் ? வாழி.

1054. முழுத்தழல் மேனி தவளப்
பொடியன் கனகக் குன்றத்து
எழிற் பெருஞ் சோதியை எங்கள்
பிரானை இகழ்த்திர்கண்டீர்
தொழப்படும் தேவர் தொழப்படு
வானைத் தொழுத பின்னைத்
தொழப்படுந் தேவர்தம் மால்தொழு
விக்கும்தன் தொண்டரையே.

தெளிவுரை : ஈசன், தழல் போன்ற திருமேனியில் திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; பொன்மலை போன்ற எழில் பெரும் சோதியாகத் திகழ்பவர். அவர், எங்கள் பெருமான். அப் பெருமானை ஏத்தாது இருத்தல் எதற்கு ? யார் யாரை நாம் கடவுளாகக் கருதித் தொழுகின்றோமோ, அவர்களால் தொழப்படுகின்றவர், அப் பரமன். ஈசனைத் தொழுது போற்றினால் தொழப்படுகின்ற ஏனையோர், தொண்டர்களைத் தொழுமாறு செய்விப்பர் ஆவர். இத் திருப்பாட்டானது, தொண்டர்கள் ஈசனைத் தொழுது போற்றுதலை உணர்த்துவதும், அத்தகைய திருத்தொண்டர்கள் பல்லோராலும் தொழப்படும் சிறப்பினை அடைதலையும் ஓதுதாலயிற்று.

1055. விண்ணகத்தான்மிக்க வேதத்து
ளான்விரி நீருடுத்த
மண்ணகத் தான்திரு மாலகத்
தான்மரு வற்கினிய
பண்ணகத் தான்பத்தர் சித்தத்து
ளான்பழ நாயடியேன்
கண்ணகத் தான்மனத் தான்சென்னி
யான்எம் கறைக்கண்டனே.

தெளிவுரை : நீலகண்டனாக விளங்குகின்ற சிவபெருமான், விண்ணுலகத்தில் திகழ்பவர்; வேதப் பொருளாகியவர்; விரிந்த நீர் சூழ்ந்த மண்ணுலகில் விளங்குபவர்; திருமாலின் உள்ளத்தில் ஒளிர்பவர்; மருவுதற்கு இனிய பண்ணின் இசையில் மிளிர்பவர்; பக்தர்களின் சித்தத்தில் விளங்குபவர்; பழைமையாக அடிமை பூண்ட என்னுடைய கண், மனம், சென்னி ஆகியவற்றில் விளங்குபவர்.

1056. பெருங்கடல் மூடிப் பிரளயம்
கொண்டு பிரமனம் போய்
இருங்கடல் மூடி இறகும்
இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபர
மும்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின்று எம்இறை
நல்வீணை வாசிக்குமே.

தெளிவுரை : அண்டமெல்லாம் கடல் நீரால் மூடிப் பிரளயம் ஏற்படும் காலத்தில் பிரமன், தன் தொழிலும் மாய்ந்து தானும் மாயத் திருமாலும் அவ்வாறே மேவு, எம் இறைவனாகிய சிவபெருமான், அவர்களுடைய எலும்புகளை அணிந்து, கங்காளர் ஆகி, மீண்டும் உலகினைத் தோற்றம் செய்யும் சங்கல்பத்தால் இனிய பண் கொண்டு வீணை வாசித்தலை உடையவர் ஆவார். இது ஈசனின் நித்தியத்துவத்தையும் பரத்துவத்தையும் உணர்த்துவதாயிற்று.

1057. வாளம் துளங்கில்என் மண்கம்பம்
ஆகில்என் மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடு
மாறில்என் தண்கடலும்
மீனம் படில்என் விரிசுடர்
வீழில்என் வேலைநஞ்சுண்டு
ஊனம் ஒன்றில்லா ஒருவனுக்கு
ஆட்பட்ட உத்தமர்க்கே.

தெளிவுரை : கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு எத்தகைய குறைவும் அடையாத சிவபெருமானுக்கு ஆட்பட்ட அடியவர்களாகிய உத்தமர்களுக்கு, வானம் அசைந்து தடுமாறினாலும், மண்ணுலகத்தில் நடுக்கம் உற்று நிலை பிறழ்ந்தாலும், பெரிய மலைகள் பெயர்ந்து நிலை மாறினாலும், கடல் வற்றி அதில் உள்ள மீன்கள் காய்ந்தாலும், சூரிய சந்திரர்கள் தம் நிலையிலிருந்து மாறுபட்டு அழிவைத் தந்தாலும் எத் துயரும் அடையாது.

