பதிவு செய்த நாள்
20
ஜூன்
2016
12:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பர்வதம் கோயிலுக்கு செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள்,‘ஸ்ரீ ராமர், தனுஷ்கோடியை பார்க்கின்றனர். இலங்கை இடையே பாலம் அமைத்த போது, உயரமான மணல் குன்றில் ஏறி அப்பணியை ராமர் பார்வையிட்டார்’ அந்த இடம் கெந்தமாதன பர்வதம் என்றும், அங்கு ராமர் பாதம் பதித்த கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேலான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் சென்று தரிசிக்கின்றனர். 3 கி.மீ., துாரமுள்ள பர்வதம் கோயில் சாலை, திட்டகுடி தெருவில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் அங்கு காவிரி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் தேங்கி கழிவு நீராக மாறி, துர்நாற்றம் வீசுகிறது. இவ்வழியாக பர்வதம் கோயிலுக்கு செல்லும் வாகன டயர்கள் சேதமடைகிறது. இதனால் பக்தர்கள் பர்வதம் கோயிலுக்கு செல்லாமல், ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மேலும் இச்சாலையை கடந்து ஜல்லிமலை, பாரதி நகர், கெந்தமாதன பர்வதம் கிராமத்திற்கு டூவீலரில் செல்பவர்கள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் சாலையில் இடறி விழுந்து காயமடைகின்றனர். பிரசித்தி பெற்ற பர்வதம் கோயில் சாலையை சீரமைக்க மாநில நெடுஞ்சாலை துறையினரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை. எனவே, பர்வதம் சாலையை புதுப்பிக்க கலெக்டர் நடராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.