ஒருமுறை நபிகள் நாயகம், தன் தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, “இரும்பின் மீது தண்ணீர்பட்டால் துருப்பிடித்து விடுகிறது. அதுபோல், (கெட்ட எண்ணங்களால்) இதயங்களின் மீதும் துருப்பிடித்து விடுகிறது,” என்றார். உடனே தோழர்கள், “நாயகமே! இதயத்தின் மீதுள்ள துருவை நீக்கும் வழி என்ன?” என்றனர்.“மரணத்தை அதிகமதிகம் நினைவில் நிறுத்துவதும், குர்ஆனை தொடர்ந்து ஓதி வருவதுமே இதயத்துருவைப் போக்கும் வழியாகும்,” என்றார் நாயகம்.ஆம்...சுகபோகமான ஆடம்பர வாழ்வை மனிதர்கள் விரும்புகிறார்கள். இதற்காக எதையும் செய்யத்துணிகிறார்கள். அப்போது, அவர்களின் இதயத்தில் மாசுபடிந்த எண்ணங்கள் தோன்றுகின்றன. இதயம் முழுவதும் கெட்ட ரத்தத்தால் நிரப்பப்படுகிறது. இதை மாற்ற என்ன செய்யலாம் தெரியுமா? அடுத்த நிமிடம் இருப்போமா, மாட்டோமா என சிந்தித்துக் கொண்டே இருந்தால், தேவையற்ற ஆடம்பரத்துக்காக இவ்வளவு பாதக செயல்களைச் செய்ய வேண்டுமா என்ற எண்ணம் உருவாகி விடும். இதனால் தவறுகள் குறையும். தவறுகள் குறையும் போது, அல்லாஹ்வுக்கு பிரியமானவராக மாறி விடலாம். அப்போது அல்லாஹ் நாம் விரும்பியதை எல்லாம் தருகிறான்.