பதிவு செய்த நாள்
14
ஜூன்
2016
11:06
நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய, 18.18 லட்சம் ரூபாய், 52 கிராம் தங்கம், 32 கிராம் வெள்ளி பொருட்கள், கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. நாமக்கல் நகரின் மத்தியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, முக்கிய விசேஷ நாட்களில், வெளி மாவட்டம், மாநிலம், வெளிநாடு போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள், வேண்டுதலை நிறைவேற்ற கோவில் வளாகத்தில், ஆறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பணம், காசு, தங்கம், வெள்ளி என செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவிலில் வைக்கப்பட்ட, ஆறு உண்டியல்களும் நேற்று எண்ணப்பட்டன. மாவட்ட உதவி ஆணையர் கிருஷ்ணன், உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. சேலம் திருப்பதி சேவா சங்கத்தினர், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். முடிவில், 52 கிராம் தங்கம், 32 கிராம் வெள்ளி, 18 லட்சத்து, 18 ஆயிரத்து, 282 ரூபாய் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அவை, கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன.