Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவி துர்க்கையே...ஜெய தேவி ... நவராத்திரியின் பிற சிறப்புகள்! நவராத்திரியின் பிற சிறப்புகள்!
முதல் பக்கம் » நவராத்திரி வழிபாடும் சிறப்பும்!
உயிர்களுக்கு அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் சியாமளா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 செப்
2011
04:09

அம்பிகை வழிபாட்டில் மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி ஆகிய மூவரையும் சிறப்பாகக் குறிப்பிடுவர். அவளுக்குரிய ஸ்தோத்திரங்களில் புகழ்பெற்றவை லலிதா சகஸ்ரநாமம், சவுந்தர்ய லஹரி ஆகியவை. மதுரை மீனாட்சியின் திருநாமம் இவ்விரு ஸ்தோத்திரங்களிலும் இடம்பெறவில்லை என்பது ஆச்சரியமான உண்மை. மந்திர சாஸ்திரத்தில் மீனாட்சிக்கு சியாமளா, மாதங்கி, மந்திரிணி என்னும் திருநாமங்கள் உண்டு. மகாகவி காளிதாசர், சியாமளா தண்டகம் என்னும் துதியில் மீனாட்சியம்மனைப் புகழ்ந்து போற்றியுள்ளார். மதுரையில் மீனாட்சி, சிவபெருமானுக்கும் ஒருபடி மேலாக அரசாட்சியிலும், வழிபாட்டிலும் இடம்பெற்றிருக்கிறாள். பூஜை, நைவேத்யம் முதலில் மீனாட்சியம்மனுக்குத் தான். சங்கீதக்கலைக்கு அதிதேவதையாக விளங்கும் சியாமளா, மாணிக்கவீணை மீட்டிக் கொண்டு உயிர்களுக்கு அருளை வாரி வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

அம்பாளின் போர் ரதம்

அம்பாளின் ரதத்துக்குசக்ர ராஜரதம் என்று பெயர். அவள் பல அசுரர்களுடன் போரிட்டு ஜெயித்திருக்கிறாள். பண்டாசுரனுடன் அவள் போரிட்டு ஜெயித்ததே நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வாறு போருக்கு கிளம்பும் நேரத்தில் கேயசக்ர ரதம், கிரி சக்ரரதம் ஆகியவை கூட வரும். கேய சக்ர ரதத்தில் அம்பாளின் அமைச்சரான மந்திரிணியும், கிரிசக்ர ரதத்தில் சேனாதிபதியான தண்டநாதாயினியும் வருவர். அம்பாளிடம் இருந்து தப்பிக்க பண்டாசுரன், விக்ன யந்திரத்தை ஏவி விட்டான். தேவி அந்த யந்திரத்தை நோக்கி புன்னகை செய்தாள். அப்புன்னகையில் விக்னத்தைப் போக்கும் விநாயகர் தோன்றி விக்னயந்திரத்தை அழித்தார். பின் அசுரன், அம்பாள் மீது அஸ்திர மழையைப் பொழிந்தான். தேவி பாசுபதாஸ்திரத்தை மட்டும் ஏவி அவற்றை அழித்து வெற்றி வாகை சூடினாள்.

மகாராக்ஞி என்பது யார்?

உயிர்கள் அனைத்தையும் படைத்தும் காத்தும் அருள்பவள் அம்பிகை. இப்பிரபஞ்சத்தை ஆளும் மகாராணி என்னும் பொருளில் அவளுக்கு மகாராக்ஞி என்னும் பெயரும் உண்டு. ராணியாக சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதால் சிம்ஹாசனேஸ்வரி என்றும் அழைப்பர். சிம்மாசனத்திற்கு நான்கு கால்கள் உண்டு. படைக்கும் பிரம்மா, காக்கும் விஷ்ணு, அழிக்கும் ருத்ரன், மறைக்கும் மகேஸ்வரன் ஆகிய நால்வரும் கால்களாக விளங்குகின்றனர். அந்தக்கால்கள்மீது சதாசிவமூர்த்தியே பீடமாக இருக்கிறார். அதன்மேல் அனுக்கிரக பீடம் என்னும் அருளல் பீடம் இருக்கிறது. அதற்கும் மேலே அம்பிகை பரமேஸ்வரியாக இருந்து அரசாட்சி நடத்துகிறாள்.

