பதிவு செய்த நாள்
11
ஜூன்
2016
11:06
திருப்பதி: திருமலையில், லட்டு பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளியில், திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின.
திருமலையில், ஏழுமலையான் கோவில் அருகேயுள்ள லட்டு பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளியில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு ஊழியர்கள் பூந்தி தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கடாயில் கொதித்து கொண்டிருந்த நெய் திடீரென்று பொங்கி, அடுப்பின் மேல் விழுந்தது. இதனால், லட்டு தயாரிக்கும் மடப்பள்ளி முழுவதும் தீ வேகமாக பரவத் தொடங்கியது. மடப்பள்ளியில் இருந்து புகை வருவதை கண்ட பக்தர்கள் பயத்தில் அலறி அடித்து ஓடினர். தேவஸ்தான ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, ஒரு மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் அசம்பாவித சம்பவம் ஏற்படவில்லை. மடப்பள்ளியின் மேற்கூரை மட்டும் தீயில் பழுதடைந்தது. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், தீயில் கருகின. தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தார். அவரது ஆலோசனைப்படி, பூந்தி தயாரிக்கும் இடம் போர்க்கால அடிப்படையில் செப்பனிடப்பட்டு, காலை, 10:00 மணி முதல் பூந்தி தயாரிப்பு பணி தொடங்கியது.