பதிவு செய்த நாள்
16
ஆக
2016
11:08
தஞ்சாவூர்: பிரசித்தி பெற்ற புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், 93வது ஆண்டு முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடந்தது. தஞ்சை அருகே உள்ளது, புன்னைநல்லுார் மாரியம்மன் கோவில். மிகவும் பழமையான இந்த கோவிலில் உள்ள அம்பாள், மகாஞானி சதாசிவ ப்ரமேந்தரரால், பிரதிஷ்டை செய்யப்பட்டது. புற்று மண்ணால், சுயம்பு மூர்த்தியாக உருவான அம்பாளுக்கு, தற்போதும் அக்னி நட்சத்திர காலங்களில் முகத்தில் வியர்வை துளி தெரியும். இந்த வியர்வை துளி, விளக்கின் ஒளி பட்டு முத்து முத்தாக தெரிகிறது. இதனால், அம்மனுக்கு முத்து மாரியம்மன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. கம்பீரமாக அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுத்து அருள்பாலித்து வரும் அம்மன், புற்று மண் என்பதால் நித்யபடி அபிஷேகம் கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தைலாபிஷேகம் நடைபெறும். இக்கோவிலின், 93வது ஆண்டு முத்துப்பல்லக்கு விழா, வெகு விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு பக்தர்கள் பாற்குட வீதியுலாவும், மதியம் அம்மனுக்கு பாலபிஷேகமும் நடந்தது. அதன் பின் முத்துமணி சிவிகையில், அலங்காரத்தில் அம்மன் முத்துப்பல்லக்கு வீதி உலா கோலாகலமாக நடந்தது. தமிழகம் முழுவதும் இன்றி, வெளிமாநில பக்தர்களும் தரிசனம் செய்தனர். இன்று, விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது.