பதிவு செய்த நாள்
08
ஜூலை
2016
11:07
திருக்கழுக்குன்றம் ;திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சங்குதீர்த்த குள விழா ஆலோசனைக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலம். இக்கோவில் அமைந்துள்ள சங்கு தீர்த்த குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.ஆகஸ்ட் 2ல், சங்குதீர்த்த குள புஷ்கரமேளா மற்றும் லட்ச தீப விழா நடைபெறுகிறது. இத்திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளாவன:தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை சார்பில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் குளத்தை சுற்றி நிறுத்தப்படும். குளத்தின் உள்ளே, பைபர் படகு சுற்றி வரும் சுகாதார துறை சார்பாக மூன்று மருத்துவக்குழு அமைக்கப்படும்; ஆறு, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும் 250 கிலோவாட் மின்மாற்றி அமைக்கப்பட்டு, தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் கல்பாக்கம், செங்கல்பட்டு, மதுராந்தகம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும். கிரிவலப்பாதை, 26 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, ஆகஸ்ட் 2ம் தேதி பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.