அம்மா கை பட்டால் ........

சிவானந்தலஹரி என்னும் நூலில், சிவனின் பெருமைகளைப் பற்றி ஆதிசங்கரர் எழுதிய ஸ்லோகங்கள் உள்ளன. ஒரு ஸ்லோகத்தில், ஏ! நீலகண்டனே! கழுத்தில் இருந்தாலும் விஷம் தீங்கு தானே செய்யும்! இருந்தாலும், உம்மிடம் இருக்கும் விஷம் மட்டும் எதுவுமே செய்யவில்லை, காரணம் தெரியுமா? உன் மனைவியான அம்பாள் அணிந்திருக்கும் தாடங்க (காதில் அணியும் தோடு)மகிமையே, என்கிறார். தவஜனனி தாடங்க மஹிமா! என்று தேவியைப் பெருமைப்படுத்துகிறார். அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில், வார் சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய கன்னிகையே! என்று பெருமை சேர்க்கிறார். அம்பிகையின் கை, சிவனின் கழுத்தில் பட்டதும் விஷம் கூட அமுதமாக மாறி விட்டதாகக் கூறுகிறார். வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்

நவராத்திரியில் காளி வேடம் போடும் ஆண்கள்

திருமீயச்சூர் லலிதாம்பிகையின் நெய்க்குள தரிசனம் மிகப் பிரபலமானது. விஜயதசமி அன்று அம்பாள் கருவறை முன் 15 அடி நீளத்திற்கு வாழை இலை போட்டு, அதில் 4 அடி அகலம், 1 1/2 அடி உயரத்திற்கு சர்க்கரைப் பொங்கலைப் பரப்புவர். அதன் நடுவே குளம்போல் அமைத்து அதனை நெய்யினால் நிரப்புவர். அதன் பின்னரே கருவறையின் திரையை விலக்குவர். அலங்கரிக்கப்பட்ட அன்னையின் திருவுருவம் நெய்க்குளத்தில் அதிஅற்புதமாகப் பிரதிபலிக்கும். இந்த நெய்க்குள தரிசனத்தினைக் காண்போருக்கு மறுபிறவியே இல்லை என்பது நம்பிக்கை. முத்தாரம்மன் சமேத ஞான மூர்த்தீஸ்வரர் ஆலய தசரா, கிராமியக் கலை விழாவாகப் புகழ்பெற்றது. குலசையில் தசரா விழா பன்னிரண்டு நாட்கள் கோலாகலமாக நடக்கும். பக்தர்கள் சுமார் ஒருமண்டலம் விரதமிருந்து ஏதேனும் ஒரு தெய்வம்போல் வேடம் அணிந்து சுவாமி ஊர்வலம் வரும்போது கூடவே வருவார்கள். காளி வேடத்தை ஆண்கள் மட்டுமே புனைவார்கள். ஊர்வலத்தில் கரகாட்டம், மயிலாட்டம், மேளம், தாளம், தாரை, தப்பட்டை, ஒயிலாட்டம் என கிராமியக் கலைகளும் இடம்பெறும். ஒவ்வொரு வருடமும் இவ்விழா கலை நயத்தோடும் மிகுந்த பக்தியுடனும் சிறப்பாக நடைபெறும்.

