வடமாநிலமான மத்தியப் பிரதேசத்தில், விந்திய மலைப்பகுதியில் சத்புரா என்ற மலைக்காட்டுப் பகுதியின் உச்சியில் 1067 மீட்டர் உயரத்தில் பஞ்ச்மார்ஹி என்ற சமதளப் பகுதியுள்ளது. இது ஐந்து மலைப்பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஐந்து மலைகள் சேர்ந்த ஒரு சமவெளியாகும். பாதுகாப்பான, அதேசமயம் யாரும் கண்டுபிடிக்க முடியாத அடர்ந்த காட்டுப்பகுதி. முன்பிருந்த இந்திய மன்னர்களில் ஒருவன் எதிரி நாட்டவர்களுக்குப் பயந்து இங்குள்ள ஒரு குகைக்குள் ஈஸ்வரனை லிங்க வடிவில் கொண்டுவந்து மறைத்து வைத்துவிட்டான். ஜடசங்கர் என்னும் இந்த ஈஸ்வர சன்னதி 150 மீட்டர் நீளம் குடைந்துள்ள ஒரு குகைக்குள் இருக்கிறது. இந்த குகைக்குள் சிவலிங்கம், ராஜநாகம், சூலாயுதங்கள் ÷ பான்றவை உள்ளன.
இக்குகையின் முகப்பே ஓர் ராஜநாகத்தின் வடிவில் இருக்கிறது. அருகிலுள்ள சுனையின்நீர் இக்கோயிலுக்குள் பாறை வழியாக நீர்த்துளிகளாகக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. இங்கு சிவராத்திரிப் பெருவிழா பக்தர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இரு ம்பாலான பெரும் சூலாயுதங்களைத் துõக்கிக்கொண்டு ஹர ஹர மகாதேவ என்று உரத்த குரலில் சொல்லிக்கொண்டு மலைமீது ஏறி வருவார்கள். மலையுச்சியிலுள்ள ஜடசங்கர் குகைக்கோயில் முன்பு கொண்டுவந்த சூலாயுதங்களை வரிசையாக நடுவார்கள். சிலர் நிலத்தில் ஊன்றி நட்ட கனமான சூலாயுதங்கள் மீதேறி உச்சிக்குச் சென்று சூரியனைப் பார்த்து ஹர ஹர மகாதேவா என்று கூவி, ஈசனைத் துதித்துவிட்டு கீழிறங்கி வருவார்கள். அவற்றுக்குத் திருநீறு, குங்குமமிட்டு, தேங்காய் உடைத்து, சாம்பிராணி துõபமிட்டு நமஸ்கரிப்பார்கள். இதல்லாமல் தாரை, தப்பட்டை முழங்க ஈஸ்வரன் மீது மகான்களும், சங்கீத மேதைகளும் பாடிய பாட்டுகளை இரவு முழுவதும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் ஈஸ்வரனைத் துதிப் பார்கள். காலைப்பொழுது விடிந்ததும் குகைக்குள் சென்று, சிவலிங்கத்தையும் ராஜநாகத்தையும் நமஸ்கரித்து விட்டு மீண்டும் மலையிறங்கி வீடுவந்து சேர்வார்கள். ஓர் இரவில் மட்டுமே இந்த மலை, பக்தர்களால் நிறைந்து காணப்படும். அந்த இரவு சிவராத்திரி.