சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் சுற்றுச்சுவரில் பதிக்கப்பட்டுள்ள கந்தர் அலங்காரம் பாடலில் உள்ள பிழையை திருத்தம் செய்ய, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக சென்னிமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவில் உட்பிரகார சுற்றுச்சுவரில், ஏராளமான முருகன் பதிகங்களை, சிறந்த முறையில் கல்வெட்டில் செதுக்கி வைத்துள்ளனர். இது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இளைய தலைமுறையினர் தெரியாத பதிகங்களை ஆர்வமுடன் படிக்கின்றனர். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் ஆகியவையும் இக் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளன. இதில் கந்தர் அலங்காரம், 38வது பாடல் கல்வெட்டில் தவறாக உள்ளதாகவும், அதை திருத்தம் செய்ய வேண்டும் எனவும், பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பாடலில் நாள் என்செய்யும் என்பதற்கு பதிலாக நான் என் செய்யும் என தவறாக உள்ளது. இதனால் பாடல் பொருள் பிழையாகி விடும். எனவே, அதை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.