திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் குவிந்துள்ள முடியால் துர்நாற்றம் - பக்தர்கள் முகம்சுழிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2016 12:07
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய முடி 2 ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் குவிக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்து அறநிலையத்துறைக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் முடி காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இவற்றை இந்துஅறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். கடந்த 2013ம் ஆண்டு ரூ.52 லட்சத்திற்கு ஏலம் போனது. 2014ம் ஆண்டு ஏலத் தொகை குறைத்து கேட்கபட்டதால் முடி சேகரிக்கபட்டு தனி அறையில் குவித்து வைக்கபட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக முடி குவிந்துள்ளதால் அதிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இவை கோயிலுக்கு வரும் பக்தர்களை முகம்சுழிய வைக்கிறது. மேலும் முடி ஏலம் விடப்படாததால் இந்து அறநிலையத் துறைக்கு பலலட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏல விதிகளை தளர்த்தி முடியை அப்புறப்படுத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும்.
இது குறித்து திருவெற்றியூரை சேர்ந்த மருதுபாண்டியன் கூறுகையில்,“ கோயிலின் அருகில் குவித்து வைக்கப்பட்டுள்ள முடியிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. பக்தர்கள் கோயிலுக்குள் செல்லவே தயங்குகின்றனர். ஏல விதிகளை தளர்த்தி முடியை ஏலம் விட்டிருந்தால் கோயிலுக்கு வருமானம் கிடைத்திருக்கும். தற்போது யாருக்கும் பயன் இல்லாமல் முடி வீணாகிவிட்டது,” என்றார். தேவஸ்தான ஊழியர்கள் கூறுகையில்,“ பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் இந்து அறநிலையதுறை அனுமதியுடன் மட்டுமே ஏலம் விட முடியும்,” என்றனர்.