பதிவு செய்த நாள்
04
ஆக
2016
12:08
ஓசூர்: ஓசூர் அடுத்த சூளகிரி அருகே, தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள மன்னேங்கல், கூளியாளம், உலகம், மேடுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த குரும்பர் இன மக்கள், ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம், சித்தையா, தொட்டையா, பத்திரையா, டேசன்னா, வன்னியராயா, டோரள்ளி, சாதேவம்மா ஆகிய, ஏழு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அலங்கரிக்கப்பட்ட சுவாமி கரகங்களை தலையில் சுமந்தவாறு நடமாடினர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் தங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் தென்பெண்ணை ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
* தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்தில் வசிக்கும் குருமன்ஸ் இன மக்கள், வீரபத்ரசாமியை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா அன்று வீரபத்ரசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். கடந்த, ஐந்தாண்டுகளாக வீரபத்ரசாமிக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டு வந்ததால், தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கவில்லை. கடந்தாண்டு கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று வீரபத்ரசாமிக்கு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.