பதிவு செய்த நாள்
11
அக்
2016
12:10
கேரளாவில் திருச்சூர் அருகிலுள்ள திருக்கண்டியூரில் வசித்த செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் சிறந்த பக்தராக திகழ்ந்தார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு ஒன்றரை வயதானபோது, அவர் இறந்து விட்டார். அவரது மனைவி வேலைக்குச் செல்லும்போது மகனை, அவ்வூரிலுள்ள சிவன் கோவிலில் விட்டுச் செல்வார். அக்கோயிலிலுள்ள நம்பூதிரிகள், தினமும் வேத பாராயணம் செய்து வந்தனர். குழந்தை, அவர்கள் சொல்லும் மந்திரங்களை கூர்ந்து கவனிப்பான். நாட்கள் நகர்ந்தன. ஒருசமயம் வேதபாராய ணம் நடந்து கொண்டிருந்தபோது, சிலர் தவறுதலாக உச்சரித்தனர். அப்போது குறுக்கிட்ட குழந்தை, வேதத்தில் சப்தமும், பதமும் மாறியிருப்பதாக கூறினான்.
நம்பூதிரிகளுக்கோ ஆச்சரியம்.தங்களுக்கே தெரியாத பிழையை, இந்த குழந்தை கண்டுபிடித்து விட்டதே என்று! மேலும் அவன் தேவ குழந் தையோ? என்றும் வியந்தனர். இருப்பினும், சில நம்பூதிரிகளை பொறாமை ஆட் கொண்டது. செருப்பு தைப்பவனின் மகனாவது... தங்கள் மீது குறை கண்டுபிடிப்பதாவது... ஒருவேளை, அவன் தங்களை மிஞ்சிவிட்டால், தங்களுக்கு பாதிப்பு வருமே என்று அஞ்சினர். எனவே, அவர்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவில், ஒரு மருந்தை கலந்து விட்டனர். அதை சாப்பிட்ட குழந்தை, ஊமையாகிவிட்டான். ஏதுமறியாத அவனது தாய், வைத்தியரிடம் அழைத்துச் சென்றார். அவர் மருந்து கொடுத்து, தொடர்ந்து சாப்பிட்டு வரச் சொன்னார். குழந்தையும் மருந்து சாப்பிட, மீண்டும் பேச்சு வந்தது. நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்ற அவன் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், வடமொழி என பஞ்சமொழிகளிலும் புலமை பெற்றான். நல்ல கவிஞனாக திகழ்ந்த அவன், ஒரு குருவிடம் சேர்ந்து ராமாயணம், மகா பாரதத்தை கற்றுத் தேர்ந்தான். அந்த குரு அவனை, இறை சேவையில் ஈடுபடும்படி கூறினார். அதன்படியே இறைச்சேவை செய்தான். பிற்காலத்தில் அந்தச் சிறுவனே, துஞ்சத்து ராமானுஜ எழுத்தச்சன் என்னும் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆனார்.ராமாயணம், மகாபாரதத்தை தன் தாய்மொழியான மலையாளத்தில் இயற்றினார். இவர் இயற்றிய இந்நுால்களை மலையாள மக்கள் புனிதமானதாகக் கருதினர். எழுத்தச்சனை தங்கள் "கல்வி குருவாகவும் ஏற்றுக்கொண் டனர்.பல கவிதைகளையும், காவியங்களையும் படைத்து மிகப்பெரும் கவிஞராக திகழ்ந்த எழுத்தச்சன், துஞ்சன் நம்பு என்ற இடத்தில் தங்கி காவியங்கள் இயற்றினார். இவ்விடத்தின் புனிதம் கருதி, தற்போதும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பாக இங்கு "வித்யாரம்பம் என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.