இமயமலையில் அமைந்துள்ள குலுமணாலியில் இவ்விழா 10 நாட்கள் நடக்கும். இத்தலத்தில் அருள்புரியும் ரகுநாத் ஜீ தெய்வத்தை ஸ்ரீராமனே தன் கட்டை விரல் அளவில் செய்து கொடுத்திருப்பதாக தல வரலாறு சொல்கிறது. நவராத்திரி சமயத்தில், குலு பள்ளத்தாக்கிலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட மலை தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து ரகுநாத் ஜீக்கு மரியாதை செய்வார்கள். விதவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். பதினோராம் நாள் அனைவரும் வீடு திரும்புவார்கள். சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ளது ஜகதல்பூர். இத்தல நாயகி தண்டேஸ்வரி. இங்கே ஒரு நாள் அல்ல இருநாள் அல்ல எழுபத்தைந்து நாட்கள் தசரா விழாவைக் கொண்டாடுவார்கள். இப்பகுதி பழங்குடியினர் அவரவர் பிரிவுக்கு உட்பட்ட ஆலய தெய்வச் சிலைகளை அலங்கரித்து தண்டேஸ்வரி ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வருவார்கள். பின் தண்டேஸ்வரி முன் வைத்து பூஜித்து, மரியாதை செய்வர். அதன்பின் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இந்த எழுபத்தைந்து நாட்களும் யாரும் வீட்டில் இருக்க மாட்டார்கள். தண்டேஸ்வரி ஆலய சுற்றுப்புறத்திலேயே தங்கி சமைத்து சாப்பிட்டு கலைநிகழ்ச்சி நடத்தி தூங்கி வெட்ட வெளியிலேயே இருப்பர். எழுபத்தாறாம் நாள்தான் அவரவர் தெய்வங்களுடன் இல்லம் திரும்புவர்.

கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மகாலட்சுமி மந்திர் என்னும் அழகிய ஆலயத்தில் சரஸ்வதி, துர்கா, மகாலட்சுமி ஆகிய மூன்று தேவிகளும் கருவறையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கும். மிகப் பெரிய அளவில் இங்கு கொலு வைக்கப்படுவதுண்டு. தினசரி இந்த கொலுவைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். விஜயதசமி அன்று புதிதாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பெற்றோருடன் இங்கு கூடுகின்றனர். அன்று அவர்களுக்கு சரஸ்வதி தேவியின் முன்பாக எழுதத் தொடங்கி வைக்கின்றனர். அன்னையின் முன்புள்ள பளிங்கு மண்டபத்தில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் இப்படி அமர்ந்து எழுதத் தொடங்குவது நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும். பொதுவாக, விஜயதசமி பல நல்ல செயல்களைத் தொடங்கவும் வியாபாரங்களைத் தொடங்கவும் நல்ல நாள். எனவே அன்னையை இந்த நவராத்திரியின் போது பல உருவங்களில் நாம் வழிபடுவதுடன் விஜயதசமியன்றும் வழிபட்டு, பாவம் தொலைத்து நலனும் அருளும் பெறுவோமாக !

வைணவ திருத்தலங்களுள் முதன்மையானதாகப் போற்றப்படும் திருவரங்கத்தில் அரங்க நாயகியாக அருள்பாலிக்கும் தாயார், நவராத்திரி நாட்களில் தினமும் மாலையில் புறப்பாடு கண்டருள்வார். புறப்பாடு ஆகும் முன் சங்கநாதம் ஒலிக்கும். பிராகாரங்களை ஒருமுறை வலம் வந்தபின் கொலு மண்டபத்தில் வீற்றிருந்து பின்னர் இரவு 8.30 மணிவாக்கில் மூலஸ்தானம் எழுந்தருள்வார். அதுவரை நாதஸ்வரக் கச்சேரிகள் நடக்கும். மூலஸ்தானத்துக்கு முன்மண்டபத்தில் அன்னை எழுந்தருளும்போது கோயில் யானை துதிக்கையை உயர்த்தி நமஸ்கரிக்கும். மௌத்ஆர்கனை வாயில் வைத்து ஒலி எழுப்பும். பின்னர் பேஷ்கார் எனப்படும் கோயில் அதிகாரிக்கு தாம்பூலம் கொடுக்கும். இதை வேடிக்கை பார்ப்பதற்காகவே குழந்தைகள், பெரியவர்கள் என்று கூட்டம் வரும். நவராத்திரி ஏழாம் நாள் தாயாரின் திருவடிகள் வெளியில் தெரியும்படி அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு ஆகும். இந்தத் திருவடி சேவையைக் காண பக்தர்கள் ஆலயத்தில் குவிந்துவிடுவார்கள். அந்த ஒரு நாள்தான் தாயாரின் திருவடிகள் தரிசனம் கிடைக்கும்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள திருக்கூடலையாற்றூரில் நர்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. இவற்றுள் ஞானசக்தி அம்மன் சன்னதியில் குங்குமமும்; பராசக்தி அம்மன் சன்னதியில் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுவது வித்தியாசமானது. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, ஆதி சக்தி, பராசக்தி, குடிலா சக்தி என ஆறு அம்சங்களையும் ஒருங்கே கொண்டு தேவி அருள்பாலிக்கும் தலங்கள் ஒன்பது. அவை காஞ்சி காமாட்சி, ஸ்ரீசைலம் பிரமராம்பாள் தேவி, கோல்ஹாப்பூர் மகாலக்ஷ்மி, உஜ்ஜயினி காளிகாதேவி, கயா மங்களாதேவி, அலகாபாத் அலோபிதேவி, உத்தரப்பிரதேசம் விந்தியவாசினி, நேபாளம் குஹ்யகேஸ்வரி, வாரணாசி விசாலாட்சி.