1058. சிவன்எனும் நாமம் தனக்கே
உடையசெம் மேனிஎம்மான்
அவன்எனை ஆட்கொண்டு அளித்திடும்
ஆகில் அவன்றனையான்
பவன்எனு நாமம் பிடித்துத்
திரிந்துபன் னாள்அழைத்தால்
இவன்எனைப் பன்னாள் அழைப்பொழி
யான்என்று எதிர்ப் படுமே.

தெளிவுரை : சிவன் என்னும் திருநாமத்தைத் தனக்கே உரிமையாகக் கொண்டவர், ஈசன். செம்மேனியராகிய அப்பெருமான், என்னை ஆளாகக் கொண்டு அருளிச் செய்பவர். அப்பெருமானைப் பவன் என்னும் திருநாமம் கொண்டு பல்கால் அழைத்து வந்தால், இவன், என்னைப் பல நாள் அழைத்து வருகின்றான். நாம் இவனுக்குத் தரிசனம் தந்தால் ஒழிய அழைப்பதை நிறுத்த மாட்டான் எனக் கருதி எதிர்ப்படுவார்.

1059. என்னை ஓப்பார்உன்னை எங்ஙனம்
காண்பர் இகலியுன்னை
நின்னைஒப் பார் நின்னைக் காணும்
படித்தன்று நின்பெருமை
கொன்னைஒப் பார்இத் தழலை
வளாவிச் செம் மானம்செற்று
மின்னைஒப் பார மிளிரும்
சடைக்கற்றை வேதியனே.

தெளிவுரை : பொன்னைத் தழலில் கலந்து, செவ்வானத்தை வெல்லும் மின்னல் போன்று பொருந்த, மிளிரும் சடைக் கற்றையுடைய வேத நாயகனே ! தேவரீரையே நிகர்க்கும் தேவரீருடைய பெருமையை யாராலும் அறியமுடியாது. என்னை ஒப்பவர்கள் எவ்வாறு, தேவரீரை வலிநது காண இயலும் !

திருச்சிற்றம்பலம்

113. பொது

திருச்சிற்றம்பலம்

1060. பவளத் தடவரை போலும்திண்
தோள்கள்அத் தோள் மிசை÷
பவளக் குழைதழைத் தால்ஒக்கும்
பல்சடை அச்சடை மேல்
பவளக் கொழுந்தன்ன பைம்முக
நாகம்அந் நாகத்தொடும்
பவளக்கண் வால மதிஎந்தை
சூடும் பனி மலரே.

தெளிவுரை : எந்தை சிவபெருமான், பவளக் குன்று போன்ற திண்மையுடைய தோள்கள் உடையவர்; தோளின் மீது பவளம் குழைத்தாற் போன்று ஒளிரும் சடை முடியுடையவர்; சடை முடியில் ஒளிரும் பவளக் கொழுந்து போன்று ஐந்தலை நாகம் உடையவர்; பவளக் கண் போன்று இளமதியாகிய குளிர்ந்த மலரைச சூடியவர்.

1061. முருகார் நறுமலர் இண்டை
தழுவிவண் டேமுரலும்
பெருகாறு அடைசடைக் கற்றையி
னாய்பிணி மேய்ந்திருந்த
இருகாற் குரம்பை இதுநான்
உடையது இதுபிரிந்தால்
தருவாய் எனக்குள் திருவடிக்
கீழொர் தலை மறைவே.

தெளிவுரை : நறுமணம் கமழும் அழகிய இண்டை மலர் மாலையில் வண்டு முரல அணிந்த சடைக் கற்றையுடைய ஈசனே ! பிணி கொண்டது இவ்வுடம்பு. இருகால் கொண்டு மேவும் இதனையே நான் உடையவனாய் இருக்கிறேன். இது என்னை விட்டுப் பிரிந்தால், தேவரீருடைய திருவடிக்கீழ் இருக்கும் பேற்றைத் தருவீராக அது, தலையானதாய் விளங்கும் ஒப்பற்ற இருப்பிடமாகும்.

1062. மூவா உருவகத்து முக்கண்
முதல்வமீக் கூர்இடும்பை
காவாய் எனக்கடை தூங்கு
மணியைக்கை யாலமரர்
நாவாய் அசைத்த ஒலியொலி
மாறியது இல்லையப்பால்
தீவாய் எரிந்து பொடியாய்க்
கழிந்த திரிபுரமே.

