பதிவு செய்த நாள்
14
செப்
2011
10:09
திருச்சி: மஹா அபிஷேகத்துடன் அருள்பாலித்த, திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகரை, பக்தர்கள் மனம் குளிர தரிசனம் செய்தனர். திருச்சி தாயுமான ஸ்வாமி கோவிலில், விநாயகர் சதுர்த்தி பெருவிழா கடந்த ஒன்றாம் தேதி துவங்கியது. மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் மற்றும் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு, தலா 75 கிலோ எடையுள்ள ராட்ஷத கொழுக்கட்டைகள் நெய்வேத்யம் செய்யப்பட்டன. அன்று மாலை மாணிக்க விநாயகருக்கு பால கணபதி அலங்காரம் செய்விக்கப்பட்டது. 2ம் தேதி, நாகா பரண கணபதி அலங்காரம், 3ம் தேதி, லெட்சுமி கணபதி, 4ம் தேதி, தர்பார் கணபதி, 5ம் தேதி, பஞ்சமுக கணபதி, 6ம் தேதி, மூஷிக கணபதி, 7ம் தேதி, ராஜகணபதி அலங்காரங்கள் செய்விக்கப்பட்டன. தொடர்ந்து 8ம் தேதி, மயூர கணபதி, 9ம் தேதி, குமார கணபதி, 10ம் தேதி, வல்லப கணபதி, 11ம் தேதி, ரிஷபாருடர், 12ம் தேதி, சித்தி புத்தி கணபதி அலங்காரங்கள், மாணிக்க விநாயகருக்கு செய்விக்கப்பட்டன. நேற்று 13ம் நாள் விழாவையொட்டி, மாணிக்க விநாயகருக்கு மகா அபிஷேகம் நடந்தது. விபூதி, சந்தானாதி தைலம், திரவியப்பொடி, நெல்லிப்பொடி, மஞ்சள் பொடி, குங்குமம், அரிசிமாவு, தேன், நெய், பஞ்சாமிர்தம், முக்கனிகள், எலுமிச்சை சாறு, கரும்பு, திராட்சைச்சாறு, அன்னாபிஷேகம், வெந்நீர், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் உற்சவருக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனம் குளிர ஸ்வாமி தரிசனம் செய்தனர். சதுர்த்தி விழா நிறைவு நாளான இன்று (14ம் தேதி), திருக்கோவில் பணியாளர்கள் சார்பில் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் இளம்பரிதி, உதவி கமிஷனர் சித்ரா, கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.