பதிவு செய்த நாள்
23
செப்
2016
01:09
அனுப்பர்பாளையம் : திருமுருகன்பூண்டி கோவிலில், பக்தர்களுக்காக கட்டப்பட்ட ஓய்வறை பணி முடிந்தும் பயன்பாட்டு வராததால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். திருமுருகன்பூண்டியில் புகழ் பெற்ற திருமுருக நாதசுவாமி கோவில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பக்தர்கள், பல நாட்கள், பூண்டி கோவிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்காக, கோவில் வளாகத்தில் அடிப்படை வசதி செய்ய பேரூராட்சி சார்பில், 35 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பக்தர்கள் ஓய்வெடுக்க வசதியாக 8.5 லட்ச ரூபாய் மதிப்பில், ஒய்வறை, அவர்கள் குளிக்க, உடை மாற்ற, 14 லட்ச ரூபாய் மதிப்பில் சுகாதார வளாகம், குடிநீர் வசதிக்காக 8.5 லட்ச ரூபாய் மதிப்பில், 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல் நிலை குடிநீர் தொட்டி உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன. பக்தர்கள் ஒய்வறை கட்டும் பணி முடிவடைந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. கோவிலுக்கு, வரும் பக்தர்கள் மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றனர். எனவே, ஓய்வறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.