நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே கே. குரும்பபட்டியில் கைலங்கிரி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன் தினம் யாகசாலை பூஜைகள் துவங்கின. மாலையில் முளைப்பாரி எடுத்து, காவடி தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. கணபதி ஹோமத்துடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அனுக்ஞை, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் முதல் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை இரண்டாம் கால யாக வேள்விகள் துவங்கியது. தொடர்ந்து சாமிக்கு உயிர் ஊட்டும் நிகழ்வான நாடி சந்தனம் நடந்தது. 9 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தீப ஆராதனை, விசேஷ பூஜைகள் நடந்தது. கிராமத்தினர் சார்பில் அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முத்துக்குமார சிவாச்சாரியார் நடத்தினார். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.