பதிவு செய்த நாள்
29
ஜூலை
2016
04:07
விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது. பரமசிவனுக்கு தாழம்பூ உதவாது. தும்பை, கொன்றை, வில்வம் விசேஷமானது. ஊமத்தை, வெள்ளெருக்காலும் அர்ச்சிக்கலாம். விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்க கூடாது. அம்பிகைக்கு அருகம்புல் ஆகாது. லட்சுமிக்கு தும்பை கூடாது. வரலட்சுமி பூஜையின் போது தாழம்பூ சூட்ட வேண்டும். பவள மல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக்கூடாது. விஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு துளசி இலையால் அர்ச்சனை செய்யலாம். அதே போல் சிவன் சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யலாம். எந்த தெய்வத்திற்கும் துலுக்க சாமந்திப்பூவை உபயோகிக்க கூடாது. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யக்கூடாது. வாடிப்போன, அழுகிப்போன, பூச்சி கடித்த மலர்களை உபயோகிக்க கூடாது. அன்று மலர்ந்த மலர்களை அன்றே உபயோகிக்க வேண்டும்.
ஒருமுறை தெய்வத்திற்கு போடப்பட்ட மலர்களை மீண்டும் சாத்தக்கூடாது. வில்வம், துளசி இவை இரண்டை மட்டுமே மீண்டும் உபயோகப்படுத்தலாம். தாமரை, நீலோத்பவம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்ற நியதி இல்லை. வாசனை இல்லாதது, முடி, புழுவோடு இருப்பது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி அணிந்தவர்கள் கொண்டு வந்தது, காய்ந்தது, தரையில் விழுந்தது ஆகிய பூக்கள் பூஜைக்கு உகந்தது அல்ல. செண்பக மொட்டு தவிர, வேறு மலர்களின் மொட்டுக்கள் இறைவனுக்கு உகந்தவை அல்ல. மலர்கள், வில்வம், துளசி ஆகியவற்றை கிள்ளி உபயோகிக்காமல் அப்படியே அர்ச்சிக்க வேண்டும். பெருவிரலிலும், மோதிர விரலிலும் சேர்த்து விபூதி அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்க கூடாது. பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், துõப தீபம் முடியும் வரையிலும், நைவேத்தியத்தின் போதும் கை மணி அடிக்க வேண்டும். மணியின் சப்தமில்லாமல் இவை பயன் தராது.