சக்கரப்பள்ளி, அரிமங்கை, சூலமங்கலம், நந்தி மங்கலம், பசுபதிமங்கலம், தாழை மங்கலம், புள்ளமங்கலம் ஆகிய ஏழு ஊர்களையும் சப்தமங்கலத் தலங்கள் என்று கூறுவர். இத்தலங்களில் முறையே பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டியாக அம்பிகை பூஜை செய்ததாகக் கூறுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுச் செல்லூர் என்னும் கிராமம். இங்கே உள்ள வேம்பி அம்மன் கோயிலில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த துர்க்கை அம்மனின் திருமேனி உள்ளது. நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் இந்த துர்க்கை அம்மன் சிற்பம் நான்கு திருக்கரங்களுடன் காணப்படுகிறது. மேல் இருகரங்களில் பிரயோகச் சக்கரமும், சங்கும், கீழ் வலக்கரத்தில் ஞான முத்திரையும் திகழ, கீழ் இடக்கரத்தை இடுப்பில் வைத்து அற்புத தரிசனம் தருகிறாள். இக்கரத்தில் கிளி ஒன்று ஏறிச் செல்வது போல் அமைந்திருப்பது சிறப்பாகும். விஜயதசமி அன்று அம்பு போடும் திருவிழா இங்கு மிக விசேஷம்.

ஆயக் கலைகள் அருள்வாய் தாயே !

ஸ்ரஸ்வதீம் நமஸ்யாமி சேதனானாம் ஹ்ருதிஸ்திதாம்
கண்டஸ்த்தாம் பத்மயோனேஸ்து ஹிமாகர ப்ரியா ஸ்பதாம்!

மதிதாம் வரதாம் ஸுத்தாம் வீணாஹஸ்த வரப்ரதாம்
ஐம் ஐம் மந்த்ரப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதித்வம்ஸ காரிணீம்!

ஸுப்ரகாஸாம் நிராலம்பாம் அக்ஞான திமிராபஹாம்
ஸுக்லாம் மோக்ஷப்ரதாம் ரம்யாம் ஸுபாங்காம் ஸோபனப்ரதாம்!

பத்மோவிஷ்டாம் குண்டலீனீம் ஸுக்லவர்ணாம் மனோரமாம்
ஆதித்யமண்டலே லீனாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம்!

இதி மாஸம் ஸ்துதானேன வாகீஸேன மஹாத்மனா
ஆத்மானம் தர்ஸயாமாஸ ஸரதிந்து ஸமப்ரபாம்!

பொருள் : சேதனர்களின் ஹிருதயத்தில் இருப்பவளாயும், பிரம்மாவின் கண்டத்தில் இருப்பவளாயும், எப்போதும் சந்திரனுக்குப் பிரியமுள்ளவளாகவும் பிரகாசிக்கும் சரஸ்வதிதேவியை வணங்குகிறேன்.

