கடவுள் மீது நம்பிக்கை வைப்பவர்களே வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்கிறார்கள். பைபிளில் இறைவன் மீதான விசுவாசத்திற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சி கூறப்படுகிறது. யவீரு என்பவரின் மகள், நீண்ட காலமாக நோயால் துன்பப்பட்டாள் அவளைக் குணமாக்க இயேசு சென்று கொண்டி ருந்தார். அவர் மீது விசுவாசம் கொண்ட யவீரு, அவர் தொட்டாலே தன் பெண்ணுக்கு குணமாகும் என நம்பிக்கை வைத்திருந்தார். செல்லும் வழியில், மற்றொரு நோயாளிப் பெண் காத்திருந்தாள். அவள் இயேசுவைப் பற்றி அறிந்திருந்தாள். “அவர் அப்பெண்ணை குணமாக்க செல்லும் வழியில் என்னையும் குணமாக்குவார். இதில் சந்தேகமே இல்லை,” என அங்கு கூடியிருந்த மக்களிடம் கூறினாள். அங்கிருந்தவர்கள் அவளைக் கேலி செய்தனர். “வியாதியைக் குணப்படுத்த வைத்தியனால் தான் முடியும். இயேசுவால் எப்படி முடியும்?” என்றெல்லாம் கேட்டனர். இன்னும் சிலர், “அப்படியே அவர் குணப்படுத்தினாலும் கூட, அவரைத் தொடர்ந்து வரும் கூட்டத்திற்குள் நுழைந்து அவரை நீ எப்படி சந்திப்பாய்?” என்றனர். அவள் சொன்னாள். “அவருடைய வஸ்திரத்தின் ஓரம் கூட என்னைக் குணமாக்க வல்லது,” என்று. ஆம்! காற்றடிக்கும் போது, அவரது வஸ்திர நுனி தன் மீது பட்டால் கூட வியாதி குணமாகி விடும் என அவள் நம்பினாள். அந்தளவுக்கு அவள் இயே சுவின் மீது நம்பிக்கை கொண்டிருந்தாள். அவள் என்ன நினைத்தாளோ அது நடந்தது. உண்மையிலேயே அப்பெண்ணால் இயேசுவை சந்திக்க முடி யவில்லை. ஆனால் அவரது வஸ்திரத்தின் நுனி அவள் மீது பட்ட மாத்திரத்தில், 12 ஆண்டுகளாக அவளை வாட்டி வதைத்த நோய் நீங்கியது. பார்த்தீர்களா! கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கடவுளை நம்பினால் துன்பங்கள் பறந்தோடும்.