பதிவு செய்த நாள்
05
அக்
2016
12:10
சென்னை;வட்டெழுத்து அழியாமல் காத்தவன், ராஜேந்திர சோழன், என, சென்னை பல்கலையின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை தலைவர் பி.டி.பாலாஜி பேசினார். தமிழ் வளர்ச்சி கழக வளாகத்தில், தமிழக தொல்லியல் துறை சார்பில், கோவில் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. அதில், சென்னை பல்கலையின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை தலைவர் பி.டி.பாலாஜி பேசியதாவது: இந்தியாவில், புத்தமத வீழ்ச்சிக்குப் பின், குப்தர்களின் காலத்தில் தான் இந்து மதம் எழுச்சியுற்றது; அப்போது தான், சிற்ப சாஸ்திரங்கள், வழிபாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.
அவற்றை மக்களிடம் பரப்ப, கோவில் சிற்பங்களை ஊடகமாக பயன்படுத்தினர். தென் தமிழகத்தின் மலையடிப்பட்டி சிற்பம் மட்டுமே கதை சொல்லும் பாணியில் அமைந்த சிற்பம். தமிழகத்தில் குகைகளை குடைதல், மலையை செதுக்குதல், கற்களால் கட்டுதல் என்னும் நிலைகளில் கோவில்கள் பரிணமித்தன. தமிழகத்தில் உள்ள, 65 குடைவரை கோவில்களை, பல்லவர், முற்கால பாண்டியர் மற்றும் முத்தரையர்கள் அமைத்துள்ளனர். மாமல்லபுரத்தில் ஒரு மலையை, நான்கு கோவில்களாக பல்லவர்கள் செதுக்கி உள்ளனர். அதில், பாகவத புராணமும், காஞ்சிபுரம், கைலாசநாதர் கோவிலில், சிவபுராணக் காட்சிகளும் சிற்பங்களாக உள்ளன. நார்த்தமலையில், எட்டு பரிவார தேவதைகளுக்கும், தனித்தனி கோவில்களை, விஜயாலய சோழன் தான் அறிமுகப்படுத்தினான். ராஜராஜ சோழன் இரண்டடுக்கு அதிஷ்டானத்தையும், பல தலங்களையும் அறிமுகப்படுத்தினான். அவரது மகன் ராஜேந்திர சோழன், குற்றாலத்தில் இருந்த, முற்கால பாண்டியர் கால கோவிலில் இருந்த வட்டெழுத்து கல்வெட்டுக்களை படி எடுத்து, மீண்டும் செதுக்கி, பழமை மாறாமல் புதுப்பித்தான். வட்டெழுத்துக்களை படிப்போர் இல்லாவிட்டாலும், கி.பி., 1014லிலேயே, வரலாறு அழியாமல், பிற்கால மக்களுக்கு பயன்படும் வகையில் அதை காப்பாற்றியவன் ராஜேந்திர சோழன். இவ்வாறு அவர் பேசினார்.