முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் உன்னதமானது ‘ஹஜ் எனும் இறுதிப் பயணம். உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்கள் அரேபிய மண்ணில் கூடி, அல்லாஹ்வை வணங்கி இறுதிக் கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். இதையொட்டி உலகம் முழுவதும் ஹஜ் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை ‘பக்ரீத் என்றும், ‘தியாகத்திருநாள்’ என்றும் சொல்கிறார்கள். பக்ரி+ ஈத்= பக்ரீத் என்று இதனைப் பிரிக்கலாம். ‘பக்ரி என்றால் ‘ஆடு. இந்தியாவில் பெரும்பாலும் ஆட்டை குர்பானி செய்வதாலேயே இந்தப் பெயர் இங்கே நின்று நிலவுகிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அரபு நாட்டில் ஹஜ்ரத் இப்ராஹிம்(அலை) அவர்களின் குடும்பத்தினர் செய்த தியாகங்கள், மார்க்கச் செயல்களாக விதிக்கப்பட்டு இத்திருநாளிலே நினைவூட்டப்படுகின்றன. நபி இப்ராஹிம்(அலை) அவர்கள், தனது மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அல்லாஹ்வின் ஆணைக்கு இணங்க பலியிட எத்தனித்த நிகழ்வை தியாகத்திருநாளாக நினைவுபடுத்தி ஆடு,மாடு, ஒட்டகம் இவைகளை அறுத்து குர்பானி தரப்படுகிறது.
இந்த குர்பானி கொடுக்க, வசதி படைத்தவர்கள் அதாவது எல்லா செலவுகளும் போக ரூ.5 ஆயிரம் ரொக்கம் இருந்தாலே அவர்களுக்கு இது அவசியம் என்கிறது ஷரிஅத். உற்றார், உறவினர், ஏழைகளை இந்நாளிலே மறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த குர்பானி கொடுக்கும் நிகழ்வு அமைந்திருக்கிறது. குர்பானி கொடுக்கும் பிராணியின் இறைச்சியை மூன்று பங்குகளாக்க வேண்டும். ஒன்றை தனக்கும், இரண்டாவது பங்கை தனது உறவினர்களுக்கும், மூன்றாவது பங்கை ஏழைகளுக்கும் கொடுக்க வேண்டும். குர்பானி கொடுப்பதால் அல்லாஹ்விடம் அந்த பிராணியின் இறைச்சியோ, ரத்தமோ வந்தடைவதில்லை. குர்பானி செய்பவர் அல்லாஹ்வின் மீது கொண்ட ‘உள்ளச்சம் என்னும் ‘பயபக்தி’ தான் அல்லாஹ்வைச் சென்றடைகிறது. இதை அல்லாஹ்வே திருக்குர்ஆனில் கூறியிருக்கிறான். குர்பானி கொடுக்கும் பிராணிகளின் தகுதிகள் என்று எடுத்துக் கொண்டால் நன்கு கொழுத்ததாக இருக்கவேண்டும். நோய், காது முழுவதும் அல்லது சிலபகுதி வெட்டப்பட்டிருப்பது போன்ற குறைகள் இருக்கக்கூடாது. குர்பானி கொடுப்பவர்கள் துல்ஹஜ் பிறை 1லிருந்து குர்பானி கொடுக்கும் வரை தன் உடலிலிருந்து உரோமங்களைக் களைவதும், நகம் வெட்டுவதும் கூடாது. குர்பானி கொடுப்பவரே அறுப்பது நல்லது. இயலாதவர்கள் வேறு ஒருவரை நியமித்து ‘நிய்யத் (உறுதிமொழி) செய்து கொள்வதில் தவறில்லை. அரபி தெரியாதவர்கள் பிராணியை அறுத்தால். ‘ஆண்டவனே! இந்த குர்பானியை இன்னாருக்காக ஏற்றுக் கொள்வாயாக. உனது கலீல் இப்ராஹிம்(அலை), கபீப் முகம்மது (ஸல்) இருவரிலிருந்து ஏற்றுக் கொண்டது போல’ என்று கூற வேண்டும். குர்பானியின் தோலையோ, கறியையோ கூலியாக ஒருபோதும் கொடுக்கக் கூடாது. குர்பானியின் தோலை விற்றால் அதை ‘சதக்கா(தர்மம்) செய்ய வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவரது குர்பானியையும் ஏற்றுக் கொள்வானாக. ஆமீன்!