தசராவில் வேடம் அணியும் பக்தர்கள் இரும்பினாலான ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2011 11:09
உடன்குடி : குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என தசரா குழு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இத்திருவிழாவில் கலந்து கொள்ள தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் உள்ளன. இந்த தசரா குழுக்கள் திருவிழா காலங்களில் எப்படி நடந்து கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் கோயில் கலையரங்கத்தில் நடந்தது. கோயில் நிர்வாக அதிகாரி சங்கர் தலைமை வகித்தார். இதில் கோயில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், கோயில் கணக்கர் டிமிட்ரோ, பாரத திருமுருகன் திருச்சபை தலைவர் மோகனசுந்தரம், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன், சிதம்பரம் உட்பட ஏராளமான தசரா குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தசரா குழு அமைப்பவர்கள் முறையாக கோயில் நிர்வாக அனுமதியுடன் துவங்க வேண்டும், தசரா குழுக்கள் கோயிலுக்கு வரும் போது மற்ற பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் அமைதியாக அம்மனை தரிசிக்க வேண்டும். குறிப்பாக 10ம் திருநாளில் கோயிலுக்கு வரும் தசரா குழு கோயில் முன்பு ஒரு சில நிமிடம் மட்டுமே தசரா நிகழ்ச்சியை நடத்த வேண்டும், மேலும் தசரா வேடம் அணியும் பக்தர்கள் சூலாயுதம், ஈட்டி, வாள் போன்ற இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.