பதிவு செய்த நாள்
06
செப்
2016
11:09
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் பகுதிகளில், இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், 282 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆனைமலை பகுதியில், இந்து மக்கள் கட்சி தமிழகம் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், 185 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களும் வீடுகளில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, கொழுக்கட்டை படைத்து வழிபாடு செய்தனர்.
கோவில்களில் வழிபாடு: பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில், சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள், கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வெள்ளி கவசம் சாற்றப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி கடைவீதி பால கணேசர் கோவிலில், சதா சிவ கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தங்க கவசம் சாற்றப்பட்டு, அலங்கார ஆராதனை நடந்தது. பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்திவிநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி மகா கணபதி ேஹாமம்,பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனை பூஜையும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரவணன், தக்கார் காளியப்பன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சின்னச்சாமி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். பொள்ளாச்சி பணிக்கம்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், ராமேஸ்வரம் தீர்த்தம், ஸ்ரீ தெய்வகுல காளியம்மன் கோவில் தீர்த்தம் செலுத்தி, மகா அபிேஷகம் நடந்தது. சந்தன காப்பு ராஜ அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது.
கிராமங்களில் உற்சாகம்: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் போளியகவுண்டன்பாளையம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், 10ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு ஐந்து அடி ஸ்ரீ விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலை 7:00 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவையொட்டி, வழுக்கு மரம் ஏறும் போட்டி, பெண்களுக்கான கோலப்போட்டி, உரியடிப்போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி மற்றும் சிறுவர்களுக்கான நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. வரும் 8ம் தேதி ஆனைமலை அம்பராம்பாளையம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. வால்பாறை: வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில், 101 விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. வால்பாறை தாலுகா இந்துமுன்னனி சார்பில், 25ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் நேற்று, 101 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 14.5 அடி விநாயகர் சிலை நேற்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகபூஜையும், அபிேஷக பூஜையும் செய்யப்பட்டது. இதே போல் வால்பாறை அண்ணாநகர், கக்கன்காலனி, சிறுவர்பூங்கா, காமராஜ்நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் பல்வேறு சிறப்பு பூஜைக்கு பின் சிலைகள் அந்தந்த கோவில் வளாகத்தில், பிரதிஷ்டை செய்யப்பட்டன.
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அண்ணாநகர் கோட்டை வலம்புரி விநாயகர் கோவிலில், சிறப்பு அபிசேக பூஜையும், அதனை தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஆதிபட்டி விநாயகர், ஒன்றிய அலுவலகத்தில் உள்ள விநாயகர் கோவில், பொன்மலை வேலாயுதசாமி கோவில் மற்றும் அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவில், பிளேக் மாரியம்மன் கோவில், சிவலோகநாதர் போன்ற கோவில்களில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள் சார்பில், 46 விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நெகமம்: நெகமம், செட்டியக்காபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், செங்குட்டைபாளையம், செஞ்சேரிபாளையம், ஜல்லிபட்டி உட்பட பல கிராமங்களில் இந்து முன்னணி சார்பில் 45, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 17, பொதுமக்கள் சார்பில் 13 விநாயகர் சிலைகள் உட்பட, 75 விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
51 கிலோ கொழுக்கட்டை: பொள்ளாச்சி ஜூபிலி கிணறு வீதி ஆதிசக்தி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்திவிழாவையொட்டி, முக்குறுணி மோதகம் (கொழுக்கட்டை) படைத்தல் விழா நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, காலை 10:30 மணிக்கு ஆதிசக்தி விநாயகருக்கு மகா அபிேஷகம், மதியம் 12:00 மணிக்கு 51 கிலோவில் மோதக பூஜை, சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பூஜைகளும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு சந்தன அலங்கார பூஜை, தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.