கொடைக்கானல்: பழநி பகுதியில் உள்ள போகர் மலையில் கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை பொதுமக்கள் மழைவேண்டி வன தெய்வ வழிபாடு நடத்தினர். கொடைக்கானல் - பழநி இடையேயுள்ளது போகர்மலை. இங்கு வசித்த போகர் என்ற சித்தர், 81 மூலிகையை ஒருங்கிணைத்து சக்தி வாய்ந்த நவபாஷாண சிலையை உருவாக்கினார். அதில் முருகன் சிலை தயார் செய்து, பழநி மற்றும் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் பிரதிஷ்டை செய்ததாக வரலாறு உள்ளது. குழந்தை வேலப்பர் கோயில் பழநி தண்டாயுதபாணி கோயிலின் உபகோயிலாக உள்ளது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் இக்கோயிலுக்கும் வந்து செல்ல தவறுவதில்லை.
வனதெய்வ வழிபாடு: போதிய மழையின்றி பூம்பாறையில் விவசாயம் பாதிக்கப்படும் போது, இப்பகுதி பொதுமக்கள், சித்தர்கள் வசித்ததாக கருதும் போகர் மலையில் உள்ள வனதெய்வங்களை வழிபடுகின்றனர். இதனால் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனையடுத்து நேற்று பூம்பாறையில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் போகர் மலைக்கு புறப்பட்டுச் சென்றனர். போகர் மலையில் போகர்கஜம் அருகே ஆற்றுப்படுகையில் உள்ள வனதெய்வத்தை மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வழிபாடு நடத்தி பின் வீடுதிரும்பினர்.