பதிவு செய்த நாள்
05
ஜூலை
2016
11:07
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடந்த, அமாவாசை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி அருகே ஆனைமலையிலுள்ள இக்கோவிலில் அமாவாசையையொட்டி அபிேஷகம், ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, வெளி மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்களும், நீண்ட வரிசையில் காத்திருந்து, அம்மனை வழிபட்டனர். அங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
* பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், சுப்ரமணியசுவாமி கோவில், ஐயப்பன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், அமாவாசையொட்டி பக்தர்கள் குடும்பத்துடன் ÷ காவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். அம்பராம்பாளையம் ஆற்றில், பலர் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அடுத்துள்ள சொலவம்பாளையம் எருதுகட்டி மாரியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. இதில், மாரியம்மனுக்கு, பால், பன்னீர், இளநீர், எலுமிச்சை, பஞ்சாமிர்தம், குங்குமம், சந்தனம், தயிர், தேன் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், சொலவம் பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.