பதிவு செய்த நாள்
02
செப்
2016
11:09
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் வளாகம், மழைநீர் தேங்கி அவலத்தில் உள்ளது.மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. இங்கு ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார் ஆகியோர் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.
நிலம் சார்ந்த பிரச்னைகளின் பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இத்தகைய கோவில் வளாகம், பல ஆண்டுகளாக மழைநீர் தேக்க அவலத்தால் சீரழிந்து வருகிறது. கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், கோவில் வளாகம், நாற்புற சாலைகள் சமதள பரப்பில் அமைந்திருந்தன.நாளடைவில், சாலைகள் உயர்ந்தும், சுற்றுப்புறம் உயர கட்டடங்கள் உருவாகியும், கோவில் வளாகம் தற்போது தாழ்வாக அமைந்துள்ளது. இங்கு பெய்யும் மழைநீர், மலைக்குன்றிலிருந்து பெருக்கெடுத்து வரும் மழைநீர் என, இவ்வளாகத்தில் குளம்போல் தேங்கி, வெளியேற வழியின்றி, சேறும் சகதியுமாக, பல நாட்கள் சீர்கேடாக உள்ளது. இந்த அவலத்தை கண்டு, பக்தர்கள் அருவருக்கின்றனர். கோவில் நிர்வாகம், இங்கு மழைநீர் தேங்காதவாறு, வடிகால்வாயோடு மேம்படுத்தி பராமரிக்கவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.