பதிவு செய்த நாள்
24
ஆக
2016
12:08
சென்னை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, தலைமை வனப் பாதுகாவலர் இடம் பெறும், கமிட்டியை நியமித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு உத்தரவிட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவலப் பாதை, விரிவாக்கத்தின் போது, மரங்கள் வெட்டப்படுவதாக, நாளிதழில் வந்த செய்தி அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மரங்கள் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதிமக்களும் வழக்கு தொடர்ந்ததால், கிரிவலப் பாதை பணிகளுக்கு, இடைக்கால தடை விதிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர், நேற்று பிறப்பித்த உத்தரவு:
திருவண்ணாமலை கிரிவலப் பாதையை ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜே.எ.கே.சம்பத் குமார் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை வனப் பாதுகாவலர் எஸ்.சேகர் இடம் பெறும் கமிட்டி நியமிக்கப்படுகிறது. கிரிவலப் பாதையில், மண் சாலை அமைக்க முடியுமா; மரங்கள் வெட்டாமல் தார் சாலை அமைக்கலாமா என, இந்த கமிட்டி ஆலோசிக்கும். கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகள், நீர்நிலைகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தி, அக்., 6ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்படுள்ள கிரிவலப் பாதையில், திருவண்ணாமலை நகர பகுதிக்குள் வரும், கடலுார் - சித்துார் சாலையில் மரங்கள் இல்லாததால், அந்த சாலையில் பணிகளை மேற்கொள்ளலாம்; மற்ற நான்கு பகுதிகளிலும் இடைக்கால தடை தொடரும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.