பதிவு செய்த நாள்
10
ஜூன்
2016
11:06
மேட்டுப்பாளையம்: புதிதாக திருப்பணி செய்த ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், கத்தி போடும் விழா நடந்தது. சிறுமுகை அருகேவுள்ள பகத்துாரில், 200 ஆண்டுகள் பழமையான ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலும், அகோர வீரபத்திரசுவாமி கோவிலும் உள்ளது. இக்கோவில் கட்டி, 36 ஆண்டுகள் ஆனதால், சீரமைத்து திருப்பணிகள் செய்து, புதிதாக விநாயகர் கோவில் கட்டினர். இதன் கும்பாபிஷேக விழா கடந்த, 6ம் தேதி மகா கணபதி மற்றும் கோமாதா பூஜையுடன் துவங்கியது. தீர்த்தக்கலசங்கள், முளைப்பாரிகள், கோபுர கலசங்கள், புற்றுமண் ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இரவு கிராம சாந்தியும், முதல் கால ஹோம பூஜையும் துவங்கியது. 7ம் தேதி இரண்டாம்கால ஹோமமும், விக்ரஹங்களுக்கு அபிஷேகமும், கோபுர கலசமும் அமைத்து, மூன்றாம் கால ஹோமம் பூஜையும் நடந்தது. புதன்கிழமை காலை நான்காம் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, கோபுர கலசங்கள் மீதும், சுவாமி மீதும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு அலங்கார பூஜையும், மாவிளக்கு பூஜையும் செய்தனர். நேற்று பவானி ஆற்றிலிருந்து அம்மனை அழைத்து வந்தனர். அப்போது, ஏராளமான இளைஞர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இன்று, அம்மன் திருவீதி உலாவும், நாளை இரவு, 9:00 மணிக்கு இரணியன் தெருக்கூத்தும் நடக்கிறது.