உள்ளம் பெருங்கோவில் எனும் பாடலை அருளியவர் திருமூலர். திருமந்திரத்தில் திருவாவடுதுறை கோவில் ஆலமரத்தடியில் தவமிருந்து திருமந்திரத்தை இயற்றியதாகக் குறிப்பு உள்ளது. ‘சேர்ந்திருந்தேன் சிவ ஆவடுதன்துறையில் எனத் துவங்குகிறது அப்பாடல். எனவே கோயில் வழிபாட்டை வேண்டாம் என்று அவர் கூறவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சிவபூஜையின் போது, முதலில் நம் மனதில் சிவனை எழுந்தருளச் செய்து, பிறகு லிங்க வழிபாடு செய்வது மரபு. அதாவது உள்ளத்திலும், நம் உயிரிலும் கலந்து நிற்கும் சிவனை ‘அந்தர்யாகம் எனப்படும் அக பூஜை செய்ய வேண்டும். அவரையே புறத்தில் உள்ள லிங்கத்தில் ஆவாஹனம் செய்து ‘பஹிர்பூஜை எனப்படும் புறப்பூஜை செய்ய வேண்டும். இதில் அக பூஜை செய்யும் முறையைக் கூறவே ‘உள்ளம் பெருங்கோவில் என்னும் பாடலை பாடியுள்ளார். எனவே இதைக் காரணமாகக் கொண்டு கோவிலுக்கு செல்லாமல் இருக்காதீர்கள்.