பதிவு செய்த நாள்
29
ஜூலை
2016
05:07
கர்நாடக மாநிலம், பெங்களூருக்குச் சென்றால், அங்குள்ள பசவன்குடி நந்தி கோயிலுக்குச் செல்லாமல் வரக்கூடாது என்பார்கள். பஸவ என்ற கன்னட சொல்லுக்கு நந்தி என்று பொருள். ஆமாம், இந்தத் தலத்தின் சிறப்பம்சம் நந்திதான். சுமார் 16 அடி உயரம், 21 அடி நீளத்தில் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார் இங்குள்ள நந்தியெம்பெருமான். 500 வருடம் பழைமையான இந்தத் தலத்தின் கோயிலைப் பற்றிய கர்ணபரம்பரை கதை இது. இந்தி நந்தி சிலையாவதற்குச் சுமார் 500 வருடங்களுக்கு முன்பு உயிருடன் நடமாடிக் கொண்டிருந்தது. தற்போது பெங்களூரின் இதயப் பகுதியான காந்தி நகர், மாவள்ளி, குட்டஹள்ளி போன்றவை சிறு கிராமங்களாக இருந்தன. (ஹள்ளி என்றால் கிராமம்). அந்த கிராமங்களில் இந்த நந்தி சுற்றி திரிந்து கொண்டிருந்தது. இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலும் வேர்க்கடலை விவசாயம் செய்துவந்தனர்.
ஒவ்வொரு மாத பவுர்ணமியின்போதும் இந்த நந்தி இரவில் வந்து கடலைப் பயிரைத் தின்றுவிட்டுப் போய்விடுவதால். என்ன முயன்றும் விவசாயிகளால் அந்த நந்தியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஒருநாள், கண்கள் வைரம்போல் பிரகாசிக்க, பொன்னிற மேனியுடன் நந்தி ஒன்று வயல் பகுதியில் திரிந்ததாக, அதைப் பார்த்தவர்கள் சொன்னார்கள். அதன் பிறகு, கடலைப் பயிர் நாசமாகவில்லை. நந்தியையும் பிறகு யாரும் காணவும் இல்லை. ஆனால், சில காலம் கழித்து பசவனகுடி மலை மீது திடீரென ஒரு நந்தி சிலை இருப்பதைக் கவனித்தனர். நாளாவட்டத்தில் இந்த நந்தி சிலை வளர்ந்துகொண்டே போனதாகவும், அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்காக ஊர் மக்கள் நந்தியின் உச்சந்தலையில் திரிசூலம் போல ஓர் ஆணியை அடித்ததாகவும், அதன் பின்னர் நந்தியின் வளர்ச்சி நின்று போனதாகவும் சொல்கிறார்கள். அந்தத் திரிசூலத்தை இன்றும் நந்தியின் தலையில் காணலாம். பெங்களூரை அப்போது ஆட்சிசெய்த மன்னர் கெம்பே கவுடா இதைப்பற்றிக் கேள்விப்பட்டு, ஒருநாள் மாறுவேடத்தில் இங்கு வந்து மக்களோடு மக்களாக இருந்து நந்தியை தரிசித்தார். அதுபற்றிய கதையையும் கேட்டறிந்தார். அன்று இரவே மன்னரின் கனவில் நந்தி வந்து, தனக்கு ஒரு கோயில் கட்டும்படி ஆணையிட்டதாகவும், அதற்கான நிதி (பொற்குவியல்) அங்கேயே இருப்பதாகவும் சொன்னது. அதன்படியே, மன்னர் அந்தப் பொற்குவியலைக் கண்டெடுத்து, நந்தியின் ஆணைப்படி கோயில் கட்டி முடித்தார்.
நிலக்கடலைத் திருவிழா: இன்றைக்கும் இந்தி நந்தியெம்பெருமானுக்காக இப்பகுதி விவசாயிகள் ஒன்றுசேர்ந்து நிலக்கடலைத் திருவிழா நடத்துகிறார்கள். இதனால் நிலக்கடலை அமோகமாக விளையும் என்பது நம்பிக்கை. விழாவுக்குப் போக முடியாதவர்கள், அன்று கட்டாயம் வீட்டிலாவது கடலையை நைவேத்தியம் செய்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. வருடம்தோறும் கார்த்திகை மாதம் கடைசி திங்களன்று நடைபெறுகிறது இந்தத் திருவிழா. பசுமாடுகள் முதன்முறையாகச் சினையாகும்போது, இந்தக் கோயிலுக்கு ஓட்டி வந்து பூஜை செய்தால், பசுவும் கன்றும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஐதீகம். தவிர, முகத்தில் பரு போன்றவை வந்தால் பிரார்த்தனை செய்துகொண்டு உப்பு, மிளகாய், கொள்ளு ஆகியவற்றைக் கொண்டுவந்து பசவண்ணரின் காலடியில் சமர்ப்பித்தால், பரு முதலியவை நீங்கிவிடும் என்பதும் நம்பிக்கை.