பதிவு செய்த நாள்
21
ஜூலை
2016
12:07
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டதால் அதிகாரிகள் நிம்மதியடைந்தனர். ஏற்பாடுகளை மதுரை, விருதுநகர் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சதுரகிரி மலையில் ஆக.2ல் ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பால் பஸ்கள் சென்று திரும்புவதற்கு கூட இடமில்லாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் பஸ்கள் வந்து செல்ல இடம் தேடி கடந்த ஒரு மாதமாக அலைந்தனர். கடந்த இருதினங்களுக்கு முன் மதுரை, விருதுநகர் மாவட்ட உயர் அதிகாரிகள் தனியார் நில உரிமையாளர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் சம்மதம் தெரிவித்தனர். தாணிப்பாறை மலையடி வாரத்தில் இரு இடங்கள் தற்காலிக பஸ் ஸ்டாண்டிற்காக தேர்வு செய்யப்பட்டன. அந்த இடங்களை நேற்று மாலை மதுரை காவல்துறை துணை ஆணையர் ராஜராஜன், விருதுநகர் கலக்டர் (பொறுப்பு) முத்துக்குமரன், உதவி எஸ்.பி., மாடசாமி, ஸ்ரீவி., டி.எஸ்.பி., சங்கரேஸ்வரன் உட்பட அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர். பஸ்கள் வந்து செல்லும் இடங்கள், மீண்டும் புறப்படும் இடங்கள், பக்தர்களை இறக்கி விடவேண்டிய இடங்கள் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கூறினர். பின் அடிவாரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
பின் அவர்கள் கூறுகையில் “திருவிழாவிற்காக ஜூலை 28 முதல் ஆக.4 வரை 8 நாட்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் ஆறுகளை ஒட்டிய இடங்களில் பக்தர்கள் தங்க தடை செய்யப்பட்டுள்ளது. தற்காலிக கடைகள் அமைப்பவர்கள் கூரை கொட்டகை, துணி விரிப்பான்களால் கடைகள் அமைப்பதற் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக மதுரை, விருதுநகர் மாவட்ட போலீசார்1,200 பேர் பணியில் ஈடுபடவுள்ளனர். தேவைக்கேற்ப இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்’ என்றனர்.