பதிவு செய்த நாள்
06
அக்
2016
11:10
பவானிசாகர்: பவானிசாகர் அருகே, மழை பெய்ய வேண்டி, கிராம மக்கள் வினோத வழிபாடு செய்தனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே கரிதொட்டம்பாளையம் கிராமம், வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பெரும்பாலோனோர், விவசாயத்தை நம்பியுள்ளனர். ஆடிப்பட்டத்தில் போதிய மழை இல்லாததால், இப்பகுதியில் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளன. எனவே, இப்பகுதி மக்கள் ஆடுகளை பலியிட்டு, ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வினோத வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தனர். இதில், கரிதொட்டம்பாளையம், ஆலாம்பாளையம், சாஸ்திரிநகர், எரங்காட்டூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில், நான்கு ஆண்டுகளாக போதிய மழை இல்லை. எனவே, எல்லை கருப்பராயன் சுவாமிக்கு ஆட்டுக்கிடாய் பலியிட்டு வேண்டி கொண்டோம். கழுத்தில் வேல் குத்தி, ஊரை சுற்றி வலம் வரும் ஆட்டுக்கிடாய், ஊர் எல்லை வரை உயிருடன் இருக்க வேண்டும். பின்னர், எல்லை கருப்புராயன், பேச்சியாத்தாள் சுவாமிகளுக்கு கிடாய்களை பலியிடுவோம். அரிசி மற்றும் ராகி மாவு கலந்து தயாரான சாப்பாட்டை சிறு, சிறு உருண்டைகளாக பிடித்து வைத்து வழிபடுவோம். பூஜை முடிந்த பின் சமைத்த இறைச்சி மற்றும் சாப்பாட்டை ஆண்கள் மட்டும் சாப்பிடுவோம். இது போல கடந்த, 2009ம் ஆண்டு பூஜை செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.