பதிவு செய்த நாள்
28
ஜூலை
2016
01:07
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், நிர்வாக மற்றும் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், அமராவதி மற்றும் உப்பாற்றங்கரையில், பழமையான கோவில்கள் அதிகளவு உள்ளன. மேலும், உடுமலை மாரியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில், கொழுமம் தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் என பிரசித்தி பெற்ற கோவில்களும் அமைந்துள்ளன. இந்த கோவில்களுக்கு, இந்து அறநிலையத்துறை சார்பில், செயல் அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த அலுவலர்கள் கோவில் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். திருவிழாக்கள் நடத்துவதுடன், கோவிலுக்கு சொந்தமான நிலங்களை நிர்வகித்து செயல் அலுவலர்கள் கண்காணிக்கின்றனர்.
கோவில் வருமானத்தை பெருக்குவது, கோவிலுக்கு தேவையான வசதிகளை செய்வது, அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்துவது போன்றவையும் அவர்களது முக்கிய பணியாக உள்ளது. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள கோவில்களில் ஐந்து செயல் அலுவலர் பணியிடங்கள் உள்ளன. இதில் மாரியம்மன் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு மட்டும் செயல்அலுவலர்கள் உள்ளனர். ஆல்கொண்டமால், பிரசன்ன விநாயகர் கோவில், கொழுமம் தாண்டேஸ்வரர் கோவில்களில் இப்பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், இருக்கும் இரண்டு செயல்அலுவலர்களும், இப்பணியிடம் காலியாக உள்ள கோவில்களையும் சேர்த்து பார்க்க வேண்டியதுள்ளது. இவர்களின் வேலைப்பளுவும் அதிகரித்துள்ளது. கோவில்களில் வளர்ச்சிப்பணிகளும் பாதிக்கப்படுகின்றன. ஒரு செயல் அலுவலர் முக்கிய கோவிலுடன், கூடுதலாக, பத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற கோவில்களை கண்காணிக்க வேண்டியுள்ளது. கிராமப்புற கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பு பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், செயல் அலுவலர்கள் இல்லாதது, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
பழங்கால கோவில்களை புனரமைக்க, திட்ட மதிப்பீடு தயாரித்தல் உட்பட பணிகளும் தொய்வடைந்துள்ளது. துறைக்கு சொந்தமான நிலங்களுக்கு குத்தகை வசூலிக்க தகவல் பலகைகள் வைக்கப்பட்டன. அதன்பின்னர், நிலுவையிலுள்ள குத்தகையை பெற, அலுவலர்கள் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்ப இந்து அறநிலையத்துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.