தெளிவுரை : எக் காலத்திலும் மூப்பு அடையாத வடிவத்தில் முக்கண்ணுடன் திகழும் முதல்வனே ! எமது துன்பத்தைத் தீர்த்துக் காத்தருள்வீராக என, ஏத்தித் தேவர்கள் ஆராய்ச்சி மணியின் நாவை அசைத்து ஒலி எழுப்ப, அது மாறுதல் இன்றி ஒலிக்க, அக் கணத்திலேயே முப்புரமானது நெருப்பின் வாய் புகுந்து சாம்பலாகியது. இது, ஈசன் அடியவர்களுக்கு விரைந்து அருள் புரியும் மாண்பினை உணர்த்துவதாயிற்று.

1063. பந்தித்த பாவங்கள் அம்மையிற்
செய்தன இம்மைவந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென்
னேவந்து அமரர்முன்னாள்
முந்திச் செழுமலர் இட்டு
முடிதாழ்த் தடிவணங்கும்
நந்திக்கு முந்துற ஆட்செய்கி
லாவிட்ட நன்னெஞ்சமே.

தெளிவுரை : தேவர்கள் முந்திச் சென்று செழுமையான மலர்களைக் கொண்டு தூவித் தொழுது முடிதாழ்த்தி ஈசனை வணங்குகின்றனர். அவ்வாறு ஈசனை வணங்கி ஏத்தாத நெஞ்சமே ! முற் பிறவிகளில் செய்த பாவங்கள் தொடர்ந்து இப்பிறவி வந்து சேர்ந்து தாக்கிய பின்னர், நாணமும் வருத்தமும் கொள்வது என்கொல் ?

1064. அந்திவட் டத்திளங் கண்ணியன்
ஆறமர் செஞ்சடை யான்
புந்திவட் டத்திடைப் புக்குநின்
றானையும் பொய்என்பனோ
சந்திவட் டச்சடைக் கற்றை
அலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை
வளாவிய நம்பனையே.

தெளிவுரை : சிவபெருமான், மாலை நேரத்தில் விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடியவர்; கங்கையைத் தரித்த சடை முடியுடையவர்; என்னுடைய புந்தியினுள் புகுந்து நின்றவர்; சுழலும் சடைக் கற்றையின் இடையில் சிறிதே மலர்ந்த நந்தியா வட்டம் என்னும் மலரையும் கொன்றை மாலையும் தரித்தவர். அப்பெருமானைப் பொய் என்று உரைப்பனோ !

1065. உன்மத்தகமலர் சூடி
உலகம் தொழச் சுடலைப்
பன்மத் தகங்கொண்டு பல்கடை
தோறும் பலிதிரிவான்
என்மமத் தகத்தே இரவும்
பகலும் பிரிவரியான்
தன்மத் தகத்தொர் இளம்பிறை
சூடிய சங்கரனே.

தெளிவுரை : தேவரீருக்கே உரிய ஊமத்த மலர் சூடி, உலகமெல்லாம் தொழுது ஏத்தச் சுடலையில், பல் நகை காட்டும் மண்டை ஓட்டை ஏந்தி, மனை தொறும் பலி ஏற்பதற்காகத் திரிந்த ஈசனே ! திருமுடியில் இளம்பிறைச் சந்திரனைச் சூடிய சங்கரனே ! என்னுடைய சிந்தையிலிருந்து இரவும் பகலும் பிரியாது தேவரீர் விளங்குபவர்.

1066. அரைப்பால் உடுப்பன கோவணச்
சின்னங்கள் ஐயம் உணல்
வரைப்பா வையைக் கொண்டது எக்குடி
வாழ்க்கைக்கு வான்இரைக்கும்
இரைப்பா படுதலை யேந்துகை
யாமறை தேடும்எந்தாய்
உரைப்பார் உரைப்பன வேசெய்தி
யால்எங்கள் உத்தமனே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், அரையில் உடப்பது சின்னஞ் சிறிய கோவண ஆடை; பிச்சை கொண்டு உண்பவர் மலை மகளாகிய உமாதேவியைத் தேவரீர் மணம் கொண்டு மேவியது எத்தன்மையான மனை வாழ்க்கை மேவுதற்கு ! வானில் ஒலிக்கும் ஒலியாக விளங்கும் பெருமானே ! பிரம கபாலம் ஏந்தியவரே ! வேதங்களால் தேடப் பெறும் நாதரே ! தேவரீர்பால் உரைத்து ஏத்துபவர்களுக்கு அவ்வாறே அருள் செய்பவர் நீவிரே.

