பதிவு செய்த நாள்
07
செப்
2016
11:09
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இந்து தர்ம சக்தி அமைப்பு சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதில் மாநில செயலாளர் மாணிக்கம், மாவட்ட தலைவர் செல்வக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். 11 சிலைகள் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளில் எடுத்து செல்லப்பட்டு, கோட்டை குளத்தில் கரைக்கப்பட்டது. கன்னிவாடியில்: ரெட்டியார்சத்திரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. கன்னிவாடி, அச்சாம்பட்டி, தருமத்துப்பட்டி, போடம்பட்டி, பூங்காநகர், சுரக்காபட்டி, கரிசல்பட்டி, குரும்பபட்டி, திப்பம்பட்டி, வீரப்புடையான்பட்டி, புதுப்பட்டி, முத்துராம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி பகுதிகளில் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு பூஜைகளுக்குப்பின், அனைத்து சிலைகளும் ஊர்வலமாக கன்னிவாடிக்கு வந்தன. மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய நிர்வாகிகள் சிவாஜி, ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். பின் சிலைகள் ஆலத்துாரான்பட்டிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மச்சக்குளத்தில் கரைக்கப்பட்டன.
சின்னாளபட்டி: காந்திகிராமம் வெள்ளியங்கிரிநாதர் கோயில் அருகே ஓடை சுயம்பு பிள்ளையார் கோயிலில், கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. 16 வகை சிறப்பு அபிஷேகம் செய்து, 50 கிலோ சந்தனத்தால் காப்பு சாற்றுதல் நடந்தது. தீபாராதனையுடன், கொழுக்கட்டை, லட்டு, ஜிலேபி, சர்க்கரை பொங்கல், சாம்பார் சாத பிரசாதங்கள் வழங்கப்பட்டது. செம்பட்டி கோதண்டராமர் கோயிலில் விநாயகருக்கு பல்வேறு நிவேதனப்பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சின்னாளபட்டி கீழக்கோட்டையில் செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விக்டரி மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி திருவிழா நடந்தது. முதல்வர் மலர்விழி முன்னிலை வகித்தார். தாளாளர் ரவீந்திரன், ஸ்ரீ சக்திவேலவன் அறக்கட்டளை செயல் உறுப்பினர் ஹரிஸ் வர்த்தன விக்னேஷ் பங்கேற்றனர். மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
வத்தலக்குண்டு: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, ஜி.தும்மலப்பட்டி, விராலிப்பட்டி, கண்ணாபட்டி, செக்காபட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை, மேலக்கோயில்பட்டி, எம்.வாடிப்பட்டி, பட்டிவீரன்பட்டி பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று கிராமங்களில் இருந்த விநாயகர் சிலைகள் வத்தலக்குண்டிற்கு கொண்டு வரப்பட்டு, முக்கிய தெருக்களில் ஊர்வலமாக சென்று கண்ணாபட்டி வைகை-பெரியாறு கால்வாயில் கரைக்கப்பட்டது. முன்னதாக நடந்த கூட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். நிர்வாகி மின்னல்கொடி, பா.ஜ., பொது செயலாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். பா.ஜ.,ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில பேச்சாளர் சீத்தாராமன் பேசினார். ஒன்றிய தலைவர் குணசேகரன் நன்றி கூறினார்.
நிலக்கோட்டை: நிலக்கோட்டை பகுதியில் தோப்புபட்டி, சிறுநாயக்கன்பட்டி, சிலுக்குவார்பட்டி, பள்ளபட்டி, ராமராஜபுரம், விளாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று அனைத்து சிலைகளும் அணைப்பட்டி வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். நகர தலைவர் தியாகு வரவேற்றார். மாநில பேச்சாளர் ராஜேந்திரன் பேசினார். ஒன்றிய பொது செயலாளர் ஹரிஹரபாண்டியன் நன்றி கூறினார்.