பதிவு செய்த நாள்
07
அக்
2016
11:10
திருப்பரங்குன்றம், :திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உயர்நீதி மன்ற உத்தரவுப்படி கலெக்டர் வீரராகவ ராவ் நேற்று ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.கோயிலில் இலவச தரிசன முறையை பயன்படுத்தும் ஏழை பக்தர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக, பக்தர் ஒருவர் எழுதிய கடிதம் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை, கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதனடிப்டையில், கலெக்டர் வீரராகவராவ் நேற்று கோயில் மூலஸ்தானம், இலவச தரிசனம், கட்டண தரிசனத்திற்கு பக்தர்கள் செல்லும் பாதைகளை ஆய்வு செய்தார்.பின்பு மதுரை மண்டல இணை கமிஷனர் பச்சையப்பன், கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை, கோயில் உதவி கோட்ட பொறியாளர் சிவமுருகானந்தம், சிவாச்சார்யார்கள் சுவாமிநாதன், ராஜா, ரமேஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, கோயிலின் அமைப்பு குறித்த வரைபடத்தை கலெக்டர் பார்வையிட்டார். ஆர்.டி.ஓ., செந்தில்குமாரி, திருப்பரங்குன்றம் தாசில்தார் சரவணப் பெருமாள், துணை தாசில்தார் குணசேகரன், ஆர்.ஐ.மணிகண்டன், வி.ஏ.ஓ., பாகினி உடன் சென்றனர்.