1067. துறக்கப் படாத உடலைத்
துறந்துவெந் தூதுவரோடு
இறப்பன் இறந்தால் இருவ்விரும்பு
ஏறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தால் பிறையணி
வார்டைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோஎன்றென் னுள்ளம்
கிடந்து மறுகிடுமே.

தெளிவுரை : இவ்வுடம்பின் பற்றினை விடுத்துக் கொடிய கால தூதுவர்களால் கொண்டு சென்றாலும், வானுலகம் சென்று மீண்டும் மண்ணுலகில் பிறவி கொள்வேன். அவ்வாறு பிறந்தாலும் பிறைச் சந்திரனைச் சூடிய சடை முடியுடைய ஈசனின் திருநாமத்தை மறப்பனோ ! மறவாது, என் உள்ளமானது ஏத்தும் என்பது குறிப்பு.

1068. வேரி வளாய விரைமலர்க்
கொன்றை புனைந்தனகன்
சேரி வாளாயஎன் சிந்தை
புகுந்தான் திருமுடிமேல்
வாரி வளாய வருபுனல்
கங்கை சடைமறிவாய்
ஏரி வளாவிக் கிடந்தது
போலும் இளம் பிறையே.

தெளிவுரை : தேன் கலந்து விளங்கும் நறுமண மலராகிய கொன்றையைத் தரித்த சிவபெருமான், பயன் நயவாத என் சிந்தையில் புகுந்தவர். அப்பரமனுடைய திருமுடியின் மீது, கடலில் கலக்கும் புனலாகிய கங்கையைச் சடை முடி தடுத்தருளும் பாங்கானது இளம்பிறைச் சந்திரன் பெருமையாய்த் திகழ மேவி ஏரிவாய்த் திகழும் நீர் போன்று பயனுடையதாயிற்று.

1069. கல்நெடுங் காலம் வெதும்பிக்
கருங்கடல் நீர்சுருங்கிப்
பன்னெடுங் கால மழைதான்
மறுக்கினும் பஞ்சம்உண்டென்று
என்னொடும் சூளறும் அஞ்சல்நெஞ்
சேஇமை யாதமுக்கண்
பொன்னெடுங் குன்றம்ஒன்று உண்டுகண்
டீர்இப் புகலிடத்தே.

தெளிவுரை : நெடுங்காலம் வெயிலால் வெதும்பி, மலையானது வெப்பம் மிகுந்து மேவக் கடல் நீர் சுருங்கிப் பன்னெடுங்காலம் மழை நலம் காணாது பஞ்சம் ஏற்பட்டாலும், நெஞ்சமே! அஞ்ச வேண்டாம். எல்லாரும் புகலும் இம் மண்ணுலகில், பொன் மலையாகிய முக்கண் மூர்த்தி விளங்குகின்றார். அப் பெருமான் அச்சத்தையும் வறுமையையும் நீக்கி அருள் புரிபவர் என்பது குறிப்பு.

1070. மேலும் அறிந்திலன் நான்முகன்
மேற்சென்று கீழிடந்து
மாலும் அறிந்திலன் மாலுற்ற
தேவழி பாடுசெய்யும்
பாலன் மிசைச் சென்று பாசம்
விசிறி மறந்தசிந்தைக்
காலன் அறிந்தான் அறிதற்கு
அரியான் கழலடியே.

தெளிவுரை : நான்முகன் அன்னப் பறவை வடிவம் தாங்கி மேலே பறந்து சென்றும் காணாத பெருமை உடையது, ஈசனின் திருவடி. திருமால் பன்றி வடிவம் தாங்கிக் கீழ் நோக்கிக் குடைந்து இடந்தும், காணற்கு அரிய பெருமையுடையதாயிற்று, ஈசனின் திருவடி. அறிதற்கு அரியவராகிய சிவபெருமானுடைய திருவடியானது, மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சென்ற போது காலன் அறிந்தனன்.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரத் திருப்பதிகம்  நான்காம் திருமுறை நிறைவுற்றது.

திருநாவுக்கரசு நாயனார் திருவடிகள் வாழ்க.

 
மேலும் நான்காம் திருமறை »
temple news
பன்னிரு திருமுறைகளில் 4, 5, 6ம் திருமுறைகள் திருநாவுக்கரசரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும். சைவ சமயம் தழைக்க ... மேலும்
 
temple news
திருநாவுக்கரசர் பாடிய 4,5,6 திருமுறைகளில் மொத்தம் 3064 பாடல்கள் உள்ளது. இதில் நான்காம் திருமுறையில் 1069 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar