கோழியூர் ஆலந்துறை ஈஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2026 12:01
திட்டக்குடி: கோழியூர் சவுந்திர நாயகி உடனுறை ஆலந்துறை ஈஸ்வரர் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கோழியூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சவுந்திரநாயகி உடனுறை ஆலந்துறை ஈஸ்வரர் கோவில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணி முடிந்து, மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
விழா, கடந்த 26ம்தேதி மாலை 5:00 மணியளவில் முதல் கால யாக பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 7:00 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜை, இரவு 7:00 மணியளவில் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.
நேற்று காலை 5:00 மணியளவில் நான்காம் கால யாக பூஜை, 10;00 மணியளவில் கடம் புறப்பாடாகி, அமைச்சர் கணேசன் கொடியசைத்து, வேதமந்திரங்கள் முழங்க, மூலவர் கோபுரம் மற்றும் அம்பாள் சன்னதி, விநாயகர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. மாலை திருக்கல்யாணம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.
விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி, உதவி ஆணையர் சந்திரன், பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், அரசு கூடுதல் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தமிழ்மணி, ராதாகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் சிவபிரகாசம், நகராட்சி ஆணையர் முரளிதரன், துணை சேர்மன் பரமகுரு, பெண்ணாடம் பேரூராட்சி துணை சேர்மன் குமரவேல், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூமிநாதன், ஒப்பந்ததாரர் பொன்னுசாமி, திருப்பணி குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர். ஆவினங்குடி ரமேஷ் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.