விருத்தகாசி என்று காசிக்கு இணையாக போற்றப்படும் தலம் விருத்தாசலம். மணிமுத்தாற்றங்கரையில் அமைந்த இந்த மலைக்கோவிலில், சிவன் விருத்தகிரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சிவனுக்குரிய 28 ஆகமங்களையும் லிங்க வடிவில் முருகன் வழிபட்டதாக கோவிலின் தலவரலாறு கூறுகிறது. இங்கு பார்வதிதேவி விருத்தாம்பிகை, பாலாம்பிகை என்ற பெயர்களில் முதியவளாகவும், இளையவளாகவும் காட்சிய ளிக்கிறாள். ஆடிப்பூரத்தன்று இக்கோவிலில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடக்கிறது. சுந்தரர் இங்கு சிவனை வழிபட்டு பொன் பெற்றதாகவும், அதை மணிமுத்தாற்றில் போட்டு திருவாரூரிலுள்ள கமலாலயக் குளத்தில் பெற்றுக் கொண்டதாகவும் சொல்வர். இக்கோவிலில் வடக்கு கோபுர வாசலுக்கு நேராக உள்ள மணிமுத்தாற்றின் பகுதிக்கு புண்ணிய மடு என்று பெயர். அதில் ஆடி அமாவாசையன்று தீர்த்தம் தெளித்துக் கொள்வோருக்கு புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம்.