பதிவு செய்த நாள்
01
செப்
2016
11:09
சென்னை: செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழாவின், இரண்டாம் நாளான நேற்று, மூத்த கலைஞர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா, ஆக., 30 முதல், சென்னை, தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் நடந்து வருகிறது. இரண்டாம் நாள் விழாவான நேற்று காலை, கர்நாடக இசைப் பயிற்சி பட்டறை நடந்தது.
மூத்த கலைஞர்களான டி.வி.கோபாலகிருஷ்ணன், கே.ஜே.ஜேசுதாஸ், விஜயா, எச்.எம்.வி.ரகு, சவுண்டு இன்ஜினியர் சம்பத் ஆகியோர் பங்கேற்று, இளம் கலைஞர்களின் இசை, சங்கீதம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இசை நிகழ்ச்சி: இதையடுத்து, ராஜேஷ் வைத்யா குழுவினரின் வீணை நிகழ்ச்சி; திருவனந்தபுரம் ரஞ்சித் குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி; இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனின் கர்நாடக இசை நிகழ்ச்சி ஆகியவை அரங்கேறின. நேற்று மாலை, சாஸ்வதி பிரபுவின் கர்நாடக இசை நிகழ்ச்சி; மைசூரு நாகராஜ், மஞ்சுநாத் ஆகியோரின் வயலின் கச்சேரி நடந்தன. விழாவில், மூத்த கலைஞர்களான வயலின் வித்வான் சிக்கல் ஆர்.பாஸ்கரன்; வீணை இசைக் கலைஞர் பத்மாவதி; ஹரிகதா புகழ் கமலாமூர்த்தி ஆகியோருக்கு திரைப்பட பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பாதபூஜை செய்து, விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
குருவை மறக்க கூடாது: இதையடுத்து, ஜேசுதாஸ் பேசியதாவது: என் குருவான செம்பை வைத்தியநாத பாகவதர் ஜாதி, மதம் பார்க்காதவர். அதற்கு மிகப்பெரிய உதாரணமாக என்னை கூறலாம். நான் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தாலும், என்னை அவரின் வீட்டிற்குள் அழைத்து இசையைக் கற்றுக் கொடுத்தார். அவரின் சுவாசமே இசை தான். அதை அனைவருக்கும் கற்றுக் கொடுக்கவே விரும்பினார். பணத்திற்காக கலையை விற்காமல், அதை வளர்க்கும் வகையில் மற்றவர்களிடம் கொண்டு சென்றவர். எந்த துறையாக இருந்தாலும், நாம் குருவை மறந்துவிடக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். நேற்று இரவு, திரைப்பட பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது.