பதிவு செய்த நாள்
26
ஆக
2016
12:08
கூடலுார்: நீலகிரியின் பல்வேறு பகுதிகளிலும், கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஊட்டியில் நடந்த விழாவில், விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் தர்ம பிரசார் ஸமிதி சார்பாக, கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர், சிறுமியர், சுப்ரமணியார் கோவிலில் இருந்து, விட்டோபா கோவில் வரையில் ஊர்வலமாக வந்தனர். அங்கு அவர்களுக்கு, இனிப்பு மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது. ஊட்டியில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த தாய்மார்கள், இந்த நிகழ்ச்சிக்கு, குழந்தைகளை தயார் படுத்தி அழைத்து வந்தனர்.
* கூடலுார் பாடந்துரை பகுதி சுண்டவயல் பகவதி அம்மன் கோவிலில், நேற்று காலை, 10:00 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் துவங்கியது. இதில், ஊர்வலத்தில் சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர், ராதை, கோபியர் வேடமிட்டு பங்கேற்றனர். ஊர்வலத்தில் செண்டை மேளம் முழுங்கி கிருஷ்ணர் தேரில் அழைத்து வரப்பட்டார். ஊர்வலம் கருக்கபாலி, கைதம்பட்டம், மூச்சிகண்டி, ஆழவயல், பாடந்துரை முத்துமாரியம்மன் கோவில் நிறைவடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.
* கூடலுார் மங்குழி கிராம மக்கள் சார்பில், மங்குழி அம்மன் கோவிலிருந்து காலை, 11:00 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் துவங்கியது.ஊர்வலம், மைசூர் சாலை மரப்பாலம், முன்னீஸ்வரன் கோவில், விநாயகர் கோவில் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
*கூடலுார் முனீஸ்வரன் கோ வில் துவங்கிய கிருஷ்ண ஜெயதி ஊர்வலம், கூடலுார் நகர் வழியாக வந்து, விநாயகர் கோவிலில் நிறைவடைந்தது. இதேபோல், பந்தலுார் அய்யன்கொல்லி முருகன் கோவில் உட்பட பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிருஷ்ணர் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பட்டன. சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர், ராதை வேடத்தில் ஊர்வலம் வந்தனர்.
* மஞ்சூர் மாரியம்மன் கோவில், அன்னமலை முருகன் கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அமைந்துள்ள, கிருஷ்ணர் கோவில்களில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர் வேடத்தில் வந்து பூஜைகளில் பங்கேற்றனர்.