நல்லறிவு மற்றும் உயர்ந்த விஷயங்களைக் கொடுப்பவளாகவும், பரிசுத்தையாகவும், கையில் வீணையுடன் அபீஷ்டங்களைத் தருபவளாகவும், ஐம்,ஐம்,ஹ்ரீம்,ஹ்ராம் என்ற மந்திரத்தில் விருப்பமுள்ளவளாகவும், விபரீத புத்தி உள்ளவர்களை நாசம் செய்பவளாகவும், நல்ல பிரகாசம் கொண்டவளாகவும், யாதொரு பிடிப்பில்லாதவளாகவும், அஞ்ஞானமாகிய இருட்டைப் போக்குகிறவளாகவும், வெண்மையாகவும்...மோக்ஷ புருஷார்த்தத்தை கொடுப்பவளாகவும், மிக்க அழகியவளாகவும், சோபமான அங்கங்களோடு கூடியவளாகவும், மங்கலத்தை அருள்பவளாகவும், தாமரையில் இருப்பவளாகவும், அழகிய கர்ணாபரணத்தோடு கூடியவளாகவும், வெண்மை நிறம் கொண்டவளாகவும், மனதுக்கு சந்தோஷம் அளிப்பவளும், சூரிய மண்டலத்தில் இருப்பவளும், விஷ்ணுவுக்கு பிரியையாகவும் உள்ள சரஸ்வதிதேவியை நமஸ்கரிக்கிறேன்.

பிரகஸ்பதியால் அருளப்பட்ட... பத்மபுராணத்தில் உள்ள கலைவாணி குறித்த இந்த ஸ்லோகத்தைச் சொல்லி தேவியை வழிபட, சகல கலைகளும் கைகூடும். பிள்ளைகளுக்கு கலைஞானம் பெருகும்.

சரஸ் என்றால் பொய்கை என்று பொருள். மனமாகிய பொய்கையில் வாழ்பவள் ஆதலால், சரஸ்வதி என்று அழைக்கப்படுகிறாள்.

கலைவாணி ஏந்தியிருக்கும் வீணைக்கு கச்சபி என்று பெயர். அதை அருளியது சிவபெருமான் என்பர். தேவியின் கரங்களில் இருக்கும் வீணையும் சுவடியும் கல்வியின் மேன்மையையும் கலைகளில் திறமையையும் அருள்பவள் என்பதை உணர்த்துகின்றன.

கலைமகளின் திருக்கரத்தில் திகழும் மணிமாலையை அட்ச மாலை எனப் போற்றுவர். தான் மொழி வடிவானவள் என்பதை உணர்த்த, அட்ச மாலையுடன் திகழ்கிறாளாம் சரஸ்வதி.

சரஸ்வதியின் வாகனம் அன்னப் பறவை. இது, கல்வியாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் இருக்கவேண்டிய நற்பண்புகளை உணர்த்துகிறது. தண்ணீரை நீக்கி பாலை மட்டும் பிரித்துப் பருகும் அன்னப் பறவை போல், கல்வியாளர்கள் விவேகத்துடன் தீயவற்றை நீக்கி, நல்லவற்றை ஏற்க வேண்டும்.

சில நூல்கள், கலைவாணியின் வாகனமாக மயிலைக் குறிப்பிடுகின்றன. ராஜஸ்தானில் சில தலங்களிலும், மும்பையிலும் மயில் மீது வீற்றிருக்கும் சரஸ்வதியை தரிசிக்கலாம். தவிர, ஆட்டின் மீது அமர்ந்திருக்கும் சரஸ்வதியின் திருவடிவங்களும் உண்டு. பௌத்தர்கள், சரஸ்வதி தேவியை சிம்ம வாகனத்தில் எழுந்தருளச் செய்து வழிபட்டார்கள்!

