பதிவு செய்த நாள்
13
ஜூன்
2016
11:06
ஆர்.கே.பேட்டை: அடுத்தடுத்த கிராமங்களில், நேற்று நடந்த தீமிதி திருவிழாவில், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் துரியோதனன் படுகளம் நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, விளக்கணாம்பூடி மற்றும் செல்லாத்துார் கிராமங்களில் திரவுபதியம்மன் கோவில்களில், தீமிதி திருவிழா நடந்து வருகிறது. ஜெயக்கொடி ஏற்றத்துடன் துவங்கிய விழாவில், தினசரி மகாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில், 5ம் தேதி, விளக்கணாம்பூடியிலும், 6ம் தேதி செல்லாத்துாரிலும், அர்ச்சுனன் தபசு நடந்தது. வெள்ளிக்கிழமை அலகு பானை ஊர்வலம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. பதினெட்டாம் நாள் குருஷேத்திர போர்க்கள நிகழ்வு, நேற்று காலை, இரண்டு கோவில்களிலும், ஒரே நேரத்தில் நடந்தது. இரண்டு இடத்திலும், துரியோதனனை கொன்று பீமசேனன் வெற்றி கொண்டான். மாலை, 6:00 மணியளவில், அக்னி பிரவேசம் நடந்தது. இதில், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த திரளான பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இன்று, தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. 18ம் நாள் திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.