அவரவர் கருத்தில் உறுதியாக நிற்பவர்களை விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்பார்கள். பாரதப்போரில் கிருஷ்ணரும், அர்ஜுனனும் இப்படி பேசிக்கொண்டனர். தன் எதிரே நிற்கும் பீஷ்மர், துரோணர் உள்ளிட்ட குருமார்களையும், உறவினர்களையும் எதிர்த்து போராட முடியாது என அர்ஜுனன் கிருஷ்ணரிடம் சொல்லி விட்டான். அப்படியானால் உன் பெயரான விஜயன் (வெற்றியாளன்) என்பதை இழக்க வேண்டி வருமே என்றார் கிருஷ்ணன். போனால் போகட்டும் என்ற அர்ஜுனனிடம், “அப்படியானால் நீ இழந்த நாட்டை மீட்க முடியாது. உன் சுகமெல்லாம் போய் விடுமே! என்றதும், அதுவும் போகட்டும் என்றான் அர்ஜுனன். தன் வழிக்கு வராத அர்ஜுனனிடம்,“சரி...உன் சகோதரர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமே! என்று கிருஷ்ணர் சொல்லவும், “எங்களுக்குள் அப்படி கருத்து வேறுபாடே வராது. நான் சொல்வதை மற்றவர்கள் நிச்சயம் ஏற்பார்கள், என்றான் அர்ஜுனன். சரி...நீ என்ன தான் சொல்ல வருகிறாய்? என்று கிருஷ்ணன் கேட்கவும், “நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உனக்கு தெரியாதாக்கும். சரியான ஆளாக இருக்கிறாயே! என் மனதில் மட்டுமல்ல...ஊரில் எல்லார் மனதிலும் என்ன இருக்கிறது என்று அறிந்த நீயா இவ்வளவு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய் என்று மடக்கி விட்டான் அர்ஜுனன். ஆம்...எல்லாம் அறிந்த கிருஷ்ணர் நம் மனதில் இருப்பதையும் அறிவார். அதனால் நாம் நல்லதையே நினைப்போம்.