பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
05:07
ஒரு கோவிலை புனர் நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் நடத்துவது என்பது மிகப்பெரிய பணிகளில் ஒன்று. முக்கியமாக இதற்கு ஏராளமான பணம் தேவைப்படும். எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும், அதை புரட்டியே ஆக வேண்டும் என்கிறார் காஞ்சி மகாபெரியவர். கோவில் கும்பா பிஷேகத்திற்கு உதவுவதில் பலன்கள் குறித்து அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேளுங்கள். ஒரு நல்ல காரியத்திற்கு உதவி செய்வது என்பது பெரிய புண்ணியத்தை தரும்.கோவில் திருப்பணிக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதை கொடுத்து கோடி புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். தர்மமாக ஒரு செங்கல்லைக் கொடுத்தாலும், அந்த செங்கல் அந்தக் கோவிலில் எத்தனை வருஷங்கள் உள்ளதோ அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாம். கும்பாபிஷேகம் மட்டுமின்றி, ஒரு ஏழையின் கல்யாணத்திற்கு உதவுவதும், சிவபூஜை செய்பவர்களுக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றைக் கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும். இது பற்றி கதை ஒன்று சொல்வார்கள்.
ஒரு அந்தணர் தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஒருவர், “ஐயா.... என்ன தேடுகிறீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு அந்தணர், ‘‘சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்குவதற்காக ஓர் அணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. தேடிக் கொண்டிருக்கிறேன்,” என்றார். வந்தவர், “பரவாயில்லை ... அதை விடுங்கள். நான் ஓர் அணா தருகிறேன். நீங்கள் வாழைப்பழம் வாங்கி வைத்து பூஜை நடத்துங்கள்” என்றார். கால வெள்ளத்தில் இருவரும் இறந்து போனார்கள். எமதர்ம ராஜன் சிவபூஜை செய்தவரை ரத்தின சிம்மாசனத்திலும், ஓர் அணா காணாமல் போய் அவருக்கு உதவியவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்து அழைத்துச் சென்றார். அந்த அளவுக்கு சிறு தொகை கூட பெரிய புண்ணி யத்தைக் கொடுக்கும். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், சிவபூஜை அல்லது கும்பாபிஷேகத்தை நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவருக்கே புண்ணியம் அதிகம். அதனால் தான், எந்த ஊரில் கும்பாபிஷேகம் நடந்தாலும் அதற்கு உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். ஏற்கனவே சொன்னது போல, ஒரு செங்கல் கொடுத்தாலும் கூட அந்த செங்கல் அந்தக் கோவிலில் இருக்கும் நாள் வரைக்கும் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாம் என்பதை நினைவில் வையுங்கள். அது மட்டுமல்ல... உங்கள் முன்னோர்களில் பலர் மோட்சம் அடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கலாம். கும்பாபிஷேகம் முடிந்த 48 நாட்களில் ஏதேனும் ஒருநாள் செலவை நீங்கள் ஏற்றுக் கொண்டால் அவர்களின் ஆத்மா சாந்தியடையும். (மகான் காஞ்சிப் பெரியவர்)