பதிவு செய்த நாள்
08
அக்
2016
12:10
பொங்கலூர் :மழை பெய்ய காலதாமதம் ஆவதால் விவசாயிகள் விதைப்பு பணியை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர். இதனால், பொங்கலூர் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மழை வேண்டி, வீடு வீடாகச் சென்று, மழை சோறு எடுத்து வந்தனர். அவற்றை கோவிலில் வைத்து வழிபட்டனர்.ஊர் பெரியவர்கள் மூன்று பேர் விரதமிருந்து, கட்டுச்சோறு கட்டிக் கொண்டு, ஊர் எல்லையை தாண்டி ரோட்டோர மரத்தில், தாங்கள் கொண்டு சென்ற கட்டுச் சோற்று மூட்டையை கட்டினர். பெண்கள் ஒப்பாரி வைத்துக் கொண்டு, தண்ணீரில்லா ஊரில் குடியிருக்க மாட்டோம் என்று கோபித்துக் கொண்டு, ஊரை விட்டு சென்றனர்.ஊர் பெரியவர்கள் விரைவில் மழை பெய்யும். எனவே, வீட்டிற்கு வாருங்கள் என்று அவர்களை சமாதானம் செய்து அழைத்து வந்தனர். பின், பிள்ளையார் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இதில், மருதம் உழவர் மன்ற தலைவர் சுப்பிரமணி தலைமையில், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.