பதிவு செய்த நாள்
02
செப்
2016
11:09
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின் ராஜகோபுரம் கட்டும் பணி நிறுத்தப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு பின், சிறப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. இப்பணிகள், 18 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு, 122 அடி உயரமுள்ள ராஜகோபுரம் கட்டும் பணி, 2010 நவம்பரில், அடிக்கல் நாட்டு விழாவுடன் துவங்கியது. கோபுரம், 30 அடி உயரம் அடித்தளம், 40 அடி உயரம் கல்ஹாரம், 82 அடி உயரமுள்ள, ஒன்பது நிலை கோபுரம் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டு, இதற்காக, 4.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ரூ.2.40 கோடி செலவு:ஆனால், ராஜகோபுர பணிகள் மந்தகதியில் நடந்து வந்தன. 2012 ஆகஸ்ட் வரை, அடித்தளம் மற்றும் கல்ஹாரம் அமைக்கும் பணி முடிந்தது. இதற்கு, 2.40 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. மீதமுள்ள தொகையில், ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கு, மூன்று முறை டெண்டர் விட்டும் இப்பணிகளை செய்ய யாரும் முன்வரவில்லை. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி ஒருவர், ராஜகோபுரம் பணிகள் செய்வதற்கு முன்வந்து டெண்டர் எடுத்தார். பின், இந்து அறநிலையத் துறை ஆணையர் அனுமதியுடன் ராஜகோபுரம் கட்டும் பணி, சிறப்பு பூஜைகளுடன் நேற்று துவங்கியது. இதற்காக, நேற்று ராஜகோபுரம் அருகில் சிறப்பு ஹோமம் நடத்தி, பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) தனபாலன், நகர்மன்ற தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.
18 மாதங்கள்: இதுகுறித்து, கோவில் உதவி கோட்ட பொறியாளர் நடராஜரத்தினம் கூறுகையில், ராஜகோபுரத்திற்கு கல்ஹாரம் மற்றும் அடித்தள பணிகள் முடிந்து, தற்போது ஒன்பது நிலை ராஜகோபுரம் பணி இன்று (நேற்று) துவங்கப்படுகிறது. இப்பணிகள் முடிப்பதற்கு, 18 மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.ஒப்பந்ததாரர், பணிகளை துரித வேகத்தில் நடத்துவார். ஒன்பது நிலைகளிலும், முருகப் பெருமானின் அலங்கார பொம்மைகள் இடம்பெறும். இதுதவிர பக்தி பரவசத்துடன் சிலைகள் உருவாக்கப்படும் என்றார்.