பதிவு செய்த நாள்
29
ஜூலை
2016
05:07
அன்யோன்ய சகோதரர்களாக இருந்தவர்கள் வாலியும், சுக்ரீவனும். ஒரு சமயம் அவர்களுக்கு இடையே எழுந்த சந்தேகம்தான் வாலியின் அழிவுக்கே காரணமானது. வாலி கிஷ்கிந்தையை ஆண்டபோது அவனுக்கு அனுசரணையாக இருந்தவன் சுக்ரீவன். வாலி தூய்மையான பக்திமானும்கூட. ஒருசமயம், கிஷ்கிந்தைக்கு மாயாவி எனும் அசுரன் வந்தான். அவன் வாலியையும் சுக்ரீவனையும் சண்டைக்கு இழுத்தான். வாலி சண்டையிட்டுக் கொண்டே அசுரன் புகுந்த குகைக்குள் நுழைந்தான். அங்கும் சண்டை வீராவேசமாக நடந்து நேரம் நீண்டதே தவிர எவரும் வெளியே வரவில்லை. அதற்கு பதிலாக குருதி கொப்பளித்து வெளியே வந்தது. வெகுநேரம் காத்திருந்தும் வாலி வெளியே வராததால், அசுரனோடு அவனும் மாண்டு விட்டதாக நினைத்தான் சுக்ரீவன். அதனால் குகையின் வாயிலை ஒரு பாறையால் மூடினான். பின்னர் சுக்ரீவன் அரசுக் கட்டிலில் ஏறினான்.
அசுரனை மாய்த்துவிட்டு மயங்கிக் கிடந்த வாலி பின்னர் சுதாரித்துக் கொண்டு எழுந்து பாறாங்கல்லை அகற்றி வெளியே வந்தான். சுக்ரீவன் வேண்டுமென்றே குகையே மூடி விட்டதாக நினைத்தான். அடேய் சுக்ரீவா! இதற்காகத்தான் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தாயா? என சந்தேகித்தான். சுக்ரீவனை ஆவேசமாய் அடித்தான். விரட்டினான். சுக்ரீவன், வாலிக்கு பயந்து துங்கபத்ரா நதிக் கரையில் மதங்கமலை அருகில் இருந்த ரிஷ்யமுக பர்வதத்தில் ஒளிந்து கொண்டான். மதங்க மகரிஷியின் சாபம் இருந்ததால் வாலியால் அங்கே வரமுடியவில்லை. இந்நிலையில் சீதையைத் தேடிச் செல்லும் வழியில் ராம லக்ஷ்மணர் வந்து ஹனுமனைச் சந்தித்தனர். ராமரைப் பற்றி சுக்ரீவனிடம் எடுத்துச் சொல்லி, உன் மனைவியையும் ராஜ்யத்தையும் வாலியிடமிருந்து இவர் மீட்டுத் தருவார். பதிலுக்கு நீ உன் சேனைகளை அனுப்பி சீதை இருக்குமிடமறிய உதவ வேண்டும் என்று ஹனுமன் சொன்னார். ஆனால், ராமபிரான் வாலியை வெல்லும் அளவு பலம் <உண்டா என, சுக்ரீவன் யோசித்தான். அவன் சந்தேகத்தை உணர்ந்து, ஏதாவது பரீட்சை வைக்கச் சொன்னார் அனுமன்.
சுக்ரீவன், அதோ அகன்று விரிந்த துங்கபத்ராவின் எதிர்க்கரையில் குன்றின் அருகே ஒரு பனைமரம் நெடுநெடுவென வளர்ந்துள்ளதல்லவா? அதை இதோ இங்குள்ள மரத்தடியிலிருந்து ஒரே அம்பில் சாய்க்க வேண்டும் ! என்றான். ராமபிரான் அம்பைப் பிரயோகித்தார். அது இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த ஆறு பனை மரங்களை வீழ்த்தி விட்டு, கடைசியாக சுக்ரீவன் காட்டிய நேர் எதிர்த்திசையில் இருந்த அந்த ஏழாவது பனை மரத்தையும் வீழ்த்தியது. அதன் பிறகுதான் அவன் வாலியைப் போருக்கு அழைத்தான். அப்போதுதான் ராமபிரான் வாலியை அம்பெய்து வீழ்த்தினார். பரம பக்தனான வாலியை வீழ்த்த ராமபிரான் நேருக்கு நேராகச் சென்றிருந்தால் அவன் அவரோடு சண்டையிடாமல் சரணடைந்திருப்பான். சரணடைந்தவனை தாக்குவதோ, அவனிடமிருந்து ராஜ்ஜியத்தையும் சுக்ரீவனின் மனைவியையும் மீட்டுத் தருவதோ ஆகாத காரியம் என்பதனால் தான் மறைந்து நின்று அம்பு எய்தார். வாலி வீழ்ந்த பின்னரும் அவனைக் காப்பாற்றவே நினைத்தார் ராமர். உடலில் அம்பு தைத்து வீழ்ந்திருந்த வாலியை நோக்கி, உனது நிலை கண்டு நான் கலங்குகிறேன். எதையும் ஆராய்ந்து பாராமல் உடனே சந்தேகம் கொண்டதால்தான் உனக்கிந்த நிலை. <உன் உடலில் தைத்திருக்கும் அம்பை நான் எடுத்துவிடுகிறேன். தவறை உணர்ந்து திருந்தி நீ உயிர் பிழைத்து விடலாம் என்றார் ராமபிரான். ஆனால் வாலி மறுத்துக் கண்ணீர் உகுத்தான். வேண்டாம் ப்ரபோ..! முடிவில் <உங்களிடம் சேரவேண்டும் என்பதுதானே பக்தர்களின் பிரார்த்தனையாக இருக்கிறது. அப்படியிருக்க தங்கள் திருக்கரங்களாலேயே தங்கள் பாதங்களை அடையும் உயர் பதவி கிடைக்கும்போது இனி எதற்கு எனக்கு உயிர்ப் பிச்சை? இப்போது பிழைத்தாலும் மீண்டும் <உங்களை அடைய பல முயற்சிகள் எடுப்பதை விட தங்களாலேயே யான் வைகுந்தம் ஏக வேண்டும் என்று கூறி ராமனை வணங்கிய வண்ணம் வாலி உயிர்நீத்தான்.
அதேபோல், அசுரன் மாயாவியுடன் வாலி போரிட்டபோது, வாலியின் பலத்தை அறிந்திருந்தும், அடுத்தவர் பலத்தில் பாதி பெறுவான் என்று தெரிந்திருந்தும் வாலியும் இறந்திருப்பானோ என்று சுக்ரீவன் சந்தேகம் கொண்டது தவறு. அந்த சந்தேகம்தான் வாலியிடம் அடிவாங்கி ஓடி ஒளியும் துன்பத்தைத் தந்தது. குகையிலிருந்து வெளிவந்த வாலி, தம்பி ஏதோ காரணத்தோடு குகையை மூடியிருக்கிறான். என நினைத்து அதனைக் கேட்டு அறியாமல், பதவி ஆசையில்தான் இப்படிச் செய்திருக்கிறான். சந்தேகம் கொண்டு அவனை அடித்து விரட்டிய தவறுதான், அவன் அழிவுக்கே காரணமானது. எதையும் முதலில் நல்லதாகவே எண்ண வேண்டும். எடுத்த எடுப்பிலேயே சந்தேகம் கொண்டால் அந்தக் காரியத்தால் சங்கடம்தான் எழுமே தவிர சந்தோஷம் கிடைக்காது. துன்பம் தான் பெருகுமே தவிர இன்பம் ஏற்படாது. பால் சுத்தமானதாக இருந்தாலும் காய்ச்சும் பாத்திரத்தில் அழுக்கிருந்தால் மொத்த பாலும் கெட்டுவிடுமல்லவா? அதே போல் இறைவன் நமக்கு மிக நல்லதையே தந்தாலும் கூட சந்தேகம் எனும் கறையோ, வேண்டாத ஆராய்ச்சி எனும் அழுக்கோ நம் மனத்தில் ஒட்டிக் கொண்டிருந்தால் மொத்தமும் கெட்டுவிடும்.