பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
12:07
நாகர்கோவில்: நாகர்கோவில், வடசேரி தழுவிய மகாதேவர் கோயிலில் ஜூலை 11-ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமையான கோயில்களில் ஒன்று வடசேரி தழுவிய மகாதேவர், ஆவுடையம்பாள் கோயில். தற்போது தெற்கு வாசலில் 51 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. மூலவர் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடியில் திருப்பணிகள் செய்யப்பட்டு புதிய கொடிமரம் நிறுவப்பட்டுள்ளது. கோயிலின் முன்பகுதியில் நந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் ஜூலை 6 காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. ஹோமகுண்ட பூஜைகள் நடக்கின்றன.
நாளை காலை 9 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள், மாலை 6 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பிம்பசுத்தி, ரக் ஷாபந்தன பூஜைகள் நடக்கிறது. ஜூலை 11 அதிகாலை 5 மணிக்கு ஆறாம் கால யாக பூஜைகள் தொடங்கும். 9 மணிக்கு ராஜகோபுரம், மூலஸ்தானம், பரிவார விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். 9.30-க்கு மூலஸ்தான மூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் நடைபெறும். தீபாராதனை நடைபெறும். 11.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. தினமலர் நாளிதழ் நிறுவனர் அமரர் டி.வி.ராமசுப்பையர் வடசேரியில் பிறந்தவர். தினமலர் சார்பில் 20 லட்சம் ரூபாய் செலவில் யாகசாலை, கும்பாபிஷேகம், அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட தேவசம்போர்டுடன் இணைந்து பூசலார் நாயனார் சேவாசங்க கவுரவ தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன், தலைவர் முத்தரசு, செயலாளர் வினோத்குமார், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர்கள் சிவகுமார், சிவதாணுபிள்ளை, கவுரவ ஆலோசகர்கள் மகாதேவன், குமாரவேல் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
தேவியை தழுவிய சிவன் : மூலவர் தழுவிய மகாதேவர். பார்வதி, ஆவுடையம்மையாக இந்த ஊரிலேயே அவதரித்தார். அவர் தினமும் மகாதேவர் ஆலயத்தில் தரிசனம் செய்வார். ஒரு நாள் மகாதேவர் அவரை அப்படியே தழுவி தன்னுடன் அழைத்துக்கொண்டார். அதுமுதல் மூலவர், தழுவிய மகா தேவர் என்று அழைக்கப்படுகிறார். ஆவுடையம் மையாள் இங்கு தனி சன்னதியில் மூலவரின் தேவியாக இருக்கிறார். கிழக்கு நோக்கி அமைந்துள்ள தழுவிய மகாதேவர் கோயில், இரண்டு பிரகாரங்களை உடையது. உட்கோயில் வாசலின் இரு பக்க சுவர்களில் விநாயகரும், சுப்பிரமணியரும் உள்ளனர். உட்பிரகாரத்தில் கன்னி விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், சனீஸ்வரர், சுரதேவர் சன்னதிகள் உள்ளன. வெளி பிரகாரத்தில் சாஸ்தா மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளன.