பதிவு செய்த நாள்
29
ஜூலை
2016
12:07
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, வடசென்னிமலை கோவிலில், நேற்று, ஆடி கிருத்திகை பூஜையொட்டி, பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். அதேபோல், கோட்டை காயநிர்மலேஸ்வரர், வெள்ளை விநாயகர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், முருகன் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.
* அம்மாபேட்டை, குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், பால் அபிஷேக விழாக்குழு சார்பில், தொடர்ந்து, 43ம் ஆண்டாக, 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. ஆடி மாதம் முதல் தேதியில் இருந்து, தினமும் உற்சவர் தண்டாயுதபாணிக்கு, பால் அபிஷேகம் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று, 501 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. அதற்காக, குழு தலைவர் செந்தில்நாதன் தலைமையில், ஏராளமான பக்தர்கள், குமரகிரி அடிவாரம் விநாயகர் கோவிலில் இருந்து, ஊர்வலமாக பால் குடங்களை எடுத்து வந்தனர்.
* சங்ககிரி, சந்தைப்பேட்டை, செல்லியம்மன் கோவில் பாலமுருகனுக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. முன்னதாக, பெண்கள் பால்குடத்தை சுமந்து, ஊர்வலம் வந்தனர். பின், சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.