தமிழகத்தில் கூத்தனூர் போன்று ஆந்திர மாநிலத்தில், பாசரா என்ற திருத்தலத்தில் தனிக் கோயிலில் அருள்கிறாள் சரஸ்வதி. விநாயகப் பெருமான் சரஸ்வதியை வழிபட்ட திருத்தலம் இது என்கிறார்கள். கலைவாணியை வாக்தேவியாகவும் போற்றுகின்றன புராணங்கள். வாக்தேவியானவள் மூன்று சந்தியா காலங்களில் காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி என மூன்று வடிவங்களில் திகழ்கிறாளாம். இந்த மூன்று திருவடிவுடன் திருவீழிமிழலை தலத்தில் அவள் ஈசனை வழிபட்டதாக, அவ்வூர் தலபுராணம் சொல்கிறது. இங்குள்ள மூன்று லிங்கங்களை முறையே காயத்ரீஸ்வரர், சாவித்திரீஸ்வரர், சரஸ்வதீஸ்வரர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.

சரஸ்வதியைத் தியானித்தால்....

சரஸ்வதிக்கு எத்தனையோ திருநாமங்கள் உள்ளன. சாக்த தந்திரங்கள் இவளை மகா சரஸ்வதி எனப் போற்றுகின்றன. லலிதோபாக்யானம் இவளை-சியாமா, சியாமளா, மந்திரி நாயகா, மந்திரினி, சுகப்பிரியா, சசிவே சாணி, பிரதாநேசி, வீணாவதி, வைணிகி, முத்திரணி, பிரியகப் பிரியா, நீபப் பிரியா, கதம்பேசி, கதம்பவன வாசினி, சதா மதா, சங்கீத யோகினி என பதினாறு திருநாமங்களால் அழைத்து மகிழ்கிறது.

வேதங்களில் இன்னொரு சரஸ்வதியும் உண்டு. அவள் வேத சரஸ்வதி ஆவாள். ஜடாமகுடம் தரித்து அபய முத்திரையோடு பத்மாசனத்தில் காட்சி தரும் இந்த வேத சரஸ்வதியை நதியின் ரூபமாகவும், நீர்ப் பறவையை வாகனமாகக் கொண்டவள் என்றும் வேதங்கள் சித்திரிக்கின்றன. கல்வி, ஞானம், வேதம் இவற்றின் தலைவியாகத் திகழும் சரஸ்வதியைத் தியானித்தால், அன்னை அவற்றை நமக்கு அருள்வாள்.

சரஸ்வதி வழிபட்ட சிவத்தலங்கள் !

நவராத்திரி நாட்களில், கலைவாணி வழிபட்ட சிவத்தலங்களை தரிசிப்பது சிறப்பு. அவற்றுள் முக்கியமானது திருக்காளஹத்தி. ஒரு முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட துன்பம் தீர, சரஸ்வதி இங்கு வந்து தீர்த்தம் உண்டாக்கி சிவனாரை வழிபட்டு நலம் பெற்றதாக புராணம் கூறும். நாமும் இங்கு சென்று சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி இறை வழிபாடு செய்தால், கல்வியில் தேர்ச்சியும் நாவன்மையும் பெறலாம். சீர்காழி, திருமறைக்காடு, திருக்கருகாவூர், திருநெய்தானம், ராமேஸ்வரம் மற்றும் கண்டியூர் ஆகியவையும் சரஸ்வதிதேவி வழிபட்ட தலங்களாகும்.

 
மேலும் நவராத்திரி வழிபாடும் சிறப்பும்! »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிப்பாள். மஹாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். ... மேலும்
 
temple news
பெரிய பதவிகள் அடைய... சந்திரகாந்தா வழிபாடு!: உலகம் அனைத்தும் சக்தி மயம் என்ற தத்துவத்தை விளக்க வந்ததே, ... மேலும்
 
temple news
இன்று அம்பிகையை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். கவுமாரி, குமார கண நாதம்பா என்றும் ... மேலும்
 
temple news
பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ ... மேலும்
 
temple news
விஜயதசமியோடு நவராத்திரி நிறைவு பெறுகிறது. இந்நாளில் பராசக்தியின் மூன்று வடிவங்களான சரஸ்வதி, லட்சுமி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar