தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தை அம்மன் வழிபாட்டுக்குரியதாக வைத்துள்ளனர். இறைவழிபாடு மட்டுமே இம்மாதத்தில் பிரதானம் என்பதால் தான், குடும்ப நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. ஆடி என்ற கொடிய அரக்கன், பிரம்மாவை வேண்டி நினைத்த வடிவத்தைப் பெறும் ஆற்றல் பெற்றான். ஒருமுறை இவன் விளையாட்டாக, சிவனை ஏமாற்ற விரும்பினான். பார்வதியைப் போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டு, சிவனை நெருங்கினான். இதனை அறிந்த சிவன், அந்த அரக்கனை நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். உண்மையிலேயே அவனது நோக்கம் சிவபெருமானை அடைய வேண்டும் என்பதாக இருந்ததை அறிந்த பார்வதி, அவன் மீது இரக்கம் கொண்டாள். இதன் பிறகு அவன் நினைவாக ஒரு மாதத்திற்கு ஆடி என்று பக்தர்கள் பெயரிட்டனர். அந்த மாதத்தில் பார்வதிக்கும், அவளது அம்சமான சக்திகளுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தும் வழக்கம் உருவானது.